“பாலகுறிச்சி, பாலகுறிச்சி... பஸ் பொறப்படப் போவுது ஏறுறவுக எல்லாம் வந்து ஏறிக்கோங்க... ரைட்... ரைட்...” என்று கூறிவிட்டு பேருந்து நடத்துனர் பேருந்தின் படியில் ஏறிக்கொண்டார்.
பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நடத்துனர் எல்லாப் பயணிகளையும், “படியில தொங்காம எல்லாரும் உள்ள போங்க... தள்ளுங்க...” என்று கூறிக் கொண்டே பயணச் சீட்டுக்களைக் கொடுக்கத் தொடங்கினார்.
அதற்குள், “ஏம்மா... கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல... இப்படி யாரையும் உள்ளாறப் போகவுடாம நடுவுல வச்சிருக்கியே... நல்லாவ இருக்கு... படியில தொங்கிக்கிட்டு வர்றது தெரியலியா...” என்று வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு வந்த வாட்டசாட்டமான மனிதர் நெற்றிப் புருவம் மேலேறியபடி கூறினார். அதனைக் கேட்ட அந்த நடுத்தர வயதுப் பெண்மணி... “எதுக்கு நீங்க இப்ப சத்தம்போடறீங்க... நாங்க கூடைக்கும் சேத்துத்தான் டிக்கெட் வாங்கிருக்கோம்... சும்மா ஒண்ணும் நாங்க வண்டியில ஏறல... ஒங்களுக்கு எடஞ்சல இருந்துச்சுன்னா தனியா காரெடுத்துக்கிட்டு வாங்க... ஒங்கள யாரு இந்தக் கூட்டத்துல வந்து ஏறச் சொன்னா...” என்று பெரியனம் பேசினாள்.
“ஏம்மா கூடைக்கு டிக்கெட் வாங்கிட்டா... பஸ்சையே வெலைக்கு வாங்கிட்டதா அர்த்தமா...? கூடையக் கொஞ்சம் தள்ளி வைம்மான்னா... என்னமோ பெரிசா நீட்டி மொழக்குறே... நீ கூட வச்சிருக்கிற எடத்துல தாரலமா ரெண்டு பேரு நிக்கலாம்...” என்று வாட்டசாட்டமான ஆள்கூற,
‘கூடைய அப்படியெல்லாம் நகத்தி வைக்க முடியாது... கூடையில வாழப்பழம் இருக்கு... உள்ளே இருக்கிற பழம்
நசுங்கினா நீயா பணம் கொடுப்ப... வாயை மூடிக்கிட்டு சும்மா வாய்யா...” என்று பதிலுக்குப் பொறிந்து தள்ளினாள் அந்தப் பெண்.
“ஒன்னல்லாம் சொல்லிக் குத்தமில்லம்மா... இதையெல்லாம் ஏத்தின கண்டக்டரத்தான் சொல்லணும்...” என்று கூறிவிட்டுப் பேசாமல் ஒதுங்கி நின்று கொண்டார்.
நடப்பதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நடத்துனர், “ஏம்மா... காலையிலேயே தகராறு பண்ண வந்திட்டியாக்கும்... கூடையக் கொஞ்சம் தள்ளித்தான் வச்சா என்ன கொறஞ்சா போயிருவ... கொஞ்சம் தள்ளி வைம்மா... கூடையை... மத்தவங்களும் நிக்கவேணாம்... நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்... நீபாட்டுக்குப் பேசிக்கிட்டே போற... என்ன ஒனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசறியா... ” என்று ஒரு அதட்டு அதட்டவே, அந்தப் பெண், “லக்கேஜ நல்லா வாங்கிக்கிட்டு... அதட்டுறதப் பாரு...” என்று முனகியபடியே கூடையைச் சீட்டுக்கு அடியில் கொஞ்சம் நகர்த்தி வைத்தாள்.
பேருந்திற்குள் நடந்த சண்டையில்... கண்ணயர்ந்திருந்த ராமையாவிற்கு விழிப்பு வரவே தன் கைகளால் கண்களைத் துடைத்தபடியே தான் இறங்கும் ஊர் வந்துவிட்டதா என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு பேருந்தின் ஜன்னல் வழியே வெளியே பார்க்க... ஆலவயல்... இரண்டு கிலோ மீட்டர் என்று மைல்கல் பின்னோக்கி சென்றபடியே அறிவித்தது.
“ஏண்டா சின்னையா... என்னடா பண்ற... எத்தனமுற போன அடிக்கறது... போன எடுக்காம என்னடா பண்ற... ஒனக்கெல்லாம் கொஞ்சனாச்சும் அறிவு இருக்காடா... டேய் இன்னிக்குக் கரண்ட் மூணு மணிக்குத்தான் வருமாம்... அதனால நீ பொன்னமராவதி டெப்போவுக்கு போயி ஒரத்தையும் விதை நெல்லையும் வாங்கிட்டு வந்திடு... ஒரு வேலையாவது ஒழுங்கா முடியும்... வெட்டித்தனமா இருக்காதே...” என்று ஒருவர் கைப்பேசியில் காட்டுத்தனமாக அதட்டிக் கத்திக் கொண்டிருந்தார்.
அவ்வளவு கூட்ட நெரிசலிலும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்கள் ஆர்வமாகப் பேருந்தில் ஓடிய வீடியோவில் படத்தை பார்த்தவாறு இருந்தனர். ஒரு நிறுத்தத்தில் பள்ளிச் சீருடை அணிந்த பையன்களும் பெண்களும் முண்டி அடித்துக் கொண்டு பேருந்தில் ஏற... மேலும் பேருந்தில் நெரிசல் அதிகரித்தது.
‘ஓசியில பஸ் பாஸ் கொடுத்தாலும் கொடுத்தாங்க அடுத்த ஸ்டாப்பில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கெல்லாம் இந்தப் பயலுக பஸ்ல ஏறுறாங்க... நாங்க எல்லாம் ரெண்டு மூணு மைல் நடந்து போயி படிச்சோம்... இப்ப இந்தப் பயலுகளுக்கு கொஞ்ச தூரங்கூட நடக்க முடியாமப் போயிருச்சு” என்று பக்கத்தில் இருந்த பெரியவர் தன்னுடைய பழம்புராணத்தைத் தொடங்கினார்.
“அதுமட்டுமில்லீங்க இந்தப் பயலுக பஸ்ஸுல சும்மாவா வருதுங்க... செல்போன வேற வச்சிக்கிட்டு அதுல விளையாட்ட வேற வெளயாடிக்கிட்டு, இன்னுஞ் சில பயலுவ காதில எதையோ மாட்டிக்கிட்டு... தலையை இங்கையும் அங்கையும் ஆட்டி... செல்போனையே மொறச்சிப் பாத்துகிட்டு... அதில பாட்டு கேக்குதா... இல்ல படம் பாக்குதான்னு தெரியல... ம்... காலம் கலிகாலமாயிருச்சுங்க...” என்று அவருக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் தொடர்ந்து பேசினார்.
அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை... முன்பெல்லாம் கிராமத்திற்குச் செல்லும் வழியெங்கும் விவசாய உரங்ககள், பூச்சிக்கொல்லி மருந்து, துணிக்கடை விளம்பரங்கள் நிறைந்து இருந்த காலம் போய்... செல்போன் விளம்பர பேனர்களும்... மொபைல் ஷாப்புகளும்... வயல்களின் இடையே செல்போன் டவர்களும் அந்த இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. காலம் தான் எவ்வளவு முன்னேறிவிட்டது, கிராமங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் சுயத்தை தொலைத்துவிட்டு நகர வாசனையை அப்பிக் கொண்டு வருவதைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.
இவ்வாறு சிந்தனையில் மூழ்கியிருந்த ராமையாவை நேற்று அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடந்த நிகழ்ச்சி உறுத்திக் கொண்டே இருந்தது. அவன் மனைவி பேசிய பேச்சுக்கள் அவனுள் திரைப்படம் போல் ஓடியது.
“இங்க பாருங்க... ஊருக்கு போனோமா... உங்க அண்ணன் சொன்னபடி சொத்தப் பிரிச்சோமா... வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கணும். தெரிஞ்சதா... அதவிட்டுட்டு அங்க போனதும் அவுங்க கஷ்டத்த பார்த்து... மனசு மாறிப் போச்சுன்னு... கூமுட்டை மாதிரி வந்துராதீங்க...
“இங்க பாரு கவிதா... நமக்கு எதுக்கு அந்தச் சொத்து... நம்ம ரெண்டு பேரு வருமானமே போதுமே... பாவம் அண்ணன்... ரெண்டு பொண்ணுங்கள வச்சிக்கிட்டுக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு... நெலத்தில வர்ர வருமானம் மட்டும் தான்... அவருக்கு வேற எந்த வருமானமும் இல்ல... என்னயக் கஷ்டப்பட்டு இந்த நெலைக்குக் கொண்டு வந்தவரே அவருதான்... அவரே இந்தச் சொத்துக்களை எல்லாம் வச்சிக்கட்டுமே...”
“பாத்தீங்களா... நான் சொல்லி வாய மூடல அதுக்குள்ளயும் இங்கேயே இப்படி பேசறீங்க... அங்க போய் அப்படியே அள்ளி கொடுத்திட்டு வந்துராதீங்க... அப்படி எதுவும் செஞ்சீங்கன்னு வச்சுக்கோங்க அப்புறம் நான் பொல்லாதவளா ஆயிடுவேன்... என்னங்க பேசாம இருக்கீங்க... நான் சொல்றதெல்லாம் ஒங்க காதில விழுதா...”
“சரியாத்தா... சரி... என்னைய ஆள விடு. நீ சொல்றபடியே செஞ்சிட்டு வாரேன்...” என்று வேண்டா வெறுப்பாகத் தலையாட்டினான்.
‘ஏன் இப்படி சலிச்சுக்கிறிய... நானொண்ணும் அவுககிட்ட இருந்து அடிச்சுப் புடுங்கிக்கிட்டு வரச் சொல்லல... நமக்கு நியாயமாக் கெடைக்க வேண்டியதத்தான் நானுங் கேக்குறேன்...” என்று அவள் கூறியதைக் கேட்டுவிட்டு மெளனமாகிவிட்டான். நேற்றைய நிகழ்வில் மூழ்கியிருந்த அவனை, “நகரப்பட்டி விலக்கு இறங்குங்க...” என்ற நடத்துனரின் குரல் இன்றைய நினைவிற்குத் திசை திருப்பி வந்த வேலையை நினைவூட்டியது.
பேருந்து நின்றவுடன் நகரப்பட்டி விலக்கில் இறங்கியவர்களோடு ராமையாவும் இறங்கினான். திருமணமான கடந்த பதினைந்து ஆண்டுகளில்... ஆண்டுக்கு மூன்று... நான்கு முறை வருபவன்... படிப்படியாக ஆண்டிற்கு இரண்டு அதுவும் குறைந்து ஒரு முறை... இறுதியில் ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் வருவது என்றாகி... சுத்தமாகப் பிறந்த ஊருக்கு அவன் வருவதே நின்று விட்டது.
அதற்கு காரணம் ராமையாவின் காதல் மனைவி... அவள் கோயமுத்தூரிலேயே பிறந்து வளர்ந்தவள்… அவர்களுடைய பூர்வீகம் கொப்பனாபட்டி என்றிருந்தாலும் அவளுடைய அப்பா அவ்வூரைவிட்டுப் போய் ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது... அதனால் கவிதாவிற்குக் கிராமத்து வாசனை அறவே பிடிப்பதில்லை... மொத்தத்தில் கிராமம் என்றால் அவள் இளக்காரமாகவே நினைத்தாள்...”
மூன்று ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வருவதையே நிறுத்திவிட்டான். கடைசியாக ஆறு மாதத்திற்கு முன் அவனது அம்மாவின் இறப்பிற்காக வந்து இரண்டு நாட்கள் பல்லைக் கடித்து இருந்த அவன் மனைவி... அவனோடு தங்கியிருந்ததுதான். மூன்றாவது நாளே அவள் தன் வேலையைச் சாக்காகக் கூறிக் கோவைக்குத் திரும்பி விட, ராமையா மட்டும் தன் தாய்க்கு மற்ற காரியங்கள் நடக்கும் வரைக்கும் இருந்துவிட்டுச் சென்ற பிறகு இப்பொழுது தான் வருகிறான். அதுவும், சொத்துப் பிரிப்பதற்காக வேண்டி மனைவியின் வற்புறுத்தலால் வருகிறான்.
அதில் ராமையாவிற்குத் துளியும் விருப்பம் இல்லைதான்... இருந்தாலும் அவனால் என்ன செய்ய முடியும்... பிடிவாதமாக இருக்கும் மனைவியின் சொல்லைக் கேட்டுவிட்டுப் பேசாமல் இருக்க முடியுமா...
கிராமத்திற்குள் நுழைந்தவுடன் அவனை வரவேற்றது அவனது பால்ய நண்பன் அழகுதான். ராமையாவைப் பார்த்தவுடன், “அடடே... ராமையாவா... வாய்யா வா... வா... எப்படி இருக்கே... வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா...? ஒன்னய ஒங்கம்மா இறந்தபோது பாத்தது...” என்று டீயை லாவகமாக வானத்திற்கும் பூமிக்கும் ஆற்றியபடியே நண்பனும் டீக்கடை முதலாளியுமான அழகு கேட்க... வழக்கம் போல டீக்கடைப் பெஞ்சில் பெரிசுகளும் ஒரு சில வெட்டி பேர்வழிகளும் ஊர்க்கதையை பேசியபடி அங்கே கிடந்த நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தனர்.
அவனது குரலைக் கேட்ட ராமையாவிற்கு உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. “நல்ல இருக்கேன் அழகு... நீ எப்படி இருக்கே... ஒங்க வீட்டுல எல்லாம் எப்படி இருக்காக...” என்று நலம் விசாரித்தான் ராமையா.
“நல்லா இருக்கேன் ராமையா... என்னப்பா நீ மட்டும் தனியா வந்துருக்கே... பெண்டாட்டி பிள்ளைங்களக் கூட்டிக்கிட்டு வரலயா...”
“இல்லப்பா நானு அவசர வேலையா வந்தேன்... நாளைக்கேக் கிளம்பிருவேன்... அப்பறம் எதுக்கு அவங்களையும் கூட்டிட்டு... ஆமா ஒன்னோட தொழிலு எப்படிப் போயிட்டு இருக்கு...”
“நமக்கு என்னப்பா... எப்பவும் போலத்தான்... நல்லா ஓடிக்கிட்டிருக்கு”
“சரி... அழகு நான் சாயந்திரமா வர்றேன்...” என்று கூறியவாறே அண்ணனின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் ராமையா.
கிராமத்து தெருக்கள் தங்களின் பழைய அடையாளங்களை விட்டு மாறிப்போய் இருந்தன. முன்பெல்லாம் கூரை வீடாக இருந்தாலும் திண்ணை வைக்காத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்... இன்றும் விரல் விட்டு எண்ணலாம் திண்ணை உள்ள வீடுகளை... அவை ஓட்டு வீடுகளாகவும்... கான்கீரிட் வீடுகளாகவும் மாற்றம் பெற்றிருந்தன. நடுநடுவே ஒன்றிரண்டு மாடி வீடுகளும் முளைத்திருந்தன.
ஆடு, மாடுகள், வீட்டின் முன்பு கட்டாமலும்.. நாற்றம் அடிக்காமலும்... வீதியில் கண்டமேனிக்குத் திரியாமலும் தெரு சுத்தமாக இருந்தது கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் தந்தது. அதற்குப் பதில் மோட்டார் பைக் வண்டிகள் எருமை மாட்டைப் போல வாசலில் நிறுத்தபட்டிருந்தன. சில வீடுகளில் கார்களும் நிறுத்தி இருக்க, அவையெல்லாம் கிராமத்தின் முன்னேற்றத்தைக் காட்டியது.
ஆறாவது படிக்கும் போதே, அவனது அப்பா இறந்துவிட... தன் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க அவனது அம்மா பட்ட கஷ்டத்தை ராமையா நினைத்துப் பார்த்தான்.
அதிலும் அவன் பிளஸ்டூ இறுதித் தேர்வில் அந்த வட்டாரத்திலேயே முதலாம் மாணவாய் வந்த போதிலும்... அவனது அப்பாவின் திடீர் இறப்பால் வீட்டையும் விவசாயத்தைம் கவனிக்கத் தன் படிப்பைத் தொடராமல் பாதிலேயே நிறுத்திய அண்ணன் நல்லதம்பி மேல் ராமையாவுக்குக் கொள்ளைப் பிரியம். அண்ணனின் அயராது உழைப்பால் அப்பா விட்டுச் சென்ற இரண்டு ஏக்கர் நிலம் சிறுக சிறுக உயர்ந்து ஐந்து ஏக்கராகப் பெருகியது. தான் படிக்க ஆசைப்பட்ட கல்லூரிப் படிப்பை தன் தம்பி ராமையாவாவது படிக்க வேண்டுமென அவனைச் சிரமம் பாராமல் படிக்க வைத்தான் நல்லதம்பி. அண்ணனின் எதிர்பார்ப்பை வீணாக்காது ராமையாவும் எஞ்ஜினியரிங் படித்து... கல்லூரியில் நடந்த காம்பஸ் இன்டெர்வியூ மூலம் தானே வேலையையும் தேடிக் கொண்டான். இதெல்லாம் நடந்து முடிந்த கதை.
ராமையா நல்லதம்பி இருவரின் அண்ணன் தம்பி உறவைப் பார்த்து, ஊரே வியந்து மூக்கில் விரலை வைத்தது. அப்படிப்பட்ட அண்ணனிடம் சொத்தைப் பிரித்து வருமாறு மனைவி சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லைதான்... என்ன செய்ய… எல்லாம் நேரம்.
அவன் அம்மாவுக்கு காரியம் முடிந்து சொந்த பந்தங்கள் எல்லாம் வந்த வேலை முடிந்து கிளம்பிருக்க... காரியத்துக்கான செலவை ராமையா கணக்குப் பார்த்து ரொக்கத்தை அனைவருக்கும் எண்ணிக் கொடுத்து முடித்து... களைப்பாய் திண்ணையில் சாய்ந்தபோது அவனருகில் வந்த கவிதா... மெதுவாக,
“ஏங்க... நமக்கும் ஒரு பையன் இருக்கான் தெரியுமில்ல... நீங்கபாட்டுக்குப் பணத்தைத் தண்ணிகணக்கா செலவழிக்கிறீங்க...” என்று கூறவே ராமையா, “ஆமா... அதுக்கென்ன இப்போ... நம்ம வீட்டுச் செலவ நாமதான செஞ்சாகணும்...”
“ஆமாங்க இப்படி வர்றவங்க போறவங்க எல்லாருக்கும் நீங்களே அள்ளி விட்டுக்கிட்டு இருந்தா நாம தெருவில நிக்க வேண்டியது தான்... ஆமா... நான் தெரியாமத்தான் கேக்கறேன்... நீங்க மட்டும் தான் உங்க அம்மாவுக்கு பொறந்தீங்களா... ஒங்கண்ணன் பொறக்கலியா...” என்று வெடித்துச் சொற்களைச் சிதறினாள் கவிதா.
ஏய்... என்ன பேசோரோம்ன்னு தெரிஞ்சிதான் பேசரீயா... வாய அடக்கு... தேவையில்லாமப் பேசாத...” என்றான்.
அதற்கு அவளோ, “என்னங்க ஒங்க அண்ணன் என்னய அடிக்கச் சொன்னாராக்கும்... நம்ம காசு ஒண்ணும் தேனாந்தெருவில கெடக்கல... கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நாம ஏன் செலவு செய்யணும்...” என்று அவள் போட்ட சத்தத்தில் பக்கத்து வீடுகளில் இருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன.
ராமையாவிற்குக் கோபம் உச்சந்தலையைத் தொட்டது. அவன் ஆவேசம் வந்து மனைவியை ஓங்கிப் பளார் என்று ஒர் அறை விட...அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அவனது அண்ணனும் அண்ணியும் எவ்வளவோ சமதானப் படுத்தியும்... அவள் கேட்பதாக இல்லை. ஒருவர் மாற்றி ஒருவர் விடாமல் பேச... பேச்சு திசை மாறி... பாகப் பிரிவினைக்கு வித்திட்டது.
அன்று நடந்த பிரச்சனைக்குப் பிறகு இன்று சொத்தில் பாகம் பிரிப்பதற்காகவே ராமையா ஊருக்கு வந்திருந்தான்.
திண்ணையுடன் பழைமை மாறாமல் இருந்த அந்த வீட்டை நெருங்கி...
வாசலில் காலணியைக் கழற்றிவிட்டு, திறந்திருந்த வீட்டினுள் ராமையா நுழைந்தான்.
தம்பியைப் பார்த்தவுடன், “தம்பி வாடா... உள்ள வா... இப்பத்தான் ஒன்ன நெனெச்சிக்கிட்டு இருந்தேன்...” என்று ராமையாவின் அண்ணன் அன்பொழுக வரவேற்றவர் தோட்டத்து பக்கம் தனது தலையைத் திருப்பி...
“ஏ... செல்வி... இங்க வா... ஏந்தம்பி வந்திருக்கான்... வந்து காபி போடு...” என்றவுடன் ராமையா, “இல்லண்ணே... ‘இப்பத்தான் திருச்சியில சாப்பிட்டு வந்தேன்... குளிச்சிட்டு டிபன் சாப்பிடலாம்...’
“ஆமா... ஏண்டா தம்பி கவிதா, முத்து... இவங்கள எல்லாம் கூட்டிக்கிட்டு வரல...”
“இல்லண்ணே...”
“ம்...ம்... கவிதாவுக்கு இன்னும் எங்க மேல கோபந் தீரலபோலருக்கு... முத்து வந்திருந்தா சாரதா, அழகுமீனா கூட விளையாடிட்டு இருப்பானே...”
அண்ணனுக்கு இரண்டு பெண்கள்... பெரியவள் பிளஸ் 2 படிக்கிறாள்... சின்னவள் எட்டாவது... “வாங்க தம்பி...” தோட்டத்திலிருந்து வந்த அண்ணி மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றாள்.
அண்ணியைப் பார்த்தவுடன், “அண்ணி... எப்படி இருக்கீங்க... எங்க சாரதா, அழகுமீனா...”
“சாரதா டியூஷன் போயிருக்கா... சின்னவளை இப்பத்தான் கடைக்கு அனுப்பினேன்... கவிதா, முத்து எல்லாரும் நல்லாருக்காங்களா...?”
“எல்லாம் நல்லாருக்காங்க அண்ணி...”
“ஏய்யா அவுங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமில்ல... முத்துக்குப் பிடிக்குமேன்னு வெள்ள புட்டும்... பணியாரமும் பண்ணியிருக்கேன்”
“அதானால என்ன அண்ணி... இன்னொரு முறை வர்றபோது முத்துவ கூட்டிக்கிட்டு வர்றேன் அப்ப செஞ்சு குடுங்க...”
“ஆமா... கவிதாவுக்கு உடம்பு எப்படி இருக்கு... மாசமா இருக்கான்னு தெரிஞ்சதிலருந்து... அவளுக்குப் புடிச்ச பலகாராம் பண்ணி ரெண்டு நாள் வாய்க்கு ருசியா ஆக்கிப் போடலாம்னு நெனெச்சேன்... என்ன இப்படி பண்ணிட்டீங்களே... டாக்டருக்கிட்ட காமிச்சிங்களா... என்ன சொன்னாரு...”
இதைக் கேட்டவுடன் ராமையாவின் மனதுள் அவன் மனைவி கூறிய வார்த்தைகள் மனதுக்குள் மின்னலென வந்து மறைந்து போனது.கவிதாவுக்கு இது ஐந்தாவது மாசம்... முத்து பிறந்து இரண்டு வருஷத்திற்குப் பிறகு மறுபடியும் கவிதா உண்டாகி இருக்கிறாள்.
“நீயும் வாயேன் கவிதா... அண்ணன், அண்ணி பசங்கள பாத்திட்டு வந்திடலாம்... அப்படியே இந்த நல்ல விஷயத்தை அவங்ககிட்ட சொன்ன மாதிரியும் இருக்கும்... அவுங்களும் சந்தோஷப்படுவாங்க...’
“ஆஹா... நானு அங்க வந்தா உங்க அண்ணி... தேனொழுகப் பேசி... வாய்க்கு ருசியா சமைக்கிறேன்னு சொல்லிட்டு... உங்க மனச மட்டும் இல்லாம... என் மனசை மாத்திடுவாங்க... அதுமட்டுமில்லாம சொத்துக்காக மருந்தக் கிருந்தப் போட்டு மயக்கிட்டாங்கன்னா என்ன செய்யறது...”என்று வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியதைப் போன்று பேசினாள். இதனைக் கேட்ட ராமையா “ச்சே...இவ எப்பத்தான் திருந்தப் போறாளோ... என்று தலையில் அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்.
“அவ நல்லா இருக்காண்ணி... டாக்டர் செக்கப்... மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டுக்கிட்டு இருக்கா... டாக்டர்தான்... இந்த நேரத்தில எதுக்கு அவ்வளவு தூரம் பஸ் பயணம் வேண்டாம்னு சொன்னாரு...” என்று கூறி அவளைப் பற்றிய பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
“முத்துப் பயலப் பாக்கணுமின்னு... என் கண்ணுலே இருக்கு... என்ன வால்தனம்... இங்க ஒடறதும்... அங்க ஓடறதும்... துருதுருன்னு… பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு...” தனக்கு ஒரு பையன் இல்லையே என்ற ஆதங்கத்தில் அண்ணி கூறிவிட்டு அடுப்படிக்குச் சென்றாள்.
நடுக்கூடத்தில் அம்மா போட்டோவின் வழியே... அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவார். அந்த வீட்டினுள்... ஆடம்பரமற்ற அதீதமான பாசமும் அன்பும் நிறைந்து ஓடியது.
“தம்பி நெலத்த எல்லாம் பேசி முடிச்சிட்டேன்... அப்பா விட்டுட்டு போன ரெண்டு ஏக்கர் நிலம் உனக்கும்... இந்த வீட்டையும் மத்த நிலத்தையும் என் பேருக்கும் எழுத பொன்னமராவதி வக்கீல் பொன்னம்பலத்துக்கிட்ட சொல்லிட்டேன். இதுல உனக்குச் சம்மதம் தானே...”
“எனக்கு இதுல கொஞ்சங்கூட விருப்பமே இல்ல அண்ணே...”
“ஏம்பா இதுல ஏதாவது... மாத்துனுமின்னாச் சொல்லு... மாத்திடலாம்...” என்று ராமையாவின் அண்ணன் திகைப்புடன் கேட்க.
“அட என்னண்ணே நீங்களும் புரியாம பேசறீங்க... எனக்குச் சொத்தே வேண்டாம்ன்னு சொல்றேன்... என்ன பண்றது... ஏம்வீட்டுக்காரியோட தொந்தரவு பொறுக்க முடியாமத்தான் வந்துருக்கேன்... கவிதா குணம்தான் உங்களுக்குத் தெரிஞ்சதுதாண்ணே... அவளுக்காகத்தான் பாகம் பிரிக்கவே சம்மதிச்சேன்...”
“உனக்கு வேணுமின்னா சொத்தில இஷ்டம் இல்லாம இருக்கலாம்பா... கவிதாவோட எதிர்காலத்துக்காக அவ எதிர்பாக்கறதுல தப்பு ஒண்ணும் இல்லையே...”
“ஏண்ணே அவதான் புரியாம பேசறான்னா நீங்களும் அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசறீங்க...”
“தம்பி குடும்பம்ன்னு ஒண்ணு இருந்தா... இந்த மாதிரி சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்...”
“அதுக்கில்லண்ணே... அன்னிக்கு அவ பேசினது ரெம்ப ரெம்பத் தப்புண்ணே... அவளுக்குப் பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கறேண்ணே... அண்ணிக்கு இதுல ஒரு வருத்தமும் இல்லையே...”
“தம்பி... அதை அப்பவே நாங்க மறந்திட்டோம்... இப்ப இந்த ரெண்டு ஏக்கர் நெலத்தையும் நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமாத்தான் தரோம்பா... எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல...”
அந்நேரம் அடுக்களையிலிருந்து அண்ணி காபியோடு வர... அவள் கொடுத்த காபியை உறிஞ்சிக் குடித்து விட்டுத் தான் கொண்டு வந்த பழங்கள், இனிப்பு, கார வகைகளை அண்ணியிடம் கொடுத்தான்.
“நாளைக்கு காலைல ரெஜிட்ரேஷன் இருக்குப்பா... டிபன் சாப்பிட்டு வக்கீல பாத்திட்டு வந்திடலாம்... என்னப்பா நாஞ்சொல்றது” என்று நல்லதம்பி கூறியவுடன் ராமையாவும் அதற்கு உடனே, “சரிண்ணே...” என்று கூறிவிட்டான்.
ராமையா... கோவையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் பணிபுரிகின்றான். அவனுக்கு அவனது அண்ணனே பல இடங்களிலும் விசாரித்துப் பார்த்துக் கோவையில் இவனைப் போன்றே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த கவிதாவைப் பெண்பார்த்துத் தம்பிக்கு திருமணம் முடித்து வைத்தான்.
ராமையாவும் கவிதாவும் நன்கு சம்பாதிக்கின்றனர். முத்து பிறந்த பிறகு... இருவரும் சேர்ந்து லோன் போட்டு தற்போது தங்கி இருக்கும் இரண்டு பெட்ரூம் உள்ள வீட்டை வாங்கி இருந்தனர்.
‘சரிப்பா நீ வீட்டுல இரு நான் போயி கறி வாங்கிக்கிட்டு வந்துடறேன். அப்புறம் தீர்ந்துப் போச்சுன்னு சொல்லிடப்போறான்” என்று கூறிவிட்டுக் கடைக்குச் சென்றான் நல்லதம்பி.
அப்போது கடைக்குப் போய்விட்டு அங்கு வந்த அழகுமீனா, “சித்தப்பா...”என்று கூறிக் கொண்டே ஓடி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டாள்.
“எப்படி படிக்கிற அழகு குட்டி...”
‘நல்ல படிக்கறேன் சித்தப்பா... எங்க முத்தயும் சித்தியையும் கூட்டிட்டு வரலையா...”
“இல்லம்மா... சித்திக்கு ஒன்ன மாதிரி ஒரு குட்டிப் பாப்பா வரப்போகுதில்ல... அதனால இப்ப வரல... அடுத்த முறை வரும்போது குட்டி பாப்பாவோட வரேண்டா செல்லம்...”
பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து, கையில் எழுதிப் பார்த்து “நான் எடுத்திக்கவா... ‘கண்களாலே கேட்க... ‘எடுத்திக்கப்பா”என்று அவன் கூறியவுடன் அழகுமீனா அதை எடுத்துக் கொண்டாள். புதுப் பேனா கிடைத்ததில் சந்தோஷப்பட்டு அழகு உள்ளே ஓடினாள்.
அண்ணன் சென்ற பிறகு... குளித்து சட்டை மாற்றி வருவதற்குள்... அண்ணி சுடச்சுட தட்டில் ஆவி பறக்கும் இட்டியோடு... அவனுக்குப் பிடித்த தேங்காய் சட்டினி... புட்டு, மெது வடை, கேசரி என்று பிரமாதமாக செய்து வைத்திருந்தாள்.
“எதுக்கு அண்ணி... இப்படி வகைவகையாப் பண்ணி வச்சிருக்கீங்க...”
“மாசாமா இருக்கான்ணு கவிதாவுக்காக செஞ்சது... எப்பவோ ஒரு வாட்டி வர்றீங்க... அங்க எல்லாம் பொறுமையாய் இதெல்லாம் செய்ய முடியுமா...”
அவள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது... இரண்டு பேரும் வேலைக்குச் செல்வதால்... எங்கே சமைத்து சாப்பிட முடிகிறது... வேலைக்காரி செய்வதைத்தான் சாப்பிட முடிகிறது... அண்ணன் சொன்னபடி வக்கீலைப் பார்த்துவிட்டு... மதியம் கறியோடு, முட்டை பொறியல்... மறுபடியும் என்று நன்கு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் அசந்து தூங்கி எழும்போது மணி நான்காகிருந்தது.
ஒரு எட்டு நிலத்தைப் பார்க்க போகலாம் என்று காலில் செருப்பை மாட்டிக் கிளம்ப... அண்ணன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
அண்ணனின் உழைப்பு நிலத்தின் விளைச்சலில் தெரிந்தது.
‘நீங்க இப்ப போல எப்பவும் ஒண்ணா இருக்கணும்... அப்பா செத்தப்பிறகு... ஒங்கள எப்படி ஆளாக்கிறதுன்னு கவலைப்பட்டேன்... ஆனா உங்க அண்ணன் தான் ஒனக்கு அண்ணனா அப்பாவா இருந்து... நிலத்தில கடுமையா உழைச்சி... இந்த மண்ண பொன்னு விளையற மண்ணா மாத்தினான். அதவிட அந்த மகாலஷ்மி... அதான் ஒன்னோட அண்ணி... இந்த வீட்டுக்கு வந்தப்புறம்... அண்ணனோட சேர்ந்து கஷ்டத்த உணர்ந்து உழைச்சதாலதான் நம்ம குடும்பம் இந்த நிலைக்கு வந்தது.
ராமையா... உன்ன பெத்த தாயா சொல்றேன்... ஒனக்கு அவ அண்ணி மட்டும் இல்லடா... எனக்கு அப்புறம் ஒனக்கு அவதாண்டா அம்மா எப்பவும் நீ அவுங்க ரெண்டு பேரு மனசு கோணாம நடந்துக்கோ...” அன்று இதே வயல்காட்டில் அம்மா சொன்னது பசுமரத்தாணி போல பதிந்தது நினைவிற்கு வந்தது.
வீட்டுக்கு வந்த ராமையா இரவு உணவை முடித்துக் கொண்டு பயணக் களைப்பில் அசதியில் உறங்க... சட்டைப் பையில் இருந்த செல்போன் அடித்தது. கவிதா தான்... போன் பண்ணியிருந்தாள்.
“என்னங்க போன காரியம் என்ன ஆச்சு...” ச்சே... காரியத்திலே குறியாய் இருக்கிறாள். கவிதாவின் மேல் கோவம் கோவமாய் வந்தது.
“அண்ணன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாரு... நாளைக்கு ரெஜிஸ்டெரேஷன் முடிஞ்சிடும்... சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடறேன்...”
அதற்கு மேல் அவள் பதில் எதுவும் சொல்லாதால்... போனை கட் செய்தான். உறக்கம் வர மறுத்து... எப்படியோ உறங்க அப்பாவும் அம்மாவும் கனவில் வந்து போனார்கள்.
மறுநாள்...
உறங்கி எழுந்த நல்லதம்பி... ... தன் தம்பி ராமையாவைத் தேட... அவனைக் காணாததால் தன் மனைவி செல்வியைப் பார்த்து, “எங்கம்மா தம்பியக் காணோம்...” என்று கேட்க,
“அவரு... காலையிலே எழுந்து, குளிச்சி. பலகாரம் சாப்பிட்டு கெளம்பிட்டாரு... பிரெண்ட பாத்திட்டு... அப்படியே ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திடறேன்னு சொன்னாரு...”
“நீ என்ன எழுப்பிச் சொல்லவேண்டியது தானே...”
“சொன்னேங்க... அதுக்கு அவரு அண்ணன எழுப்ப வேண்டாம்... நான் அங்க பார்த்துப் பேசிட்டு அப்படியே ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டாரு...” நல்லதம்பிக்கு மனசே சரியில்லை. ஒருவேளை பாகம் பிரித்ததில் தம்பிக்கு இஷ்டம் இல்லையோ... அரக்கப் பறக்க குளித்து முடித்து விட்டு வண்டியில் பொன்னமராவதி ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றவனுக்கு அங்கு ராமையாவைக் கண்டவுடன் தான் மூச்சு வந்தது.
“வாங்கண்ணே... உங்களுக்காகத்தான் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... எல்லா டாகுமென்ட்ஸ்ஸும் ரெடியா இருக்கு... நீங்க கையெழுத்து போட வேண்டியது மட்டும் தான் பாக்கி... ரெஜிஸ்டர் ஆயிடும்...”
“ஏம்பா எனக்கிட்ட சொல்லிட்டு வந்துருக்கலாம்ல... நீபாட்டுக்குச் சொல்லாம வந்ததால பயந்திட்டேன்டா ராமையா...’
“அதான்... நானு அண்ணிக்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்...”
அவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் உள்ளே சென்று... அங்கு தயாராய் இருந்த டாகுமெண்டில் கையெழுத்து போட்டனர். வந்த வேளை சுபமாய் முடிந்ததில் ராமையாவின் முகத்தில் திருப்பதி தெரிந்தது.
“சரியண்ணே நான் கெளம்பறேன்...”
“பத்திரம் தயார் ஆயிடுச்சினா... நானே ஊருக்கு வந்து நேரிலே தரேன்...”
“அதற்கெல்லாம் அவசியம் இல்லண்ணே... எனக்கு நீங்க கொடுக்கிறதா சொன்ன ரெண்டு ஏக்கர் நெலத்தையும்... சாரதா, அழகுமீனா ரெண்டு பேரு பேருக்கும் ஆளுக்கு ஒரு ஏக்கரா எழுதி வைச்சிட்டேன்... இது அவுங்க கல்யாணத்துக்கு நான் கொடுக்கிற சீர்வரிசையாய் இருக்கட்டும்... உங்க படிப்ப நிறுத்தி... நான் படிக்கணும்னு உங்க ஆசையை மனசிலே பூட்டி வச்சி தியாகம் பண்ண ஒங்க உழைப்புக்கு இதுக்கு மேலேயே செய்யணும்... என்னால முடிஞ்சது இதுதான் அண்ணே... அதுக்குதான் முன்னாடியே வந்து வக்கீல் கிட்ட பேசி டாகுமெண்ட்டை மாத்தி எழுதச் சொன்னேன். கவிதாவை நான் எப்படியோ சமாதானம் பண்ணிக்கறேன்...” என்றவனைப் பார்த்து நல்லதம்பி, “ஏண்டா தம்பி இப்பிடிப் பண்ணுனே...” என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.
கலங்கிய கண்களுடன் ராமையா தன் அண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “அண்ணே ஒறவுங்கறது தொடர்கதை மாதிரிண்ணே... அது ஒடனே முடிஞ்சிறாது... நீங்களும் அண்ணியும் இல்லேன்னா... நா இந்த அளவுக்கு வந்துருக்க முடியுமா...? கவிதாவ நானு எப்படியும் சமாளிச்சிக்குவேன்... ஏன்னா உணர்ச்சிங்குறது சிறுகதை மாதிரிண்ணே... அது ஒடனே முடிஞ்சிறும்... இல்லேன்னாக்கூட முடிச்சிக்கலாம்... ஆனா... நம்ம ஒறவு அப்படிப்பட்டதாண்ணே... இந்த உசிரு இருக்கற வரைக்கும் ஒங்களையும் அண்ணியையும் மறக்க மாட்டேன்... அந்த ஒறவு ஜென்மாந்திரத்துக்கும் தொடர்கதை மாதிரி தொடர்ந்துக்கிட்டே இருக்கும்... அண்ணிக்கிட்ட சொல்லிருங்க... நான் வர்ரேன்...” என்று கூறிவிட்டு நல்லதம்பியின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் பேருந்தில் ஏறினான் ராமையா.
நல்லதம்பி எதுவும் பேசத் தோன்றாமல் ராமையா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. “முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக... அண்ணன் தம்பி பொறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக…” என்ற கண்டசாலாவின் குரல் எங்கிருந்தோ இனிமையாகக் காற்றில் மிதந்து வந்தது.