கடுமையான கோடை வெயில்... வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது... அன்று விடுமுறையாதலால் கடையில் மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொண்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தபோதுதான் அவளைக் கவனித்தேன். இடுப்பில் கைக்குழந்தையோடு ஒரு கையில் காய்கறி நிறைந்த பையுமாக வந்து கொண்டிருந்தாள் அவள். இந்தப் பெண்ணை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கே... என்று நினைத்துக் கொண்டே வண்டியைச் சாலையின் ஓரத்தில் நிறுத்தி அவளைக் கவனித்தேன். இந்தப் பெண் என்னோட படிச்ச பொண்ணு மாதிரியே இருக்கிறாளே...? யாரு... யாரு... என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டே யோசித்தேன்.
திடீரென்று எனது மூளையில் ஒரு மின்னல் அடித்தது. அது... அது சசிகலாவேதான்... வேற யாருமே இல்ல... என்கூடப் படிச்ச பெண்ணல்லவா? எப்படி இருந்தவள் இப்படி ஆளே மாறி விட்டாளே... என்று யோசனையுடன் நின்றபோதே என் மனம் என் கல்லூரி நாட்களை நோக்கிப் பின்னோக்கிச் சென்றது.
மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாகப் படித்தது. பெண்கள் ஆண்களுக்குச் சரிநிகரானவர்கள்... எதிலும் சளைத்தவர்களல்ல... என்று பட்டிமன்றங்களிலும் உரையரங்கங்களிலும் பேசி அனைவரையும் மண்ணைக் கவ்வ வைப்பவள். ஆண்களுக்கு நிகராக அரட்டையடித்து அவர்களை மடக்கி வெற்றி காண்பவள். பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தெல்லாம் பேசுபவள். பெண்கள் தாலியை அணியக் கூடாது என்றும், அப்படி அணிந்தால் ஆண்களும் திருமணத்தின் போது தாலியை அணிய வேண்டும் என்றும் கூறி புதியதலைமுறைப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருந்தவள்தான் சசிகலா.
கடைசியாய்க் கல்லூரி கடைசி நாளன்று பார்த்தது.
அவளிடம் விடைபெற யத்தனித்தபோது நெருங்கி வந்த அவள், “என்ன சிவராமன் ஒனக்குக் கலியாணத்துக்குப் பொண்ணு பாக்குறாங்களாமே...? கல்லூரி வாழ்க்கை முடிஞ்சவுடனேயே கல்யாணம்... பிரமாதம்... ஒனக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! ஒனக்கு வரப்போற பொண்ண நல்லாப் பாத்துக்கப்பா... அந்தப் பொண்ணு கண்ணக் கலங்குச்சுன்னு வச்சுக்கோயேன், ஒன்ன நான் சும்மா விடமாட்டேன்... ஆமா... பாத்துக்கோ... கண்டிப்பா எனக்கு பத்திரிக்கை அனுப்பறே... என்ன சரியாப்பா...?” என்று கிண்டலடித்தவள் ஆட்டோகிராப்பில் கையெழுத்து வாங்கிச் சென்றாள் முகவரியும் தொலைபேசி எண்ணும் தந்தாள்.
எனக்கு ஒரு கம்பெனியில் மேலாளர் பணி கிடைக்க, நான் அதில் மூழ்கிவிட்டேன். என் வீட்டில் பெண் தேடும்படலம் தொடர்ந்தது. சில மாதங்கள் கடந்த பின்னர் சசிகலாவின் திருமண அழைப்பிதழ் எனக்கு வந்தது. அப்போது எனக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலைகள் இருந்ததாலும், உடனடியாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததாலும் என்னால் அவளது திருமணத்திற்குப் போக முடியவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடந்தது. அவளுக்கும் அழைப்பிதழ் அனுப்பினேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, அவள் என் திருமணத்திற்கு வரவில்லை... காலங்கள் உருண்டோடி பத்து ஆண்டுகள் ஆயிற்று. அவளை மறந்தே போனேன். இவ்வளவு நாள் கழித்து எதேச்சையாக இன்றுதான் அவளைப் பார்க்கிறேன்.
இவ்வளவும் ஒருசில வினாடிகளுக்குள் என் மனதுள் வலம் வந்து நான் நனவுலகிற்கு வரும் போது அவள் சாலையின் அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டிருந்தாள். அவள் நுழைந்ததை நான் கவனித்துவிட்டேன். வேகம் வேகமாக வண்டியை உசுப்பி எடுத்துச் சென்று அவளின் முன் வண்டியை நிறுத்தி, “ஏங்க... கொஞ்சம் நில்லுங்க... நீங்க... நீங்க சசிகலாதானே... என்னைத் தெரியுதா...?” என்றேன். அவள் கையிலிருந்த குழந்தை என்னை வித்தியாசமாகப் பார்க்க, குழந்தையை கீழிறக்கிவிட்டு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்ட அவள், “அடடே...நீங்க... நீங்க... சிவராமன் தானே!” என்றாள்.
எனக்கு அப்போதுதான் உயிர் வந்ததைப் போன்றிருந்தது. எங்கே தன்னைத் தெரியாது என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்து போனேன்.
“அடேயப்பா... நல்லவேளை என்னய நினைவு வச்சிருக்கீங்க... பொது இடத்திலே யாரு நீங்கன்னு கேட்டுடிவிங்களோன்னு பயந்துட்டேன்” என்றேன்.
சரி சரி நாம படிச்ச நாட்கள மறந்துட முடியுமா? என்ன? எனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கு... ஆமா நீ மதுரையிலல்ல இருந்தே! ஒங்க வீட்டுக்காரரும் அந்த ஊருதானே!” என்றேன்.
“நம்மளோட கல்லூரி நாட்கள எப்படி மறக்க முடியும்...? அதுலயும் நீ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்... எப்படி மறக்கமுடியும்? அவரு மதுரையிலதான் இருந்தாரு... அப்பறம் அவருக்கு இங்க கோயமுத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆயிடிச்சா, அதனால இங்க வந்துட்டோம்... ஆமா... நீ இங்கதான் இருக்கியா...?” என்றாள்.
அதனைக் கேட்ட நான், “இந்தத் தெருவுத் தள்ளி ரெண்டாவது தெருவுலதான் என் வீடு... நான் ஒரு பெரிய கம்பெனியில மேனேஜரா இருக்கேன்... என்னோட மனைவி இங்க இருக்கற மாநகராட்சி மேல்நிலைப்பபள்ளியில கணக்கு டீச்சரா வேலைபாக்குறா...? ஆமா... நீ வேலைக்கு போறது இல்லையா?” என்று கேட்டேன்.
“வேலைக்கெல்லாம் போறதுக்கு எங்க நேரமிருக்கு... சிவராமா... ஏங்குடும்பத்தைப் பாத்துக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு... எங்க வீட்டுக்காரரும் அத விரும்பலை... போதும் அவரு வருமானமே எங்களுக்குப் போதுமானதா இருக்கு... வாழ்க்கை ஜம்முன்னு போய்கிட்டிருக்கு...” என்றாள் சசிகலா.
“பாத்தியா நாம இந்த ஏரியாவுலேயே இருந்துகிட்டு ஒருத்தர ஒருத்தர் பாக்காமலேயே இருந்திருக்கோம்... எல்லாம் இன்னிக்குத்தான் சந்திக்கணும்னு இந்திருக்கு போலே. சரி... வாயேன் அதோ தெரியுதுல்ல அந்த மொதல் வீடு அதுதான் என்னோட வீடு... வா” என்று இயல்பாக அழைத்தாள். அவளோட வண்டியையும் தள்ளிக் கொண்டே பேசியவாறு நடந்தேன்.
“சிவராமா ஒன்னோட கல்யாணப் பதிரிக்கை வந்தது, பார்தேன்... எங்க என்னால வரமுடியல... ஆமா ஒனக்கு எத்தன குழந்தைங்க...” என்று ஆவலாகக் கேட்டாள்.
“எனக்கு ரெண்டு பயலுங்க! ஏம்பையங்களை எங்க அம்மாவும் அப்பாவும் பாத்துக்கறாங்க... அதனால நானும் அவளும் எந்தத் தொந்தரவும் இல்லாம வேலைக்குப் போக முடியுது...”
வீடு வரவே அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டின் முன்னுள்ள ஹாலில் அவளது கணவர் சேரில் அமர்ந்தவாறு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். நான் எனது பைக்கை நிறுத்திவிட்டு வந்தேன்.
வீட்டினுள் நுழைந்தவுடன் அவள், “ஏங்க இவரு பேரு சிவராமன்... என்னோட கிளாஸ்மேட்... சிவராமன் இவருதான் என்னோட வீட்டுக்காரர்...” என்று அறிமுகப்படுத்தினாள். அவளது கணவரும், “வாங்க... சார்... ஒக்காருங்க...” என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு மலர்ச்சியுடன் என்கையைப் பிடித்து குலுக்கினார்.
நானும் அவளது கணவரும் பற்பல விஷயங்களைப் பேசினோம். அதற்குள் சசிகலாவும் காபி போட்டுக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அவளும் ஒரு டம்ளரை எடுத்துக் குடித்துக் கொண்டே குழந்தைக்கும் கொடுத்தவாறு எங்களுடன் பேச்சில் கலந்து கொண்டாள். ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்த நான், “அப்ப சார் போயிட்டு வர்றேன்... நீங்களும் குழந்தையக் கூட்டிக்கிட்டு நிச்சயமா எங்க வீட்டுக்கு வரணும்... சரியா” என்றேன். அவளது வீட்டுக்காரர், “சார் நீங்களும் ஒங்க மனைவி குழந்தைகளக் கூட்டிக்கிட்டு வரணும்... நேரங்கிடைக்கிற போதெல்லாம் வாங்க...” என்று கூறி விடைதந்தார். மனமகிழ்ச்சியுடன் வீடுவந்து சேர்ந்தேன்.
என் மனம் பழைய நினைவுகளுக்குச் சென்று வலம் வரத் தொடங்கியது. எப்படி இருந்த சசிகலா இப்படி மாறிவிட்டாள்? பெண் விடுதலை பெண்கள் முன்னேற்றம், என்று முழங்கி ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பேசுவாள். பெண்கல்வி கற்று வேலைக்கு சென்று சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பாள். இதுபற்றி காலேஜ் பட்டிமன்றங்களிலும் பேச்சு போட்டிகளிலும் பேசி பல பரிசுகள் வாங்கி இருக்கிறாள். அப்படி பட்ட சசிகலாவா இது? என்னால் நம்பவே முடியவில்லை! அப்படியே நேருக்கு மாறாக அல்லவா இருக்கிறது. ஆணாதிக்கம் பேசியவள் இப்பொழுது கணவனுக்காக வேலைக்குச் செல்லாமல் அடுப்படியில் அடைந்து அவனுக்குப் பணிவிடை செய்து அவனுக்காக முகம் கழுவிக் காத்திருந்து வறவேற்கும் ஒரு சராசரிப் பெண்ணாக மாறிவிட்டாளே! என்று மிகவும் வியப்படைந்தேன். என் மனைவியிடமும் நான் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றதைப் பற்றிக் கூறினேன். அவளோ ஒப்புக்காகக் கேட்டுக் கொண்டாள்.
அதற்கப்புறம் பலமுறை சசிகலாவின் வீட்டிற்குச் சென்றேன். என் மனைவியையும் பையன்களையும் அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். முதலில் மறுத்த என் மனைவி, பின்னர் எனது வற்புறுத்தலின் பேரில் வந்தாள். அவர்களும் தங்களது குழந்தையுடன் எனது வீட்டிற்கு வந்து சென்றனர்.
எங்களின் தூய நட்புத் தொடர்ந்தது. நான் மட்டும் விடுமுறை நாட்களில் அடிக்கடி சசிகலாவின் வீட்டிற்குச் சென்று அவள் கணவனுடனும் அவளுடனும் பேசிவிட்டு வந்து கொண்டிருந்தேன். என் மனைவியும், “ஏங்க லீவுநாள்லகூட வீட்டுல இருக்கக் கூடாதா... அப்படி எங்கதான் போறீங்க...?” என்று கேட்பாள். நானும், “என்னோட பிரண்ட் சசிகலா வீட்டிற்குத்தாம்மா போயிட்டு வர்றேன்...” என்று நான் பதில் கூறியதும் அவளது முகம் கடுகடுவென்று மாறிவிடும்.
“லீவுநாள் பொண்டாட்டிக்கு ஏதாவது ஒத்தாசை செய்யணும்னு கொஞ்சநாச்சும் மனசு இருக்கா அங்க போறேன் இங்க போறேன்னு ஊரு சுத்திட்டு வர்றீங்க... நாமட்டு வீட்டுல அடஞ்சி சாகணும்... பிள்ளைகளையும் கவனிக்காம அப்படி என்னதாங்க ஒங்களுக்கு வேலை...” என்று காட்டுத்தனமாகக் கத்தினாள்.
அவளின் கத்தல் என்னை நெஞ்சில் அறைந்ததைப் போன்றிருந்தது. அவளைப் பார்த்து, “ஏண்டி கத்தறே... இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படிக் கெடந்து குதிக்கறே... என்னோட பிரண்ட் வீட்டுக்குத்தான் போயிட்டு வர்றேன்... அதுல என்ன தப்பு” என்று அமைதியாகக் கேட்டேன்.
“இங்க பாருங்க படிக்கிற காலத்துல என்னமோ பிரண்டா இருந்திருக்கலாம்... இப்ப அவங்க இன்னொருத்தரோட பொண்டாட்டிங்கறது ஞாபகம் இருக்கட்டும்... நான் ஒங்கள நம்பறேன்... ஆனா இந்த ஒலகம் நம்புமா... பனமரத்துக்குக் கீழ நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளக் குடிச்சதாத்தான் ஊரு ஒலகம் சொல்லும்... இனிமே அவங்க வீட்டுக்குப் போகாதீங்க... அது தப்பு...” என்று கறாராகச் சொல்லிவிட்டாள்.
எனக்கு அவமானமாகப் போய்விட்டது. சே! ஒரு ஆணும் பொண்ணும் நட்பாப் பழகினா அது தப்பா...? ஆண் பெண் நட்பாப் பழகவே முடியாதா...? ஏன் தப்பாவே பாக்கணும்...? இந்த ஒலகம் எப்பத்தான் திருந்தப் போகுதோ...? என்று மனதிற்குள் புழுங்கிப்போனேன். மறுவாரம் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றபோது அவளிடம் வீட்டில் நடந்ததைப் பற்றிக் கூறினேன். நான் கூறியதைக் கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சிவராமன் ஒலகத்தச் சரியாப் புரிஞ்சிக்க... இதுதான் நிஜம்! சும்மா பேச்சுக்கு பெண்ணுரிமை அது இதுன்னு பேசலாம், ஆனா வாழ்க்கைன்னு வரும்போது விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு! உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்க, காலேஜ்ல எப்படி இருந்தேன், ஆனா இப்ப எப்படி மாறிப் போயிட்டேன் தெரியுமா? என்னயப் பார்த்த உடனேயே தெரிஞ்சுகிட்டிருப்பியே... அது நிழல்... உன் வொய்ப் சொல்றதுல நியாயம் இருக்கு... அவங்க சொன்னது நிஜம்தான். நிழல் நிஜமாக முடியாது... இதுதான் உண்மை. இதை நாம புரிஞ்சிக்கணும். நீ இங்க வந்து போறது என் கணவருக்கும்தான் பிடிக்கலை! அவரு அத அவரால வெளிப்படையாச் சொல்ல முடியல... அது மட்டும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரங்க கூட இப்ப என் கூட சரியாப் பேச மாட்டேங்கறாங்க... இந்தத் தெருவுல நான் அடக்கமா கணவனுக்கு அடங்கி நடக்கிறதுனாலே நல்ல பேரு இருக்குது. இதுவே நான் எதிர்த்துகிட்டு நின்னா, சும்மாவே அடங்காப்பிடாரி, அப்படி இப்படின்னு சொல்வாங்க... அவர் இல்லாம நான் தனித்து வாழ முடியும். ஆனா, உலகம் சும்மா இருக்காது. வாழாவெட்டின்னு சொல்லும் இல்லாத கதைகளைத் திரிச்சுக் கட்டிவிடும். அதுவும் முக்கியமாப் பெண்களுக்கு எதிரி பெண்கள்தான். அவங்களே கூடிக் கூடிப் பேசுவாங்க! இது தேவையா? இந்த உலகம் ஆண்- பெண் நட்பை கொச்சையாகத் தான் பார்க்குது. உலகம் மட்டுமில்ல? பெண்ணே பெண்ணைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க! இதுல பெண்ணுரிமை பேசி என்ன பயன்? பெண்ணுரிமை அப்படி இப்படின்னு பேசறது நிஜம்... இந்தமாதிரி நிஜம் எப்பவும் பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும்... ஆனா நடைமுறையில அது எப்பவும் நிழலாத்தான் இருக்கு...” என்று சசிகலா நடைமுறை எதார்த்தங்களை எடுத்துக் கூற நான் கல்லாகச் சமைந்து போனேன்.
அவள் கூறிய நடைமுறை உண்மைகள் எனது இதயத்தைச் ‘சுருக்’கென்று குத்தியது. மெளனமாக எழுந்து அவளிடம் வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டே என் வீடு நோக்கி விரைந்தேன். பாதைகள் அதன் போக்கில் போய்க்கொண்டுதான் இருக்கும்... ஆனால், பாதைகளில் நடக்கின்ற நாம்தான் நம்போக்கை நல்லபடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்... என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.