அமைதியான காலைப்பொழுது. பார்த்திபன் மாடியில் இருந்த தனது அறையில் அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தான். பலவிதமான செய்திகளை அசைபோட்டபடி இருந்தவனின் காதுகளில் தேனினும் இனிய குரல் வந்து விழுந்தது. அதுவரை நாளிதழில் மூழ்கி இருந்தவனின் கவனம் எதிர்வீட்டுச் ஜன்னல் பக்கம் திரும்பியது.
திறந்திருந்த ஜன்னல் வழியே அழகிய பெண்ணொருத்தி தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் அப்பாடலில் தன்னையே இழந்து கொண்டிருந்தான். அவ்வளவு இனிமையான குரல். அவனை அப்படியே கட்டிப் போட்டுவிட்டது. இதுநாள் வரை அவன் இது போன்ற இனிமையான பாடலைக் கேட்டதே இல்லை. அத்தனை அருமையான சுருதி, சுத்தமான பாட்டை அவள் பாடிக் கொண்டிருந்தாள்.
கண்களை மூடியபடியே அப்பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான் பார்த்திபன். பாடல் முடிந்து அந்தப் பெண் சென்றாள். கண்களைத் திறந்த பார்த்திபனால் அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவளது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று மற்ற வேலைகளையெல்லாம் போட்டுவிட்டுக் காத்திருந்தான். ஆனால் அவள் மறுபடி வரவேஇல்லை. அவனது அம்மா அழைக்கவே அவன் கீழே சென்றான்.
அவனது காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. எத்தனை அருமையான பாட்டு, இத்தனை நாள் இங்குதான் இருந்தோம் எப்படிக் கேளாமல் இருந்தோம். நாளை எப்படியேனும் அவளைப் பார்த்துவிடவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். திருச்சியில் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பார்த்திபன் குடும்பத்திற்கு ஒரே பிள்ளை. கைநிறையச் சம்பளம். அன்பான பெற்றோர்கள். வெகுநாட்களாக அவனுக்குப் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. இவன்தான் அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்.
அவன் எப்போது சொல்கிறானோ, அப்போது பார்ப்போம் என்று பெற்றோர்களும் அவன் போக்கிற்கே விட்டுவிட்டார்கள். கீழே வந்தவன் அலுவலகத்திற்குச் செல்வதற்குத் தயாரானான். அவன் அம்மா கொடுத்த காலை உணவை உண்டு மதியத்திற்கும் உணவை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குத் தனது டூவீலரில் கிளம்பினான்.
அவனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. காலையில் கேட்ட பாடலிலும் அப்பாடலைப் பாடிய பெண்ணைப் பார்த்து விடுவதிலும் மட்டுமே அவன் மனம் ஓடியது. கடமைக்கு அலுவலகப் பணிகளைப் பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியவன் மாற்றுடையை அணிந்து கொண்டே அம்மா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு மீண்டும் தனது மாடியறைக்குச் சென்றான்.
தனது அறையின் ஜன்னல் வழியே பார்த்தான். எதிர்வீட்டு ஜன்னல் கதவு திறந்திருந்ததே தவிர, அந்தப் பெண் வரவேஇல்லை. இரவு உணவை முடித்த பார்த்திபனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் விடியலுக்காகக் காத்திருந்தான். விடிந்ததும் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் தனது அறைக்கு வந்து எதிர்வீட்டுச் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதிர்வீட்டுச் ஜன்னல் திறக்கவே பாடலின் குரல் காற்றோடு மிதந்து வந்தது. அவன் பாடும் அந்தக் குயிலின் முகத்தை இப்போது தெளிவாகக் கண்டான். அவள் அவனது வீட்டுப் பக்கம் திரும்பி கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த பார்த்திபனின் கண்கள் இமைக்க மறந்தன. அடடா, இத்தனை அழகா...? இறைவன் எத்தனை இனிமையான குரலையும் அழகையும் இவளுக்குக் கொடுத்திருக்கிறான்.
வாழ்ந்தால் இவளுடன்தான் தான் வாழவேண்டும். இல்லையெனில் வாழவே வேண்டாம் என்று மனதிற்குள் உறுதியிட்டுக் கொண்டான். அவளது பாடலில் மனதைப் பறிகொடுத்த நிலையில் பார்த்திபனுக்கு அவளைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அவள் பாட்டை நிறுத்தியவுடன் தனது கைகளைத் தட்டி, “ரெம்பப் பிரமாதம்... ரெம்பப் பிரமாதம்... அற்புதமாப் பாடீனீங்க...” என்று பாராட்டினான். அதனைக் கேட்ட அவளுக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. புன்னகைத்தவாறே அவனது பாராட்டை அவள் ஏற்றுக் கொண்டாள்.
அச்சமயத்தில் பார்த்திபனின் அம்மா அவனை அழைக்கவே, அவன் அவளிடம் அம்மா அழைப்பதாகக் கூறிவிட்டு வேண்டா வெறுப்புடன் கீழே சென்றான். சென்றவன் அம்மாவைப் பார்த்து, “ஏம்மா, ஏன் இப்படிக் கத்திக்கிட்டே இருக்கே... நாந்தேன் வந்துட்டேன்ல...” என்று வெறுப்புடன் கூறினான். அவனது அம்மாவும் “ஏப்பா இப்படிக் கோவப்படுறே... ஒனக்கு ஆபீசுக்கு நேரமாயிருச்சேன்னு கூப்புட்டேன்... சரிசரி ஆபீசுக்குக் கெளம்பு...” என்று கூறிவிட்டு அவனுக்குச் சாப்பாடு தயார் செய்வதில் மூழ்கினாள்.
அவனுக்குச் சற்று வெட்கமாகப் போய்விட்டது. எப்படி எப்போதும் எரிச்சல்படாத அம்மாவிடம் எரிச்சல் பட்டோம்...?அவனது மனம் வருந்தியது. பலவாறு எண்ணிக் கொண்டே அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றான். அவனது மனம் இப்போது அவளைப் பார்க்கத் துடியாய்த் துடித்தது.
நாள்தோறும் அவளது பாடல் ஜன்னல் வழியே வந்து அவனை எழுப்பியது. அவனும் அதனைக் கேட்டுக் கேட்டு அவள் மீதிருந்த காதலை வளர்த்துக் கொண்டான். அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அவளிடம் தன் எண்ணத்தை எப்படியேனும் இன்று தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்தான். அதற்கேற்றாற்போல் அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாகத் தனது விருப்பத்தை அவளிடம் தெரிவித்தான். அவளோ எதுவும் பேசாது கண்களாலேயே தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
நாட்கள் நகர்ந்தன... அவனது போக்கில் மாறுதலைக் கண்ட அவனது அப்பா, அவனுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்து விடவேண்டும் என்று முடிவு கட்டினார். அவனைப் பார்த்து, “ஏப்பா, என்ன பிடியே கொடுக்க மாட்டேங்குற... ஒனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டம்னா எங்க கடமை முடிஞ்சிரும்... ஒண்ணு, நாங்க பாக்குற பொண்ணக் கலியாணம் பண்ணிக்க... இல்ல... நீ யாரையாவது விரும்பினீயன்னா அதையாவது சொல்லு... இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி...” என்று கிடுக்கிப்பிடி போட்டார்.
அவனும் தன் மனதில் இருந்தவற்றையும், தான் எதிர்வீட்டுப் பெண்ணை விரும்புவதையும் கூறவே... தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவர்களது வீட்டிற்கு எப்பொழுது போகலாம் என்று முடிவு செய்யுமாறு அவனிடம் கூறவே, அவனுக்கு வானில் பறப்பதைப் போன்று இருந்தது. தனது விருப்பத்திற்குத் தடை சொல்லாது ஒப்புக் கொண்ட அப்பாவிற்கு நாளை தகவல் கூறுவதாகக் கூறிவிட்டு அலுவலகத்திற்குச் சென்றான் பார்த்திபன்.
அலுவலகம் சென்றவனின் மனதில் பல்வேறு யோசனைகள் எழுந்தன. அலுவலக வேலையில் அவன் மனம் ஒட்டவில்லை. மேலாளரிடம் சென்று விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான். அவனது அப்பா அம்மா கேட்டதற்கு எதுவும் கூறாமல் மாடிக்குத் தனது அறைக்குச் சென்றான். சென்றவுடன் எதிர்வீட்டுச் ஜன்னலைப் பார்த்தான்.
அன்று பார்த்து அவ்வேளையில் அது திறந்திருந்தது. ஜன்னல் வழியே அவள் தெரிகிறாளா என்று எட்டிப் பார்த்தான் பார்த்திபன். எதேச்சையாக அவன் பார்ப்பதற்கும், அவள் வருவதற்கும் சரியாக இருந்தது. அவளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவளிடம் பார்த்திபன் நாளை அவளைப் பெண்பார்க்க வருவதாகவும் அவளது அம்மாவிடம் கூறி ரெடியாக இருக்கும்படியும் கூறினான். அதனைக் கூறியவுடன்தான் அவனுக்கு மனதில் நிம்மதியாக இருந்தது.
அதே வேகத்தில் அவன் தனது அப்பா அம்மாவிடமும் விஷயத்தைக் கூறி, நாளை நல்லநேரத்தில் அவளது வீட்டிற்குச் சென்று அவளைப் பெண் கேட்க வேண்டும் என்று கூறினான். அவனது அப்பா அம்மா இருவருக்கும் வியப்பிற்கு மேல் வியப்பு ஏற்பட்டது. பெண்ணைப் பற்றியோ, அவளது குடும்பத்தைப் பற்றியோ அவர்கள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஏதாவது கேட்கப்போய் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால், என்ன செய்வது என்று பேசாமல் இருந்துவிட்டார்கள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வீட்டில் பார்த்திபனின் அப்பாவும் அம்மாவும் பரபரப்புடன் செயல்பட்டார்கள். மகனின் விருப்பப்படி யாரையும் அழைக்காது அவர்களிருவரும் மகனுடன் நல்ல நேரம் பார்த்து, அவன் விரும்பிய பெண் வீட்டிற்குப் பெண் கேட்கச் சென்றனர். வீட்டின் வாசற்படியில் ஏறி அழைப்பு மணியை அடித்தவுடன் கதவைத் திறந்த அவளது பெற்றோர்கள் முகம் மலர வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
வீட்டிற்குள் சென்று அமர்ந்தவர்களுக்கு இனிப்பும் காரமும் கொடுக்கப்பட்டது. பார்த்திபன் அதனை வாங்கிக் கொறித்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தான் விரும்பியவளை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. வழக்கப்படி இருவீட்டாரும் பேசிக் கொண்டனர்.
பார்த்திபன் தனது தந்தையிடம், “அப்பா பொண்ண வரச்சொல்லிப் பாருங்கப்பா…” என்று அவசரப்படுத்தினான். அவனது அப்பாவோ, “டேய் சத்த சும்மா இருடா... பரக்காதடா...” என்று அவனை அடக்கினார். சம்பிரதாயப் பேச்சு முடிந்தவுடன் பார்த்திபனின் கனவை நனவாக்குவதுபோல் அவளும் வந்தாள்.
அவளைக் கண்ட மாத்திரத்தில் பார்த்திபனின் பெற்றோருக்குப் பிடித்துவிட்டது. ஆனால் பார்த்திபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பார்த்திபனைப் பார்த்து அவனது அம்மா, “டேய் தம்பி பொண்ணு நல்லா லட்சணமா இருக்குடா... ஓம் மனசுக்குப் பிடிச்சவ ரொம்ப நல்லா இருக்காடா...” என்று கூற அவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை.
அவன் எதிர்பார்த்தது போன்று, அவள் இருந்தாலும் அவள் ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து விந்தி விந்தி நடந்து வந்தாள். அவளது இடதுகால் கொஞ்சம் ஊனமாக இருந்தது. இதையெல்லாம் பார்த்தாலும் தங்களின் மகனுக்குப் பிடித்துவிட்டதால் அவளையே பேசிமுடித்து விடுவதாக பார்த்திபனின் பெற்றோர்கள் தாயராக இருந்தனர். பார்த்திபனுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது.
அவன் எதிர்பார்த்தது வேறு; இங்கு நடப்பது வேறு. போயும் போயும் ஒரு நொண்டியையா நாம விரும்புனோம். அவன் தன் அப்பாவைப் பார்த்து தணிந்த குரலில், “அப்பா எனக்கு இந்தப் பொண்ணப் புடிக்கலப்பா... ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எந்திருச்சு வாங்கப்பா...”என்றவுடன் அவனது அப்பாவிற்குச் சட்டென்று கோபம் தலைக்கேறியது.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஏப்பா, நீ சொல்லித்தானே வந்தோம்... ஒனக்குப் பிடிச்சிருக்குண்ணு சொன்னதாலதானே வந்தோம்... நீங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறீங்கன்னு தெரிஞ்சதுனாலதான வந்தோம்... இப்பப் போயி வேணாங்குறே... என்ன விளையாடுறியா... என்னால சொல்ல முடியாது...” என்று கடுகடுத்தார்.
உடனேயே அவன் தனது அம்மாவிடம் கூற அவளுக்கும் இரத்த அழுத்தம் தலைக்கேறியது. அவள் பொறுமையாக,”தம்பி எதையும் யோசிச்சுப் பேசு... எதுவா இருந்தாலும் இப்பப் பேசக் கூடாது...” என்று வெடுக்கென்று விழுந்தாள்.
இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதைக் கண்ட அவளின் தந்தை, “என்னங்க மாப்புளையும் நீங்களும் என்னமோ ஒங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு இருக்குறீங்க...” என்றுகேட்டார்.
அதற்குப் பார்த்திபனின் தந்தைக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. அவர், “ஒண்ணுமில்லே...” என்று வாய்க்குள்ளேயே மென்று முழுங்கினார். பார்த்திபன் தன் அம்மாவின் காதருகில், “அம்மா எனக்குத் தெரியாமப் போச்சும்மா... வேணாம்னு சொல்லுங்கம்மா...” என்று கெஞ்சும் குரலில் குசுகுசுத்தான். பார்த்திபனின் அம்மா எப்படிச் சொல்வது? என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் செயல்பாடுகளைக் கண்ட பெண்ணின் அம்மா, “என்னங்க ஏம்பொண்ணு கொஞ்சம் காலச் சாச்சுச் சாச்சு வர்றதத்தானே ஒங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க... ஒரு விபத்துலதான் இந்தமாதிரி ஆயிப்போயிருச்சு... அதுக்கென்ன இப்போ...” என்று கேட்டாள்.
அதனைக்கேட்ட பாரத்திபனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. எங்கே தனது தாயும் தந்தையும் இவளைப் பேசி முடித்து விடுவார்களோ என்று பயந்த அவன் கொஞ்சமும் தயங்காமல், “ஒங்க பொண்ண எனக்குப் பிடிக்கலங்க...” என்று பட்டென்று விஷயத்தைப் போட்டுடைத்துவிட்டான்.
அதனைக் கேட்ட அவன் விரும்பிய பொண்ணோ இடியேறுண்ட நாகம் போன்று சீறினாள். அவள் பார்த்திபனைப் பார்த்து, “இதெல்லாம் என்னையக் காதலிக்கறதுக்கு முன்னால ஒங்களுக்குத் தெரியலயா... என்னோட மொகத்தயும் குரலையும் வச்சி என்ன விரும்புனீங்க... இப்ப நான் ஊனமானவள்ன்னு தெரிஞ்ச ஒடனே வேணாங்குறீங்க... ஒங்களுக்கு வெட்கமில்லை... வலிய வலிய வந்து வந்து பார்த்தது பேசினது யாருங்க... நல்லாப் படிச்சவரு... பண்பானவருன்னு நினைச்சுத்தான் நானும் இதுக்குச் சம்மதிச்சேன். ஆனா நீங்க படிச்சவரு மாதிரி நடந்துக்கலயே... ச்சே...” என்று பொறிந்து தள்ளினாள்.
அதைக் கேட்ட பார்த்திபன், “ஒன்ன விரும்புனது உண்மைதான்... ஆனா... இப்படி நீ இருப்பாய்னு எனக்குத் தெரியாமப் போச்சு... ஏன் நீ என்கிட்ட இதச் சொல்லிருக்கலாம்ல... இப்ப நான் ஒன்னக் கட்டிக்கிட்டுக் கூட்டிட்டுப் போனா என்னப் பார்த்துக் கேலி பண்ணுவாங்க...” என்று பேசியவனை இடைமறித்தாள் அவள்.
“இதப்பாருங்க நிறுத்துங்க... நீங்க வேணுமின்னா ஒரு பெண்ணை விரும்புறதும் வேணாமின்னா அவள ஒதறுறதும்... ஒங்களுக்குக் கைவந்த கலையா இருக்கலாம்... பொண்ணுன்னா என்னான்னு நெனச்சீங்க... அவளும் ஒங்களப் போல உயிருள்ள மனுசிங்கறத மனசுல வச்சிக்கோங்க... என்னோட அழகு ஒங்கள மொதல்ல கெறங்க வச்சது... இப்ப நான் ஊனமானவள்னு தெரிஞ்ச ஒடனே எல்லாரும் கேலி பண்ணுவாங்கன்னு சொல்றீங்க... இது ஒங்களுக்குக் கேவலமாப் படல... இதுவே ஒங்களுக்கு இருந்திருந்தா இப்படிப் பேசுவீங்களா... ஊனங்கிறது ஒடல்ல இல்லீங்க... அது மனசில இருக்கு... பார்வையில இருக்கு... எனக்குக் கால்ல மட்டுந்தான் ஊனம்... ஆனா ஒங்களுக்கு மனசெல்லாம் ஊனம்... காலு ஊனமானவங்ககூட எப்படியாவது வாழந்துறலாம்... ஆனா மனசு ஊனமானவங்களோட ஒருக்காலும் வாழ முடியாதுங்க... நீங்க என்ன வேணாம்னு சொல்றதுக்கு முன்னாலயே நானே ஒங்கள வேணாம்னு ஒதுக்கி வச்சிட்டேன்... மொதல்ல ஒங்க மன ஊனத்துக்கு நல்ல டாக்டரப் போயிப் பாருங்க... பாத்துட்டு மன ஊனத்தைச் சரிபண்ணுங்க... படிச்சிருக்கீங்களே தவிர, பக்குவமும் பண்பாடும் இல்லையே... இங்க ஒரு நிமிசங்கூட இருக்காதீங்க... வெளிய போங்க...” என்று சாமி வந்தவளைப் போன்று கூறிவிட்டுத் தனது அறைக்குள் கால்தாங்கித் தாங்கி நடந்து சென்றாள் அவள்.
தான் விரும்பியவளின் வார்த்தையடிகளை வாங்கிக் கொண்டு தலையைக் குனிந்தவனாக அப்பாவுடனும் அம்மாவுடனும் அவளது வீட்டை விட்டு வெளியேறினான் பார்த்திபன். அவனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முகம் வெளிறிப்போனது. பார்த்திபனின் மன ஊனம் அவனைப் பார்த்துச் சிரித்தது. தொலைவிலிருந்த கடையிலிருந்து, “ஊனம் ஊனம் ஊனமுன்னு யாரும் மில்லைங்கோ... ஒடம்புலுள்ள கொறைகளெல்லாம் ஊனமில்லைங்க... உள்ளம் நல்லாருந்தா ஊனமொரு கொறையில்ல...” என்ற பாடல் காற்றில் மிதந்து வந்து பார்த்திபனை நையப்புடைத்தது.