இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு... வாசல் முழுதும் எக்கச்சக்கப் பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகை போல...
தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங் கூட வந்திருந்தார்கள்...
இரண்டு தகன மேடைகளும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க...
அவரவர் உறவினர்கள் அருகருகே... தாத்தா வேர்வை மழையில் நனைந்திருந்தார்... தகன மேடைக்குச் சற்றுத்தள்ளி... அடுத்தடுத்த இரண்டு குழிகள்...
தாத்தாவின் மகன் ஒரு குழியிலும், பேரன் ஒரு குழியிலும் 'சாங்கியங்களை' முடித்துக் கொண்டிருந்தனர்...
வியப்பாக இருந்த குமாரின் முகத்தை பார்த்து, வியர்வையை துடைத்தப்படி தாத்தா சிறு புன்னகை மட்டும் செய்யச் சற்றுத் தள்ளி நின்றான் குமார்.
நேரம் ஆகஆகக் கூட்டம் குறைய தொடங்கியது.
அப்பொழுது "என்ன கொமாரு இங்க நிக்கிற?" என்ற குரலை கேட்டு திரும்பியவனை நோக்கி ஊர்த்தலைவர் வர...
"இங்க எதுக்குங்க தலைவரே வருவாங்க?" என்று குறும்பு சிரிப்போட கேக்க...
"ஹா ஹா ஹா... அதானே... செத்தவனக் கொண்டுவந்து போடத்தானே வருவோம்... சரிசரி... கொமாரே... கோடாங்கி அம்மா பொணத்த எரிச்சிப்புட்டுக் கணக்கு பாக்கக் கிளம்புறோம்" என்று சொல்லியபடி, சாங்கிய மண்டபத்தைப் பார்த்துத் தலைவர் போக... அவர் பின்னாடியே பறை அடிச்சவர், சங்கு ஊதி, இன்னும் சிலர் போனார்கள்.
தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனும் கூடக் கிளம்பி விட்டார்கள். நன்றாக இருட்டி விட்டது.
தாந்தட்டி தாத்தாவும் பானையிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, "வா தம்பி கொமாரு" என அழைக்க...
"என்ன தாத்தா இன்னைக்கிச் செம்ம வேட்டைப் போல" எனக் குமார் கேட்டபடி நடந்து, எதிலேயோ இடறிப்போய் விழப்போக, "ஆத்தாடி.. கொமாரு" னு பதறிப்போய் தாத்தா அவனைத் தாங்கி பிடிக்க... கீழே பார்த்தால் ஓலை பாடையில் ஒரு பிணம்.
"என்னங்க தாத்தா.. இங்க ஒரு சடலம் இருக்கு? இதுக்கு யாரும் சொந்தக்காரங்க இல்லையா?"
"தம்பி அது யாருன்னு தெரியுதா? நல்லா உத்துப்பாருங்க" என்று சொல்லியபடியே தாத்தா தீப்பந்தத்தை எடுத்துக்காட்ட...
"இவர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... ஆஆஆஆங்... வட்டிக்கட ஆனந்தன் தானே இவரு...?" குமார் கேட்க
"அநியாய வட்டி ஆனந்தன்னு சொல்லு தம்பி... இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா... கொஞ்சங்கூட இரக்கமே இல்லாதவன்... வட்டிக்கு வட்டிப்போட்டு, அதுபோட்ட குட்டிக்கும் வட்டிப்போட்டு எத்தன குடும்பங்கள நடுத்தெருவுக்கு தள்ளுனான் தெரியுமா..."
"அப்படியா தாத்தா... இவருக்குக் கொழந்தைங்க இல்லைல...?"
"ஆமாந்தம்பி... இல்லாத வரைக்கும் சந்தோசம் தம்பி... இல்லைனா இவன் செஞ்ச பாவம் பூரா, அதுங்க தலைல விழுந்திருக்கும்... இவனோட சம்சாரம் நல்ல குணவதி... பாவி அடிச்சி அடிச்சேப் பைத்தியமாக்கிட்டான்... ஊருக்கு ஒரு கூத்தியா வச்சிருந்தும் ஒன்னுக்குக்கூட புள்ளைங்களே இல்லை தம்பி...
உங்க தெருவுக்கு ரெண்டு தெரு தள்ளி மேற்கு தெரு இருக்கே அதுல ஒரு பெரிய மாடி வீடு இருக்கே தெரியுமா?"
"ஆமாங்க தாத்தா... 'ஆனந்தம் இல்லம்'னு போட்டிருக்குமே அதானே?"
"ம்ம்ம்... அதேதான்... அது ஒன்னும் இவன் சொந்தமா கட்டுன வீடு இல்ல... ராஜலிங்கம் னு ஒரு வாத்தியார் இருந்தாரு அவரோட வீடு... ரொம்ப தங்கமான ஆளு..."
"ஆமங்க தாத்தா நான் கூட கேள்விப்பட்டுருக்கேன்... எங்கப் பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியரா இருந்தார்னு போர்டுல எழுதி வச்சிருக்காங்க" குமார் சொல்ல...
"அவரே தாம்பா... இவன்கிட்ட வட்டிக்குக் கடன் வாங்குனாரு... மாசாமாசம் வட்டிய ஒழுங்காத்தான் கொடுத்துட்டு வந்தாரு... ஒரு நாளு அசல் திருப்பிக் கொடுக்க, தன்னோட ஊர்ல இருந்த சொத்த வித்துட்டு வந்து பணத்த வீட்ல வச்சிருந்தாரு... அதக் கேள்விபட்ட இவன் கூட்டாளிகளோட போயி அவர் வீட்ல வச்சிருந்த பணத்தை திருடியிருக்கான்... அத வாத்தியாரோட சம்சாரம் பாத்துட்டாங்க, அவங்கள கழுத்தை நெரிச்சிக் கொன்னுபுட்டான். அந்த நேரத்துக்கு வாத்தியாரோட பையன் வர அவனையும் கத்தியால குத்தி கொலை செஞ்சிருக்கான். இதப் பார்த்த அவங்க வீட்ல வேலை செஞ்சவன் ஓடிப்போயி போலீஸ்ட்ட சொல்ல... இவனக் கைது செய்ய வந்தாங்க... கூட்டாளிகள்ல ஒருத்தன மாட்ட விட்டுட்டு இவன் தப்பிச்சுட்டான் தம்பி... அப்பறமா... வெளியே போயிட்டு வந்த வாத்தியாரு, பொண்டாட்டி, புள்ளையும் செத்துக் கிடந்தத பாத்துட்டு நெஞ்சு வலி வந்து அவரும் செத்துபோய்ட்டாரு... அந்த மூனு பேரையும் அதோ அந்த எட்டி மரத்து பக்கத்துல தான் புதைச்சேன் தம்பி... ம்ம்ம்.." என்று பெருமூச்சு விட்டார் தாத்தா.
குமார், தாத்தாவின் முகத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
"ஊர்ல இருக்குறவங்க எல்லாரோடைய வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டான். கடைசியில புத்து நோய் வந்து முத்திப்போயி கூட இருந்த கூட்டாளிகளும் கைவிட்டுட்டுப் போயிட்டாங்க. ஒரு சொந்த பந்தமும் கிடையாது... இப்ப அனாதையாச் செத்துப்போயி... ஊர்க்காரப் பெரியவங்க தூக்கி வந்துப் போட்டுட்டு செய்யிறத செய்யினு பணத்தக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க... இதாந்தம்பி இவனோட வாழ்க்க முடிவு" என்று சொல்லியபடி மூன்றாவது தகன மேடையில் விறகு கட்டைகளை அடுக்க, கூட குமாரும் உதவியபடி...
கடைசியில் ஆனந்தனின் சடலத்தைத் தாத்தா, ஒரு குழந்தையைப் போல தூக்க, உதவப் போன குமாரை "வேண்டாம் தம்பி... நானே தூக்கி வச்சுடுறேன்" என்று விறகுகள் மீது வரட்டிகளை அடுக்கி, மேலேயும் பக்கவாட்டிலும் களிமண் போட்டு மூடி ஆங்காங்கே சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தார்.
"யேன் தாத்தா இவருக்கு மட்டும் இப்படிச் செய்யுறீங்க" என்று குமார் கேட்க.
"தம்பி... இவன் புத்துநோய்ல செத்தவன்... அப்படியே விறகு மட்டும் வச்சு எரிச்சோம்னா சாகாத விசக் கிருமிகள் காத்துல கலந்து போயிடும். பக்கத்துல ஏதாவது உடம்பு முடியாத ஆளுக இருந்தாங்கனா அவங்களத் தாக்கிடும்... அதான் களிமண்ணுல ஊமத்தம், ஆமணக்கு இலைகள குளைச்சி பூசிட்டு எரிச்சோம்னா எந்த விசகிருமிகளும் வெளியேறாது" என்று சொல்லியபடி ஓட்டைகள் வழியே கற்பூரங்களை கொளுத்திப்போட... சிறிது நேரத்தில் அனைத்து ஒட்டைகள் வழியாகவும் புகை வர உள்ளே பிணம் கொளுந்துவிட்டு எரியும் சப்தம் கேட்டது.
"அநியாய வட்டி ஆனந்தன் கொஞ்ச நேரத்துல சாம்பலாயிடுவான்... நாம அப்படி போய்டுவோம் தம்பி" என்று சொல்லியபடி தாத்தாவும், குமாரும் வெட்டியான் தாத்தா குடிசை நோக்கி நடந்தார்கள்.
தனியாக எரிந்து கொண்டிருக்கிறது அநியாய வட்டி ஆனந்தனின் பிணம்.