உலகம் முழுவதும் உள்ள சர்ச்சுகளில் சிறப்புப் பிரார்த்தனைகள், வழிபாடுகள். மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள், கோவில்களில் யாக பூசைகள், சிறப்பு வழிபாடுகள் என்று மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இது தவிர வேறு மதங்களின் ஆலயங்களிலும் அவரவர் வழியிலான வேண்டுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மதத்தின் வழியில் பிரிந்து கிடக்கும் இவர்களின் அனைவரின் வேண்டுதல்களும் இந்த உலகத்தைக் காப்பாற்றுங்கள் என்று ஒன்றாகவே இருந்தது.
மதத்தின் பெயரால் உலக மக்களிடையே இருந்த பாகுபாடுகள் அனைத்தும் இப்போது மறைந்து போய் விட்டது.
தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமில்லாமல் தங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் வாழ்க்கைக்கும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்த பலருக்கும் அந்த பணத்தின் மதிப்பு இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
நிறம், சாதி, மதம், இனம் என்று பல வழிகளில் வேறுபாடு கொண்டு ஒருவரை ஒருவர் பழித்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருந்த நிலை மாறி வேறுபாடுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது.
எல்லோருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு வந்து விட்டது.
மக்களிடம் ஒரு புறம் ஒற்றுமை ஓங்கியிருந்தாலும் மறுபுறம் எதையும் விரும்பாத நிலையுடன் சோம்பலும் சேர்ந்து வந்திருக்கிறது.
எல்லோருக்கும் இனி தான் வேலை செய்து ஆகப்போவது ஒன்றும் இல்லை என்கிற நிலையும் சோம்பலும் வந்து சேர்ந்து விட்டதால் அனைத்து வேலைகளும் முடங்கிப் போய்விட்டது. இரவு நேரங்கள் இருளில் மூழ்கிப் போய்விட்டது.
இந்த உலகம் அழியப் போகிறது.
பிறர் அழிவைக் கண்டு கொள்ளாத மக்கள் தாமும் சேர்ந்து அழியப் போகிறோம் என்பதால் தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இந்த மாற்றம் எப்படி வந்தது? கமலி வால் நட்சத்திரம்தான் உலகையே மாற்றி விட்டது.
ஆம். கமலி வால் நட்சத்திரம் எப்போது வேண்டுமானாலும் இந்த பூமியின் மீது மோதலாம். இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் உலகம் முழுவதும் பரபரப்பாகி அனைவரையும் மாற்றி விட்டது.
வால் நட்சத்திரம் என்பது உண்மையில் நட்சத்திரமே இல்லை. வால் நட்சத்திரம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. வால் நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் அடங்காப் பிடாரிகள் என்பார்கள். இதுவரை சுமாராக ஆயிரம் வால் நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவைகளில் என்கே வால் நட்சத்திரம், ஹாலி வால் நட்சத்திரம், பியலா வால் நட்சத்திரம் என அந்த நட்சத்திரங்களைக் கண்டு பிடித்தவர்களின் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படித்தான் இந்த புதிய வால் நட்சத்திரத்திற்கும் இதைக் கண்டுபிடித்த பெண் விஞ்ஞானி கமலியின் பெயரே வைக்கப்பட்டு விட்டது.
என்கே வால் நட்சத்திரம் 3.3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்மை சந்தித்து விட்டுச் செல்கிறது. ஹாலி வால் நட்சத்திரம் சுமார் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதாகும். இப்படி ஒவ்வொரு வால் நட்சத்திரமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமிக்கு அருகாமையில் வந்து சென்று கொண்டிருக்கின்றன.
இந்த கமலி வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போல் பூமிக்கு அருகாமையில் வந்து செல்வதாகத் தெரியவில்லை. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் வந்த வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் அது வந்து கொண்டிருக்கிறது.
வால் நட்சத்திரம் தோன்றினால் அரசனுக்கு ஆபத்து வரும், போர் வரும், புதிய நோய்கள் வரும் என்று எத்தனையோ கதைகளை அந்தக் காலத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கதைகளில் கேட்டது போல் இந்த வால் நட்சத்திரங்களால் இது வரை பூமிக்கோ, பூமியில் இருப்பவர்களுக்கோ எந்த ஆபத்தும் வந்ததில்லை.
கமலி வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட போதே இந்த பூமிக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்று இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த இளம் பெண் விஞ்ஞானி கமலி சொன்னார்.
இதை அமெரிக்காவின் நாசா உட்பட அனைத்து நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வால் நட்சத்திரம் மணிக்கு 69 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்னும் முப்பது நாட்களுக்குள் பூமியை அது நெருங்கி விடும். ஆனால் அது பூமியின் மீது அதே வேகத்தில் மோதப் போகிறது என்பதுதான் விஞ்ஞானி கமலி தெரிவித்த அதிர்ச்சித் தகவல்.
இதைக் கேள்விப்பட்ட உலகம் முழுவதும் அழிவு பயம் தொற்றிக் கொண்டு விட்டது.
சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டுப் பிரச்சனைகள், அண்டை நாடுகளுடனான சிறிய போர் போண்றவைகளால் ஒவ்வொரு பகுதியிலும் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த பூமிக்கு நிரந்தர அழிவாய்க் கமலி வால் நட்சத்திரம் வந்து கொண்டிருக்கிறது.
பூமியின் மொத்தப் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்காய் இருக்கும் இந்த வால் நட்சத்திரம் பூமியின் மீது மோதினால் பூமி பல பாகங்களாக உடைந்து சிதறிப் போய்விடும்.
இந்த விசயத்தை உலகம் முழுவதுமுள்ள விண்வெளி விஞ்ஞானிகள் முதலில் மறைத்தாலும் தற்போது அது மறைக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சந்திரனின் வடிவத்தை விட சற்று பெரியதாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் கமலி வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணாலேயே காண முடிகிறது.
அழிவு வரும் போதும் அதிலிருந்து காத்துக் கொள்ள முடியாத நிலையில் இயலாமை வரும் போதும் ஆன்மீகம் ஒன்றே அமைதியைத் தரும் வடிகாலாக இருக்கிறது.
மதங்களின் வழிகள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் அமைதியை நாடுவதாகவே இருக்கிறது.
இறைவன் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
இந்த பூமியைக் கமலி வால் நட்சத்திரத்திடமிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில் அனைத்து விண்வெளி ஆய்வு மையங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படித் தோன்றுகின்றன?
அண்டவெளியில் பூர்வாங்க காலாக்ஸியில் உள்ள வாயு வெப்பசக்தி இழந்து அதன் அடர்த்தி முதலில் ஏறுகிறது. வாயு முகில் ஈர்ப்பு விசையால் திரண்டு பூர்வாங்க காலாக்ஸியை அடுத்துச் சுற்றுவீதியில் வலம் வருகிறது. இரண்டு வாயு முகில்கள் மோதும் போது, நட்சத்திரத்தின் வாயு அழுத்தம் மிகையாகிறது. பிறகு அணுப்பிணைவு இயக்கம் துவங்கி ஒளிவீச ஆரம்பிக்கிறது. முதன்முதலாகத் தோன்றிய நட்சத்திரம் இப்படித்தான் உருவாகியது. நமது பால்வீதி காலாக்ஸியின் முதல் நட்சத்திரங்கள் கொத்துக்களாக மையத் தட்டுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருந்தவை பிறகு ஆக்டபஸ் கடல் பிராணி போல் சுருள் கரங்களாக உள்ள வால்களில் தொத்திக் கொண்டன.
மிகக் கனமான நட்சத்திரம் முடிவில் சூப்பர்நோவாவாக வெடித்துச் சிதைகிறது. ஒரு நட்சத்திரம் தனது உட்தள எரிசக்தியான ஹைடிரஜனை முழுவதும் தீர்த்த பிறகு தனது பளுவாலே தகர்ந்து சிதறுகிறது. விண்மீன் புறக் கவசமாய் உள்ள ஹைடிரஜன் தவறி கனலான உட்தளத்தில் விழும் போது அத்தகைய வெடிப்பு நேரிடுகிறது. இப்படி கட்டவிழ்த்தோடும் பிணைவு இயக்கம் நேரும் சமயத்தில் அணி அட்டவணையில் லிதிய மூலகத்துக்கு அடுத்திருக்கும் பெரும்பான்மையான மூலகங்கள் நட்சத்திரங்களில் உற்பத்தியாகின்றன. இந்த இயற்கை முறை மூலமாகத்தான் உலகத்திலும் நம் உடம்பிலும் இருக்கும் அனைத்து மூலகங்களும் உருவாகியிருக்கின்றன.
இப்படி வெடித்துச் சிதறிய ஒரு மிகப்பெரும் சூப்பர் நோவா தனது சுற்றுப்பாதையை விட்டு விலகி பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது வேகமாக மோதி இந்தப்பூமியைச் சிதற வைக்கப் போகிறது. இதைத்தான் இந்திய விஞ்ஞானி கமலி கண்டறிந்து சொன்னார்.
இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவின் கம்ப்யூட்டர்கள் மட்டுமில்லை, உலகின் அனைத்து விண்வெளி ஆய்வு மையங்களின் கம்ப்யூட்டர்களும் கமலி வால் நட்சத்திரத்தையும் அதிலிருந்து பூமியைக் காப்பாற்றும் முயற்சியிலும்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துச் சொன்ன இளம் பெண் விஞ்ஞானி கமலிக்குத்தான் மிகவும் கவலையாக இருந்தது.
"தாம் கண்டுபிடித்த வால் நட்சத்திரம் பூமியை அழிக்கப் போகிறதே. தன் பெயர் இந்த பூமிக்கே அழிவைத் தரும் ஒரு நட்சத்திரத்திற்கா? இந்த அழிவிலிருந்து பூமியைக் காப்பாற்ற முடியாதா? ஏதாவது செய்தாக வேண்டும்" என்று மிகப் பெரும் சோகத்தில் ஆழ்ந்தாள்.
கம்ப்யூட்டர் திரையில் கமலி வால் நட்சத்திரம் பூமியை நோக்கிப் பூதாகரமாக வந்து கொண்டிருந்தது.
உலகின் அனைத்து விண்வெளி ஆய்வு மையங்களின் விஞ்ஞானிகளும் கம்ப்யூட்டர் வழியே கலந்தாலோசித்தனர். கமலி வால் நட்சத்திரமிடமிருந்து இந்த பூமியைக் காப்பாற்ற பல வழிகளைத் தேடினர்.
1910ஆம் ஆண்டு ஹாலி வால் நட்சத்திரம் வந்த போதும் பூமிக்கு ஆபத்து வருமோ என்கிற அச்சம் இருந்தது. அந்த நட்சத்திரம் தோன்றிய போது அதன் வால் பகுதியினுள்ளேயே பூமி நுழைந்து வருவது போல் வந்தது. இதே போல் இந்த நட்சத்திரம் 76 வருடங்களுக்குப் பிறகு 1986ல் மீண்டும் தோன்றிய போதும் ஆபத்து வரும் என்கிற அச்சம் இருந்தது. ஆனால் அதனால் எந்தப் பாதிப்புமில்லை.
சூப்பர் நோவாவாக உடைத்துச் சிதறிய பகுதியின் பெரும் பகுதியான கமலி வால் நட்சத்திரம் அப்படியில்லை. அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகி பூமியின் சுற்றுப்பாதையை நோக்கி வருகிறது. இது பூமியில் மோதும் என்பதில் சந்தேகமுமில்லை என்றுதான் அனைத்து விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்தனர்.
விண்கற்களாக இருந்தால் ராக்கெட் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அதை சிதற வைத்து கடலில் விழ வைக்கலாம். ஆனால் பூமியின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் இந்த வால் நட்சத்திரத்தை அப்படி செய்யமுடியாதே. அதுவும் குறுகிய காலத்திற்குள் என்ன செய்வது?
விஞ்ஞானிகள் அனைவருக்கும் இது பெரும் கவலையாக இருந்தது.
உலகம் முழுவதும் இருக்கும் இந்தக் கவலை, கமலி வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த கமலியின் வீட்டிலும் இருக்கத்தான் செய்தது.
விண்வெளி ஆய்வு மையத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த கமலியிடம்,
"ஏம்மா கமலி, நீ கண்டுபிடிச்ச வால் நட்சத்திரத்திடமிருந்து இந்தப் பூமியைக் காப்பாற்ற ஏதாவது வழியில்லையா?" என்றார் கமலியின் அம்மா.
"அம்மா, இந்த வால் நட்சத்திரம் அதன் பாதையிலிருந்து விலகி பூமியின் சுற்றுப் பாதைக்கு வந்து கொண்டிருக்கிறது. பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்து விட்ட இந்த நட்சத்திரம் பூமியின் மேல் மோதாமல் தடுத்து விட்டால் போதும். ஆபத்து இருக்காது."
"உலகம் இரண்டாயிரத்தில் அழியப் போகுதுன்னு சொல்லிக் கிட்டிருந்தாங்க. அப்ப ஒண்ணும் ஆகல ஒன்பது வருசம் கழிச்சு உண்மையிலேயே அழியற காலம் வந்துடுச்சே..." என்றார் கமலியின் அப்பா.
"நமக்கென்னங்க வாழ்ந்து முடிச்சுட்டோம்...இனி என்ன ஆனாலென்ன? ஆனால் நம்ப பிள்ளைங்களும், பேரன் பேத்திகளும் சேர்ந்து பாதியிலேயே அழியப் போறதை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு" என்று கமலியின் அம்மாவும் அவருடன் சேர்ந்து வருத்தப்பட்டார்.
"ஒரு வேளை இவங்க போட்ட காலண்டர் கணக்கு தப்பாயிருக்குமோ? உண்மையா இதுதான் இரண்டாயிரம் வருசம்னு நினைக்கிறேன்."
"இருக்குமுங்க" என்று அவரின் பேச்சுக்கு ஆமாம் போட்டார் கமலியின் அம்மா.
"அம்மா, நீங்களும் அப்பாவும் போடுறதுதான் தப்புக் கணக்கு. இது விண்வெளியில் நிகழ்ந்த மாற்றத்தால ஏற்பட்டது. நட்சத்திரங்கள் சூப்பர் நோவாக மாறி வெடித்துச் சிதறும் போது அது அண்டவெளியிலேயே தனித்தனியாக உலா வரும். இதில் மிகப்பெரும் சூப்பர் நோவா ஒன்று வெடித்ததால் உண்டான நட்சத்திரம்தான் பாதை மாறி பூமியை நோக்கி வருகிறது..."
"எது எப்படியோம்மா... இந்த உலகம் அழியும்னு சொன்னது சரியாயிருக்குதுல்ல..." என்றார் கமலியின் அப்பா.
"உலகம் தண்ணீராலதான் அழியும்னு புராணத்திலே சொல்லியிருக்காங்க... இப்போ அப்படி நடக்கப் போறதில்லையே"
"கமலி, நீ சொல்றபடி வால் நட்சத்திரம் இந்த பூமியிலே வந்து மோதுறதால என்ன ஆகும்?. பூமியின் இரண்டு பங்குள்ள தண்ணீர் மேலே எழும்பி மீதியுள்ள நிலப்பரப்பை அழித்து விடும். புராணத்திலே சரியாத்தான் சொல்லியிருக்காங்க..."
"எப்படியோ அழிவு உறுதியாயிட்டுது. காப்பாற்ற வழி தெரியாமல்தான் நாங்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கோம்."
"நடக்கப் போவது எதையும் மாற்ற முடியாது. இறைவனின் செயலை நீ மட்டுமில்லை...உங்களின் எந்த விஞ்ஞானமும் தடுக்க முடியாது."
கமலியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அவளுடைய எண்ணம் முழுவதும் இந்த வால் நட்சத்திரத்தின் தாக்குதலைத் தடுப்பதிலேயே இருந்தது. அவள் பேசாமல் கிளம்பிச் சென்றாள்.
இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு வரும் பாதிப்பு குழந்தைகளின் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட "நாம் எல்லோரும் இன்னும் கொஞ்ச நாட்களில் கமலி நட்சத்திரம் இந்த உலகத்தில் வந்து மோதப் போகுதாம். நாம் எல்லோருமே சாகப் போகிறோமாம்." என்றன.
இறப்பு என்பதைக் கூட சாதாரணமாக நினைக்கும் குழந்தைகளுக்கு அழிவின் பயம் இல்லாவிட்டாலும் அது பற்றிய விசயம் தெரிந்திருந்தது.
வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அழிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இப்படியே நாட்கள் கடந்து போய் விட்டது.
இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன.
விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.
கமலி வால் நட்சத்திரம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்தவுடன் அதை ராக்கெட்டுகள் மூலம் மோதி வெடிக்கச் செய்து அதை ஓரளவு சிதைத்து விடுவது இதன் மூலம் பூமிக்கு வரும் ஆபத்தைக் குறைக்க முடியுமா? என்று முயற்சித்துப் பார்க்கவும், சில நாடுகளில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்குத் தயாராக உள்ள ராக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கமலி வால் நட்சத்திரம் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து பூமியை நோக்கி வரத்துவங்கியது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலிருந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளை வெடிகுண்டு நிரப்பி கமலி வால் நட்சத்திரத்தை நோக்கி அனுப்பினர்.
அவை பூமியை விட்டு வேகமாகக் கிளம்பிச் சென்றது. கமலி வால் நட்சத்திரத்தின் மையப்பகுதிக்குச் சென்று மோதி வெடித்துச் சிதறியது.
வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியில் பெரும் தீப்பிளம்பு தோன்றி எரிந்தது. வால் நட்சத்திரம் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைப் போல் சிறிது கூட உடைந்து போகவில்லை. வால் நட்சத்திரத்தில் சிறு பள்ளம் மட்டும்தான் தோன்றியிருந்தது.
விஞ்ஞானிகளும் விடாமல் தங்கள் முயற்சியைத் தொடர்ந்தனர்.
அவர்கள் அனுப்பிய அனைத்து ராக்கெட்டுகளும் சிறு சிறு பள்ளத்தைத்தான் ஏற்படுத்தியது. விஞ்ஞானிகளுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இனி என்ன செய்வது என்கிற கவலையும் அவர்களுக்குள் படர்ந்தது.
அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ கால அவகாசம் இல்லாததால் வருவதை எதிர்கொள்வது என்கிற முடிவைத்தான் எடுக்க முடிந்தது.
அனைத்து விண்வெளி மையங்களும் வால் நட்சத்திரத்தின் வரவைக் கம்ப்யூட்டர் திரையில் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், சர்ச்சுகளில் சிறப்புப் பிரார்த்தனைகள், மசூதிகளில் தொழுகைகள் என்று அனைத்து ஆலயங்களிலும் மக்கள் வெள்ளம் நிரம்பிக் கிடக்க வேண்டுதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருந்தது.
தங்களால் முடியாத நிலையில் இறைவன் ஒருவனால்தான் தங்களைக் காப்பாற்ற முடியும் என்று அனைவரும் நம்புகின்றனர்.
தற்போது விஞ்ஞானிகளும் அந்த முடிவைத்தான் எடுத்தனர்.
பூமியின் சுற்றுப்பாதையில் வந்த கமலி நட்சத்திரம் இன்னும் சில மணிகளில் அது பூமியுடன் மோதப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்த விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் அனைவருக்கும் அதிர்ச்சி. அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.
அதன் வேகம் குறைந்து அதுவும் பூமியைப் போல் தன்னைத்தானே சுழற்றிக் கொள்ளத் துவங்கியது.
பூமிக்கு நேர் எதிரே இன்னொரு சிறு பூமியைப் போல் கமலியும் அதே வட்டப் பாதையில் வலம் வரத்துவங்கியது.
விஞ்ஞானிகள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி. கூடவே இது எப்படி? என்கிறதான வியப்பு.
அந்த வால் நட்சத்திரத்திலும் பூமியைப் போல் தண்ணீர் இருந்தது. அப்படியானால் இந்த வால் நட்சத்திரத்திலும் உயிரினங்கள் வசிக்க முடியும். விஞ்ஞானிகள் அனைவருக்கும் இது கூடுதல் மகிழ்ச்சி.
தங்கள் செயல்கள் தோல்வியடைந்தாலும் இந்த பூமிக்கு எந்த பாதிப்புமில்லாமல் பூமிக்குத் துணையாக இன்னொரு கோள் கிடைத்து விட்டது.
கமலி வால் நட்சத்திரத்தைக் கண்டறிந்த விஞ்ஞானி கமலிக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சி.
தனது பெயரில் ஆபத்தாய் வந்த நட்சத்திரம் பூமிக்குத் துணையாக கமலியாக வலம் வருகிறது.
ஆபத்து விலகி விட்டது என்று தெரிந்ததும் மக்களின் அனைத்துச் செயல்பாடுகளும் மீண்டும் தொடங்கி விட்டது.
இந்த பூமி காப்பாற்றப்பட்டு கமலி துணைக் கோளாக மாறியது தங்கள் வழிபாட்டால்தான் என்று ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கொள்கைகளையும், செயல்களையும் எடுத்துச் சொல்லி மீண்டும் வலியுறுத்தத் துவங்கி விட்டனர்.
பணம் ஒன்றுதான் வாழ்க்கை அதைத் தனக்குப் பின்னால் வரும் சந்ததியினர் அனைவருக்கும் தேடும் மனிதர்களின் முயற்சிகளும், பணத்தின் மதிப்பும் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி விட்டன.
நிறம், இனம் என்கிற சில மனிதத்தன்மையிலான வேறுபாடுகளும், சாதி, மதம் என்கிற பார்வையிலான வேறுபாடுகளும் மீண்டும் தொடங்கி விட்டது.
இவையனைத்தும் இந்த பூமியில் மட்டுமில்லாமல் இனி பூமியின் துணையான கமலியிலும் தொடரும்.