முருகேசன் மனதிற்குள் எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. என்ன படித்து என்ன பிரயோசனம்... வீட்டில் படுகிற கஷ்டத்தைப் போக்க முடியாத படிப்பு எதுக்கு...? என்று அவன் மீதே அவனுக்குக் கடுங்கோபமாக வந்தது. அவனும் என்னதான் செய்வான்...? டிகிரி முடித்து வேலைக்கு அலைந்து அலைந்து கால்கள் கூடத் தேய்ந்து விட்டது, ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களைக் கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர வேலைக்குப்போக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்னும் எத்தனை நாள்தான் வீட்டில் இண்டர்வியுவிற்கும், அப்ளிகேசன் போடவும் காசு கேட்டுக் கொண்டிருப்பது. வெளியில் சென்றால் பார்ப்பவர்களின் பார்வையே முருகேசனுக்கு நக்கலாகத் தென்பட்டது .
இன்று கூட ஒரு கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்குப் போய் ஏமாந்துவிட்டுத்தான் முருகேசன் திரும்பினான். நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்தவர்கள் எம்.எல்.ஏ சிபாரிசோடு வந்தவனுக்கு வேலை கொடுத்துவிட்டு மற்றவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். ச்சேச்சே இதென்ன பிழைப்பு ஃபைலைத் தூக்கிக் கொண்டு வேலை கிடைக்குமா? என்று அலைந்து கொண்டு அனைவரும் கேலியாகப் பார்க்கிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன்... எல்லோரும் இளக்காரமாகவே பார்க்கிறார்கள்... பார்த்துவிட்டுப் போகட்டும்... என்று அமைதியாக வந்துவிட்டான் முருகேசன்.
இவ்வாறு அவன் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில்தான் எதேச்சையாக பத்திரிக்கையில் அந்த அரசு விளம்பரத்தைக் கண்டான். அரசு வேலை அணுக வேண்டிய முகவரியும் விபரங்களும் அவன் கண்களில் பட்டன. அரசு வேலை... அதற்கும் எவ்வளவு ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவனுக்கு அவ்வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமில்லை... இருப்பினும், அவனால் சும்மா இருக்க முடியவில்லை... படித்த படிப்பிற்கு உகந்த வேலை இல்லைதான்... இருந்தாலும் என்ன செய்வது? எம்.பி.ஏ. படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பது என்பது இயலாத காரியமல்லவா...? அவன் விடுவிடென்று தன் அப்பாவிடம் சென்று, “அப்பா... இந்த வேலையாச்சும் கிடைக்கட்டும்பா... எப்படியாவது இதுல கேட்டுருக்கிற டெபாசிட் தொகைய கொடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா...” என்றான்.
ஆம் ஒரு லட்சம் கட்டினால் சூப்பர்வைசர் வேலை. ஐம்பதினாயிரம் கட்டினால் சேல்ஸ்மேன் வேலை... அப்பா பல இடங்களிலும் கேட்டுப் பார்த்துவிட்டு ஐம்பதினாயிரம் மட்டுமே தன்னால் புரட்ட முடிந்தது என்று கொண்டு வந்து கொடுத்தார். அதனைக் கொடுத்து விண்ணப்பித்த உடனேயே அவனுக்கு அரசு வேலை கிடைத்தது. கிடைத்ததென்னவோ அரசு வேலைதான், ஆனால் அவன் பலருடைய வாழ்க்கையையும் பாட்டிலைக் கொடுத்தே கெடுக்கக் கூடிய வேலை... வேறு என்ன செய்ய...? மனதைத் திடப்படுத்திக் கொண்டு வேலை செய்தான்.
சரி வேலைதான் கிடைத்துவிட்டதே என்று சும்மா இருந்தால் முருகேசனைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் பலரும் “என்ன முருகேசா, போயும் போயும் ஊத்திக் கொடுக்கற வேலைதான் ஒனக்குக் கெடச்சிதா... இந்த வேலைக்குப் போறதுக்கு நீ வீட்டுல சும்மாவே இருந்திருக்கலாம்டா...” என்று கேலி பேசினர்.
முருகேசனும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு வேலைக்குச் சென்றான். இருந்தாலும், அவனது மனசாட்சி உறுத்திக் கொண்டே இருந்தது. அப்படி இப்படி என்று அப்பா வாங்கிய கடனைக் கட்டி முடித்துவிட்டான். இருந்தாலும் அவனது மனம் உள்ளூர உறுத்திக் கொண்டேதான் இருந்தது.
வீட்டில் இவனுக்குத் திருமணம் முடித்து விட வேண்டுமென்று முழு மூச்சுடன் பெண் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் வினையே ஆரம்பித்தது. பெண்வீட்டார் மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார் என்று கேட்ட போது முருகேசனது தாய் தந்தையர் அதைச் சொல்ல முடியாமல் தவித்தனர். பெண்வீட்டார் விடாப்பிடியாகக் கேட்ட போது அவர்கள் டாஸ்மாக்... என்று மென்று விழுங்கிக் கூறினர்.
பெண்வீட்டார் இந்தப் பெயரைக் கேட்டார்களோ இல்லையோ அவர்களது முகம் வெளிறிவிட்டது. ஏதோ தீண்டத்தகாத வார்த்தைகளைக் கூறியதைப் போன்று அவர்களது முகம் அஷ்டகோணலாகி விட்டது. அவர்கள் எதுவும் கூறாமல் சைகையாலேயே என் அப்பா உள்ளிட்ட சொந்தபந்தங்களை வெளியே அனுப்பி விட்டனர்.
மனம் நொந்து போன அப்பா ஒன்றும் சொல்ல முடியாத அளவிற்கு மனம் நொந்து போனார். பெண் கேட்டுப் போன இடத்தில் எல்லாம் இவனது வேலையைக் கேட்டு முகஞ்சுளித்தார்கள். “ஏய்யா டாஸ்மாக் கடையிலயா வேலை பாக்குற... ஓஞ் சம்பந்தமே வேணாமுய்யா...” என்று கூறினர்.
வேலைக்குச் சேர்ந்தது அவன் தப்பா... இல்ல டாஸ்மாக் கடையில வேலை பார்ப்பவனெல்லாம் குடிகாரனா இருப்பான்னு நெனக்கிறாங்களே அது தப்பான பார்வையில்லையா...? பனைமரத்துக்குக் கீழே நின்னு பாலக் குடிச்சாலும் அதயாரும் ஒத்துக்க மாட்டாங்க... என்ன செய்வது... நானும் விட்டுலாம்னுதான் பார்க்கறேன்... வேற வேலை கெடச்சாத்தான...
தொடர்ந்து பெண்தேடும் படலம் இன்னும் நீண்டு கொண்டுதான் இருக்கின்றது... யாரும் பெண் கொடுக்க முன்வரவேயில்லை... ஆயிற்று ஐந்து வருடங்கள் உருண்டோடின... அவன் மனதில் சொல்லொணாத வேதனை... புலி வாலைப் பிடித்த கதைதான்... இந்த லட்சணத்தில் விற்பனையை அதிகரிக்காவிட்டால் மெமோ கொடுக்கிறார்கள்... எத்தனையோ குடும்பங்கள் தெருவில் நிற்பதற்கு நானும் ஒரு காரணம் தானோ...? அவர்களிட்ட சாபம்தான் தனக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் இருக்கிறதோ... என்று பலவாறாகச் சிந்தித்தான் முருகேசன்.
ஆனால், அவனுடன் ஒரு லட்சம் டெபாசிட் கட்டி வேலைக்குச் சேர்ந்த குமரேசனோ ஆரம்பத்தில் நல்லவனாகத்தான் இருந்தான். போகப் போக அவன் மொடாக் குடியனாகிவிட்டான். அவனுக்குத் தேவை இங்கு நன்கு நிறைவேறிவிட்டது. ஆனால் முருகேசனுக்குத்தான் இந்த வேலையில் மனம் ஒன்றவில்லை.
அவனும் பலவாறு முயற்சித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனாலும் கிடைத்தபாடில்லை... பலரும் இங்கு வந்து குடித்துவிட்டுத் தெருவில் கிடந்து புரளும் போதெல்லாம் இவனுக்குத் தான் பாவம் செய்வதாகவும் தன்னால்தான் அவர்களது குடும்பம் தெருவிற்கு வரப்போகிறது என்றும் நினைத்துக் கொண்டான்... எத்தனை பெண்களின் சாபமோ என்னோட வாழ்க்கை செழிப்பமில்லாமலேயே இருக்கிறது... என்று மனங்குமைந்து கொண்டிருந்தான் முருகேசன்.
வீட்டிற்கு வந்தாலும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவனது அப்பாவோ “ஏம்பா முருகேசா, எதுக்கும் கவலைப் படாதடா... இதுல ஓந்தப்பு எதுவும் இல்லடா... ஏன் மனசப்போட்டு அல்லாடிக்கிட்டே இருக்க... ஒனக்குன்னு ஒருத்தி பொறக்காமயா இருக்கப்போறா... கவலைய விடுறா... இந்த வேலையில இருந்துக்கிட்டே வேற வேலைக்கு முயற்சி செய்யேன்...” என்று ஊக்கப்படுத்தினார்.
ஏதோ வேலை கிடைக்காத நேரத்தில் இவ்வேலையில் சேர்ந்து விட்டானே தவிர, இவ்வேலையில் முருகேசனுக்கு ஒட்டுதல் இல்லாமலேயே இருந்தது... தினமும் வேலைக்குப் போகும்போதெல்லாம் மனசாட்சியை விற்றுவிட்டே வேலைக்குச் சென்றான் முருகேசன். இவனது செயல்பாடுகளைப் பார்த்த கடையின் சூப்பரைசர் “டேய் தம்பி.. ஒன்னாட்டமே நானும் மொதல்ல இப்படித்தான் இந்த வேலைக்கு வந்தேன். அப்பறம் கொஞ்சங் கொஞ்சமா என்னய மாத்திக்கிட்டேன். இப்பப் பாரு நான் ஜாலியா இல்லயா...? என்ன மாதிரி நீயும் ஜாலியா இருக்கப் பழகிக்கடா... அஞ்சி வருஷமாச்சி... இப்பவும் அப்படியே இருக்கியே... இதுல நம்ம தப்பு என்னடா இருக்கு... அரசாங்கம் சொல்லுது நாம செய்யுறோம்... மத்த வேலை மாதிரி இதுவும் அரசாங்க வேலைதான... இந்த வேலையை மட்டும் ஏங்கொறச்சு மதிக்கணும்... இந்த நிலைக்குச் சமுதாயந்தாம்பா காரணம்... நீ எம்பிஏ... நான் எம்.ஏ... படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கெடக்கலியேன்னு வருத்தப்படக் கூடாது. கெடச்ச வேலையில இருந்து சாதிக்கணும்...” என்று சமாதானம் கூறினார்.
இருந்தாலும் முருகேசனுக்கு மனம் உறுத்தலாகவே இருந்தது... இந்த மன உறுத்தல் எப்போது போகும் என்று அவனுக்கே புரியவில்லை... அவனைப் பார்த்து யாராவது, “தம்பி எங்க வேல பாக்குறீங்க? என்று கேட்டால், அவனுக்குத் தான் வேலை பார்ப்பதை வெளிப்படையாகக் கூறக் கூட நா வராது... அவர்களுக்குப் பதில் சொல்லாது சரேலென்று அவ்விடத்தை விட்டு உடனே நகர்ந்துவிடுவான்... “என்ன வேலை பாக்குறேன்னு சொல்றது? பாட்டிலக் கொடுக்கறேன்னா...?” மற்றவர்களின் தவறுக்கு நானும் துணைபோறேனோ...? என்ற உறுத்தலோடு இருந்தான் முருகேசன்.
இதற்கொரு முடிவு கட்டினால்தான் அவனுக்கு மனநிம்மதி கிடைக்கும் போலிருந்தது. அன்றும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற முருகேசன் சூப்பரைசர் குமரேசனிடம் தனது ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்து அதனை மேலிடத்திற்குச் சிபாரிசு செய்து அனுப்புமாறு கூறினான். குமரேசனுக்கோ ஒன்றும் புரியவில்லை. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முருகேசன் கேட்பதாகத் தெரியவில்லை. வேறுவழியின்றி அவனது கடிதத்தை மேலிடத்திற்குப் பரிந்துரை செய்தான்.
முருகேசனுக்குப் பெரிய கண்டத்திலிருந்து தப்பி வந்த மாதிரி ஒருவிதமான மன நெகிழ்ச்சி... வேலை இல்லையென்று அவன் கவலைப்படவில்லை... சிட்டுக்குருவியைப் போன்று அவன் மனம் இலேசானது. வீட்டிற்கு வந்தபோது அவனது அப்பா, “ஏம்பா சீக்கிரமே வந்துட்டே... என்னா ஏதாவது தகராறா...? “ என்று கேட்டார்.
அதற்கு முருகேசன் இல்லப்பா... அந்த வேலையே வேண்டாமின்னு தலைமுழுகிட்டு வந்துட்டேம்பா... இப்பத்தாம்பா மனசே லேசா இருக்குது... இத்தன வருஷ உறுத்தல்லேருந்து விடுபட்டேம்பா...” என்று மகிழ்ச்சியுடன் கூறிய மகனைப் பார்த்து, “அப்ப வேலை...” என்று மெதுவாக இழுத்தார் அவனது அப்பா...
“அப்பா வேலைய விட்டுட்டேன்... நான் இனி வேலை தேடப் போறதில்லை... நான் பத்துப்பேருக்கு வேலை கொடுக்கப் போறன்... ஆமாப்பா... இப்ப நான் வேலைதேடி அலையிற முருகேசனில்லை... பலருக்கு வேலை கொடுக்கப் போற முருகேசன்... நான் கத்துகிட்ட பிரிண்டிங் வேலைய இப்பத் தொடங்கப் போறம்பா... நிச்சயம் அதுல என்னால ஜெயிக்க முடியும். இதுல குடும்பங்களக் கெடுக்கற வேலையே இருக்காது... இதுல தெனந்தெனம் மனசொடிஞ்சு போகவேணாம்... பலருடைய அழிவுக்கு நாமதான் காரணமுன்னு நெனக்க வேணாம்பா... நாளையே அந்தப் பிரஸ் வேலையத் தொடங்கிடுவேன்...” என்று மனதிலும் வார்த்தையிலும் நம்பிக்கைஒளி பரவச் சொன்னான் முருகேசன்.
அவனது கண்களில் புதியஒளி தெரிந்தது. அவ்வொளி பலரின் கண்களைத் திறக்கும் அறிவொளியாக இருந்தது. அவனின் தந்தை, தனது மகனைப் பார்த்து மனம் பூரித்துப் போய் வைத்த கண் மாறாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் மகனின் உயர்வு விரிந்தது.