சுற்றிலும் வேப்ப மரங்கள்... அதன் நடுவில் “அன்பு முதியோர் இல்லம்” என்ற பெயர்ப்பலகை எழுதப்பட்ட பெரிய ஓட்டுக் கட்டிடம் தெரிந்தது. அக்கட்டடம் பார்ப்பதற்குப் புகைபடிந்த ஓவியம் போன்று காணப்பட்டது. தன் நண்பனுடன் டிவிஎஸ் வண்டியில் உணவுப் பொட்டலங்களை ஏற்றி வந்த சிவக்குமார் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இல்லத்திற்குள் நுழைந்து அங்கிருந்த முதியோர்களின் கைகளில் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தான்.
உணவுப் பொட்டலத்தைப் பெற்ற பாட்டி ஒருவர் சிவக்குமாரையும் அவனது நண்பனையும் பார்த்து, "ஏந்தங்க ராசாக்க... நீங்கள்ளாம் யாருபெத்த பிள்ளைங்களோ...? நல்லா இருக்கணும்யா... இந்தமாதிரி சாப்பாட்டக் கண்ணுல பாத்து ரெம்ப நாளாச்சுய்யா...” என்று கொடுத்த சாப்பாட்டைக் கையில் வாங்கிய படி உண்ணாமல் எங்களைப் பாராட்டினார். அவரது பாராட்டு மொழிகளைக் கேட்ட சிவக்குமாருக்குச் சற்று கூச்சமாகப் போய்விட்டது. அவரைப் பார்த்து, “ஏன் பாட்டி சாப்பிடாம இருக்கீங்க... சாப்பிடுங்க..." என்று சிவக்குமார் கேட்கவே அந்தப் பாட்டி சாப்பாட்டைச் சாப்பிடாமல் அவர்களைப் பாராட்டுவதிலேயே குறியாக இருந்தார். அவர்கள் கொடுத்த உணவைக் கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. அந்தப் பாட்டியின் செயலைக் கவனித்தவாறே சிவக்குமாரும் அவனது நண்பனும் அப்பால் நகர்ந்தார்கள்.
எங்களிடம் ஏன் அந்தப் பாட்டி மட்டும் இந்தளவுக்கு அன்பு காட்ட வேண்டும். எங்களிடம் பாசம் காட்ட அந்தப் பாட்டிக்கு அப்படி என்னதான் இருக்கு? என்று சிவக்குமாரும், அவனது நண்பனும் தங்களது மனதுக்குள் சிந்தித்தவாறு மற்றவர்களுக்குச் சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் சாப்பாட்டினைக் கொடுத்த பின்பு மீண்டும் அந்தப் பாட்டியிடம் வந்து... பாட்டி அப்ப நாங்க போயிட்டு வரோம்... என்று விடைபெற நின்றனர்.
அவர்களைப் பார்த்த அந்தப் பாட்டி, “அதுக்குள்ளாற என்னப்பா அவசரம்... கொஞ்ச நேரம் இங்க இருக்கப்பிடாதா...?” என்று கெஞ்சும் தொனியில் கேட்டது அவர்களுக்கு மனதை என்னவோ பிசைவது போலிருந்தது.
உடனே சிவக்குமார் “அதுக்கு இல்லை பாட்டிம்மா... இங்க இருக்கலாம்தான்... ஆனா இதே மாதிரி பக்கத்துல இருக்கற ஒரு இடத்துக்கும் போகணும்... நாங்க வர்றோம்னு அங்கயும் காத்துக்கிட்டு இருப்பாங்க...” என்று கூறியதும்... “அப்பப் போயிட்டு வாப்பா... நீங்க திரும்பி போகையில இங்க வந்து ஒரு எட்டு என்னயப் பாத்துட்டுப் போப்பா... என்ன சரியா...” என்று சிவக்குமாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டார்.
“கண்டிப்பா வந்து பாத்துட்டுப் போறோம் பாட்டி... கவலைப்படாம இப்ப நாங்க கொடுத்ததைச் சாப்பிடுங்க என்ன...” என்று கூறிவிட்டுச் சிவக்குமார் தன் நண்பனுடன் கிளம்பினான்.
யாரோ எவரோ இந்தப் பாட்டி. பார்த்து விட்ட அந்த ஒரு சில நொடிகளுக்குள் எத்தனை அன்பு... திரும்பி வர்றபோது பாட்டியம்மாவைப் பாத்துட்டுத்தான் போகணும்... என்று உறுதியாக நினைத்தவாறு அவர்களிருவரும் அடுத்த இடம் நோக்கிப் பயணித்தார்கள்.
மெளனமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சிவக்குமாரைப் பார்த்து, "என்ன சிவா, பாடடிக்கு ஒன்னை ரொம்பப் பிடிச்சிட்டுது போலருக்கு?" என்றான்.
அதற்கு, “அப்படில்லாம் இல்லப்பா கணேசன் பாட்டிக்கு நாம கொடுத்த சாப்பாட்டை விட, நம்மளைப் பார்த்தது தான் சந்தோஷம்... பாட்டியோட கண்களைப் பாத்தியா? அந்தம்மா சாப்பாட்டை வாங்கும்போது கண்ணு கலங்கிருச்சு... அவங்க மனசுக்குள்ள ஏதோ பெரிய ஏக்கம் ஒண்ணு இருக்கும்போல... இப்படித்தான் அங்க இருக்கிற மற்றவங்களுக்குள்ளும் இருக்கும் என்ன நாஞ் சொல்லறது...?” என்ற சிவக்குமாரின் ஏக்கம் கலந்த பதில் கணேசனையும் சிந்திக்க வைத்துவிட்டது.
"நீ சொல்லறது நூத்துக்கு நூறு உண்மைதாண்டா சிவா... நானும் எல்லாத்தையும் கவனிச்சேன்... அந்த முதியோர் இல்லத்தில இருக்கிற ஒவ்வொருத்தருக்கிட்டயும் ஒரு பெரிய சோகக் கதையே இருக்கும் போல... ஒவ்வொருத்தரும் எதையோ தேடுறது மாதிரியே இருக்குடா... அவங்களோட தேடல் எதுன்னுதான் தெரியல..." என்று கணேசன் கூறியதைக் கேட்ட சிவக்குமார், “நீ சொல்றது உண்மைதாண்டா... நாம வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது அங்க ஒருக்கா போயிட்டுப் போவமே... என்ன சொல்ற...? என்றான்.
"கண்டிப்பா நேரம் இருந்தா போவன்டா... இந்த ஒலகம் எப்படிப்பட்டதுங்கறது இங்க வந்து பாத்ததாத்தாண்டா எல்லாருக்கும் தெரியும்... நிச்சயமா அந்தப் பாட்டியப் பாத்துட்டே வீட்டுக்குப் போவன்டா...” என்று கணேசனும் கூற டிவிஎஸின் ஆக்ஸிலேட்டரை வேகமாகத் திருகினான் சிவக்குமார்.
வண்டியை விருட்சம் என்ற ஆதரவற்றோர் சிறார் இல்லத்தின் முன்பாக நிறுத்தினான் சிவக்குமார். வண்டியைப் பார்த்த அவ்வில்லத்தின் நிர்வாகி சசிகலா அக்கா, "அடடே தம்பிகளா வாங்க வாங்க... ஒவ்வொரு வருஷமும் இதே நாள்ல கண்டிப்பா நீங்க வருவீகன்னு நாங்க எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம் கரெக்டா வந்துட்டிக... ஒங்களைப் பாத்ததுல ரெம்ப சந்தோஷம்... டேய் பசங்களா, இங்க வாங்க யாரு வந்துருக்கான்னு பாருங்க...” என்று குரல் கொடுத்தபடியே எங்களை வரவேற்றார்.
அவரது குரலைக் கேட்ட சிவக்குமாருக்கும் கணேசனுக்கும் தங்களை எந்தளவுக்கு இந்த உள்ளங்கள் எதிர்பார்த்திருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டனர். ஒருவேளை தாங்கள் வராமல் போயிருந்தால் இங்குள்ளவர்கள் எவ்வளவு வருந்தியிருப்பார்கள். இறைவனே இந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது வழியை நீதான் காட்டணும் என்று மனதிற்குள் வேண்டியபடியே, “வணக்கம் அக்கா... எப்படி இருக்கீங்க... வாங்க பிள்ளைங்களோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்போம்... என்று கூறியவாறே சிவாவும் கணேசனும் அந்த இல்லத்துக்குள் நுழைந்தனர்.
அவர்கள் சசிகலா அக்காவுடன் இல்லத்துக்குள் நுழைந்ததும், "டேய் பசங்களா... அண்ணனெல்லாம் இந்தப் புதுவருசப் பொறப்புக்கு ஒங்களைப் பார்க்க வந்திருக்காங்க... எல்லாரும் அண்ணனுங்களுக்கு வணக்கம் சொல்லுங்க..." என்று சசிகலா அக்கா கூறியவுடன், அத்தனை பிள்ளைகளும் எழுந்து நின்று "வணக்கம் அண்ணா..." என்று கூறினார்கள். அவர்களின் ஓங்கி ஒலித்த அந்த வணக்கம் ஒன்றே அவர்களுக்குள் சிவாவையும் கணேசனையும் பார்த்ததில் எவ்வளவு பூரிப்படைந்துள்ளனர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
சிவக்குமாரும் கணேசனும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து சசிகலா அக்காவிடம் கொடுக்க அவரோ, “தம்பிகளா... நீங்கள் வருஷா வருஷம் இந்தச் சிறுவர் இல்லத்துக்கு வந்து பிள்ளைங்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்குறீங்க... அதனால எல்லாப் பொருள்களையும் நீங்களே இவங்களுக்கு ஒங்க கையால கொடுங்க... அப்ப இந்தப் பிள்ளைகளுக்கும் சந்தோஷமா இருக்கும்..." என்று கூறவும் சிவக்குமாரும் கணேசனும் நன்றிப் பெருக்குடன் சசிகலா அக்காவைப் பார்த்துவிட்டு பிள்ளைகளுக்கு அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்தனர்.
ஒவ்வொரு குழந்தைகளிடமும் நேரடியாகப் பரிசுகளையும் வழங்கிவிட்டு, கணினியை இயக்கிச் சிறுவர்களுடன் இணைந்து சில கணணி விளையாட்டுக்களை விளையாடிவிட்டு சிவகுமாரும் கணேசனும் விடைபெற ஆயத்தமானார்கள். அவர்கள் சிறுவர்களையும், சிறுமிகளையும் பார்த்து, “ தம்பி தங்கைகளா... நாங்க போயிட்டு வர்றோம்...." என்று கூறி முடிப்பதற்குள்... ஒரு சிறுவன் ஓடி வந்து, "சிவாண்ணா போகாதீங்கோ... நீங்கள்ளாம் போயிட்டா எங்களோட கணினி விளையாட ஆளில்லை... அதனால போகாதீங்கண்ணா... ப்ளீஸ்...” என்று ஏக்கத்தோடு கண்களில் நீர் ததும்ப கையைப் பிடித்துக் கொண்டான்.
அதனைக் கண்ட சசிகலா அக்காவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... அவர் அந்தச் சிறுவன் அருகில் வந்து, "டேய் கண்ணா இங்க பாருங்க... இந்த அண்ணனுங்க ரெண்டு பேரும் ரெம்பத் தொலைவில இருந்து வாராங்க... இப்பப் போயிட்டுப் பிறகு ஒருநாளு வருவாங்க... அப்ப நீ அவங்களோட விளையாடலாம்... நான் ஒங்களுக்குச் சொல்லித்தர்ரன் என்ன... சமத்துப் பிள்ளைல... அக்கா சொல்றதக் கேக்கணும்...” என்று சமாதானப்படுத்திய பின்னர் அரை மனத்தோடு, வலிந்து உருவாக்கிய நம்பிக்கையோடு சிறுவன் கையை விட்டு சசிகலா அக்காவின் அருகில் போய் நின்று கொண்டு ஏக்கத்தோடு அவர்களைப் பார்க்கத் தொடங்கினான்.
அவன் பார்வைக்காகவே அங்கு தங்க வேண்டும் போல் இருந்தது. அந்தச் சின்னப் பிள்ளைங்க பாவம். அவங்க உணரப்படும் தனிமைக்கு யார் வந்து ஆறுதல் கொடுப்பாங்க...? உற்றாரா...? இல்ல உறவுகளா...? இல்லை உலககெங்கும் சின்னப் பிள்ளைங்களப் பராமரிக்கிறம் என்று கூறித்திரியும் போலியான நிறுவனங்களா...? யாருவந்து அவங்களோட ஏக்கத்தைப் போக்கப் போறாங்க...? அவங்களுக்கு யாரு இருக்கா...? ஏதோ ஒரு வகையில அவங்க அநாதையாக்கப்பட்டாங்க... அவங்க அநாதையானதற்கு யார் பொறுப்பு...? அவங்களுக்குத் தேவை ஆறுதலும் அன்பும்தான்... அதுக்காக அவங்க ஏங்கிப் போயிக் கிடக்குறாங்க!”
புத்தாண்டு அதுவுமா... எங்கும் ஏக்கங்களும் விடைதெரியா வினாக்களுமே மிஞ்ச மீண்டும் வீட்டை நோக்கிச் செல்ல அவர்கள் முனைந்தபோது முதியோர் இல்லத்துப் பாட்டியின் எண்ணங்கள் வந்து அவர்களை மோதிச் சென்றன. அந்த நினைப்பு வரவே அவர்களின் வண்டி அவ்வில்லம் நோக்கிச் சென்றது.
டிவிஎஸ் வண்டி முதியோர் இல்லத்தை நெருங்கியது. அவர்களின் கண்கள் பாடடியைத் தேடத் தொடங்கின. பாட்டி அவர்களுக்குச் சிரமம் வைக்கவில்லை அவர்களை எதிர்நோக்கி அவர் வாசலிலேயே அதே சாப்பாட்டுப் பொட்டலத்தோடு காத்திருந்தார். வண்டியை மரத்தடியில் நிறுத்திவிட்டு, பாட்டியிடம் சென்று, “என்ன பாட்டி இன்னும் சாப்பிடாம, அப்படியே சாப்பாட்ட வச்சிக்கிட்டே இருக்குறீங்களே...?” என்று சிவக்குமார் கேட்டான். அதனைக் கேட்ட பாட்டி, "ஆமாய்யா ஒன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டே இருக்கேன். எனக்கு ஒரு ஒதவி செய்யணுமே...! செய்வியாப்பா...?" என்று பரிதாபத்துடன் கேட்கவே, சிவக்குமார், “ஒங்களுக்கு என்ன உதவி செய்யணும் பாட்டி... எதுவாயிருந்தாலும் கேளுங்க...” என்று கூறினான்.
"தம்பி ஒங்களப் பாத்தா என்னோட மகனுங்க ஞாபகந்தான் எனக்கு வருது... எனக்கு ரெண்டு மகன்க... அவங்களோட சின்ன வயசிலேயே அவங்க அப்பா இறந்துட்டாரு... நான் கஷ்டப்பட்டு வளத்து ஒருத்தன எஞ்சினியராவும், இன்னொருத்தன டாக்டராவும் ஆக்கிவிட்டேன்... நல்ல வசதியான குடும்பந்தான்... அவனுகளுக்குக் கலியாணமாகி ஒவ்வொருத்தனும் லண்டனுக்குப் போயி செட்டிலானானுங்க... ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து பாத்துட்டுப் போவாங்க... அப்பறம் ஆறுமாசம் என்பது ஒரு வருஷத்துக்கு ஒருக்கான்னு ஆயிருச்சு... அப்பறம் அவனுக வர்ரதே இல்ல... பணம் மட்டும் அனுப்புவானுங்க... அதோடு ரெண்டு வரி கடுதாசியும் வரும்... பிறகு கடுதாசிகூட வர்ரது இல்ல... பணம் மட்டும் எப்பவாது ஒருக்கா வரும்... அவனுக வருவானுகன்னு நானும் காத்துக்கிட்டே இருக்கறேன்... ஆனா அவனுக யாரும் என்னக் கண்டுகிடவே இல்ல... பணங்காசிருந்து என்னப்பா பிரயோசனம்...? ஒடம்புக்கு சொகமில்லேன்னு இருக்கறப்ப ஒருவாய்க் கஞ்சி காச்சி தர்ரதுக்கும் ஆறுதலா இருந்து பாத்துக்கறதுக்கும் யாருமில்லை... அவனுக இருந்தும் நான் அனாதையா ஆயிட்டேம்பா... எனக்கு அவனுகள விட்டா வேற யாரு இருக்கா...? அவனுகளுக்குப் பணம் பெருசாப் போச்சு... பெத்த நானு சொமையாப் போயிட்டேன்... எத்தனையோ வருசம் ஆயிருச்சு நானு பழைய அட்ரசுக்குக் கடுதாசி எல்லாம் போட்டேன்... ஒண்ணுக்கும் பதிலக் காணம்... பாத்தேன்... சொத்தாவது மண்ணாவதுன்னு எல்லாத்தையும் அனாதை விடுதிகளுக்கும் ஏழைங்களுக்கும் கொடுத்துட்டு இப்ப இந்த இல்லத்துல வந்து தங்கி இருக்கேன்... சொந்தக்காரங்களும் இங்கதான் இருக்காங்க... அவங்கள்ளாம் வந்து கவனிக்கிறதுல்ல... எல்லாம் இருந்து ஒண்ணுமில்லாத அனாதையா வழி இல்லாதவளா ஆயிட்டேம்பா... ஆதரவாப் பேசக் கூட இப்ப எனக்கு ஆளில்லேப்பா... ஏன்டா அவனுகளப் பெத்தோம்னு வருத்தமா இருக்குப்பா... நானு சாகுறதுக்குள்ளாற அவனுக மொகத்தையாவது பாத்துப்புடணும்னு மனசுக்குள்ளாற ஒரு ஆசை இருக்குப்பா... என்னோட தங்கச்சி மகன் தொரப்பாண்டின்னு ஒருத்தன் இருக்கான்... புதுக்கோட்டையில பிருந்தாவனத்துக்கிட்ட கணபதிங்கற பேருல அச்சாபீஸ் வச்சிருக்கான்... அவனுக்கு ஏம்மகனுகளப் பத்தித் தெரியும்னு கேள்விப்பட்டேன்... அவனுகிட்டப் போயிச் சொல்லி ஏம்மகனுகக்கிட்ட என்னப்பத்தி எடுத்துச் சொல்லணும்பா... அவனுக வந்து ஒருதடவ என்னப் பாத்துட்டானுகன்னா ஏம்மனசு ஆறிப்போயிரும்பா... இந்த அட்ரச வச்சிக்கிட்டு எந்தங்கச்சி மகனப் பாத்து விவரத்தச் சொல்லணும்பா...” என்று கண்களில் நீர் வழிய சிவக்குமாரிடம் கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்ட சிவக்குமாருக்கு அவரின் நிலைகண்டு மனம் நடுங்கியது. வேரா இருந்து குடும்பத்தையும் பிள்ளைகளையும் வளர்த்தவங்க இன்னைக்கு யாருமில்லாத அனாதையா நிக்கிறாங்களே... இந்தக் கடசிக் காலத்துலதான அவங்கள அன்போடு பாத்துக்கணும்... வறட்சியான காலத்துல வேருக நீரைத்தேடுறது மாதிரி இவங்க தங்களோட இறுதிக் காலத்துல அன்பையும் அன்பானவங்களையும் தேடுறாங்க... ச்சே என்ன ஒலகம் இது... கிராமங்கள்ள கூட இப்படி முதியோர் இல்லம்ணும் அனாதை இல்லம்ணும் வந்துருச்சே... ஒலகத்துல மனிதநேயங்கறது கொறஞ்சி போயிருச்சா...? என்று மனதில் நினைத்தவனைப் பாட்டியின், “தம்பி... என்னப்பா... யோசிக்கிறே...?” என்ற குரல் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது.
“அது ஒண்ணுமில்ல பாட்டி... நிச்சயமா ஒங்க தங்கச்சி மகனப் புதுக்கோட்டையில போயி பாத்துட்டு விவரத்தச் சொல்லுவேன்... கவலப் படாதீங்க... நீங்க மட்டுமில்ல... பாட்டி... இன்னக்கிப் பல பேரு ஒங்களமாதிரிதான் கடசிக் காலத்துல இப்படி அனாதையா இருக்குறாங்க... ஒங்களோட விவரத்தமட்டும் தாங்க... நாங்க கண்டிப்பா ஒங்களுக்கு ஒதவி செய்யுறோம் போதுமா...” என்று ஆறுதல் கூறினான் சிவக்குமார்.
அதனைக் கேட்ட பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது... அவரிடம் இருந்து விவரங்களைப் பெற்றுக் கொண்ட சிவக்குமாரும் கணேசனும் விடை பெற்ற போது பாட்டி, ”எப்பவாது இந்தப் பக்கம் நீங்க வந்தா... இந்தக் கிழவியப் பாக்காமாப் போயிராதீங்க ராசா... நீங்கள்ளாம் யாரு பெத்த பிள்ளைங்களோ... எங்கமேல இம்புட்டுப் பாசம் வச்சிருக்கீங்க... பெத்த பிள்ளைங்க மறந்து போயிட்டானுக...” என்று குரல் தழுதழுக்கக் கூறியதைக் கேட்ட சிவக்குமார், “பாட்டி... நிச்சயமா ஒங்கள வந்து பாப்போம் பாட்டி... அப்படி வரமுடியலன்னாக் கூட ஒரு லெட்டராவது போடுவோம்... கவலப்படாம நீங்க சாப்புடுங்க... ஒங்க தங்கச்சி மகனப் பாத்து விவரத்தச் சொல்றம்...” என்று கூறிவிட்டு சிவக்குமாரும் அவனது நண்பனும் விடைபெற்றனர்.
அப்போது கூட பாட்டியின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. அவர்கள் வெளியேறி மறையும் வரை பாட்டி அவர்களைப் பார்த்துக் கொண்டே இல்லத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தார். தங்களைச் சந்தித்ததன் மூலம், தனக்குள் வைத்திருக்கும் சுமைகளில், கொஞ்சத்தையாவது அந்தப் பாட்டி இறக்கி வைத்திருப்பார்... அந்தச் சுமை இறக்கமே அவருக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு சிவக்குமாரும் கணேசனும் டிவிஎஸ்ஸில் தங்களது ஊரை நோக்கிப் பயணித்தனர்.