"அம்மா... ஆ... ஆ... அம்மாவோவ்... எங்கம்மா இருக்க...? என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்தான் சுந்தரம். வீட்டிற்குள்ளிருந்து வந்த நல்லம்மா சத்தம்போட்ட மகனைப் பார்த்து, “என்னடா... எதுக்குச் சத்தம் போட்டுக்கிட்டு வர்றே... எப்பப் பாத்தாலும் கரபுரன்னுக்கிட்டே இருக்கணுமாக்கும்? இப்ப என்ன நடந்திருச்சின்னு இப்படிக் கெடந்து குதிக்கிறே...?” என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள்.
அம்மாவைப் பார்த்த சுந்தரம், “பின்ன என்னம்மா... அப்பா வயசான காலத்துல பேசாம வீட்டுல இருக்க வேண்டியதுதானே... வேலை பாக்குறேன்... வேலைபாக்குறன்னு எல்லாரோட மானத்தையும் வாங்கித் தொலையுறாரு...”
கடுமையாகப் பேசிய மகனைப் பார்த்து, “ஏன்டா இந்த ராத்திரி நேரத்தில சத்தம்போட்டுத் தொலைக்கிற...? நீ வேலைக்குப் போயிட்டு வர்றே... வந்தவன் சாப்புட்டுப் போட்டு பேசமாத் தூங்க வேண்டியதுதானே...? அதவிட்டுட்டு வந்ததும் வராததுமா ஒங்க அப்பாவை ஏந்திட்டுறே...” என்று நல்லம்மா கேட்டாள்.
அதற்குச் சுந்தரம், ”நானு அண்ணங்க ரெண்டுபேரு நல்லாத்தான் சம்பாதிக்கிறோம்... பிறகு எதுக்கு அவரு வயல் வேலைக்குப் போகணும்... வயலுக்குப் போயி வேலை செய்யாட்டி அவருக்கு எதுவும் கெடைக்காமப் போயிருமோ... வயல்ல போயி மாங்கு மாங்குன்னு வேலை செய்யிறது... அப்பறம் முடியலன்னு வந்து படுத்துக்கறது... இவருக்கு என்ன கொறச்சல்ல விட்டுருக்கோம்... மூணு பயலுக இருந்துகிட்டு இவர இப்படி வேலை செய்ய விட்டுட்டாங்களேன்னு ஊரே காரித்துப்பாது... பெரிய வெவசாயம் பாக்கறாராம்...” என்று பொரிந்து தள்ளினான்.
சுந்தரம் இளையவன். அவன் இங்கு சிவில் எஞ்சினியராக பொதுப்பணித்துறையில் வேலைபார்க்கிறான். அவனது அண்ணன்கள் இருவரும் சிங்கப்பூரில் இன்ஞ்சினியராக இருந்தனர். கைநிறையச் சம்பளம் வாங்கி அப்பாவின் பெயருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சுந்தரத்தின் அப்பா யார் பேச்சையும் கேட்காது அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான வயலில் விவசாய வேலை எதையாவது பார்த்துக் கொண்டே இருப்பார்... வெறுமனே இருக்கமாட்டார்...
இன்று மதியத்தில் தன் நண்பர்களுடன் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டு ஊரின் நடுவே இருக்கும் வேப்பமரத்தடியில் வெவசாயத்துலருந்து வரக்கூடியதைப் பார்த்தாத்தான் நிம்மதி... அதுல கிடைக்குற நிம்மதி வேற எதுலயும் கெடைக்கமாட்டேங்குதுய்யா... மனுசன் சும்மா ஒக்காந்துக்கிட்டு சாப்புடறது எவ்வளவு பெரிய குத்தம் தெரியுமா...” என்று பெரிதாக உரையாற்றினார். அவர் பேசியதைக் கேட்டுவிட்டு வந்த சுந்தரத்தின் நண்பர்கள் அதனை அப்படியே அவனிடம் கூறிவிட்டனர். அதனைக் கேட்ட சுந்தரத்திற்கு அவமானமாகப் போய்விட்டது... ச்சே... நம்ம அப்பா ஏன்தான் இப்படி இருக்காரோ...? என்று மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வந்தவன் வீட்டில் மனதில் இருந்ததெல்லாவற்றையும் கொட்டிவிட்டான்.
தன் அப்பாவைப் பார்த்து, “அப்பா என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் என்னப் பார்த்து என்ன கேள்வி கேட்டானுக தெரியுமா...? ஏன்டா நீங்கள்ளாம் இப்படிச் சம்பாதிக்கிறீங்களே ஆனா ஒங்கப்பாவ மட்டும் இப்படிக் கவனிக்காம வயக்காட்டுக்கு அடிச்சுத் தொரத்துரீங்களே நல்லாவாடா இருக்கு... ஏன்டா ஒங்க அப்பாவப் போட்டு இந்தக் கஷ்டப்படுத்துறீங்க... அப்படீன்னு கேக்குறான்... எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலப்பா... இனிமே வயக்காட்டப்பக்கம் போகாதீங்கப்பா... ஒங்களுக்கு என்ன கொறச்சல்... பேசாம வீட்டுலயே இருந்துகிட்டு நல்லா ராஜாமாதிரி இருங்கப்பா... விவசாயமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்... அதுல என்ன கிடைக்குது...”
என்று அழாத குறையாகக் கூறினான் சுந்தரம்.
அவனது சத்தத்தைக் கேட்ட சுந்தரத்தின் அப்பா எதுவும் பேசவில்லை... அமைதியாகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல் கட்டிலில் படுத்துக் கொண்டார். அப்பா தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட சுந்தரம் அம்மாவைச் சாப்பாடு போடச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டு கம்ப்யூட்டர் ரூமுக்குள் போனான்.
சுந்தரத்தின் அம்மாவிற்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் பேசியது அவளது நெஞ்சில் கனலைக் கொட்டியதைப் போன்றிருந்தது. அவள் மகனது கம்ப்யூட்டர் ரூமிற்குள் சென்றாள். அம்மா வந்ததைக் கண்ட சுந்தரம் என்ன என்பதைப் போன்று ஏறிட்டுப் பார்த்தான்.
"ஏன்டா அப்பாவைப் போயி இப்படிப் பேசலாமா? அவரு பாட்டுக்குச் செவனேன்னு இருக்காரு... அவரப் போயி மனசு வருத்தப்படுற மாதிரி பேசற... ஒனக்கு என்ன புத்திகித்தி மழுங்கிப் போச்சா...? ” என்று நல்லம்மாள் கேட்டாள்.
அதனைக் கேட்ட சுந்தரம் அம்மாவைப் பார்த்து, "அம்மா, அப்பா ஏன் இப்படிக் கஷ்டப்படணும்னு கேக்கறேன்... மூணு மகன்களும் சம்பாதிச்சுக் கைநிறையக் கொடுக்கிறோம். அதவச்சு நல்லா செலவழிச்சிக்கிட்டு ராஜாமதிரி இருக்காமா அவரோட கூட்டாளிங்களோட சேந்துக்கிட்டு கண்டமேனிக்குப் புலம்பிக்கிட்டுத் திரியராரு... அவரு பெரிய உழைப்பாளியாம்... பெரிய விவசாயியாம்... அவரால விவசாயம் பாக்காம இருக்க முடியாதாம்... அவரு பண்ற விவசாயத்தப் பத்தி நமக்குத் தெரியாதாக்கும். அவரு செஞ்ச விவசாயம் எத்தனை நாளு நமக்கெல்லாம் அரை வயிற்றுக்குச் சாப்பாடு போட்டது. அவரால சும்மா இருக்க முடியாதாம்... ஓடியாடி வேலை செஞ்ச ஒடம்பாம் சும்மா இருந்தாக்கா ஆள மொடக்கிப் போட்டுருமாம்... கால்வயித்துக் கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து ஒழைச்சித்தான் கஞ்சி குடிக்கணுமாம். அதுல கெடைக்கிற சந்தோஷம் வேறெதுலயும் கெடைக்காதாம்... அதுமட்டுமில்லைம்மா... பையன்க சம்பாதிச்சி கொடுக்கிறதுல சாப்பிடக் கூடாதாம்... அப்படிச் சாப்புடுறதுல ஒடம்பெல்லாம் கூசுதாம்... இதெல்லாம் ரெம்ப ஓவரா இருக்குல்ல... எனக்கு வர்ற கோபத்துக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அவனவன் நம்மல ஒக்கார வச்சிச் சாப்பாடு போட ஆளில்லையேன்னுட்டு கவலப்பட்டுக்கிட்டு அழுதுக்கிட்டுக் கிடக்கிறான்... இவரு என்னடான்னா கண்டமேனிக்குப் பேசிக்கிட்டுத் திரியராரு...” என்றான்.
அதனைக் கேட்ட நல்லம்மாவோ “சரிடா இதெல்லாம் நெனச்சிக்கிட்டு இருக்காதே... அவரு சுபாவம் அப்படி... விடுடா...” என்று மகனைச் சமாதானப்படுத்திவிட்டுச் சாப்பிடுவதற்குச் சென்றாள்.
மகனின் பேச்சைப் படுக்கையிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்தின் அப்பாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் மனம் வேதனைப்பட்டது. “பய சின்னப்பிள்ளைன்னு செல்லம் கொடுத்தது தப்பாப் போயிருச்சு... ரெம்பப் பெரிய மனுசனாட்டம்ல்ல பேசிக்கிட்டுப் போறான்... இவுக சம்பாதிச்சித் தர்ரதுல நானும் ஒழைக்காம ஒக்காந்து சாப்பிடணுமாம்... இந்தளவுக்கு இவுகல்லாம் வர்றதுக்குக் காரணம் யாரு... எது இவுகளைக் காப்பாத்துச்சு... வளந்து ரெண்டு காசக் கண்டவுடனே இவுகளுக்கு வெவசாயமும் அதப்பாக்குற அப்பனும் கேவலமாப் போயிட்டம்... எல்லாம் தலையெழுத்து... இவனுகளச் சொல்லிக் குத்தமில்ல... காலம் கலிகாலமாப் போச்சு...”என்று மனதிற்குள்ளேயே அவன் கூறியதை நினைத்து நினைத்துக் குமைந்தார்.
அவர் படுத்திருந்தாலும் அவர் மனம் பல்வேறு எண்ணச் சூழல்களில் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது... அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தனது அப்பாவுடன் அவருக்குச் சொந்தமான வயலில் வேலை செய்து அதிலிருந்து வந்த வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்தது. விவசாயம் தான் எங்களது வாழ்வாதாரம். எனக்கு மூன்று பிள்ளைகள். நான், என் மனைவி, என் தாய் தந்தையர் என ஏழு குடும்ப உறுப்பினர்களின் வயிற்றையும் வாழ்க்கையையும் எனது விவசாயமே காப்பாற்றி வந்தது.
என்னோட ஒழைப்புக் குடும்பச் செலவிற்கே சென்று விடும். வறுமை யாருக்கில்லை? இவனுகளக் கஷ்டப்பட்டுத்தான் வளத்தேன். நாங் கஷ்டப்பட்டாலும் அவனுக படிப்பை நிறுத்தலையே. அவனுக விரும்புன படிப்பத்தானே இப்பப் படிச்சிருக்காங்க. அப்ப எல்லாம் கேவலமாப்படாத விவசாயம் இன்னக்கிப் போயி மானத்த வாங்குதாக்கும்... ஒரு காலத்துல ஏங்கூட நின்னு வயவரப்பு வெட்டுன பயலுக இப்ப கால்ல வதி(சேறு) ஒட்டாம வாழ்ந்ததா ஒதுங்கி நடக்குறான்... இவனுகளப் பாத்தா எனக்குப் பத்திக்கிட்டு வருது...
என்னோட மூத்தமகன் படிப்ப முடிச்சிட்டு வெளிநாட்டுல வேலை கெடச்சிப் பேயிட்டான். அதுக்குப் பின்னால வீட்டுல செல்வம் கொழிக்கத் தொடங்கிச்சி... சாதாரண கூரை வீட்டுல இருந்த நாங்க பெரிய மாடிவீட்டுல வாழற நிலை உருவாச்சு. பையனுக தலையெடுத்த பின்னால கையில நெறையப் பணமும் ஊருல நல்ல மதிப்பும் ஏற்பட்டுச்சு. ஆனா பணங்காசு வந்த உடனேயே வயலுக்கே போகக்கூடாதுன்னு பயலுக சொல்றானுக... என்னால விவசாயம் பாக்காம இருக்க முடியாது...? அந்தப் பயலுக சொன்னதக் கேட்ட என்னோட மனசுல நெருப்பக் கொட்டுனமாதிரி ஆயிப்போச்சு... இந்தப் பயலுகளுக்கு என்னத்தச் சொல்லி எப்படிப் புரியவக்கிறது...? விவசாயம் பாத்துத்தான் சாப்புடணுங்கற நிலைமையில அவனுக இப்ப இல்லையாம். பயலுக சம்பாதிக்கிறபோது அப்பன் வயலுக்குப் போயி விவசாயம் பாத்தா ஊருல உள்ளவன் கேவலமாப் பேசுவானுகளாம். பணம் வந்தஉடனேயே அவனுகளுக்குப் பழசெல்லாம் மறந்துடுமா...? அப்ப விவசாயம்னா கேவலமா...? விவசாயி இல்லைன்னா இந்த உலகத்துல எதுவுமே இல்லைங்கறது யாருக்கும் தெரியாதா...? விவசாயம் இல்லைன்னா இந்த உலகத்துல யாராலயும் வாழமுடியாதுங்கறது எல்லாரும் அறிஞ்ச விசயந்தானே...? விவசாயம் பாக்குறவன மண்ணுமுட்டிப் பயன்னு சொல்லி கேலிபண்றாங்க... இந்த மண்ணுமுட்டிப் பயக மட்டுமில்லைன்னா, அத்தனைபேரும் மண்ணுக்குள்ள போயிறணுங்கறது அவனுகளுக்குத் தெரியலபோலருக்கு... தன்ன வளர்த்து ஆளாக்குன இந்த விவசாயத்த அப்பன் பாக்குறது என்னோட மகனுக்கு கெளரவக் குறைவாப் போயிருச்சு...
எங்க ஊருல பலபேரு தங்களோட நிலத்தை மனைக்கட்டுக்களா மாத்தி வித்துட்டு அதப் பேங்குல போட்டுட்டு அதுல வர்ற வட்டியவச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... இந்தப் பணத்தால இவங்களுக்குத் தலைகால் புரியமாட்டேங்குது...? என்னப் புரிஞ்சிக்கிட்ட ஏம்பொண்டாட்டியும் என்னப் பாத்து, “பயலுகதான் சம்பாதிக்கிறாங்கள்ள... இன்னும் ஏன் விவசாயத்தக் கட்டிக்கிட்டு அழறீங்க... பேசாம வீட்டுல இருங்கன்னு” சொல்றா... இந்தப் பயலுக என்ன நெனச்சிக்கிட்டாங்க... நல்ல நெலத்தத் தரிசாப் போடலாமா...? தரிசாப் போனது என்னோட நிலம் மட்டுமில்ல... என்னோட மனசும்தான்... என்னப் பாத்து எழுதப் படிக்கத் தெரியாதவன்னு நெனச்சிக்கிடுறாங்க...? யாரு படிக்கத் தெரியாதவன்...? உலகத்தப் படிக்க வேணாம்... இல்ல... நாட்டு நடப்பப் படிக்க வேணாம்... ஏட்டுப் படிப்புப் படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்சமாதிரி ஆயிடுமா...? படிச்சிட்டு வெவசாயம் பாக்குறது என்ன தப்பா...? ஒரு விவசாயியோட மனசப் புரிஞ்சிக்க முடியலியே...? அரிசிவேணுமின்னா... பையத்தூக்கிக்கிட்டு கடயில போயிநிக்கணும்... ஒரு விவசாயிக்கு இதவிட என்ன கேவலம் வேண்டிக்கிடக்கு...? விடிஞ்சா மாட்டுப்பொங்க... வெவசாயியயும் வெவசாயத்தையும் மதிக்கத் தெரியாத பயலுக மாட்டுப் பொங்க கொண்டாடினா என்ன? கொண்டாடாட்டி என்ன? எல்லாம் சடங்காப் போயிருச்சு... விவசாயம் பாத்து வயல்ல வற்ற நெல்லை அரச்சி அதுல பொங்க வைக்கிறது எப்படி?அந்தச் சொகத்தை மனசாற அனுபவிக்க முடியுமா...? இந்தச் சுகம் கடயில வாங்கிப் பொங்க வைக்கிறதுனால கெடைக்குமா...? இதையெல்லாம் இந்த ஊருப்பயலுகளும் என்னோட மகனுங்களும் எப்பத்தான் புரிஞ்சிக்கப் போறானுங்களோ...? ஆனா காலம் இவனுகளுக்குப் புத்தி புகட்டும். அப்பத்தான் இவனுக தவறப் புஞ்சி நடப்பானுக... அந்தக் காலம் எப்பவாவது வராமலா போகும்... நிச்சயம் வரும்...” என்று நினைத்தவாறு அசதியால் தூங்கிப் போனார் சுந்தரத்தின் அப்பா.