வீட்டின் முன்னர் பெரிய வேப்பமரம். அதன் அருகில் வைக்கோற்பட்டறை. அதில் நான் மட்டும் தான் கட்டப்பட்டிருப்பேன். ரோட்டோரத்தில் வீடு என்பதால் ரோட்டில் போவோரும் வருவோரும் என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்து வியப்படைந்து கொண்டே செல்வர். அப்படியொரு அழகு. அவ்வளவு கம்பீரம். செகப்பட்டிக் செல்லக்கண்ணுவின் காளை என்றால் சுத்துப்பட்டு ஊரார்களுக்கும் தெரியும். அப்படிப் பேரும் புகழும் வாங்கியிருக்கேன்.. என்ன வளக்கிறாரே செல்லக்கண்ணு... அவரு மாதிரி யாரையும் பாக்க முடியாது... அவரோட பிள்ளைகளைக் கவனிக்கிறாரோ இல்லையோ? என்னைத் தன்னோட பிள்ளைகளை விட ஒருபடி மேலேயே நல்லாக் கவனிக்கிறாரு...தெனமும் என்னக் குளிப்பாட்டிக் கொம்பச் சீவி அதுக்கு எண்ணை தடவிப் பொட்டுவச்சி வைக்கோலப் போட்டு என்னோட மேலெல்லாம் தடவி உருவிவிட்டு பருத்திக் கொட்டப் புண்ணாக்கு தவிடு எல்லாத்தைபும் போட்டுப் பெசஞ்சு வச்சி, கத்திரிக்கா வாங்கிக் கொடுத்து அப்பப்பா என்னத்தச் சொல்லறது... அப்படி ஓவியமாப் பாத்துக்கிட்டாரு... அப்பறம் என்ன கொறச்சல்னு நெனக்கிறீங்களா...?
அதுதாங்க எனக்கும் புரியல... கொஞ்ச நாளா மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டு என்னய ஒரு ஏக்கத்தோட பாக்குறதும் கவலையா ஒக்காந்துக்கறதுமா என்னய வளக்கிறவரு இருக்காரு. நானு என்னத்தக் கண்டேன். வாயிருந்தா என்னன்னு கேக்கலாம்... என்னால எதுவும் செய்ய முடியல... நானும் அவரோட மொகத்தப் பாத்துக்கிட்டேதான் இருக்கேன்... என்ன செய்யச் சொல்றீங்க...
இந்தப் பகுதியில என்ன மாதிரிப் பேரெடுத்த மஞ்சிவிரட்டு மாடுக எதுவுமே இல்லீங்க... அம்புட்டுப் பேரு... ஒருக்கா பக்கத்துல இருக்கற அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு என்ன செல்லக்கண்ணு புடுச்சிக்கிட்டுப் போனாரு. தொழுவுல வச்சி என்ன அவுத்துவிட்டாரு பாருங்க...அப்படியே என்னயப் புடிக்க வந்தவங்கல ஒரே பாச்சல்ல ஓடவச்சேன்... சிலபேரு என்னயப் புடிக்கிறதுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்தாங்க... என்னைப் பிடிச்சிட்டா ஒருபவுன் தங்கக் காசு டீவி அப்படி இப்படின்னு நெறைப் பரிசு வேற அறிவிச்சாங்க... எல்லா மாடுபிடிகாரப் பயபுள்ளயும் என்னய ரவுண்டு கட்டிட்டாங்க...
என்னோட சொந்தக்காரரு சற்று மேடான பகுதியில நின்னுகிட்டு நான் என்ன பண்றேங்கறத பதட்டத்தோட பாத்துக்கிட்டே இருந்தாரு... நான் சும்மா விடுவேனா...? தெகச்சி நின்னு விளையாண்டேன்... அதுல ரெண்டு மாடுபிடிகாரங்க என்னோட பாய்ச்சல்ல படுகாயப்பட்டுட்டாங்க... என்னோட வாலைக் கூட அவங்களால தொட முடியல... சும்மா ஒரு மணி நேரமா நின்னு பாச்சா காட்டி விளையாட்டுக் காட்டுனேன்... கடைசி வரைக்கும் என்னைய யாராலயும் புடிக்க முடியல... என்ன வளத்தவரக் கூப்புட்டு எல்லாப் பரிசையும் கொடுத்தாங்க... செல்லக்கண்ணுவோட செவலக்காளைய எந்த மாடுபிடிகாரங்களும் பிடிக்காததனால எல்லாப் பரிசையும் அந்தக் காளைக்கே கொடுக்குறோம்... இதுமாதிரி இந்தச் சுத்துவட்டாரத்துல எந்தக் காளையும் இல்ல... அப்படின்னு ஒலிபெருக்கியில என்னயப் புகழ்ந்து தள்ளிட்டாங்க... அப்படியே ஒரே ஓட்டமா ஓடியாந்து செகப்பட்டிக்கு வந்து என்னோட வீட்டுக்கு வந்துட்டேன்... எந்த ஊருல என்னய அவுத்துவிட்டாலும் நான் செகப்பட்டிக்கு என்னோட வீட்டுக்கே வந்துடுவேன்...
இந்த அரளிப்பாறை மஞ்சிவிரட்டு முடிஞ்ச அடுத்த நாளே சிலபேரு என்னய வளக்குறவரப் பாக்க வந்தாங்க. என்னய ஒரு லட்ச ரூபாய்க்குக் கேட்டாங்க... என்னோடசெல்லக்கண்ணு ஐயா மறுத்துட்டாரு... அதோட மட்டுமில்லாம அவங்களக் கன்னாப் பின்னான்னு திட்டி வேற அனுப்பிச்சாரு... அவங்க போனபின்ன என்னையத் தடவிக் கொடுத்து ஏண்டா செவல ஒண்ணப் போயி வித்துருவேன்னு நெனச்சாங்களா? என்னோட உசிரு இருக்கிறவரைக்கும் ஒண்ண விக்கவே மாட்டேன்டா... என்றுசொன்னதக் கேட்டு என்னோட கண்ணுல தண்ணீயே வந்துருச்சு... அப்படியே அவர நாக்கால நக்கிக் கொடுத்தேன். அவரும் என்ன அன்போட கட்டிப் பிடுச்சிக்கிட்டாரு...
இதெல்லாம் ஏன் ஒங்ககிட்ட சொல்றேன்னு நெனச்சிங்களா... பின்ன என்னங்க பண்றது...? என்னய வளக்கிறவரு மொகத்துல சந்தோசத்தயே காங்க முடியலங்க... கவலையாவே இருக்காரு... என்னய பாக்குறதும் தலையக் கீழ போட்டுக்கறதுமாவே அவரு இருக்காரு... எனக்கொண்ணும் புரியல...
முன்ன மாதிரி என்னய ஜோடிச்சி புடுச்சிக்கிட்டுப் போகமாட்டேங்கறாரு... என்னய எப்படியெல்லாம் ஜோடிப்பாரு தெரியுமுங்களா...? அடடா... என்னோட கழுத்துல தோலுல பதிச்ச மணியக் கட்டி நெத்தியில நெத்திப் பாறைங்கற வெள்ளி இலை மாதிரி இருக்கிற நகையப் போட்டுவிட்டு, துண்டு வேட்டி, மாலையெல்லாம் போட்டு, ஒடம்பெல்லாம் சந்தனத்தப் பூசிவிட்டு கவுத்தப் போட்டு என்னயப் புடுச்சிக்கிட்டுப் போனாருன்னா ஊரே ஆச்சரியமாப் பாக்கும்... என்ன செல்லக்கண்ணு இன்னக்கி எந்த ஊருல மஞ்சிவிரட்டு... ஓ... சிறாவயலா... சரி... சரி... என்று கூறி அவருடன் தாங்களும் வருவதாகச் சொல்வர். என் பின்னால் வருவதை அவர்களெல்லாம் பெருமையா நெனப்பாங்க...
ஆனா இப்ப அதையெல்லாம் நெனச்சு என்ன பண்றது...? நேத்து எங்க வீட்டுக்குச் செலபேரு வந்தாங்க... அவங்க பேசினதக் கேட்டதுலேருந்து என்னய வளத்தவரு மனசொடிஞ்சு போயித்திரியராரு... நாட்டுல என்னமோ புதுசா சட்டங் கொண்டு வந்துருக்காங்களாம்... மாடுகளக் கொடுமைப் படுத்துறது தப்பு... மஞ்சிவிரட்டுங்கற பேருல மாடுகள ரொம்ப ரொம்ப கொடுமப் படுத்துறாங்க... அதனால இனிமே மஞ்சுவிரட்டே வைக்கக் கூடாதுன்னு கவருமென்டுல சட்டம் போட்டுட்டாங்களாம்...அதனாலதான் என்னய வளத்தவரு ரொம்ப மனக் கஷ்டப்பட்டுக்கிட்டுக் கிடக்கறாரு... யாரால என்ன செய்ய முடியும். தெனந்தோறும் என்னயப் பாக்குறதும் மூஞ்சியத் தூக்கிவச்சிகிட்டு இருக்கறதுமா இருந்தாரு செல்லக்கண்ணு. இப்படி இருக்கறப்ப ஒருநாளு ரெண்டு மூணு ஆளுக வந்து என்னய வெலக்கிக் கேட்டாங்க...
வெல தெகயல... அதனால போயிட்டாங்க போலருக்கு... நான் மனசுக்குள்ளாற அவரு என்னய வித்துறக் கூடாதுன்னு நெனச்சிக்கிட்டேன். எவ்வளவு பேரும் புகழும் நான் அவருக்கு வாங்கிக் கொடுத்துருக்கேன்... அதனாலேயே என்னய அவரு விக்க மாட்டாரு... இப்படி நான் பலவாறு யோசிச்சிக்கிட்டே இருந்தேன்...
முன்னமாதிரி என்னவரு என்னயக் கவனிக்கிறதே இல்ல... அதனால நான் ரொம்ப மெலிஞ்சிட்டேன்... ஒடம்பெல்லாம் வத்திப்போச்சு... ஒருநாளு திடீர்னு நாலஞ்சுபேரு வந்து என்னய வெலக்கி வாங்கிட்டாங்க... என்னய அவங்க பிடிக்கிறதுக்காக வந்தாங்க... நானு அவங்களப் பிடிக்க விடல... என்னய வளத்தவரு வந்து என்னய அவங்ககிட்ட வேற கயித்தப் போட்டுக் கட்டிக் கொடுத்துட்டாரு...
நான் அவங்க கூடப் போகாம சண்டித்தனம் பண்ணினேன். ஆனா அவங்க என்ன விடல... அடிச்சி இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க... முன்னாலெல்லாம் என்னய அவுக்கவே விடமாட்டேன். இப்ப நா சேலுக்கெட்டுப் போயிட்டேன். அதனால அவங்கள என்னால எதுவுஞ் செய்ய முடியல... அவங்க அடிச்ச அடிய என்னால தாங்க முடியல...
அவங்க என்னய இழுத்துக்கிட்டுப் போயி ஒரு பெரிய லாரியில ஏத்துனாங்க... இந்தமாதிரி நெறய மாடுங்கள லாரி நெறய ஏத்தி நம்பருப் போட்டாங்க... லாரிய வேகமா ஓட்டுனாங்க... என்னால அங்க இங்க திரும்பக் கூட முடியல கழுத்துல கவுத்தப் போட்டு இருக்கிக் கட்டி வச்சிருந்தாங்க... வலியப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
ஏங்கூட இருந்த என்னச் சேர்ந்தவங்களும் தலைவிதின்னுட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க... கிட்டத்தட்ட நூறுபேரு அந்த லாரியில இருந்தோம்... லாரி வேகமாப் போயிக்கிட்டே இருந்துச்சு... என்னோட மனசுக்குள்ளாற பலவிதமான எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருந்துச்சு... என்னய வளத்தவரு எப்படி இந்தமாதிரி என்னய வித்தாரு... அந்தளவுக்கு நானென்ன கஷ்டத்தக் கொடுத்தேன்... எவ்வளவு பேரும் புகழும் நான் அவருக்குச் சம்பாரிச்சுக் கொடுத்தேன்... மஞ்சிவிரட்டு இல்லேண்ணா என்ன... கெட்டா போயிருச்சு... என்னய உழுவுறதுக்காவாவது பயன்படுத்தலாம்ல...
எதுவுஞ் செய்யாம இப்படி அடிமாட்டுக்கா என்னயக் கொண்டுபோயி விக்கிறது...? ச்சே என்ன மனுசங்க இவங்க...? அடிமாடுன்னா என்னாது...? பிடிமாடு, ஒழவுமாடு, மஞ்சுவிரட்டு மாடு, காளை மாடு, பசு மாடு, வட மாடு, தொழு மாடு, கோயில் மாடு அப்படீன்னு பல மாடுகளத் தெரியும். ஆனா இந்த அடிமாடுன்னா என்னான்னு எனக்கு வெளங்கலே... ஒருவேளை கோபம் வந்தா அடிக்கற மாடா இருக்குமோ...? சரி அடிச்சிட்டுப் போறாங்க... மத்தவங்களுக்குக் கோபம் வந்தா என்னயப் போட்டு ஏன் அவங்க அடிக்கணும்...? அடிமாடுங்கறதுக்கு இதுதான் அர்த்தம்போல...
ஆனா என்ன வெலக்கு வாங்குனவங்க அவங்களுக்குள்ள, “டேய் சின்னச்சாமி இந்த மாட்டுல எத்தன கிலோ கறிதேரும்... அதவிட இதனோட கறி சும்மா பஞ்சுபஞ்சாடா இருக்கும்... அதனால இத வேறெ எங்கயாவது வித்துப்புடலாம்டா...” என்று கூறியதைக் கேட்டவுடன் தான் எனக்கு அடிமாடுன்னா என்ன அர்த்தம்னு தெரிஞ்சது...
சரி... மஞ்சிவிரட்டு இல்லேன்னா என்ன வேறெதுக்கும் என்னயப் பயன்படுத்தலாம்ல... ஒண்ணு இல்லேன்னா இன்னொன்ன மாத்தி யோசிச்சிச் செய்யாம உசிர எடுக்கற செயலையா செய்வாங்க... மனுசங்க எல்லாருமே சுயநலக்காரங்க போலிருக்கு... பிள்ளைய மாதிரி என்ன வளத்துட்டு கொல்றதுக்கு விக்க எப்படி மனசு வந்துச்சோ தெரியல...
இப்படி நான் பலவிதமா நெனச்சிக்கிட்டு இருக்கற போதே லாரி திடீர்னு ஒரு இடத்துல நின்னுருச்சி... லாரிய ஒரு கொட்டடி முன்னால நின்னது. லாரியின் பின்கதவைத் திறந்து எங்கள எறக்கினாங்க... அந்தக் கொட்டடிக்குள்ளாறக் கொண்டு போனாங்க... அந்த எடம் ஒரே ரத்தக் கவிச்சியா இருந்துச்சு... எனக்கு நாக்கு வரண்டு போயிடுச்சு... தண்ணித் தாகமா இருந்துச்சு தவிச்ச வாய்க்கு ஒருவாய்த் தண்ணீராவது கெடைக்குமான்னு பாத்தேன். அங்க எதுவும் கெடைக்கறதுக்கு வழியில்லாம இருந்தது. நானும் என்னோட வந்தவங்களும் சாப்புடவே இல்லை... ஒவ்வொருத்தரா எங்கள இறக்கினவங்க தனித்தனியா ஒவ்வொருத்தரையும் கொல்லத் தொடங்கினாங்க...
ஒரு மெஷினுக்கு முன்னால கொண்டு போயி ஒவ்வொருத்தரயும் நிப்பாட்டுனாங்க... அப்ப பெரிய சம்மட்டி மாதிரி ஒரு இரும்புத் தடி ரெண்டு கொம்புக்கும் நடுவுல மடார்னு அடிக்க... என்னவங்க துடிதுடிச்சு கீழே விழுந்தாங்க. அத எடுத்துக்கிட்டுப் போயி ஒரு மெஷினு பக்கத்துல போட அது தலைய அறுத்து ரத்தத்தைத் தனியா ஒரு பொட்டியில சேர்த்து வச்சது... இப்படியே எல்லாரையும் அறுத்து அறுத்துத் தள்ளிக்கிட்டே இருந்தாங்க...
அதையெல்லாம் பாக்கப் பாக்க எனக்கு கொலையே நடுங்குச்சு... பயத்துல கண்ண மூடிக்கிட்டேன்... யாரோ என்னயப் புடுச்சி கொலகார மெஷினுக்கிட்டத் தள்ளுனாங்க... கண்ணத் தொறந்து பாத்தா நான் மெஷினுக்கிட்ட நிக்கறேன்... நாக்கு வறளுது... தண்ணியக் கொடுத்துட்டாவது என்னயக் கொல்லக் கூடாதா...? அட ஈவு இரக்கமில்லாத மனுஷங்களா...? என்று நினைப்பதற்குள்ளாக என்தலையில் மாடரென இரும்புச் சம்மட்டி தலையில் விழ மயங்கிச் சரிந்தேன்... என் நினைவுக்குள் என்னை வளர்த்தவரின் உருவம் நிழலாடியது... இந்தச் செவலக்காளையின் நினைவு அவருக்கு மட்டுமல்ல செகப்பட்டிக்கும் சுத்துப்பட்டு ஊரார்களுக்கும் நிச்சயம் இருக்கும் என்ற எண்ணம் மட்டும் என் மனதிற்குள் ஓட செகப்பட்டி செவலக்காளையாகிய நான் எனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டேன்.