காலையிலலேயே வெயில் சுட்டெரித்தது. படுக்கையிலிருந்து எழுந்த ராசு தனது அருகில் படுத்திருந்த தன் தம்பி துரையைப் பரிதாபத்துடன் பார்த்தான். அவனுள் ஒருவிதமான கழிவிரக்கம் ஏற்பட்டாலும், சற்று சலிப்பும் ஏற்படத்தான் செய்தது. பாவம் அவனும் தான் என்ன செய்வான்.
வறுமை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த ராசுவின் தம்பி பிறவியிலேயே இரு கால்களும் சூம்பிப் போய்ப் பிறந்தான். விளைவு அவனது இடுப்பிற்குக் கீழ் சூம்பிய கால்களும் பெருத்த உடலுமாக இருந்தான் துரை. ராசுதான் அவனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு திரிந்தான்.
அந்தக் காலத்தில் முதுசூரியர், இளஞ்சூரியர் என்று அழைக்கப்பட்ட இரட்டைப் புலவர்களை ராசுவும் துரையும் நினைவுபடுத்துவது போன்றிருந்தது. என்ன வித்தியாசம் அவர்களைப் போன்று இல்லாமல் இருவரும் பார்வையுடையவராக இருந்தார்கள்.
அவர்களைப் பார்ப்பவர்களின் மனதிற்குள் ஒருவித கருணை சுரக்கும். ஆனால் இருவரும் யாரிடமும் எதையும் வாங்க மாட்டார்கள். தம்பியால் ராசுவும் பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை. ராசு பள்ளிக்குப் போய்விட்டால் தம்பி துரையை யார் பார்த்துக் கொள்வது? இந்தக் கேள்விக்கு விடை தெரியாததால்தான் அவனை அவனது பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை.
துரையின் உடல் பெருக்கப் பெருக்க ராசுவால் அவனைச் சுமக்க முடியவில்லை. இருந்தாலும் தன்னோடு பிறந்த தம்பி துரையை ராசு எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டான். தான் கஷ்டப்பட்டாலும் தம்பியைக் கஷ்டப்படவிடக் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு திரிந்தான்.
அவனது பெற்றோர்கள் செல்லப்பனும் செல்லியும் ரோட்டோரத்தில் இட்டிலிக் கடைபோட்டு நடத்துகிறார்கள். அதில் வரும் வருமானம்தான் அவர்களது குடும்பத்தினை ஓட்டுவதற்கு ஒத்தாசையாக உள்ளது. அவர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவர எவ்வளவோ பிரயத்தனப்படத்தான் செய்கிறார்கள். ஆனால் அது என்னவோ முயற்கொம்பாகவே அமைந்து விடுகின்றது. வறுமை அவர்களை வாட்டியெடுத்தது.
துரை கடையிலிருந்து எடுத்து ஏழு எட்டு இட்லியை ஒரு வேலைக்கு சாப்பிடுவான். துரையின் அம்மா செல்லி அவனை அவனது குறை தெரியாமல் விழுந்து விழுந்து கவனிப்பாள். இதனைக் கண்ட ராசு சில சமயங்களில் தன் அம்மாவிற்குத் தன் மேல் பாசம் குறைவு என்று நினைத்துக் கொள்வான். அவனது தம்பியைக் கவனிக்கும்போது ராசுவின் மனம் சற்று சலனப்படும். ஏனெனில் அவனால் அவனைத் தூக்கிச் சுமக்க முடியவில்லை. சிறுபிள்ளையாக இருந்தபோது அவனைச் சுமப்பது எளிதாக இருந்தது. ஆனால் நாளாகநாளாக அது ராசுவிற்குப் பெருஞ்சுமையாக அமைந்துவிட்டது.
ராசுவின் துன்பம் துரைக்குத் தெரியாமலில்லை. தன் அண்ணனுக்குத் தான் சுமையாகி விட்டோமே என்று நினைத்து மனதிற்குள்ளேயே மறுகுவான். ஆனால் அதனை வெளியில் சொல்ல மாட்டான். சில சமயங்களில் தன் அண்ணன் சிரமமப்படுவதைக் கண்டு, “ஏன்ணே நானு ஒனக்கு ரெம்பச் சிரமம் கொடுக்கிறேன்னு தெரியுது. ரெம்பச் சாப்புடக் கூடாதுன்னுதான்ணே நெனக்கிறேன். என்னால என்னோட நாக்க அடக்க முடியலன்ணே... கோவிச்சிக்காதண்ணே...! என்று கண்கலங்கக் கூறுவான். அதனைக் கண்ட ராசு அவனது கண்ணீரைத் துடைத்துவிட்டு, “அடப் போடா... இப்படில்லாம் பேசாதடா... ஒன்ன நானு சுமக்காம வேற யார்டா சுமப்பா... நீயா எதாவது நெனச்சிக்காதடா...” என்று ஆறுதல் கூறுவான்.
ராசுவின் கஷ்டம் அவனது அப்பா அம்மாவிற்கும் தெரியும். பாவம் பிள்ள இப்படித் தம்பிய முதுகுல சுமந்துக்கிட்டே திரிஞ்சி கஷ்டப்படறானேன்னு அவர்கள் இருவரும் மனதிற்குள் போட்டுப் புழுங்கிக் கொண்டே இருந்தனர். தங்களுடைய இரண்டாவது மகன் ஊனமாய் பிறந்ததுக்காக அழுவதா? இல்லை, அவனை தங்களின் மூத்த மகன் முதுகில் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்த்துப் பார்த்து அழுவதா? என்று அவர்களுக்கு புரியவில்லை. இதற்கு ஒரே வழி கை வண்டியொன்றை வாங்கித் துரைக்குக் கொடுத்துவிட்டால் பிரச்சனை குறைந்துவிடும். கைவண்டி வாங்குவது என்ன லேசுப்பட்ட காரியமா? அதுக்குப் பணம்... எங்கு போவது? பலரிடமும் கேட்டுக் கேட்டுப் பார்த்து ஓய்ந்து போனார்கள்.
இப்படி இருக்கும்போதுதான் ஒரு நாள் அவர்கள் கடைக்கு இட்லி சாப்பிட வந்த ரிக்சா ஓட்டும் சிவராமன், “ஏம்பா... மதுரையில ரோட்டரிக் கிளப்பு ஒண்ணு இருக்குது. அங்க நமக்குத் தெரிஞ்சவரு ஒருத்தரு இருக்காரு... அவரு அட்ரசத் தர்றேன். அவரைப் போயிப் பார்த்தா அவரு நிச்சயமா கைவண்டி வாங்கிக் கொடுப்பாரு... நானு வேணுமின்னா ஒருநா ஓங்கூட வர்றேன்... என்ன சரியாப்பா...” என்று தெய்வம் போல் ஒரு யோசனை கூறினான்.
சொன்னதைப் போல அவன் கூட வந்து அவரைப் பார்த்து உதவி செய்யுமாறு கூறினான். அதனைக் கேட்ட அந்த ரோட்டரிக் கிளப் நிர்வாகி தான் அவனுக்குக் கைவண்டி வாங்கித் தருவதாகக் கூறினார்.
அதன்படி அடுத்த வாரமே அவர்களை வருமாறு ரோட்டரி கிளப் நிர்வாகி அழைத்து விட்டார். அவர்களும் தங்களது கடைக்கு லீவு விட்டுவிட்டு தங்களது மகன்களைக் கூட்டிக் கொண்டு மதுரைக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
அவர்கள் புறப்படும் போது செல்லி, “ஏங்க கைவண்டி கெடைக்கப் போற விஷயத்தை நம்ம பயலுகக்கிட்ட சொல்லிட்டீங்களா...?” என்று கேட்டாள். அதற்குச் செல்லப்பனோ, “இல்லப்பா... மொதல்ல கைவண்டி கெடைக்கட்டும்... அதுக்கப்பறம் சொல்லலாம்னு சொல்லல... ஒருவேளை வண்டி கெடைக்கலைன்னு வச்சிக்க... பயலுக மனசொடிஞ்சி போயிடுவாங்க... அதனாலதான் சொல்லல... நமக்கு வேண்டியவரப் போயிப் பாக்கப் போறம்னுதான் அவனுகளுக்குத் தெரியும்...” என்று கூறினான். அவன் பேசியதைக் கேட்ட செல்லி பெருமூச்செறிந்தாள்.
அவர்கள் மதுரைக்கு வந்தார்கள். வந்தவர்கள் மதுரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரோட்டரிக் கிளப்பிற்குச் செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தார்கள். துரையும் ராசுவும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பலரையும் வண்டிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று பார்த்து பயங்கரக் கூட்டமாக இருந்தது. மதுரைத் திருவிழா நடந்ததால் பேருந்து நிலையத்தில் நிற்பதற்குக்கூட இடமில்லாதிருந்தது. எப்படா அந்தப் பேருந்து வரும் என்று காத்திருக்கத் தொடங்கினர்.
அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிர்புறத்தில் பழனி போகும் பாயிண்ட் டூ பாய்ண்ட் வண்டி ஒன்று வந்து நின்றது. கூட்டம் தள்ளுமுள்ளாக இருந்தது. இவர்கள் இருக்கும் இடத்திற்கும் அதற்கும் சிறிது தூரமே இருந்தது. துரை மெதுவாகத் தான் ஒன்றுக்குப் போய்வருவதாகக் கூறிவிட்டு ஊர்ந்து ஊர்ந்து சென்றான். சரியென்று ராசு தலையசைத்தான். நகர்ந்து நகர்ந்து வந்த துரை பழனி வண்டியிலிருந்து இறங்கி ஏறுபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
இத்தருணத்தில் ராசு மனதில் ஒரு எண்ணம் உதித்து மறைந்தது. திடீரென்று அவன் ஒரு முடிவு செய்தான். இப்படி வாழ்க்கை பூராவும் தம்பியை முதுகில் தூக்கி கொண்டு இருக்க முடியாது. இப்படியே தம்பியை விட்டு விட்டு பழனி போகும் வண்டியில் ஏறி ஓடி விட வேண்டியது தான். முடிவு செய்தவுடன் பேருந்தில் ஏறி விட்டான். ராசுவிற்கு நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது. காசில்லை என்றாலும் எப்படியாவது எங்காவது வண்டி நிற்கும்போது இறங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் ராசு வண்டியில் ஏறிவிட்டான்.
பேருந்து புறப்பட்டு விடும் என்பது மனதில் பட, கடைசியாக தம்பியை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற ஜன்னலில் தலையை விட்டுப் பார்த்தான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் பேருந்தின் பக்கம் இருந்த அவனைக் காணவில்லை. நகர்ந்து நகர்ந்து வெகுதூரம் செல்ல முடியாதே... எங்கு போனான். என்ற எண்ணத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவனுக்குச் சரியாகத் தெரியாததால் பேருந்தின் அடுத்த படிக்கட்டு வழியாக இறங்கிப் பார்த்து விடலாம் என்று கருதி கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு சென்றான்.
பேருந்தின் பின்பகுதியில் தரையில் துரை அமர்ந்திருந்ததைக் கண்ட ராசு திடுக்கிட்டான். அடப்பாவி நாம அவன விட்டுட்டுப் போயிடலாம்னு நெனச்சா அவன் நம்ம அண்ணனுக்கு எந்தத் தொந்தரவும் குடுக்கக்கூடாதுன்னு நெனச்சிப்புட்டனே... என்று மனதில் தோன்ற தன் செயலை நினைத்து வெட்கப்பட்டான்.
சட்டென்று தம்பியின் அருகில் வந்து, “ஏன்டா தம்பி எதுக்குடா பஸ்ஸூல ஏறுன... பஸ்ஸூ புறப்படப்போகுதுடா எறங்குடா... என்று கூறிக் கொண்டே தம்பியைத் தூக்கிக் கீழே இறக்கி விட்டுவிட்டு அவன் வண்டியிலிருந்து இறங்கி, அவனைத் தூக்கிக் கொண்டு அப்பா அம்மா நின்ற இடத்தினை நோக்கிச் சென்றான்.
தன் தம்பியைப் பார்த்த ராசுவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது. அதனைக் கண்ட துரை அழுதுகொண்டே, “ஆமாண்ணே எத்தன நாளக்கித்தான் நீ என்னயச் சொமந்துக்கிட்டே திரிவே… எனக்கு ரெம்பக் கஷ்டமா இருக்குண்ணே... அதனாலதான் எங்கிட்டாவது கிளம்பிப் போயிடலாம்னு நெனச்சிப் பஸ்ஸில ஏறிட்டேன்... நான் போயிட்டா நீங்கள்ளாம் நிம்மதியா இருக்கலாம்ல...” என்றான் நாத்தழுதழுக்க...
துரை கூறியதைக் கேட்ட ராசு, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினான். ராசுவிற்கு மனதில் யாரோ ஓங்கிக் குத்தியதைப் போன்றிருந்தது. “ச்சே தம்பியோட குறையை ஒரு சுமையா நெனச்சி அவன விட்டுட்டு ஓட நெனச்சிட்டமே... இந்தப் பய மனசால ஒசந்துட்டான்... ஆனா நான்... அவனுக்கு ஒரு குறையுமில்லை... ஆனா எனக்குத்தான் ஒடம்பு முழுக்கக் கொறை...” என்று மனதிற்குள்ளேயே நொந்துபோன ராசு தன் தம்பியை தூக்கிக் கொண்டு போய், அப்பா அம்மாவிடம் உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான்.
சற்று நேரத்தில் அவர்கள் போகக் கூடிய பஸ் வந்ததனால் அவர்கள் அதில் ஏறி ரோட்டரிக் கிளப் இருக்குமிடத்தில் இறங்கினார்கள். அங்கிருந்த அந்த ரோட்டரி கிளப் அலுவலர் அவர்களைப் பார்த்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வண்டியைக் காட்டி அதனை அவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர்களது நிலையை அறிந்து, அந்த வண்டியை ரோட்டரிக் கிளப்பின் காரிலேயே ஏற்றச் சொல்லி அவர்களையும் அந்த வண்டியில் ஏறச் சொல்லி அவர்களது ஊரிலேயே கொண்டுபோய் இறக்கி விடுவதற்கும் உடன் ஏற்பாடு செய்தார்.
அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு அவர்கள் அனைவரும் காரில் அனைவரும் ஏறி அமர்ந்தனர். அப்போது ராசு அவனது அப்பாவிடம், “ஏப்பா வண்டி வாங்கப் போறத எங்கக்கிட்ட முன்னமேயே சொல்லிருக்கலாம்ல... ஏஞ்சொல்லல...” என்று கேட்டதற்குச் செல்லப்பன், “டேய் ராசு எந்தப் பொருளும் நம்ம கையில கெடைச்சாத்தாண்டா உறுதி. ஒங்க ரெண்டுபேருகிட்டயும் சொன்னபிறகு அது கிடைக்கலன்னு வச்சிக்க ஒங்க மனசு வருத்தப்படும்... அதனாலதான் வண்டி கெடச்ச பின்னால சொல்லலாம்னு பேசாம இருந்துட்டேன்...”
இதைக் கேட்ட ராசு எதையோ சொல்ல முயலும்போது துரை அவனது கையைப் பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ராசு பேசாமல் இருந்துவிட்டான். மேலும் தான் அவர்களைவிட்டுவிட்டு ஓட நினைத்ததையும் மனதிற்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டான். ராசுவும் துரையும் ஒருவித அர்த்தப்புஷ்ட்டியுடன் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். அந்தப் பார்வையில் இருவர் மனமும் ஒன்றாகிச் சிறகடித்துப் பறந்தன.