மதன் கூறியதை அதிர்ச்சியோடுதான் கேட்டனர், அவனின் பெற்றோர்... அதை ஏற்க முடியாது என்பதை மெளனத்தில் காட்டினர்.
நீண்ட அமைதிக்குப் பின், “ஏதாவது பதில் சொல்லுங்க சார்...” பொறுமை இழந்த நண்பன் கதிர்.
“இவனோட பைத்தியகாரத்தனத்துக்கு எந்தப் பதிலும் இல்லப்பா” கோபத்துடன் கூறி, மனைவி வைத்திருந்த கைப்பையை ‘வெடுக்' என பிடுங்கிக் கொண்டு வாசல் நோக்கிச் சென்ற ராகவனின் முன்போய் நின்று,“அப்பா என்னோட குணம் உங்களுக்கு நல்லாவே தெரியும்” என்றான்.
“என்னமீறி நீ ஒன்னும் செய்ய முடியாதுடா ”
“செஞ்சிட்டா...?”
“என்னடா வார்த்த தடிக்குது...வேலைக்கு போயிட்ட திமிரா...”
வாக்குவாதம் முற்றினால் சண்டையாக மாறிவிடுமே என்று பயந்த விமலா, “மதன் தெளிந்த யோசனையோடதான் பேசுறியா... வெளியில தெரிஞ்சா மொத்த காலனி சனமே சிரிக்கும்” என்றதும் கதிரின் பக்கம் திரும்பி “ஏப்பா நீயும் இதுக்கு உடந்தையா...?” கேட்டாள்.
“ம்... தொரைக புரட்சி செய்றாங்களாம் புரட்சி” ராகவன்.
“நீங்க நினைக்கிறது தப்பு சார்... இன்றைய சமுதாயத்துல இது ஒரு சாதாரண மறுமலர்ச்சி அனைவராலும் ஏற்கப்பட்ட இணைப்பு முயற்சி” என்றான் கதிர்.
“வெளியில ஆயிரம் நடக்கலாம், இந்தக் குடும்பத்தில் சரிப்படாது”
“ஆமாப்பா... அப்பா சொல்லக் கேட்டு, இப்படியே இந்த விசயத்தை விட்ரு”
“புரியாம பேசாதம்மா ஆழமா சிந்தித்துத்தான், இந்த முடிவுக்கே வந்திருக்கேன். உடனே மாமா வீட்டுக்குப் போய் இது பத்தி பேசுங்க” என்று கட்டளையாகச் சொன்னான் மதன்.
“டே..டேய் நிறுத்துடா எனக்குனு தனியொரு மரியாதை இருக்கு அத வீணா அசிங்கப்படுத்த நான் விரும்பல, புத்தியில் பிராண்டிய எடக்கு முடக்கான நெனப்பத் தூக்கி தூரப் போட்டு லீவு முடியவும் மும்பைக்கு கிளம்பு” இப்படிச் சொன்னதும், குறுக்கே நின்ற மகனை விலக்கி வெளியேறினார் ராகவன்.
தலையில் அடித்துக் கொண்டு விசும்ப ஆரம்பித்தாள் விமலா.
கேள்வியாக நண்பனை ஏறிட்டான் கதிர்.
ராகவன், விமலா தம்பதியருக்கு மதன் இரண்டாவது மகன். மூத்தவன் ரகு, நான்கு மாதங்களுக்கு முன் டூவீலர் சாலை விபத்தில் இறந்துபோக, அவளின் இளம் மனைவி, கீதா அப்போது ஜந்து மாத கர்ப்பவதி! முதல் தாய்மை... வெறுமை கொண்ட நிலையானது. வாழ்க்கையோட தொடக்கமே அவளுக்கு முற்றுவைத்தார் போல் பிறந்த வீட்டுக்கே அனுப்பி விட்டது.
மும்பை சென்ற மதனுக்கு கவனம் மொத்தமும் சிதைந்து விட்டது. வேலையில் துளிகூட ஒட்டில்லை, கீதாவின் நிலையை எண்ணி,எண்ணி வருத்தத்தின் உச்சத்துக்கே போனான். அண்ணனின் இழப்பால் தன்னோட சுபங்கள் ஒதுக்கி இருண்டு கிடக்கும் கீதாவின் ஞாபகமாகவே இருந்தான்.
இன்னும் கொஞ்ச நாட்களில் குழந்தை பிறந்துவிடும், அதன் வளர்ச்சி, எதிர்கால தேவைகள்... எதிர்கொள்ள வேண்டிய சமூக எதார்த்தங்கள்,நினைத்துப் பார்க்கவே அவனுக்கு தலைச் சுற்றலாக ஆனது.
பாவம் கீதா, கனவுகளையும், கற்பனைகளையும் அள்ளிக்கொண்டு, தன் குடும்பத்தில் வந்து குறுகிய பொழுதுகளிலேயே தொலைத்தும் விட்டாள்.
இழப்பை ஈடு செய்ய வேண்டும்... யோசனையிலேயே மூழ்கிக்கிடந்தவனுக்கு “ஏன் கீதாவை மறுமணம் செய்துக்ககூடாது” ன்னு “பொறி” தட்டியது.
அதற்குக் காரணம், சாஸ்த்திரம், சம்பிரதாயம் என கீதாவின் மங்களத்தை அமங்களமாக்க பழமைவாதிகள் நெருங்கிய போது பாரதியின் புதுமைப்பெண் காட்டி, எதிர்த்தாள், தடுத்தாள். அந்த நிலைப்பாடு இன்றைய பெண் சமுதாயத்துக்கு விழிப்புணர்வானது என கதிரிடம் வாயாரியிருந்தான் மதன்.
தொலைபேசியில் தகவல் சொன்ன மறுவாரமே கிளம்பி வந்துவிட்டான்.
திறந்த மைதானமாகிப்போன மனித நிலையில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இந்த மாதிரி மனப்பூர்வமான ஒப்புதலுக்கு உடன்படனும். ஆனா அதன் முதல் வரிசையில் நிற்கும் வாழ்வின் அனுபவ முதிர்ச்சியானவர்களே மறுமணத்தை தட்டிக் கழிப்பது வேதனைக்குரியது, என்றாலும் மதனுக்கு எடுத்து வைத்த காலை பின்னிழுக்க மனமில்லை, கதிரை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள மாமாவின் வீட்டுக்கு சென்று விட்டான்.
விசயம் அறிந்து, “மதன் உன் பெருந்தன்மையான முன்வருதலுக்கு நான் தலைவணங்குகிறேன். அதே சமயம் பக்குவமா விசயத்த கையாளனும், உன் பெற்றோர் மனசுகளை ஏத்துக்க வைக்கனும் கீதா...” முடிக்கவில்லை அவர் “நீங்க என்ன சொல்றீங்க மாமா...? ” நேரடியாகவே கேட்க, அனுபவசாலி அவரோ, பொறுமையாகப் பேசி, துடிப்பாக இருந்த மதனை அமைதிப்படுத்தினார்.
“சார் மதன் அப்பா, அம்மாவுக்கு எல்லாம் தெரியும் இப்ப உங்களுக்கும் சொல்லியாச்சு” கதிர் இப்படி கூறியபோது
“அவங்களோட பதில்...” என்றார்.
“சம்பந்தமே இல்லாம மானம் மரியாதைன்னு புலம்புறார். தன் குடும்பத்தால ஒரு பொண்ண சூழ்ந்த இருள விரட்ட, மறுமணதீபம் ஏற்றலாமேன்னு மதன் நினைக்கிறான் இதுல தப்பு ஏதுமில்லையே...”
“இந்த விசயத்துல நான் ரெண்டாம்பச்சம்தான் ” ஒதுங்குவதாக அவர் கூற, “ஆளாலுக்கு விதன்டம் பேசினால் பிரச்சனைதான் வளரும் மாமா, ரகுக்கு துணையா வந்ததுக்கு எதிர் வரும் காலம் முழுவதும் துயரப்படனும்னு கீதாவுக்கு என்ன அவசியம்? இங்க யாரும் பண்ணாத காரியத்தையா நான் முன் வைக்கிறேன். கணவனால் ஏற்பட்ட இழப்பை இரண்டாவது முறையா பூர்த்தி செய்யும் புனிதச்செயலே மறுமணம். பழமையைத் தள்ளிப் புதுமைக்கு வழி விடுங்க, எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றான் உருக்கமுடன் மதன்.
“உங்க பொண்ணு வாழ்க்கை, அவங்க வயித்துல சுமக்கற குழந்தையோட எதிர்கால நலன் கருதியே மதன் வந்திருக்கான். வெளியுலகம் அப்படி இப்படி பேசும்னு தட்டிக்கழிக்கிறது வடிகட்டின மூடத்தனம் சார்... எதார்த்தத்துக்கு வாங்க, கீதாவுக்கு பிடிமானமா இருக்கும் நீங்க, உங்க காலத்துக்குப் பின் அவளுக்கு யார்னு யோசிச்சுப் பாருங்க... தனியாகக் கீதாவால் வாழமுடியும்னு நம்புறீங்களா?” என்று கதிர் கேட்டபோது, அவரால் மெளனத்தையே பதிலாகக் காட்ட முடிந்தது.
பெரியவர்களிடம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், கடுகளவு பலனும் கிடைக்காதோ... சட்டென ஒரு முடிவுக்கு வந்த மதன், சம்மந்தப்பட்ட கீதாவிடமே கேட்டு விடலாம் என்று சமையலறைக்குள் நுழைந்து, “எல்லாம் கேட்டு இருப்பீக, குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்து விடலாமுன்னு நினைக்காதீங்க. இனி வார காலத்துல நிறைய எதிர்கொள்ள வேண்டி வரும், அதையெல்லாம் சமாளிக்கத் திணறி அப்போது நீங்க என்ன யோசித்தாலும் சரி செய்வது ரொம்ப கடினம். நடைமுறை வெளியுலகம் வாங்க... மனசப் பக்குவப்படுத்திக்கிட்டா எதையும் ஏற்கலாம். இந்த நிமிஷம் உங்க ஒத்துழைப்புதான் முக்கியம்... பெரியவங்க என்னங்க பெரியவங்க... ஒரு மரியாதைக்கு முன் வரனும். அத அவங்க காப்பாத்தேலேன்னா இளைய சமுதாயம் நாம் விழித்தெழுவோம் எதிர்ப்படும் தடையை உடைத்தெறிவோம்”
இடது கை நான்கு விரல்கள் மடக்கி, கட்டை விரல் நிமிர்த்திய போது,
“தடைகளை விலகிவிட்டதப்பா...” குரல் வந்த வாசலை அனைவரும் பார்க்க,
அங்கே ராகவன் நின்றிருந்தார், விமலாவும்தான்.
“வாங்க சம்பந்தி”
“அத மேலும் தொடரலாமா” சிரித்தபடியே கேட்டவரை உணர்ச்சி மேலிட கட்டிக் கொண்டார் கீதாவின் தந்தை. அவரது கண்களில் கசிவு.
மருமகளை ஆதரவுடன் தன்னருகில் நிறுத்திக் கொண்டாள் விமலா.
“மதன் என்னை மன்னிச்சுருப்பா... ஏதோ ஒரு கேவலமாகத்தான் முதலில் நடந்துக்கிட்டேன். உன் உறுதி ஜெயிச்சிருச்சுடா, உயர்ந்த நோக்கத்தில் நெனச்சபடியே கீதாவை வெளிச்சமாக்கிட்ட... இந்த பூமியில் சந்தோஷமா வாழத்தானே நாம பிறந்தோம்... அதை ஏன் வருத்தத்துல கழிக்கனும்னு உணர்ந்தேன். நீ இங்கதான் வந்திருப்பேன்னு யூகித்தே வந்தேன். என் கனிப்பு சரியாப்போச்சு. முறைப்படியான மற்ற விசயங்களை பேசி முடிவெடுத்துக் கொள்வோம்” அவரின் அந்த வெளிப்பாட்டில் அனைவரும் பூரித்தனர்.
“புதியதொரு வாழ்வின் தொடக்கத்தில் கீதா, இனி மதன் மூலமா மகிழ்வாள்” என்று கதிர் சொல்லவும் அங்கே ஆனந்தக் காற்று வீசியது.