சம்பள கிளார்க் நாராயணன் ஒரு பெண்ணின் போட்டோவை பக்கத்து கிளார்க் மணியிடம் காண்பித்து இளிக்க, அவனும் ஒரு மாதிரி சிரித்தான்.
இருவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்தப் போட்டோ கண்டிப்பாக நாராயணனின் மனைவி போட்டோவாக இருக்க முடியாது. மேலும் மனைவியின் போட்டோவுக்கு அப்படி ஒரு மாதிரியான சிரிப்பும் வரமுடியாது.
“இது தான் என் ஆளு... பேரு உமா...” என்று கண் சிமிட்டினான் நாராயணன்.
“ஓ... செட் ஆயிடிச்சா...” என்றான் மணி.
“ஆயிடுச்சி..” நாராயணன்.
“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சிங்கிறத சொன்னியா...”
“முதல்ல கல்யாணம் ஆகலன்னு சொல்லித்தான் ஆரம்பிச்சேன்... அப்புறம் சொல்லிட்டேன்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா... இப்ப என்ன அவளால விட முடியாது... எவ்வளவு நாள் முயற்சி பண்ணினேன் தெரியுமா... கொஞ்ச கொஞ்சமா அவள கவுத்திட்டேன்... ”
“நீ அதிர்ஷ்ட காரன்பா...”
அடுத்த நாள் மதிய வேலை.
ஆபீஸ் கதவருகே ஒரு ஆள், நாற்பது வயது மதிக்கலாம். நின்று கொண்டு நாராயணனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த நாராயணன், அந்த ஆளைப் பார்த்த உடன் திடுக்கிட்டான். வேண்டுமென்றே மீண்டும் குனிந்துகொண்டு வேலை செய்வது போல நடித்தான்.
அந்த ஆள் போயிருப்பான் என்ற நம்பிக்கையில் நாராயணன் நிமிர்ந்து பார்த்தான். கண்கள் சந்தித்து விட, அந்த ஆள் வெளியே வருமாறு நாராயணனைக் கூப்பிட்டான்.
மற்றவர்கள் இதைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தான் நாராயணன்.
“என்ன நாராயணா... யாரு அது...” மணி கேட்க, அதிர்ச்சி அடைந்த நாராயணன்,
“என்னோட மச்சினன்...” என்றான்.
“ஓ... விஷயம் தெரிஞ்சி போயிடுச்சா...” மணி.
”அப்படித்தான் நினைக்கிறேன்...”
“இப்ப என்ன செய்யறது...”
“நீ தான் எனக்கு உதவணும்...”
“கூட வரணுமா...”
“இப்ப வேண்டாம்... தேவைப்பட்டா கூப்பிடறேன்...”
நாராயணன் கிளம்பிப் போனதை மணி கவனித்தான்.
கொஞ்ச நேரம் கழித்துத் தன் சீட்டுக்கு திரும்பி வந்த நாராயணனுக்கு தலையெல்லாம் கலைந்திருந்தது. உடம்பு வியர்த்து இருந்தது.
மச்சினன் அடித்திருப்பானோ...
மணிக்கு மனதுக்குள் சந்தோசம்.
உமாவுக்கு அப்பா கிடையாது... அம்மா தான் பத்து பாத்திரம் தேய்த்துக் கஷ்டப்பட்டு வளர்த்தாள். பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்தான் அம்மாவால் படிக்க வைக்க முடிந்தது. அந்தப் படிப்புக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. காண்டிராக்ட் பேரில் ஒரு சிறிய வேலைதான் கிடைத்தது.
நாராயணனை, உமா ஒரு வருடத்திற்கு முன்தான் அந்த அரசு அலுவலக ஆபீஸ் வாசலில் இருந்த டீக்கடையில் பார்த்தாள்.
தன்னை அவன் ஒரு மாதரி பார்ப்பதாக அவள் நினைத்தாள்.
ஏனோ அவனை அவளுக்குப் பிடித்து விட்டது.
அவனும் அதைக் கண்டுபிடித்து விட்டான்.
இரண்டு மூன்று முறை லேசான புன்முறுவல்.
பிறகு, சினிமா... பார்க்...
தியேட்டரில் அவன் அவளைத் தொட, அவளுக்கு எதிர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.
ஒரு நாள்,
“நம்ம கல்யாணம் முடிஞ்சவுடன் ஒரு வீடு பாத்துக்கிட்டுப் போயிடலாம்... இப்ப ஒரு ரூமுல தங்கியிருக்கேன்... என்னோட ரூமுக்கு வாயேன்... என்ன சொல்ற...”
உமாவுக்கு புல்லரிப்பாய் இருந்தது, நாராயணனுடன் வாழப்போகிற வாழ்க்கையை நினைத்து.
ரூமை விட்டு வெளியே வரும் போது, இழக்கக் கூடாததை தான் இழந்து விட்டது தெரிந்தது அவளுக்கு.
முதன் முதலில் அவன் ஏமாற்றுகிறான், பொய் சொல்லுகிறான் என்று அவளுக்கு தெரிய வந்தது, அந்த ரூமைப் பற்றிய உண்மை தெரிந்த போது தான். அந்த ரூம் உண்மையில் அவனது அல்ல, அது ஊருக்கு போயிருக்கும் இன்னனொரு ஆள் உடையது.
பிறகு அவனின் எல்லா ஏமாற்று வேலையும், அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பது உட்பட தெரிந்த போது, அவள் வெகு தூரம் வந்து விட்டு இருந்தாள்.
ஒரு நாள் அம்மாவுக்கு எல்லாம் தெரிந்து போக,
“நீ அவனுக்கு வைப்பாட்டியா வாழப் போறியா...” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
“எனக்குப் பதில் தெரியலம்மா... ஆன இன்னொருத்தன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது...”
அம்மா பதில் சொல்லவில்லை.
அடுத்த நாள் உமாவுக்கு விழிப்பு வந்த போது, அருகில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மா நாலு மணிக்கு எல்லாம் எழுந்து விடுவாளே... இன்று என்ன ஆயிற்று...
பதறிப் போய் அம்மாவை எழுப்ப அவளிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.
பக்கத்து வீட்டில் பெண்களுக்குக் கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கும் ஒரு அக்கா இருந்தாள். பெயர் கீதா. அவளுடைய உதவியுடன் ஜி எச் க்கு அம்மாவைக் கொண்டு போனாள்.
அதற்குள் அம்மாவின் உயிர் போய் விட்டது.
போஸ்ட் மார்ட்டம் செய்துதான் கொடுப்போம் என்றார்கள்.
ரிப்போர்ட்டில் விஷம் குடித்து அம்மா இறந்ததாக வந்தது.
பக்கத்து வீட்டு டிரைவிங் ஸ்கூல் இன்ஸ்டிரக்டர் கீதா, உமாவுக்கு இரண்டு நாள் சாப்பாடு போட்டாள். பிறகு அந்தக் கீதா, தன்னுடன் வந்து கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுமாறும், பிறகு இரண்டு பேரும் சேர்ந்து சொந்தமாய்ப் பெண்களுக்கான ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம் என்றும் உமாவிடம் சொன்னாள்.
கீதாவுடன் ஒரு வாரம் கார் டிரைவிங் கற்றுகொள்ள சென்றாள் உமா. மனம் சரியாக இல்லாததால் அவளால் முழுமையாக கற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள், ஏற்காட்டிற்கு, பிக்னிக் போகலாம் என்று நாராயணன் உமாவைக் கூப்பிட்டான். அவளும் சரி என்றாள்.
பஸ்சில் செல்லப் போவதாய் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, நாராயணன் ஒரு காரில் வந்தவுடன் அவளுக்கு சந்தேகம் வந்தது.
வாடகை கார் வைக்க நாராயணனிடம் பணம் ஏது...?
அந்தக் காரில் பின் பக்க சீட்டில் நாராயணனுடன் இன்னுமொரு ஆள் இருப்பதைப் பார்த்து உமாவுக்கு முகம் சுருங்கியது.
நாராயணன் நகர்ந்து சீட்டின் நடுவில் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆள் கார் கதவின் அந்த ஓரமாக உட்கார்ந்து கொள்ள, உமா இந்த ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.
கார் புறப்பட்டது.
டிரைவர் சீட்டில் இருந்தவனுடன் நாராயணன் மரியாதையாக பேசியவுடன், அது வாடகை கார் இல்லை என்பதும், அந்தக் கார், டிரைவர் சீட்டில் இருப்பவனின் காராக இருக்கும் என்றும், அவர்கள் இருவரும் நாராயணனின் அலுவலக நண்பர்கள் என்பதும் புரிந்தது.
நகரத்தைக் கடக்கும் போது, இன்னொருவன் முன்பக்க சீட்டில் ஏறிக் கொண்டான். பிக்னிக்கு போகலாம் என்று தன்னைக் கூப்பிட்டு விட்டு இப்படி நாராயணன் அலுவலக நண்பர்களுடன் காரில் கூட்டிப் போவது கொஞ்சம் கூடப் பிடிக்க வில்லை உமாவுக்கு.
பஸ்சில் போயிருக்கலாம்...
மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்தவுடன் நாராயணனின் கை தன் இடுப்பைத் தடவுவதைத் தெரிந்து கொண்ட உமா...
‘என்ன இது... கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல்’என்று நினைத்துக் கொண்டு நாராயணன் பக்கம் திரும்பியவள் அதிர்ச்சி அடைந்தாள்.
தன் இடுப்பைத் தடவிக் கொண்டு இருப்பது நாராயணன் அல்ல, அடுத்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த மனிதன் தான்.
அந்த மனிதன் உமாவின் இடுப்பைத் தடவுவதற்கு வசதியாக, நாராயணன் முன் பக்கமாய் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதும் புரிந்தது.
அந்த மனிதன் தன்னைப் பார்த்து விகாரமாய் சிரிப்பதும், இதைத் தெரிந்து கொண்டே, நாராயணன் வேண்டுமென்றே முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு இருப்பதும் தெரிந்து, நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.
குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொண்டாள்.
மலைப்பாதையின் ஒரு இடத்தில் டீ குடிக்க வேண்டும் என்று வண்டியை நிறுத்தினான் டிரைவர் சீட்டில் இருந்தவன்.
காரை விட்டு இறங்கியவள் நாராயணனிடம் அந்த மனிதன் செய்த சேஷ்டையை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, நாராயணன் உமாவின் காதருகே வந்து,
“கொஞ்சம் இவங்க கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... இவங்களோட தயவு எனக்கு வேணும்... என்னோட மச்சினன் போலீசு, கேசுன்னு வந்து மிரட்டிட்டு போனான்... அப்புறம் என்னோட வேலையே போயிடும்... இவங்க எனக்கு சப்போர்ட்டா இருக்கேன்னு சொல்லி இருக்காங்க...”
கோபமும், அதைத் தொடர்ந்து அழுகையும் வந்தது. என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
அம்மாவின் ஞாபகம் வந்தது. இப்படி பாழும் கிணற்றில் விழுந்து விட்டேனே அம்மா... நீ எவ்வளவோ சொன்னாயே... நான் கேட்க வில்லையே...
உன்னையும் சாக அடித்து, என்னையும் இப்படி ஆக்கிக் கொண்டேனே...
அழுகையை அடக்கிக் கொண்டாள். ஏற்காடு வந்து சேர்ந்தது.
காரை விட்டு இறங்கி எங்காவது ஓடி விடலாமா என்று யோசித்தாள்.
பயமாக இருந்தது.
வீட்டிற்குத் திரும்பி விடலாம் என்று அவள் நாராயணனிடம் சொன்னாள்.
நாராயணன் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் அவனுடன் நடந்தாள்.
நேரம் கடந்தது. கார் கீழே போக புறப்பட்டது.
காரில் அவள் ஏறப் போன போது, டிரைவர் சீட்டில் இருந்தவன்,
“மேடம்... முன்னாடி சீட்ல வந்து உட்காருங்க... பாக்கறதுக்கு வசதியா இருக்கும்...” என்று பல்லை இளித்துக் கொண்டு சொல்ல, உமா நாராயணன் பக்கம் திரும்பினாள்.
நாராயணன் ‘ சரி... போ...’ என்று பார்வையில் சொன்னான்.
முன் சீட்டுக்கு போவதின் மூலம், பின் சீட்டில், அந்த மனிதன் சீண்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று தோன்ற, சரி என்று டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். ஏற்கனவே அங்கு இருந்தவன் பின் சீட்டுக்குப் போனான்.
அங்கு போன உடன், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பவன் ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும், வேண்டுமென்றே தன் இடுப்பில் அவன் தன் விரலால் விளையாடுவது தெரிந்தது அவளுக்கு.
பின் பக்கம் திரும்பி நாராயணனை அவள் பார்க்க, அவன் வேண்டுமென்றே வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘தூ....’ என்று அவன் முகத்தில் துப்பலாம் என்று தோன்றியது அவளுக்கு.
கார் மலைப் பாதையில் ஒவ்வொரு வளைவுகளாகக் கடந்து போய்க் கொண்டிருந்தது.
உமா காரை ஒரு வளைவில் நிறுத்தச் சொன்னாள். கார் நின்றது.
“எனக்கு அந்த பள்ளத்தைப் பார்க்க வேண்டும்...” என்றாள் உமா.
டிரைவர் சீட்டில் இருந்தவன் ரோடின் ஒரு முனையில் கொண்டு போய் காரை நிறுத்தினான்.
காரை விட்டு கீழே இறங்கினாள் உமா. நாராயணன் உட்பட எல்லோரும் காரை விட்டு இறங்கினார்கள்.
அங்கு நின்று கீழே பார்த்தாள்.
கிடுகிடு பாதாளம். தலை சுற்றும் போலிருந்தது.
ரோடின் விளிம்பில், அந்தக் கிடுகிடு பாதாளத்திற்கு மேல் கார் நின்று கொண்டிருந்தது.
“பாத்திட்டேன்... போதும், போகலாம்...” என்றாள்.
எல்லோரும் திரும்பவும் சீட்டில் உட்காரும் வரை காத்திருந்தாள்.
டிரைவர் சீட்டில் இருப்பவனைப் பார்த்தாள் உமா.
அவன் உமாவைப் பார்த்து வக்கிரமாய்ச் சிரித்தான்.
அவனிடம், “நான் ரிவர்ஸ் எடுத்துக் கொஞ்ச தூரம் ஓட்டறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கிறது சரியா வர்ரதில்லே...” என்றாள்.
அதைக் கேட்ட நாராயணன், “ ஆமா... உமா டிரைவிங் கத்துக்கிறா... டிரைவிங் ஸ்கூல்ல இன்ஸ்டிரக்டர் ஆகப் போறா...” என்றான் மற்றவர்களிடம் பூரிப்புடன்.
“ஓ! அப்படியா... ஓட்டிப் பாருங்க...” என்றார்கள் அவர்கள் இளித்துக் கொண்டே.
டிரைவர் சீட்டில் இருப்பவன் இறங்கி உமா இருந்த சீட்டுக்குப் போய்விட்டான்.
டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்த உமா, சாவியைத் திருப்பிக் காரை ஸ்டார்ட் செய்தாள்.
காருக்குள் இருந்த நான்கு ஆண்களும், அவள் ரிவர்ஸ் கியர் போட்டு காரை எப்படி பின்பக்கமாய் எடுக்க போகிறாள் என்று வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவள் ரிவர்ஸ் கியர் போடவில்லை. மாறாக, முதல் கியரைப் போட்டு முன் பக்கமாய் காரை வேகமாகச் செலுத்தினாள்.
அடுத்த நாள் செய்தி தாள்களில் இப்படி ஒரு செய்தி வந்தது.
‘மலைப் பாதையில் கிடு கிடு பாதாளத்தில் கார் விழுந்தது! காரில் இருந்த ஒரு பெண் தவிர நான்கு ஆண்கள் பலி!’