“டண்டணக் ணக் ணக் டண்டண்டணக் ணக்ணக்” என்ற டிரம்செட் குழுவினரின் தப்பாட்டம் நெருதுளியாகியது. வலப்புறமிருந்து இடப்புறமும், இடப்புறமிருந்து வலப்புறமும் சென்று குதித்துக் குதித்து அடி வெளுத்து வாங்கிய வண்ணம் இருந்தனர். இழவு வீட்டிற்கு வந்திருந்தோர் பலரும் அவர்களது ஆட்டத்தையே வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிலர் அந்த இழவு வீட்டில் பிணத்தருகே சென்று ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்கள் அந்த வீட்டு மருமகள்களைக் கட்டிப் பிடித்தபடி, “என்னப் பெத்த ஐயா...” என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். நேற்றுவரை அந்த ஊரில் நல்ல உழைப்பாளி என்றும் பண்பான மனிதர் என்றும் மரியாதையுடன் அனைவராலும் அழைத்து வணங்கப்பட்ட பெரியவர் சிவப்பிரகாசம் இன்று வீட்டின் முற்றத்தில் பிணமாகக் கிடந்தார்.
அந்த இழவு வீட்டில் பெரும்பாலானோர் பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேர்களில் உட்காந்திருந்தனர். எல்லோருக்கும் கைகொடுத்து வருபவர்களை அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக்காரர் என்று சொல்லவும் வேண்டுமா?
தங்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் வரும்போது அவர்களுக்குக் கையைஏந்திக் கைகொடுத்துவிட்டுப் பின்னர் அவர்களை அணைத்தபடி சிறிது நேரம் நின்றார்கள், சில வேளைகளில் ஏதேதோ சொல்லிப் புலம்பினார்கள். அப்பிணத்திற்கு அருகில் உள்ள திண்ணையில் சிவப்பிரகாசத்தின் மனைவி சிவகாமிஅம்மாள் அமர்ந்திருந்தார்.
நெருப்பில் பட்ட பிளாஸ்டிக் பைபோல் அவரின் நெற்றியில் தான் எத்தனை சுருக்கங்கள். நரைத்த அவரின் தலைமுடி அலங்கோலமாக விரிந்து கிடந்தது. பாவம் எலும்புந் தோலுமான அவ்வுருவத்தின் குழி விழுந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. அந்தக் கண்கள் மட்டும் தனக்கெதிரில் வைக்கப்பட்ட தனது கணவரின் சடலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
பலரும் வந்து அவரைக் கட்டியணைத்து அழுதனர். அது அவருக்கு என்னவோ போலிருந்தது. கணவர் இறந்தவுடனேயே தானும் இறந்து விட்டதாகவே சிவகாமி அம்மாள் கருதினார். பழக்கப்பட்டவர்கள் வந்தாலும் சிவகாமியம்மாவால் அவர்களை லேசில் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.
இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகின்றார்கள்? ஏன் என்னைக் கட்டிப் பிடித்து அழுகின்றார்கள். சிவகாமி அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவரின் கவனமும் எண்ணங்களும் அவரது கணவரின் உடலையே சுற்றிச் சுற்றி வந்தன. அவரால் வேறெதையும் சிந்திக்க முடியவில்லை.
இறப்புச் சம்பிரதாயங்கள் தெரியாதவர் அல்ல சிவகாமியம்மாள். அவருக்கு அனைத்தும் தெரியும். அவர் இத்தனை பேரின் முகங்களை இப்போதுதானே பார்க்கின்றார். சிவகாமியம்மாள் மெளனமாக இருந்ததற்கு, “எங்களுக்கு இத்தனை சொந்தபந்தங்கள் இருந்துமா நாங்கள் இவ்வளவு துயரங்களையும் அனுபவித்தோம்” என்ற ஆதங்கமாகக் கூட இருக்கலாம்.
இதையெல்லாம் குறுகுறு என்று இரண்டு கண்கள் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்தன. அது பிணமாகக் கிடக்கும் சிவப்பிரகாசத்தின் தம்பியின் மகன் கணேசன்.
சிவகாமியம்மாவின் துயரங்களைக் கண்டும் கேட்டும் மனம் துடித்த ஒரே உயிர். கணேசன் அவ்விழவு வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு அசைவுகளையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அதோ அதுதான் பெரிய மகனின் மனைவி. தன்னோடு வேலை பார்க்கும் சிலரை அழைத்துப் போகின்றாள். அப்பிணத்தின் முன்னால் நின்று அழுவதைப் போன்று தன் கண்களைக் கசக்குகின்றாள். அருகில் நின்ற ஒரு பெண் அவரைக் கட்டியணைத்துக் கொண்டு அவளை ஆறுதல் படுத்துவதுபோல் முதுகிலே தட்டி ஏதோ சொல்கிறார்கள்.
அவர்கள் மரணம் என்றால் என்ன என்று விளக்கமளிக்கிறார்களோ...? அப்படி ஒன்று இருப்பதை அதனால் ஏற்படப் போகும் இழப்புகள், மீண்டும் திரும்பிக் கிடைக்காத அந்தச் செல்வத்தை யார் நினைத்தும் பார்க்கிறார்கள். இறந்த பின் தான், “அட இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்... நான் அப்படிச் செய்திருப்பேனே... இப்படிச் செய்திருப்பேனே... இப்படி நடக்குமென்று தெரியாமல் போச்சே...” என்று சொல்லிச் சொல்லிப் புலம்புவார்கள்.
ஏன் அவர்களுக்குத் தெரியாதா, பிறந்த அந்த நிமிடத்திலிருந்து அந்த உயிர் இறப்பு என்ற ஒன்று காத்திருப்புகளுடன் தொடருகின்றது என்று! யாரும் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்குத் தேவையானவைகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவ்வாறு செய்யாமல் காலம் கடந்து வருந்துவதில் பயனில்லை. உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தராதவர்கள் இறந்த பின் அவர்களுக்கு மாலை மரியாதை செய்கிறார்கள். அவ்வாறு செய்வதால் யாருக்கு என்ன லாபம்?
ஊராருக்கெல்லாம் காசைக்கொட்டி கறிசோறாக்கிப் போட்டுத் திவசம் நடத்துகிறார்கள். இதெல்லாம் தேவைதானா? தன் தாய் தந்தையருக்கு கடைசிக் காலத்தில் பணிவிடை செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை யார் தான் நினைத்துப் பார்க்கிறார்கள்.
பெற்ற பிள்ளைகள் நினைத்தாலும் அவர்களது வாழ்க்கைச் சூழல் அவர்களைக் கையாலாகாதவர்களாக ஆக்கி விடுகிறதே. இது விதியா? அல்லது சதியா? அல்லது மதி அழிந்ததால் ஏற்பட்ட நிலையா? எல்லோரும் அழுவதைப் பார்த்துப் பார்த்து கணேசனுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சிவப்பிரகாசம் – சிவகாமியம்மாள் தம்பதிகளின் வாழ்க்கை அவன் முன் படக் காட்சியாக விரிந்தது.
சிவப்பிரகாசம் ஊரில் உள்ள வீடுகளுக்கெல்லாம் சென்று விறகு வெட்டிக் கொடுப்பார். ஊரார்கள் வேறு ஏதேனும் வேலைகளைச் சொன்னால் தட்டாமல் மாங்குமாங்கென்று செய்வார். அவரிடம் இரண்டு மாடுகளும் மாட்டு வண்டியொன்றும் இருந்ததது. அதனால் அவர் அவ்வூராருக்காக மிகவும் கடுமையாக உழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவப்பிரகாசத்திற்கும் படிப்புக்கும் கனதூரம். அதனால்தான் இந்த மாதிரியான வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்தார். இருந்தும் அவரின் நேர்மையும் திடகாத்திரமான உடலும் அவரின் அயராத உழைப்பும் அவரை அவ்வூரிலே தலை நிமிர்ந்து வாழ வழி செய்திருந்தது.
சிவப்பிரகாசத்திற்கு நான்கு ஆண் பிள்ளைகள். அவரின் மனைவி சிவகாமியம்மாள் அடிக்கடித் தன் பிள்ளைகளிடம் “டேய் பசங்களா ஒங்க அப்பாவோட ஆசை என்ன தெரியுமாடா? நீங்கள்ளாம் நல்லாப் படிச்சி பெரிய வேலைக்குப் போகணும்னு தாண்டா அவருக்கு ஆசை!” என்று அவர் அடிக்கடி தன் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தார். அதே போல் பிள்ளைகளும் நல்லவர்களாகத்தான் வளர்ந்தார்கள்.
ஆனால், அவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையோ கிடைக்கவில்லை. மழை பொய்த்துப் போனதால் வெளியூர்களுக்குச் சென்று வேலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. தங்களிடம் இருந்த சொற்ப சொத்துப்பத்துக்களை விற்றுப் பிள்ளைகளை வேலை தேட வெளியூர்களுக்கு அனுப்பினார்கள்.
அங்கு அவர்களுக்கேற்ற வேலை கிடைத்தது. அனைவரும் சென்னையில் பெரிய பெரிய கம்பெனிகளில் வேலைக்கு அமர்ந்தனர். வேலையில் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் விரும்பினாற் போன்று யாரிடமும் கூறாது திருமணமும் செய்து கொண்டார்கள்.சிவப்பிரகாசமும் சிவகாமியம்மாளும் ஊரின் நிலைமையால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் நேரிலே பார்த்து வந்த கணேசன் அவர்களை உடனடியாக அழைத்துச் செல்லும்படி நால்வரையும் வற்புறுத்தினான்.
மூத்தமகனின் மனைவி பல சட்டதிட்டங்களை வகுத்தாள். தன் பிள்ளைகளை தன் அம்மா கவனமாகப் பார்த்துக் கொள்வார் என மகன் மனக் கணக்குப் போட்டான். கடைசியில் அவன் அவர்களைக் கணவன் மனைவி இருவரும் சென்று அழைத்து வந்தார்கள்.
நான்கு வாரமும் ஒவ்வொரு பிள்ளை வீட்டிலே சிவப்பிரகாசமும் சிவகாமியம்மாவும் தங்கினார்கள். மூத்தவனது வீட்டிற்கு அவர்களின் நண்பர்கள், ஊர்க்காரவர்கள் எனப் பலரும் வந்து போயினர். சிவப்பிரகாசமும் சிவகாமியும் சந்தோஷமாயிருந்தார்கள். பல இடங்களைப் பார்க்கக் கூட்டிப் போனார்கள்.
கோயில் குளம் எல்லாமே நல்லாயிருக்கு. பிள்ளைகளின் வீடுகளிலும் நல்ல விலையுயர்ந்த பொருள்கள் எல்லாம் வாங்கிப் போட்டிருந்தார்கள். சொந்தமாக வீடு, கார் எல்லாம் வைத்திருந்தார்கள். சிவப்பிரகாசத்திற்கும், சிவகாமியம்மாவிற்கும் உள்ளம் பூரித்துப் போனது. “கடவுளே பிள்ளையாரப்பா எங்களோட வேண்டுதலை நிறைவேத்திட்டப்பா... எங்க பிள்ளைங்க எல்லாரும் நல்லாயிருக்காங்க... அதுபோதும்...” இப்படி அவர்கள் கடவுளிடம் மட்டுமல்லாது என்னிடமும் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒருநாள் மூத்த மகனின் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரின் மகிழ்விலும் மண் விழத் தொடங்கியது. மூத்தவனின் மனைவி, “ஒங்க அப்பா ரெண்டு பேரையும் நாமளே வச்சிப் பாக்குறதுன்னா நெறையச் செலவு வருது... யாராவது ஒராள் நம்மளோட கொஞ்ச நாளைக்கும் இன்னொராள் ஒங்களோட தம்பி வீட்டுலயும் இருக்கட்டும். கொஞ்சநாளு கழிச்ச பின்னால மத்தவங்க வீட்டுக்கு இதே மாதிரி போகட்டும்... இப்படி இருக்கறதுனால செலவு கொறையுமில்ல... யாருக்கும் சிரமமில்லைல... என்னங்க நாஞ்சொல்றது சரிதானே...!” இதைக் கேட்ட அவன் பேயறைந்தவன் போலிருந்தான். அவனால் மனைவியை மீறி எதுவும் கூற முடியவில்லை.
அவனின் மெளனத்தைக் கண்ட அவனின் மனைவி, “எத்தன நாளுதான், ஒங்க அப்பா அம்மாவை நானே சொமக்கிறது... இவுகளுக்குப் பண்டுதம் பாக்குறதுதான் ஏந்தலையெழுத்தா...? மத்தவங்க சொகமா இருக்காங்க... நான் மட்டும் வீட்டுலயும் வேலை செஞ்சு, வேலைக்கும் போயிக்கிட்டு நொம்பலப் படணுமாக்கும்... இந்தாப் பாருங்க... கல்லுப் புள்ளையாராட்டம் இருக்காமா ஒங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிருங்க... இல்லாட்டி நானே சொல்லிர்றேன்...”
இதனைக் கேட்ட மூத்தவனுக்கு சுரீரென்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “வயசான காலத்துல இவங்கள நாமதான் பாத்துக்கணும்... வேற யாரு பாத்துக்குவாங்க... இந்த நெலமைக்கு வர்றதுக்கு இவங்களோட ஒழைப்புத்தான் காரணம்... அதத் தெரிஞ்சிக்க மொதல்ல... இவங்க நம்ம கூடத்தான் இருப்பாங்க... இவங்கள நான் யாருகிட்டயும் அனுப்ப முடியாது...” என்று தைரியத்துடன் தனது மனைவியை எதிர்த்துப் பேசிவிட்டான்.
அதனைக் கேட்ட மூத்தவனின் மனைவிக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவதைப் போலிருந்தது. எப்போதும் எதிர்த்துப் பேசாத தனது கணவன் எதிர்த்துப் பேசிவிட்டது அவளுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. அவள் அவனைப் பார்த்து, “அப்பச் சரி நீங்க ஒங்க அப்பா அம்மா கூட இருங்க... நான் எங்க அப்பா அம்மா கூடப் போயி இருக்கறேன்...”
மருமகளின் பேச்சைக் கேட்டதும் சிவப்பிரகாசமும் சிவகாமியம்மாவும் பேரதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவர்களால் எதுவும் பேசமுடியவில்லை... ஒருநாள் நான்கு அண்ணன் தம்பிகளும் அவர்களது மனைவியரும் கூடி சிவப்பிரகாசத்தையும் சிவகாமியம்மாவையும் பிரிப்பதென முடிவெடுத்தனர்.
பிள்ளைகளின் முடிவைக் கண்டு சிவப்பிரகாசமும் சிவகாமியம்மாவும் மனமுடைந்து போனார்கள். அவர்களுக்குத் துன்பங்கள் வரத் தொடங்கி விட்டன. இது இன்னும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
ஒருமுறை சிவப்பிரகாசம் மிகவும் கடுமையான காய்ச்சலில் கிடந்தார். அப்போதுகூட மகன்கள் சிவகாமியம்மாவை அவரைப் பார்க்கவிடாமல் செய்து விட்டனர். அவர் பட்ட வேதனையை வெளியில் சொல்ல முடியாது. கடைசியாக ஒருநாள் தன் இரண்டாவது மகனிடம் மனம் திறந்து பேசினார். “தம்பி பழசையெல்லாம் மறக்கக் கூடாதுப்பா... நீங்கள் இப்படி ஒசந்ததுக்குக் காரணமே ஒங்க அப்பா பட்ட கஷ்டங்க தாம்பா. டேய் ஒன்னக் கெஞ்சிக் கேட்டுக்கறண்டா... கடைசிக் காலத்துல ஒங்கப்பாவுக்கு பணிவிடை செய்யவிடுடா... அத நீ தடுத்தா பாவம் வந்து சேரும்டா...” என்று கூறி அழுதாள்.
அதன்பின் கடைசி மகன் தன் தாய் தந்தையரை ஒன்றாக வைத்துப் பார்ப்பது எனவும் மற்ற மூன்று பேரும் பணம் தருவதாகவும் முடிவு செய்து அதனை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். அவர்களின் முடிவு அவர்களுக்கு எந்தவிதமான பயனையும் தரவில்லை.
அவர்களின் மனத்துன்பம் தீரவில்லை. கடைசி மருமகள் நல்லவள் தான். இருந்தும் தன் பிள்ளைகள் விஷயத்தில் சுயநலவாதியாகவே இருந்தாள். ஆசையாக பேரப்பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சுவதற்குக் கூட அவர்களுக்கு வழியில்லை. மகனின் குடும்பம் மாடியிலும் இவர்களிருவரும் இவர்கள் இருவரும் கீழே இருந்த ஒரு அறையிலும் தங்கி இருந்தார்கள். இதனோடு சேர்ந்திருந்த கீழ்வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
அவர்கள் தங்கியிருந்த அந்த அறையில் கொசு பிடுங்கி எடுத்துவிடும். காற்றோட்டமும் கிடையாது. இரவானால் கொசுத் தொல்லையோடு குளிரும் ஆட்டி எடுத்துவிடும். வடக்கே பார்த்த வாசப்படியாக அவ்வீடு இருந்ததால் வாடைக் காற்று சீறுசீறென்று சீறியது.அவர்களது வயதான உடம்பால் அவற்றிற்குத் தாக்குப் பிடிக்க இயலவில்லை. கடைசி மகன் இரண்டு நாளுக்கொரு முறைவந்து பார்த்துவிட்டு துணிமணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்து உலர்த்திக் கொடுத்துவிட்டுப் போவான். அவர்களின் துணிகளைத் துவைத்துக் கொடுக்கும் போது, “ஏம்மா ரெண்டுபேருக்கு இவ்வளவு துணிமணியா... வீட்டுல சும்மாதான இருக்கிறிய...?” என்று வெடுக்கென்று கேட்பான். அதனைக் கேட்ட சிவப்பிரகாசமும் சிவகாமியும் வெட்கித் தலைகுனிந்து போவார்கள்.
சிவகாமியம்மாவால் தினமும் மாடிப்படி ஏறி இறங்க முடியாமல் இருந்தது. இருவரும் மெல்ல மெல்லப் பிடித்துப் பிடித்து மேலே வந்து ஆறிய தேநீரைச் சூடாக்கிக் குடித்து விட்டு உணவையும் சாப்பிடுவார்கள். சாப்பிட்டுவிட்டு அங்கு சிறிது தங்கி இருப்பார்கள். ஆனால் அது அவர்களது சின்ன மருமகளுக்குப் பிடிக்காது. அவர்களிருவரும் தங்களது மகனிடம், “தம்பி இப்பிடியே இதில கொஞ்ச நேரம் இருந்தால் மத்தியானச் சாப்பாட்டையும் நாங்க சாப்பிட்டுவிட்டுப் போறம்பா... நாளைக்கு நீ வர்றபோது ரேடியோவை மறக்காம கொண்டுவாப்பா...” என்று கேட்டனர். ஆனால் அவன் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.
மருமகள் கீழே வந்து எல்லா இடங்களையும் சுத்தப்படுத்திவிட்டு பிள்ளைகளையும் பார்த்து, சமைத்து, வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள். மருமகள் பாவம் உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்து போயிருந்தாள். இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்கள் வந்தன. சிவப்பிரகாசமும் சிவகாமியும் சின்ன மருமகளுக்காக இரக்கப்பட்டனர்.
இத்தனைக்கும் கணேசனிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகள் தன் சொந்த மகன்கள் யாரிடமும் இல்லையே என சிவப்பிரகாசமும் சிவகாமியும் மனதளவில் ஏங்கினார்கள். ஒவ்வொரு மகனிடமும் சொல்லம்புகளால் பட்ட காயங்களாலும் அவர்களது இழிவான செயல்பாடுகளாலும் அவர்களிருவரும் மனம் நொந்து போயினர்.
பட்ட சொல்லடிகளினாலும், செயல்களினாலும் நொந்து போயிருந்தனர். அவர்களிருவரும் வாரம் ஒருமுறைத் தங்களைப் பார்க்க வரும் கணேசனிடம் மட்டுமே தங்களின் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துக் கொள்வார்கள். இதனைக் கேட்ட கணேசன் துயரப்பட்டான். அவர்களைத் தன்னுடன் கொஞ்சநாட்களுக்கு கூட்டிபோகக் கணேசன் விரும்பினான். ஒருவழியாக மகன்கள் நால்வரிடமும் சண்டைபோட்டு அவர்களின் முழுச் சம்மதத்தையும் பெற்றுவிட்டான். நாளைக்கு வந்து கூட்டிபோவதாகக் கூறி கணேசன் சென்றான்.
இதையறிந்த சிவப்பிரகாசத்தின் மகன்கள் ஒவ்வொருவராக தங்களின் எதிர்ப்பைப் போனிலே கூறி சிவப்பிரகாசத்திடம் எச்சரித்தார்கள். படுக்கும் போது அவரின் கடைசி மகன் அவரிடம் வந்து, “ஏப்பா இங்க ஒங்களுக்கு என்ன கொறச்சன்னு நீங்க கணேசன் வீட்டுக்குப் போறம்னு சொல்றீங்க... நல்லாப் போங்க... நான் வேண்டாம்னு சொல்லல... ஆனா அங்க போயி எங்களோட மானத்தைக் கெடுத்துப்பிடாதீங்க... ஆமா... இத நான் மட்டும் சொல்லல... பெரியண்ணியும் சொன்னாங்க... பார்த்துக்கங்க...” என்றான்.
அதனைக் கேட்ட சிவப்பிரகாசம் மகனைப் பார்த்து, “ஏப்பா இப்ப நீ என்ன சொல்லுறப்பா...” என்று மீண்டும் கேட்டார். “அப்பா நீங்க அங்க சந்தோசமாயிருப்பீங்கன்னா போயிட்டுவாங்க.. எனக்கொன்னுமில்லை...” என்றான் அவன். “அப்ப நாங்கள் ரெண்டு பேரும் நாளைக்குக் கணேசன் வீட்டுக்குப் போறம் சரியா...” என்று கூறியவர் மனத்திருப்தியடைந்தவர் போல படுக்கையிலே சாய்ந்தார். அப்போது பார்த்து தொலைபேசி மணியொலித்தது. சிவகாமியம்மாள்தான் எடுத்தாள்.
மறுமுனையில் கணேசன், “பெரியம்மா நீயும் பெரியப்பாவும் நாளைக்கு ஏங்கூட வற்றீங்க என்ன சரியா...? யாரும் ஏதும் சொல்லலையே...?” என்று கேட்டதும் சிவகாமியம்மாள் அழுது கொண்டே எல்லாவற்றையும் அவனிடம் சொல்லி முடித்தாள். “பெரியம்மா கவலைப் படாதீங்க... இந்தத் தொல்லையிலிருந்தெல்லாம் நாளைக்கு ஒங்களுக்கு விடுதலை. அப்பறம் அவங்க நாலுபேரையும் நீங்க பாக்கணுமின்னா அவங்களை ஏம்வீட்டுக்கு வர நான் ஏற்பாடு செய்யறேன்... எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க நாளைக்கு வர்றேன் சரியாம்மா...”
அவனின் குரலைக் கேட்டவுடன் சிவகாமியம்மாள் சரி என்று கூறிப் போனை வைத்தாள். அவளது மனதில் முந்தைய நாள்களில் வீட்டில் நடந்த நடப்புகள் எழுந்தன. ஒருமுறை கணேசன் வந்தபோது வீட்டில் மகன்கள் நால்வரும் வந்து அப்பா அம்மாவை யார் பார்த்துக் கொள்வது என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த சிவகாமியம்மாள், “நாங்க ரெண்டுபேரும் இப்பிடி இவங்களுக்குப் பாரமாகிப் போயிட்டமே... இந்தக் கடவுளு ஏந்தான் எங்க ரெண்டு பேரையும் சோதிக்கிறானோ தெரியலையே...? ஏப்பா கணேசா நீ கூட எங்களுக்கு ஒதவி செய்யக் கூடாதா...?” என்று கணேசனைப் பார்த்துக் கேட்டுவிட்டாள்.
அதனைக் கேட்ட கணேசன், “எங்க பெரியம்மாவையும் பெரியப்பாவையும் நான் பாத்துக்கறேன்... நீங்க யாரும் பாத்துக்க வேணாம்... பெரியவங்க மனசு வருத்தப்படுற மாதிரி ஏன் இப்படி சண்ட போட்டுக்கறீங்க...” என்று கூறியபோது அவர்கள் அனைவரும் கணேசனுடன் சண்டைக்கு வந்துவிட்டனர்.
மூத்த மகன் கணேசனிடம், “டேய் கணேசா... வாய மூடுடா... எங்களப் பெத்தவங்கள எங்களுக்குப் பாக்கத் தெரியும்... எங்க குடும்ப வெவகாரத்துல நீ தலையிடாதே... மரியாதையா வெளிய போயிரு... நீ வச்ச வரிசை போதும்... போடா வெளியே...” என்று அடிக்காத குறையாகத் துரத்தினான். இருந்தாலும் கணேசன் அதைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தான். கணேசனின் மனம் வலியால் துடித்தது. இவங்க எனக்கும் அப்பா அம்மாதான்... பெரியப்பா என்று வேதனையால் கதறத் துடித்தான். ஆயினும் தொண்டைக் குழியை ஏதோ ஒன்று அடைப்பது போலிருந்தது.
கணேசன் கூறியதைப் போன்று மறுநாள் அதிகாலையிலேயே வந்துவிட்டான். வந்து அவர்களை எழுப்பினான். ஆனால் சிவப்பிரகாசம் எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேயே இறந்து கிடந்தார். சிவகாமியம்மாள் பித்தம் பிடித்ததைப் போன்று இருந்தார். கணேசன் அதிர்ந்து போய்விட்டான். அவன் நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்றாகப் போய்விட்டது. அவனே தன் பெரியப்பாவை கிராமத்திற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களனைவரையும் அவர்களது கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தான். மற்றவர்கள் அந்த வீட்டைப் மேப்பாத்துக் கொண்டதால் அவ்வீடு நன்றாக இருந்தது. பெரியப்பா எத்தனை வைராக்கியமானவர். தன் பசங்களுக்கு கொஞ்சங்கூட மனவருத்தம் வந்துடக் கூடாதுங்கறத மனசுல வச்சிக்கிட்டே இறந்துட்டாரே... ஒங்கள வச்சு ஒருநாக் கூட ஒருவாய் சோறு போட முடியாமப் போயிருச்சே... பெரியப்பா... என்று கணேசன் கதறத் துடித்தான்.
மீண்டும் முன்பக்கமிருந்து, “என்னப் பெத்த அப்பா... ஆ... எங்கள விட்டுட்டுப் போயிட்டீங்களே...” என்ற அழுகுரல் கேட்கவே தன் சுய நினைவிற்கு மீண்டான் கணேசன். அவன் தன் மனதை ஒருவாறு அடக்கிக் கொண்டான். பின் மனந் தெளிந்தான். பெரியப்பா கடவுளிடம் நிம்மதியாக இருப்பார். இதோடு போகட்டும் அவரோட இந்த வாழ்க்கை. இந்த நரகத்தை விட இந்த இறப்பே அவருக்கு நல்லது.
அவர் உயிரோடிருந்த போது அவர் மீது, அவர்கள் தீராத அன்பு கொண்டிருந்தவர்கள் போலவும், இப்போது அவரின் பிரிவு இவர்களை வாட்டுவது போலவும் நாடகமாடி இந்த நாலு மகன்களும் அவர்களது மனைவிமார்களும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களே, இவர்கள் எல்லாம் மனித ஜன்மந்தானா...? அவர்களைப் பார்க்கும் போது கணேசனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
சிவப்பிரகாசம் என்ற அப்பிணத்தின் கடைசிப் பயணநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சிலர் அடிக்கடி தங்களது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டனர். காரணம் “ஊருக்குப் போகணும் அங்க எத்தன எத்தன வேலையோ கிடக்கு”. பலருக்கும் பலவிதமான அவசரங்கள். கடைசி மருமகள், சிவகாமியம்மாளிடம் குனிந்து ஏதோ கூறினாள். அவர் தலைமுடிகளை ஒதுக்கி விட்டார். பின் தன் கையிலிருந்த கைக்குட்டையினால் அந்தக் குழி விழுந்த கண்களை துடைத்து விட்டாள். அவரை அப்படியே தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அப்பிணத்தை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அது சிவகாமியம்மாவின் தலை மீது விழுந்தது. சிவகாமியம்மாளின் நடுங்கும் கைகள் சின்னமருமகளின் கைகளைப் பற்றின. முதன் முறையாக சிவகாமியம்மாளிடமிருந்து விம்மலுடன் கூடிய அழுகை வெளிப்பட்டது. பாக்கியத்தின் அழுகையைக் கேட்ட அனைவரும் கதறி அழுதனர்.
கணேசன் இருந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்து வந்தான். அவன் கண்கள் கவலையாலும் தூக்கமின்மையாலும் சிவந்திருந்தன. தன் பெரியப்பாவை கடைசித் தடவையாக தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளியது. தன் பெரியம்மா ஏன் இந்தக் கடைசி நேரத்தில் மட்டும் இப்படிக் கதறிக் கதறி அழுதார்? தன் கணவன் மீது கொண்ட பாசத்தாலா? அல்லது தான் தனிமையில் இனி படப் போகும் துன்பங்களை நினைத்தா? அவர் ஏன் அழுதார்?
சின்ன மருமகள் ஏன் அழுதாள்? அது பாசமாக இருக்கும். இதை அவன் மனம் ஏற்றது. ஏனெனில் அவள்தான் அவர்களுக்குத் தன்னால் இயன்றளவு ஓரளவாவது பணிவிடைகள் செய்தாள். அவளால் முடியாவிட்டாலும் அவள் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து வந்தாள். அதனால் அவர்களின் மீது இருக்கும் அன்பினால் அவள் அழுதிருக்கலாம். ஆனால் மூத்த அண்ணி ஏன் அழுதார்? அது நிச்சயம் மகிழ்ச்சியால் வழிந்த கண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.
கணேசன், தன் பெரியம்மாவின் எலும்புந் தோலுமான கைகளைப் பற்றியபடி, “பெரியப்பா தான் விரும்பிய இடத்திற்கு நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போய்ட்டார் பார்த்தீங்களாம்மா?” என்று கதறி அழுதவாறு நடுங்கியபடி நின்றிருந்த சிவகாமியம்மாவை மெதுவாக நாற்காலியில் அமர்த்தினான்.
சிவப்பிரகாசத்தின் மகன்கள் ஒவ்வொருவரும் இறுதி நேரத்தில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அப்பா இறந்துவிட அம்மாவை மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றா...? அல்லது செலவு மிச்சப்பட்டது என்றா...? ஒரு சுமை குறைந்து விட்டதென்றா...? ஒவ்வொருவரின் கண்ணீருக்கும் ஒவ்வொருவிதமான காரணம் மறைந்திருக்கும். அந்தக் காரணங்கள் அழுபவர்களது மனதிற்கு மட்டுமே தெரியும். “டனக்டனக்... டண்டனக்... டண்டனக்...” என்று டிரம் செட் ஓசையுடன் அனைவரும் கதறியழ சிவப்பிரகாசத்தின் இறுதிப் பயணம் தொடர்ந்தது.