அறையினுள் வெளிச்சக் கீற்றுகள் பரவ ஆரம்பித்திருந்தன. அலைபேசியிலிருந்து காலை ஐந்து மணிக்கான எழுப்புதல் மணி இசையாகக் கசிந்தது. நேற்று தாமதமாக உறங்கியதன் விளைவு விழிகள் கனத்துப் போயிருந்தன. சற்று சிரமப்பட்டு விழிக்க வேண்டியிருந்தது. கண்களை விழித்து அலைபேசியை அவசரமாக எடுத்து எழுப்பிய மணியை நிறுத்தினேன். அருகில் இனியன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். பாவம் குழந்தை என்ற எண்ணம் என் மனத்தில் ஓடியது. அவன் நெற்றியில் முத்தம் ஒன்றை அவசரமாகப் பதித்துவிட்டுச் சமையலறை நோக்கி விரைந்தேன். அறையை ஒளி வெள்ளமாய் அடித்திருந்தது. அவர்தான், அன்றைய சமையலுக்கு முருங்கைக்காயும் வெண்டைக்காயும் அழகாக நறுக்கப்பட்டிருந்தன.
‘எத்தன மணிக்கு எழுந்திரிச்சீங்க’ என்று அவரிடம் கேட்டு முடிக்கும் முன்பாக சோர்வு என் மனத்தை ஆக்ரமித்தது. ‘4.30 மணிக்குத்தான்’ என்று விடை கூறிய அவர் மேலும், ‘நேரமாச்சு, அரிசி வைக்கிறேன். நீ சாம்பார், பொரியல் கீரை எல்லாம் செஞ்சுடு’ என்று மளமளவென எனக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவாறே செயலில் இறங்கினார். நான் நேற்று வாங்கிய சிறுகீரையைத் தூய்மை செய்தேன். சடங்குகளைப் போல் அவசரமாகச் சமையலை முடித்துக் குளித்துக் கிளம்பினேன். இனியனை எழுப்பினேன். ‘இனியன், இனியன்’ அவன் அசையவேயில்லை. லேசாகக் கண்ணைத் திறந்தவன், ‘இவ்வளவு நேரத்துல எழுப்பினா எப்படிம்மா’ என்று ‘ச்சு’க் கொட்டினான். ‘தங்கம், ப்ளீஸ் தங்கம். நேரமாச்சு. நீ குளிச்சாத்தான் ஸ்கூலுக்குக் கிளம்ப முடியும்’ என்றேன். குழந்தை தூக்கத்தைத் தியாகம் செய்தான். குளித்துச் சீருடையணிந்து தயாரானான்.
மணி ஏழாகியிருந்தது. அன்னம்போல் அழகாக வந்து வாசலை நிறைத்தது கார். மின்னல் வேகத்தில் இருக்கைகளை நிரப்பினோம். செல்லும் வழியெல்லாம் இனியனிடம் கெஞ்சல், ‘என் கண்ணுல்ல! கீரை சமைச்சு நெய் விட்டிருக்கேன். ஊறுகாய் இருக்கு. காலேஜ் வரதுக்குள்ள சாப்பிட்டிருவியாம்’. மூன்றாம் கியரைப்போட்டவாறே இனியனின் அப்பா, ‘அம்மா கொஞ்சம் மெதுவாப் பேசுமா! ஒரே ட்ராஃபிக் நிலைமையைப் புரிஞ்சுக்குங்க ரெண்டுபேரும். சத்தம் போட்டீங்கன்னா நான் ஓட்ட மாட்டேன்’. முதலாளி முன் வார்த்தைகளை வெளிவிடத்தயங்கும் தொழிலாளியானோம் இருவரும். கல்லூரி நுழைவாயிலை அடையும்முன் தட்டு காலியாயிருந்தது. தட்டைப் பார்த்தவுடன் தாயின் மடியிலிருக்கும் குழந்தையின் நிம்மதியை அடைந்தேன்.
‘தங்கம் வர்றேன்’ என்றவாறே காரிலிருந்து இறங்கி அம்பெனப் பாய்ந்தேன் கைரேகை இயந்திரத்திடம். அது ஆட்காட்டி விரலின் பதிவை வாங்கிக்கொண்டு தேங்க்யூ என்றது. வெள்ளையன் வெளியேறி எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன. நாம் இன்னும் ஆங்கில அடிமைகள்தான். வழியெங்கும் ஒரு குல்மோஹர் மலரைக்கூடப் பார்க்க முடியவில்லை. எல்லாம் கூட்டி எடுத்திருப்பார்கள். என் கால்கள் காற்றுடன் போட்டி போட்டன. அதற்குள் அறை எண் ஒன்றை அடைந்திருந்தேன். அறை கலகலப்பாயிருந்தது. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைந்து போனேன். என்னுடைய ஒதுக்கமான இருக்கை சற்று நேரம் என்னைத் தாங்கியது. மணிஅடித்தவுடன் அவரவர் அவரவர் வகுப்புக்குச் சென்றோம்.
வருகைப் பதிவை முடித்தவுடன் பாடத்தைத் தொடங்கினேன். அன்றைய பாடம் சிறுபஞ்சமூலம். ‘‘சிறுபஞ்ச மூலம்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா’ என்ற வினாவை எழுப்பி சிறுபஞ்ச மூலத்தை அறிமுகம் செய்தேன். பிறகு, சிறுபஞ்ச மூலம் என்ன சொல்கிறது தெரியுமா? கற்புடைய பெண் அமிர்தம் போன்றவள் என்கிறது’ என்று கூறி நிறுத்தி எதிர்வினையை எதிர்பார்த்தேன். எப்பொழுதும் போல் சுவாதிதான் முதலில் தொடங்கினாள். ‘அன்னை இது என்ன நியாயம் அன்னை. கற்பு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் முக்கியமா? ஏன் ஆணுக்கு வேண்டாமா? கற்புன்னு சொன்னா அதை இருவருக்கும் பொதுவில் வைப்போம்னுதான பாரதி சொன்னார்’ என்று என் பதிலை எதிர் நோக்கினாள் அவள். ‘சபாஷ். என் மாணவியாயிற்றே’ என்று எனக்குள் சிரித்தவாறே நான் தயாரானேன். ‘ஆமாம் கற்பு இரண்டுபேருக்கும் பொதுதான். மேலும் ஆண்கள் கற்போட இருந்தாத்தான் பெண்களின் கற்பும் பாதுகாக்கப்படும். கற்பு விசயத்தில் குடும்ப அமைப்புதான் பெண்ணைப் பாதுகாக்குது. குடும்பத்தில் இருந்துட்டேதான் சமத்துவம் நாடணும். இதுதான் என்னோட கருத்து’ என்று விவாத்தை முடித்தேன். அத்துடன் பாடத்தையும்.
வகுப்புகள் முடிந்து அறையிலிருந்தோம். உள்ளே நுழைந்த இரு மாணவியர் நேராக என்னிடம் வந்தனர். சென்ற ஆண்டு என்னிடம் படித்தவர்கள். ‘அம்மா இனியன் எப்படி இருக்கிறான்? நீங்க எப்படி இருக்கீங்க. இனியன் படிப்பு எப்படிப்போகுது’ சரம் சரமாக என்னிடம் பாய்ந்தன வினாக்கள். மாணவியரிடமிருந்து வரும் இந்த வினாக்கள் சற்றே என் ஆணவத்தைத்தூண்டி விடும். பேசிக்கொண்டே ‘ அம்மா அட்டஸ்டேஷன்’ என்றார்கள். இதைக்கேட்டவுடன் வானத்தில் வட்டமிட்ட பறவை நிலத்தை முத்தமிட்டது போலானேன். என் செருக்கு ஓடைத்தண்ணீர் போல் ஓடி ஓடி வடிந்துவிட்டது. சான்றிதழ்களை வாங்கி சிரத்தையுடன் கையெழுத்திட்டேன். ஒவ்வொருவரின் செயலுக்குப் பின்னும் ஏதாவதொரு காரணமிருக்கிறது என்று என்னுள் ஓடிய எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. மணி இரண்டைத் தொட்டிருந்தது. இத்துடன் வேலை நேரம் முடிந்திருந்தது. வேலை முடிந்தால் கிளம்பலாம். வேலையை முடித்திருந்தாலும் வேலை முடிந்த நேரத்திற்குக் கிளம்புவது பெரிய குற்றம் என்ற எண்ணம் பெரும்பான்மையானோருக்கு இருந்தது. அந்த எண்ணம் என்னையும் தொட்டுவிடாமல் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. கடமையையும் உரிமையையும் குழப்பிக் கொள்ளும் வேடிக்கை மனிதர்கள். ‘பை கீதாக்க. நாளை சந்திக்கலாம் ‘ துறைத்தலைவரிடம் விடைபெற்று அறையை விட்டு வெளியேறினேன்.
அறைக்கு அந்நியமானேன். கல்லூரி வாசலைக் கடந்திருப்பேன். கூட்டம் அலைமோதியது. பேருந்து நிறுத்தத்தில் நிற்க இடமில்லை. சூலூர்ப் பேருந்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த என்னிடம், ‘மேம், பஸ் இன்னும் வரலை.19சி வந்திரும்’ என்றாள் வழக்கமாக என்னுடன் வரும் சுதர்சனா. ‘நன்றி சுதா’ என்றேன்.அதற்குள் 19சி எங்களை நெருங்கியிருந்தது. பேருந்தில் ஒரளவு கூட்டம். ஏறியவுடன் வலதுபுறம் ஓரமாக நின்றேன். எல்லா இருக்கையிலும் மனித முகங்கள். முகங்களைப் பார்வையிட்ட என் கண்களில் அந்த வட்ட முகம் பதிந்தது. அழகான அமைதியான முகம். ஆனால் துறுதுறுத்த கண்கள். என் பார்வை சன்னலுக்கு வெளியேக் கடந்து கொண்டிருந்த மரங்களில் நிலைத்திருந்தாலும் அந்தப்பெண் என்னைப் பார்ப்பதை உணர முடிந்தது.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் அதிகமானது. ‘கொஞ்சம் தள்ளுங்களேன்’ பக்கத்திலிருந்த ஒற்றைச் சடைப்பெண் என்னை அந்தப் பெண்ணின் இருக்கையிடம் நகர்த்தியே விட்டாள். இன்னும் அந்த உணர்வு. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் பார்வை துள்ளும் மீனானது அவளது முகம் நோக்கி. நான் அவளருகில் நகர்ந்தவுடன் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து , ‘நீங்க உட்காருங்க’ என்றாள். நான் உட்காருவதற்குள் வேறொரு பெண் அமரப்போக அவள் முகம் மாறியது. அதைக் கவனித்தவுடன் நானே அமர்ந்தேன். அவள் முகத்தில் திருப்தி நிலவியது. அடுத்த நிறுத்தம் வந்தது அவள் இறங்கவேயில்லை. அவளிடம் ‘ நீங்க இறங்கலையா’ என்று கேட்டேன். ‘இல்ல நான் ஒண்டிப்புதூர் போகணும்’ என்றாள்.
நான் அதிர்ந்து போனேன். ஒண்டிப்புதூருக்கு இன்னும் ஐந்து நிறுத்தங்கள் இருந்தன. ‘அப்புறம் ஏன் எழுந்தீங்க’ என்ற வினாவைக் கண்களில் தேக்கினேன். அவள் புன்னகையைப் பரிசாக்கினாள். ஒண்டிப்புதூர் வந்துவிட்டது. இருவரும் இறங்கினோம். ‘நன்றிமா’ என்றேன், ‘நீங்க ரொம்ப சோர்வா இருந்தீங்க’ என்று புன்சிரிப்புடன் இடம் கொடுத்த புதிரை அவிழ்த்துவிட்டு எனக்கு எதிர்த்திசையில் நகர்ந்தாள். நானும் என்வழியில் இரண்டடி கடந்திருப்பேன். பின் அவளைப் பார்க்கும் உந்துதலில் திரும்பினேன். அவளின் அந்த நட்சத்திரக் கண்களிலிருந்து என்மேல் அன்பின் ஒளி பாய்ந்து கொண்டிருந்தது. நான் உறைந்து போனேன். அவள் முகமூடிகளற்ற புதிய உலகைச் சிருஷ்டித்திருந்தாள்.