அன்று அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர். மற்ற நாள்களைப் போல் அல்லாமல் யாரும் விடுமுறையோ அனுமதியோ கூறாமல் மிகுந்த அக்கறையுடன் வந்திருந்தனர். தலைமையாசிரியர் தாமோதரனுக்கு ஆச்சரியம். யாராவது எதையாவது சொல்லி விடுப்போ அனுமதியோ கேட்பர். ஆனால் இன்று யாரும் எதையும் கேட்கவில்லை.
அதிலும் அனைவரும் வெகு சீக்கிரமாகவே பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். தலைமையாசிரியருக்கு விவரம் தெரியாமல் இல்லை. தெரிந்தும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆம் கணித ஆசிரியரின் ஓய்வுதான் அன்று நிகழ இருக்கும் விழா.
அன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை வலிய வாங்கிக் கொண்டு செய்தனர். மாலைவேளை சிறிய அறையொன்றில் தலைமையாசிரியரின் தலைமையில் விடைதருவிழாத் தொடங்கியது. அனைவரும் கணித ஆசிரியர் பெருமாள் தங்களுக்கும் பள்ளிக்கும் ஆற்றிய அரும்பணிகளைப் பட்டியல் போட்டுப் பேசினார்கள்.
ஒவ்வொருவரும் அவரைக் கொடுத்து வைத்தவர் என்று பாராட்டினர். ஆம் அவர் கொடுத்து வைத்தவர்தான். அவருடைய இரு மகன்கள் நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி குழந்தைகளும் இருந்தன. நடுவயதிலேயே அவரது மனைவி இறந்துவிட்டதால் பெருமாள் ஒண்டிக் கட்டையாகக் கடமைகளை முடித்துவிட்டு ஹாய்யாக இருந்தார்.
இதனாலும் இவரை அங்குள்ளவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர் என்று எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பர். 33 வருடங்கள் பணியாற்றி இன்று ஓய்வு பெறும் பெருமாள் வாத்தியார் மீது அனைவருக்கும் நல்ல மதிப்பிருந்தது. யார் எந்த உதவி கேட்டாலும் ஓடோடிச் சென்று உதவும் உதாரண குணம் மிக்கவராக அவர் இருந்தார். யாருக்கு உதவி தேவையென்றாலும், அவர் முன்னால் நின்று செய்வார். அதனால் அவரது ஓய்வு பெறும் நாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று உடன் பணியாற்றிய ஆசிரியர்களும் ஊரில் உள்ள அவரது முக்கியமான நண்பர்களும் முடிவு செய்து இன்று தலைமையாசிரியர் தலைமையில் கூடி விழா நடந்து கொண்டிருந்தது.
அனைவரும் பெருமாள் வாத்தியாரையும் அவரது குணத்தையும் கண்களில் நீர்வழிய எடுத்துரைத்தனர். அதிலும் அந்தப் பள்ளியின் உதவியாளர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே பெருமாள் வாத்தியார் தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர் தனது ரத்தத்தைக் கொடுத்துக் காப்பாற்றியதைக் கூறவே அங்கிருந்தோர் அனைவரும் கலங்கிவிட்டனர்.
அதன் பின்னர் பெருமாள் வாத்தியார் ஏற்புரையினைச் சுருக்கமாகக் கூறவே விருந்தோடு அவ்விழா நிறைவுற்று ஆளுயர மாலையைப் போட்டு அவரை ஊர்வலமாக அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அவரது வீட்டில் அவரும் அவர் வளர்க்கும் நாய் மட்டுமே இருந்தனர். வேறு யாரும் துணைக்கு இல்லை.
மணி ஆறு மட்டுமே ஆனதால் அவரால் வீட்டில் இருக்க இயலவில்லை. எப்போதும்போல் செல்லும் பிள்ளையார் கோவில் அரசமரத்தடிக்கே சென்று அங்கு பிள்ளையாரை வணங்கிவிட்டு அங்குள்ள பட்டியக் கல்லில் சற்று ஓய்வாகப் படுத்திருந்துவிட்டு பின்னர் எழுந்து அங்கிருந்த மீனாட்சி பவனில் நாலு இட்டலியைச் சாப்பிட்டுவிட்டு தனது நாய்க்கும் இட்டலியை வாங்கிக் கொண்டு வந்து நாய்க்குப் போட்டுவிட்டுப் படுத்துவிடுவார்.
ஓய்வாக இருப்பவர்கள் அனைவரும் அந்த அரசமரத்துப் பட்டியக்கல்லுக்கே வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர். அது வாடிக்கையாகிப் போன ஒன்றாக இருந்தது. பெருமாள் வாத்தியாரும் எப்போதும் போல் அங்கு வந்துபேசாமல் படுத்துவிட்டார் அவரது நாய் அவரது கால்மாட்டில் படுத்துக் கிடந்தது.
அப்போது அங்கு வந்த குழந்தைவேல் பிள்ளை எப்போதும்போல், “என்ன பெருமாள் சார் எப்ப வந்தீங்க...? இன்னக்கி ரிட்டயர்டு சொன்னீங்கள்ள... என்னால வரமுடியல... ம்...ம்... ஒங்களுக்கு என்ன சார்... எந்தப் பிரச்சனையும் இல்லை... பசங்க ரெண்டு பேரும் ஒங்களத் தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க... எனக்கெல்லாம் அப்படியா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் சார்... நீங்க கொடுத்து வச்சவரு... சரி நானு வர்றேன் நாளைக்குப் பார்ப்போம்...” என்று கூறிவிட்டு எந்தப் பதிலுக்கும் காத்திராமல் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.
அவர் சென்றவுடன் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் வாத்தியார், “அவருக்கென்ன... எதையாவது சொல்லிட்டுப் போவாரு என்னோட வேதனை யாருக்குப் புரியும்... அது புரிஞ்சிக்கக் கூடியதா...? எல்லாம் தர்மாவுடன் போயிருச்சு...” என்று மனதிற்குள்ளேயே முணகிக் கொண்டவர் கண்களை மூடினார்.
அவரது மனதில் பழைய சம்பவங்கள் அணிவகுத்து வந்தது... இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி இருவரும் சென்றுவிட வீடே வெறிச்சோடி இருந்தது. தன் மனைவி தர்மாம்பாள் இறந்து பல ஆண்டுகளாகியும் தன் மகன்களை வளர்த்து ஆளாக்கி இன்று ஊரே மெச்சும் நிலையில் வைத்துவிட்டார். இதனைப் பார்க்க தர்மாவிற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை, பாவம்! அல்ப ஆயிசிலேயே போய்ச் சேர்ந்துவிட்டாள். அவள் கொடுத்து வைத்தவள், ஆனால் நான்...
திருமாணமான பின்னர் இந்தப் பயக அப்பான்னு திரும்பிப் பாக்கவே இல்லையே, பொண்டாட்டியே போதும்னு இருந்துட்டானுகளே... எப்பாவது வந்தா கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டது மாதிரி மறுநாளே ஓடிப் போயிடுவாணுக... தர்மா இதையெல்லாம் நான் யாருக்கிட்ட போயிச் சொல்ல முடியும்... நீயே சொல்லு?
இப்படித்தான் ஒருக்கா எனக்கு ஒடம்புக்கு முடியாமப் போயி ஆசுப்பத்திரியில பக்கத்து வீட்டுக்காரரு சேத்துட்டுப் பயகளுக்குத் தகவல் சொன்னவுடனேயே வந்தாணுக... வந்தவங்க அப்பா அப்படி இருங்க... இப்படி இருங்கண்ணு அறிவுரை சொன்னானுகளே தவிர எங்க கூட வந்து இருங்கப்பா... ஏப்பா இப்படிக் கிடந்து கஷ்டப்படறீங்கண்ணு ஒரு வார்த்தைகூடச் சொல்லலியே... தர்மா... நானே வெக்கத்த விட்டுக் கேட்டதுக்குப் பெரியவன், “அப்பா நாங்க இருக்கறது டவுனு ஒங்களுக்கு ஒத்துவராதுப்பா... நாங்க வேணுன்னா ஒங்களுக்குப் பணம் அனுப்புறோம்... நீங்கபாட்டுக்கு வேணுங்கறத வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இங்கேயே இருங்க... நாங்க வந்து ஒங்களப் பாத்துட்டுப் போறம்...” என்றானே...
அடப் பாவிகளா... ஒங்கள வளக்கப்பட்ட பாடு என்ன? அதையெல்லாம் கொஞ்சநாச்சும் நெனச்சுப் பாத்தீங்களா? ஏண்டா நான் என்ன பணத்துக்கு ஆசைப்படுறவன்னு நெனச்சிங்களா...? அடப் போங்கடா போக்கத்தவனுகளா... ஒங்க பணம் யாருக்குடா வேணும்... ஒரு சல்லிக்காசுகூட வேணாம்டா... ஒங்கம்மா இருந்தா இப்படி என்ன விட்டுருப்பாளாடா...? தர்மா நானு அவங்ககூடப் போயி இருப்பேன்னு நெனச்சியா... ஒருக்காலும் போக மாட்டேன்... நீ வாழ்ந்த இந்த இடத்திலேயே, நானும் இருந்து என்னோட கதைய முடிச்சிக்கிடுவேன் தர்மா...!
அந்தச் சின்னப் பயகூட என்னைய ஒப்புக்கு வாப்பான்னு சொல்லமாட்டேன்னுட்டானே... அண்ணன் சொல்றதுதான் சரின்னு வாயத் தொறக்காம கல்லுமாதிரி இருந்துட்டானே... அடப் போங்கடா... எனக்கு முடியலன்னு ஒங்ககிட்ட நான் வந்து கெஞ்சுவேன்னு பாத்தீங்களா... டேய் அது இந்தச் ஜென்மத்துல நடக்காதுடா... என்னைய எந்தர்மா அந்தளவுக்கு விட்டுட மாட்டாடா... அவ நான் கஷ்டப்படுறதப் பாத்துக்கிட்டு இருக்கமாட்டா... ஒடனே அவளோட என்னயும் கூட்டிக்கிடுவா... என்ன... தர்மா... அப்படித்தானே... என்று கண்களில் நீர்வழிய வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வானத்து நட்சத்திரங்களுக்கிடையே அவருடைய மனைவி தர்மாம்பாள் இருகைகளையும் நீட்டி அவரை அழைப்பதுபோலிருந்தது. அதைப் பார்த்த பெருமாள் வாத்தியார், “தர்மா... நானு ஓங்கூடவே வந்தர்றேன் தர்மா... வந்தர்றேன்... எனக்கு இங்க என்ன வேலை...? எனக்குன்னு எதுவுமே இங்க இல்ல... பிறகு நானு இருந்து என்ன செய்யப் போறேன்... வந்துட்டேன் தர்மா...” என்று கண்களை மூடியபடியே முணகினார். அவருக்கு நெஞ்சைப் பிசைவது போலிருந்தது, அப்படியே கண்ணயர்ந்தார்.
அவரது நாயும் சுற்றும் முற்றும் ஓடி ஓடிப் பார்த்துவிட்டு அவது தலைமாட்டிற்குக் கீழ் வந்து படுத்துவிட்டது. விடிந்து நெடுநேரம் ஆகியும் பெருமாள் வாத்தியார் எழுந்திருக்கவில்லை... கோவிலுக்கு வந்த அவரது நண்பர்கள் அவரைத் தொட்டு எழுப்பினார்கள். அவரது உடல் அசைவற்றுக் கிடந்தது. ஊரில் செய்தி பரவியது...
“அட பாருய்யா... பெருமாள் வாத்தியார் கொடுத்து வச்சவருதாய்யா... நேத்து ரிட்டயர்டு ஆயிட்டாரு... இன்னக்கிப் பாரு யாருக்கும் எந்தச் சங்கடமும் கொடுக்காம அலுங்காமக் குலுங்காமப் போயிட்டாரு... இருந்தா அவரு மாதிரி இருக்கணும்யா... அவரு கொடுத்து வச்சவருய்யா... நோயிநொடின்னு படுக்காமா சட்டுன்னு கதைய முடிச்சிக்கிட்டாருய்யா...” என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள்.
இவற்றையெல்லாம் இயற்கையோடு இயற்கையாக இருந்து பெருமாள் வாத்தியார் கவனித்துக் கொண்டே இருந்தார். அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது. அப்போது அரசமரத்து இலைகள் சலசலவென்று காற்றில் அசைந்தாடின. அது அவ்வூராரைப் பார்த்து பெருமாள் வாத்தியார் சிரிப்பதைப் போன்றிருந்தது.