'அப்படி என்ன ஒசந்த ரோமாபுரி பேரழகியோட குடி வந்திருக்கான் பொண்டாட்டிய வெளிய காட்டாம பொத்தி வெச்சுருக்கானே...'
கவனம் மொத்தமும் வாணிக்கு சிதைந்துப் போய் விட்டது. அன்றைய வழக்கமான தனது வீட்டு வேலைகளில் ஈடுபாடற்று, ஜன்னல் வழியாக அடிக்கடி பார்வையை ஓடவிட்டாள்.
உண்மையாகவே அழகு தூக்கலாகத்தான் இருப்பாளோ...? ஆமா, புதுப்பொண்டாடினு தன்ன நிமித்திக் காட்டுவா, அவனும் ஒருவித கிரக்கம் உள்ளுக்குள் புகுந்த மாதிரி சிலிர்த்துக் கிடப்பான். ‘ ம்...' ஜோடியாப் பார்க்க முடியலயே...' வருந்தினாள். அடுத்தவங்க விசயத்தை, தெரிந்து கொள்வதிலே அவளுக்கு அப்படியொரு ஆர்வம்...
அந்த இளைஞன்தான் வரண்டாவில் செப்பல் ஸ்டான்டை வைத்தது, போர்டிகோ கொக்கியில் ஒலியிசைக்கும் மணிக்கொத்து மாட்டியது, வீட்டு மாடியில் டிஷ் ஆண்டனா இணைப்புக் கொடுத்தது, என அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தான். ஆனா... அவள்...?
‘ஆபீஸ்ல தன்னோட வேலை செஞ்ச பொண்ணாம், மூணு வருசச் காதலாம், வீட்ல சுத்தமா சம்மதிக்காததால திடீர்னு ஒரு நாள் அவளையே கட்டிக்கிட்டானாம். அதுல ரெண்டு வீட்டுக்கும் ஏகமா சண்டையாம். ‘உனக்கும்,எனக்கும் வேலையிருக்கையில் எதுக்கு பின் வாங்க' ன்னு சேந்தாப்புல மாத்தல் வாங்கிட்டு இங்க வந்துட்டாங்க. ஏந்தம்பிக்கு நெருக்கமானவனாம் அதான் கூட வாடகை கிடைக்கும்னு பின்னாடியிருக்க சின்ன வீட்டுக்கு நான் போய்ட்டேன். இந்த காலத்துப் புள்ளைங்களுக்குத் தைரியம் அதிகம் வாணி. ஓ... வயசுப் பொண்ணுதான் வழியப் போயாவது பழகிக்கோ,'
‘வீட்டிக்காரக்காவுக்கு கடுகளவுகூட விவஸ்த கிடையாது, வழியப் போறளவுக்கு அவ என்ன பெரிய சினிமா நடிகையா? நம்ம மாதிரி சாமான்ய மனுஷிதான, தேவனா அவளா வரட்டுமே பார்த்துக்களாம்...'
“அக்கா,மினரல் வாட்டர் ஒரு ஜக் கொடுங்க, இந்த லையனுக்கு தண்ணி வண்டி வரவும் வாங்கித் தாறேன், என் ஒய்புக்கு சாதா தண்ணி ஒத்துக்காது. அதான்...”வாசலுக்கு வந்த வாணி, கையில் சில்வர் ஜக்கோடு நின்றவனை கவனித்ததை விட, கூட அவள் வரவில்லையே என்ற ஏமாற்றத்தை உணர்ந்து, கொஞ்சமாய் சிரிப்புக் காட்டி, தண்ணீர் தரும் உதவியில் ‘உங்க மனைவிய அனுப்பியிருக்கலாமே பொம்பளைங்க அறிமுகம் ஆகியிருப்போம்ல'ன்னு கேட்டு விட வேண்டியதுதான். தனக்குள் திட்டம் வகுத்தவாறே தண்ணீர் கொணர்ந்து கொடுக்கவும் ‘மோகன்...' ன்னு அவள் குரல் எதிர் வீட்டிலிருந்து வேகமாய் வர, அந்த இளைஞன் பதறியடித்து ஓடினான்!
மக்கிய காகிதத்தில் தீபற்றிய,பொசு,பொசுப்பானது வாணியின் எண்ணம்.
“ச்சி... ஆம்பளையப் பாரு ஓடுறான், ஒட்டிக்கிட்ட புது ஜோடில இப்ப மணக்க, மணக்கத்தான் விட்டுப் பிரியாம இருப்பாங்க” கொஞ்சம் சத்தமாக முணங்கியபடியே டிபனில் தயிர் சாதம் திணித்து, ஊறுகாய் கூட வைக்காது மூடியை மூட நிறைய சிரமப்பட்ட, மனைவியின் அருகில் சென்ற,செல்வம் “ஓ நெனப்பெல்லாம் எதிர் வீட்டு பொண்ணு அழகா, எடுப்பா இருப்பாளா, சேலை கட்டிருப்பாளா, சுடிதாரா, கழுத்து நிறைய நகை அணிந்திருப்பாளா, நல்லவளா, சிடுமூஞ்சிக்காரியானு தெரிஞ்சிக்கிறதுலதானே இருக்கு” இப்படிச் சொல்லவும், பார்வையில் நெருப்பு உதிர்த்து, ‘சாப்பாட்டை எப்படியும் எடுத்துப் போங்க' என்பது போல் வேகமுடன், விசுக்குனு கழுத்து வெட்டி, சமயக்கட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.
சலிப்பான வழக்கத்துடன் டிபனை மூடி கைப்பையில் வைத்துக் கொண்டு வேலைக்குக் கணவன் சென்று விட, முன் கிரில் கேட்டைப் பூட்டும் சாக்கில் வந்தவள், ஓரக் கண்ணால் அங்கே நோட்டமிட, அதே மோகன்தான் டூவீலரை வாசலில் நிறுத்தி, துணிப்பையுடன் கதவு திறந்து, நுழைந்ததும் பூட்டிக் கொண்டான். பார்சல் சாப்பாடு வாங்கி வந்திருப்பான் போல்.
வீட்டுக்காரக்கா இருந்தாலும் ‘வீடு வசதிப்படுதா'ன்னு கேட்பது போல், உளவு பார்த்து வரச்சொல்லி விசாரித்திருக்கலாம். இன்னிக்கீனு ‘மூத்த மக கூப்பிட்டாள்'ன்னு போயிட்டாங்களே.
வாணிக்கு தலை சுற்றாததுதான் குறை. கூடிய சீக்கிரத்தில் எதிர் வீட்டின் எல்லாம் அறிந்துவிட வேண்டும். இல்லையேல் சுற்றியே விடும்!
‘ஓ...இன்னும் இவளால் எதுவும் தெரிஞ்சிக்க முடியலயோ, 'செல்லவத்திற்கு ஆத்திரம் பொத்துக் கொண்டாலும், வெளிக்காட்டினால் சூறைக்காற்றில் மரமென ஆடிவிடுவாள். பெற்றோரின் விரும்பத்தகாத செயல்கள் வளரும் பிள்ளையை மனப் பாதிப்புக்குள் தள்ளிவிடும். இதையெல்லாம் வாணி சிந்திக்கவே மாட்டாள். செல்வம்தான் ‘அவளுக்கா நல்ல புத்தி வந்து திருந்தட்டும்' என்று பொறுமையைக் கடைப்பிடித்துக் கொள்கிறான்.
இன்றும் அதே நிலையில்தான், பள்ளி வேனில் மகனை அனுப்பியதும், தான் கிளம்ப அறைக்குள் செல்லவும்,
“அக்கா...” பெண் குரல்
“வாணி யாருனு பாரு” என்றான்.
வாசலுக்கு போனாள், வாணி அங்கே வலது கை கம்புக்கூட்டுக்கு அலுமினிய ‘ஸ்டிக்' கொடுத்து, முகச்சிரிப்பாக நின்றிருந்தாள், அவள்?
‘யார் நீங்...' கேட்க வாணி முயன்ற போது அவளாகவேச் சொன்னாள்,
“எதுத்த வீட்டுக்கு நேத்து குடி வந்தோம், என்பேரு கவிதா இன்று நல்லநாள்னு பால் காய்ச்சிறோம் கண்டிப்பா நீங்க வரனும்”
அவ்வளவுதான் வாணி, சட்டென சரிந்து, நெகிழ்ந்து, வெக்கித்தாள்... இப்படி இருப்பாளா...?அப்படி இருப்பாளா...? என்ற தனது தறிகெட்ட எண்ணங்களின் அவளா... இவள்! எச்சில் விழுங்கினாள், தரம் தாழ்ந்த கற்பனை,யோசனையை, ஆர்வத்தில், ஓர்வித வெறுப்பை, தன்னைச் சுற்றி வைத்திருந்ததை நினைத்துப் பார்த்து, ‘பெரியளவு ஊனத்தை உள்ளத்தில் வைத்திருந்திருக்கோமே...' தனக்குத்தானே முகம் சுழித்தாள்.
“இந்தாங்க அக்கா நேத்து வாங்கிப்போன மினரல் வாட்டர்” அவளின் ஆச்சரிய அதிர்ச்சிச் சிந்தனையைக் கலைத்த மோகன்,மேலும் அவனே “ரயில்வே ஸ்டேசனல இறங்கையில் பிளாட்பார இடவெளியில் ‘ஸ்டிக்' விழுந்துருச்சு ‘ஸ்டிக்' இல்லாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிட்டா கவிதா. உங்களிடம் தண்ணி வாங்க வந்தப்பகூட லேச விழுந்துதான் சத்தமிட்டா, அதான் ஓடினேன். உடனே நண்பனுக்குத் தகவல் சொல்லவும் இரவுதான் புது ‘ஸ்டிக்' வாங்கி வந்து கொடுத்துட்டுப் போறான்.‘ஸ்டிக்'இல்லாமத்தான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களிடம் பால் காய்ச்சும் விசயத்தை முன் கூட்டியே சொல்ல முடியல அதுக்கு மன்னிக்கனும்” என்ற போது
“அதுக்கென்னப்பா இப்ப சொல்லிட்டீல” புன்னகைத்தாள், கவிதா.
“அக்கா, இன்னும் வீடுகளில் சொல்லிட்டு கையோட வீட்டுக்காரம்மாவ கூப்பிட்டுக்றோம்... நீங்க சாரோட வாங்க. நெருங்கிய உறவுகள் ஒதுக்கிட்டாங்க, இனிமே நீங்கதான் சொந்தங்கள் இந்த தண்ணிய ஊத்திக்கிட்டு ஜக்க தாங்கக்கா” மோகன் கை நீட்டவும், “இவ்வளவு நெருக்கமா பேசிட்டு வாங்கிய குடி தண்ணிய திரும்ப நீ தந்தாலும் நான் வாங்கறது நியாயமா? கொண்டுபோ தம்பி வாறேன்” வாணியின் மனசுக்குள்ளிருந்து வார்த்தைகள் வந்தன!
“ரொம்ப சந்தோஷம்க்கா” என்று அந்த இளம் தம்பதிகள் நகரவும்,
அங்கே வந்து நின்ற,கணவனிடம், “என்னங்க ஒரு ரெண்டு மணி நேரம் அனுமதி கேளுங்க நாமளும் அந்த வீட்டுக்குப் போகலாம்” என்ற வாணியிடம் முதல் முறையாக மாற்றம் உணர்ந்தான் செல்வம்.