இரயில் பயணிகளுக்கான காத்திருப்பு அறையில் காத்திருக்கிறேன். காலைப் பொழுது. ஏராளமான கூட்டம்.
காலைக்கடன்களை கழிக்கவும், அடுத்து வரும் தத்தம் வண்டியைப் பிடிக்கவும் அலைமோதுங்கூட்டம்.
"பாத்ரூம்லே தண்ணி வரலே..." யாரோ புலம்பும் சத்தம்.
" பைட்னே கி ஜகஹ் தே தோ பாயி" உட்கார இடங்கேட்கும் அந்த ஊர்வாசிகள்.
உட்காரும் இடங்களிலெல்லாம் மூட்டை முடிச்சுகளை அடைத்து வைத்திருந்தால் யார் தான் இடங்கேட்காமல் இருப்பார்கள்.
ஒரே கலவையான முகங்கள் ஒவ்வொருவர் கழுத்திலும் மாலையாய் மஞ்சள் பட்டியுடன் அடையாள அட்டைகள்.
விசாரித்ததில் தீர்த்த யாத்திரை முடிந்து அவரவர் ஊருக்குத் திரும்பக் காத்திருக்கிறார்கள்.
பிரயாணக் களைப்பு தென்பட்டாலும் எல்லோர் முகத்திலும் ஓர் ஆனந்தரேகை படிந்திருந்தது.
ஒருவேளை சுற்றுலா வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியாக இருக்கலாம். எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரம்.
காத்திருப்பதில் அவர்களுக்கு அர்த்தமுண்டு. ஆனால் தனக்கு ... ... ...
இனி எதிர்காலம்.....!
திடீரென்று வரவில்லை. ஓரளவு எதிர்பார்த்தது தான்... ஆனால் இப்படி ஒரே நாளில் அழைத்து கையில் மூன்று மாத சம்பளம் ஒப்படைத்துவிட்டுத் தங்கக் குலுக்கலுக்கு ஆளாக்கி விட்டனர்.
அவ்வளவு தான்... இனி வேலை இல்லை. மூன்று மாத சம்பளம் எவ்வளவு தூரம் கைகொடுக்கும் எனத் தெரியாது.
சுற்றிலுங் கடன்... வேலைக்குச் சேர்ந்த புதிதில் கைநிறையச் சம்பளம் தந்து, அடுத்தடுத்து டூ வீலர், ப்போர் வீலர் கடன், வீட்டுக்கடன், தனிக் கடன், தங்கை திருமணக்கடன்... இப்படி எல்லாக் கடன்களைக் கொடுத்துவிட்டு கடனாளியாக்கி இருந்தார்கள்.
இப்போது வேலையைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் கடனாளியாய்...
இனிப் புதிதாய் மீண்டும் தொடக்கத்திலிருந்து... ... வேலைதேட வேண்டும்...முடியுமா...? முடியாது தான்... புதிதாய்ப் படித்துவிட்டு புதிதாய் வந்த கணிணிப் பாடங்களையெல்லாம் முடித்தவர்களுடன் போட்டி போட முடியாது. வேலையின்றி நிற்க வேண்டும். இல்லையேல் குறைந்த சம்பளத்தில் சேரவேண்டும். ஆனால், சேர்க்க மாட்டார்கள். அவர்களுக்குப் புதிய ரத்தம்தான் வேண்டும். அப்போது தான் மாங்குமாங்கென்று வேலை பார்ப்பார்கள்.
வீட்டிற்கு விஷயம் தெரியாது. பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்றியாக வேண்டுமே... அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே உத்தமம். இல்லையேல் அவர்களும் பதறி, பதட்டத்தைக் கூட்டுவார்கள்.
அந்த எண்ணம் தனக்கு அப்போது ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை. அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், மற்றவர் எதிர்காலம்... பொறுப்பற்ற செயலாகத் தூற்றுவார்கள். என்ன செய்ய...
"சாப்... பேக் கா டூட்டே ஜிப் பின் டால்னா ஹை...?" காலைச் சுரண்டி ஒருவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
கைநிறைய ஜிப் வளையங்கள், சின்னச்சின்ன ஆணிகள் நிறைந்த டப்பா, ஒரு தோல் பை.
காலை இழுத்தவாறுஂ நடந்து வந்திருப்பது தெரிகிறது. போலியோவால் தாக்கப்பட்டவன் போல...
அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் இருந்தவர் தன் பையைக் காட்டி ஜிப்பைப் போடச்சொன்னார்.
மூன்றே நிமிடத்தில் புதிய ஜிப் போட்டுவிட்டு இருபது ரூபாய் பெற்றுக் கொண்டான். அவனே வலியச்சென்று பை கொடுத்தவர் கால்களைப் பார்த்து செருப்பு அறுந்திருந்ததைச் சுட்டிக்காட்டி, இரு செருப்புகளையும் நன்கு தைத்துக் கொடுத்தான்.
" ஜீ..ஆப் கோ..." என என் முகம் நோக்க, அதற்குள் வேறு ஒருவர் தன் பையை நீட்டினார். அதற்கும் உடனே ஜிப் போட்டுக் கொடுத்து இருபது ரூபாய்...செருப்புக்கு இருபது ரூபாய் என வேலைக்குத் தக்கவாறு பணம் பெற்றான்.
என் பையையும் தைத்துக்கொண்டு, மற்ற அருகில் இருப்போர் இடமெல்லாம் ஜிப் போடவும், பேக் , செருப்பு ரிப்பேர் செய்து கொள்ளவும் எனச் சொல்ல அவனுக்கு மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் சுமார் ஐநூறு ரூபாய் அளவில் பணம் சம்பாதித்தான்.
நான் ஏதோ பெரிய உதவி செய்தது போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். நான் நீட்டிய பணத்தையும் வாங்க மறுத்தான்.
"தன்யவாத் சாப்....ஆஜ் பஹூத் கமா லியா.....அவுர் பீ கமா லூங்கா...." (நன்றி அய்யா... இன்று நிறைய சம்பாதித்து விட்டேன், இன்னும் சம்பாதிப்பேன்)
நான் அவனையேக் கூர்ந்து பார்த்தேன். விடைபெற்றவாறு அவன் தவழ்ந்து செல்லச் செல்ல , எனக்குள் தோன்றியிருந்த தவறான எண்ணம் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது.
ஒரு நல்லகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றலாயிற்று. மனதைத் தெளிவாக்கிச் சென்ற அந்த உன்னத வேலைக்காரன் சென்ற திசையை நன்றியுடன் நோக்கினேன்.