இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஒரு இளைஞனின் கதை

நௌஷாத் கான். லி


உப்பிட்டவரை உள்ளளவும் நினை, அன்னமிட்ட கைகளைக் குறைகூறாதே, தின்ன வீட்டுக்குத் துரோகம் செய்யாதே என்று உணவைப் பற்றிப் பல பழமொழிகள் உள்ளன. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் பசிக்கு அன்னமிட்ட கைகளைத்தான் குறை சொல்லக்கூடாது.

அதே சமயத்தில் காசை வாங்கிக் கொண்டு ருசி இல்லாத, தரம் குறைந்த உணவைத் தரக் கூடியவர்களைத் திட்டக்கூடாது, குறை கூறக்கூடாது என்று எந்தச் சட்டமும், சாஸ்திரங்களும் சொல்லவில்லை...

சாப்பாடு, சரி இல்லைன்னா கடையை மாத்துன்னு நீங்க சொல்லலாம், ஆனாஅந்தக் கடைய விட்டா வேறு கதி இல்லைன்னா என்ன பண்ணமுடியும்?

அயல்நாட்டிற்குப் பிழைக்க வந்து மனசால் செத்துப் போன ஒரு இளைஞனின் கதை…

வீட்டிற்கு வாசு ஒரே பிள்ளை. அம்மா தனலட்சுமி ஹவுஸ்ஒய்ப், அப்பா செந்தில்நாதன் ஒரு பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார். பையனை ஏதோ அவங்க சக்திக்கு முடிஞ்சவரை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சாங்க. அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அப்பா சீக்குல படுத்ததாலே கடையக் கவனிக்க முடியல. குடும்பத் தேவைக்காக ஒருவர் குடும்பத்துக்காகச் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது… எத்தனை காலத்துக்குத்தான் குடும்பம் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க முடியும் ... அதனால் வேறு வழியில்லாமல் தனது ஒரே மகன் வாசுவைப் பஞ்சம் பிழைக்க அயல்நாட்டுக்கு அனுப்பினார்…

வாசுவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம் என்றாலும் வாசு செல்வந்தன் பிள்ளை போல் வளர்க்கப்பட்டான்… தனிஅறை, இரண்டுபேன், தனிடிவி, மியூசிக் பிளேயர், ஐபேட், செல்போன், ரீடிங் டேபிள் என்று அனைத்து வசதிகளையும் அவர் தந்தை செய்து கொடுத்திருந்தார்.

பெரும்பாலான வேலைகளைச் செந்தில்நாதனே செய்து முடிப்பார் எல்லாரும் பேச்சுக்குதான் சொல்வார்கள், உன்னைப் பாலூட்டி, தேனூட்டி வளர்த்தேன் என்று, ஆனால் செந்தில்நாதன் தன் மகனைச் சீராட்டி, பாராட்டி, பாலூட்டி, தேனூட்டி வளர்த்தார். அவன் மீது ஒரு தூசுபடாமல் கண்ணின் இமைபோல் பாதுகாத்துப் பாசத்துடன் வளர்த்தனர்… உண்ண ருசிகரமான சத்தான உணவு, உடுத்த விதவிதமான ஆடைகள் என்று தன் சம்பாத்தியத்தில் பாதியைத் தன் மகனுக்காகச் செலவு செய்தார். மொத்தத்தில் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக வாசு வளர்ந்தான்.

வாசுவுக்கு கோழி,கொக்கு, காடை, இறால் என்றால் ரொம்ப அலாதிப் பிரியம்… ஆனால் தனலட்சுமி அதுவெல்லாம் செஞ்சு கொடுக்க மாட்டாள்… ஏன்னா அவளுக்கு அந்தப் பிராணிகளைச் சுத்தம் செய்யவும் தெரியாது, எப்படிச் செய்யணும்னு தெரியாது... ஆனா செந்தில்நாதன் தன் மகனுக்காகச் சுத்தம் செய்து சரியான மசாலாக்களைப் போட்டுப் பக்குவமாகச் சமைத்துத் தருவார்… இப்படி வாசுவுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் செந்தில்நாதன்…


வாசுவுக்கு எல்லாமே அவன் அப்பாதான்… செந்தில்நாதனுக்கு எல்லாமும் தன் பையன்தான்… செந்தில்நாதனும் வாசுவும் அப்பா பிள்ளை மாதிரியே இருக்க மாட்டாங்க. ஒரு மாமன் மச்சான் போல, நண்பர்கள், போல கலகலன்னு சந்தோசமா மனசவிட்டு எல்லாவற்றையும் பற்றிப் பேசுவாங்க. தோளுக்கு மிஞ்சினா பெத்தப் பிள்ளையத் தோழனா பார்க்கணும்னு எல்லோரும் சொல்லுவாங்க ஆனா எந்த அப்பாவும் செய்யமாட்டாங்க ஆனா மத்த அப்பாக்களைப் போலச் செந்தில்நாதன் இல்லை… பெத்தபுள்ள தோளுக்கு மிஞ்சினா தோழன் என்கிறதை வாக்கா, வாக்கியமா மட்டும் சொல்லாம வாழ்கின்ற வாழ்க்கையில வாழ்ந்து காட்டினார்.

பையனைச் சந்தோசமா வாழ வைக்கணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டார். ஆனா, அதற்கு அவர் பொருளாதாரம் போதியதாய் இல்லை. பையனுக்கு வருங்காலத்துக்கு வேண்டி நிறைய செய்யணும்னு ஆசைப்பட்டார். இந்த நேரத்துல பார்த்து சீக்குலயும் படுத்துட்டார். கடன் வேற நிறையவே இருந்தது. வீட்டுலோன், பெட்டிகடைலோன், சீட்டுப் பணம் என்று எல்லாமும் அந்தக் குடும்பத்தின் மீது விழுந்தது. செந்தில்நாதன் படுத்த படுக்கையானதால் குடும்பப் பொறுப்பு வாசுவின் மீது விழுந்தது. தன் குடும்பம் கடன்துயரில் இருந்து மீண்டு வர அயல்தேசம் வந்தடைந்தான்…

ஏஜென்ட் மூலம் அந்த துபாய் வேலை கிடைத்து இருந்தது… ஒரு பாலைவனத்துக்கு அருகே உள்ள சுமார் 150பேர் வேலை செய்யக் கூடிய கம்பெனி அது.12 மணி நேர வேலை. மாதத்திற்கு ஒரு விடுமுறை, கம்பெனி கேம்ப் அக்காம்ஸ்டேஷன். விடுமுறை நாளில் மட்டுமே கேம்ப்பை விட்டு வெளிவரமுடியும் ஆனால் அந்தப் பகுதியை விட்டு வெளிவருவதற்கேப் பாதிநாள் போய்விடும். இதனால், மாதத்திற்கு ஒருநாள் கிடைக்கும் விடுமுறைக்குக் கூட உடல் அசதியால் வெளிவரப் பிடிக்காது… ஒரு பக்கம் உடல்அசதி மறுபக்கம் மனசு சிறைப்பறவை போல் அவதிப்பட்டது. நாங்கள் வேலைபார்ப்பது எரிவாயு உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனம். அதனால் சமைப்பதற்குக் கூட கேம்ப்பில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கம்பெனி சமைப்பதற்கு எந்தவித வசதியும் செய்து தருவதற்குத் தயாராக இல்லை. சாப்பாடு ஹோட்டலில்தான்… அந்தப் பகுதியில் ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே இருந்தது.

அந்த ஹோட்டலை விட்டால் வேறு எங்கும் சாப்பிட ஹோட்டல் எதுவுமில்லை. அந்த ஹோட்டலில் காலையில் ரொட்டியும், மதியம் மோட்டா சோறும், இரவு காய்ந்து போன குபூஸும்தான் கிடைக்கும்...

நம் நாட்டைப் போல் வாய்க்கு ருசியான சாம்பார், ரசம் எல்லாம் அங்கு கிடைக்காது… சப்ஜி, தால், பாலக் என்று வாய்க்கு நுழையாத, ருசி இல்லாத வெளிநாட்டு முறையில் சமைக்கப்பட்ட உணவே கிடைத்தது.அந்தச் சாப்பாட்டை விட்டாலும் வேறு சாப்பாடு கிடைக்க வாய்ப்பில்லை, பசித்தால் புலி கூடப் புல்லைத் திண்ணுமாம்… முதல் இரண்டு மாதம் ஏனோதானோ என்று சரியாகச் சாப்பிடாமல் ஏதோ மனதின் தைரியத்தில் நாட்களை ஓட்டிவிட்டேன், அதன்பின் வந்த மாதங்களில் வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு அடையத் தொடங்கியது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ்க்கை கப்பல் ஓட இந்த நரகத்தில் போராடித்தான் ஆக வேண்டும்... ஆனாலும் அப்பப்ப ஊர் நினைவுகளில் மூழ்கி மனசு சந்தோசப்பட்டுக் கொள்ளும். ஆனால், சில சமயங்களில் ஊரில் எப்படி இருந்தோம், இங்கு இப்படி வாழ்கிறோமோ என எண்ணி மனசு கனத்துப் போனதும் உண்டு.

ஊர்ல ராஜா போல தனி ரூம், ரெண்டுபேன், டிவி, ரேடியோ என ஜம்முன்னு வாழ்ந்தவன். என் ரூம்ல ஆறு பேரு வரைக்கும் தூங்கலாம். இருந்தாலும் அப்பா நான் டிஸ்டர்ப் இல்லாம தூங்கணும்கிறதுக்காகப் பெரிய வீடா வாடகைக்கு எடுத்து எனக்குத் தனிரூமு கொடுத்தாரு..ஆனா இப்ப இங்க நான் இருக்குற குருவிக் கூடுபோல இருக்குற கம்பெனி கேம்ப்ல ரெண்டு அல்லது மூணு பேருதான் தங்கக் கூடிய இடத்துல அடுக்குக் கட்டில் போட்டு ஒரு சின்ன இடத்துல எட்டு பேரு அல்லது பத்து பேரைத் தங்கவச்சு இருக்கானுங்க...ரூமுக்கு ஒரு புதிய ஆளு நுழைஞ்சா ஒரு கெட்ட வாசனை அடிக்கும். ஆனா அந்த நாத்தத்துல இருந்து, இருந்து தங்கி, தங்கி அது பெருசா என்னைப் பாதிக்கலை… ஒரு காலத்துல மூட்டபூச்சினா என்னன்னுனே எனக்குத் தெரியாது. ஆனா இப்பவெல்லாம் மூட்டபூச்சி கடி இல்லாம தூங்கினதா சரித்திரமே இல்லாமப் போச்சு… டெய்லி காலைல எந்திரிச்சா பாத்ரூமுக்குக் கியூவுல நிக்கணும், ஒரு அவசரத்துக்குக் கூடப் பட்டுன்னு பாத்ரூம் போக முடியாது. எல்லாமே வேகவேகமாக நடக்கணும். பாத்ரூம் போனா பத்து நிமிஷம்தான், அதுக்கு மேல உள்ளே இருந்தா கியூவுல நிக்குற அடுத்தவன் முட்டுவான்… ரூம்ல வாய் இருந்தும் ஊமையாகத்தான் இருக்கணும். அவனவன் போன்ல சாங்கைப் போட்டுவிட்டு ஹெட்போனை சொருகிவிட்டானா அவ்வளவுதான்…

அவனவன், அவனவன் வேலையைப் பார்ப்பான். இந்த நாட்டில் வருவதேப் பணம் சம்பாதிக்கத்தான். அதனால் மனிதர்கள் பணத்தின் பின் ஓடும் மிருங்கங்களாக இருந்தனர். ன்றாகப் பணி செய்தும் யார் மீதும் நம்நாட்டைப் போல் எந்தவித நட்பும் தோன்றவில்லை… நட்பை விடுங்கள் ஒரு ஆத்திர அவசரத்துக்கு எவனும் வரமாட்டான். ஒரு உடம்பு சரி இல்லைன்னாலும் நாம்மதான் பார்த்துக்கணும். ஒரு ஆறுதலான வார்த்தை கூட எவன்கிட்ட இருந்தும் வராது. அதிகமாப் பேசுன்னா ஏதாவது உதவி கேட்போம்னு கூடப் பணி செய்யுற ஆளுங்களோட நினைப்பு… எத்தனை கஷ்டப்பட்டாலும், துயரப்பட்டாலும் அப்பாவுக்கு வாரவாரம் வெள்ளிக்கிழமை போன் செய்துவிடுவேன். அப்பாவிடம் பேசும்போது குரல் திக்கும், பேசுவதற்கு வார்த்தைகள் அதிகம் இருந்தும் பேச முடியாமல் தவிப்பேன்… ஒரு வழியாக என் கஷ்டங்களை அப்பாவுக்குத் தெரியவிடாமல் பேசிவிடுவேன்… பேசி முடித்ததும் கொஞ்சம் மனசுக்கு நிறைவாக இருக்கும். அப்பாவின் குரலைக் கேட்கும் போது, எத்தனை வலிகள் இருந்தாலும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்.

அப்பாவுக்கு உடம்பு தளர்ந்து இருந்தாலும் அவர் மனசுக்குத் தரும் ஆறுதல் இழந்து போன என் இளமைக்குப் புத்துணர்ச்சி தரும். அம்மாவிடம் அதிகம் பேசமாட்டேன் எப்பப் பார்த்தாலும் குடும்பப் பிரச்சனை, கடன் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனைன்னு சொல்லி வாடிப் போய் இருக்கும் என் மனதை மேலும் காயப்படுத்தி விடுவாள்…அம்மா பாசக்காரி, ஆனால் எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது… சூதுவாது தெரியாத இந்த உலகத்தை இன்னமும் அறியாத ஐம்பது வயது குழந்தை, மனசுல ஆயிரம் பாசம், நேசம் வச்சிருப்பா ஆனா இந்தப் பாழாப்போன பணத்தாலே என் மனசக் காயப்படுத்தி விடுவா. எத்தனை கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நின்று சிங்கம் போல இருந்தவர் என் அப்பா… அவரிடம் பேசும்போது எனக்கு வரும் தெம்பு, வைராக்கியம், முயற்சி, நம்பிக்கை எல்லாம்…!

மற்றவர்களிடம் பேசும்போது அந்த உணர்வெல்லாம் எனக்குக் கிடைப்பதில்லை. அப்பா மட்டும் என்கூட இருந்தா இந்த உலகத்தையே என் காலடியில் கொண்டுவரமுடியும்… எல்லார்க்கும் அம்மா பத்துமாசம் வயித்துல இருந்து சுமந்தாங்கன்னா எங்க அப்பா என்னை இருபத்தி அஞ்சு வருஷம் அவரு மனசுல இருந்து சுமந்தாரு… நான் என்றால் அது நான் இல்லை… நான் யாருன்னா என் அப்பாவோட நகல், பிரதிபலிப்பு, நிழல் என்று கூட சொல்லலாம் .ஏன் என்றால் எனக்கு எல்லாமுமாக இருந்தவர் என் அப்பாதான்… எனக்குப் பிடித்தவைகள் எல்லாம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவர்... எனக்குத் தேவையானதைப் பார்த்து, பார்த்து செய்தவர்… எல்லாரும் சொல்வாங்க மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு… எனக்கு எல்லாமும் என் அப்பாதான்… என் பிதாவுக்கு அப்புறம்தான் அந்த மாதா தெய்வம் எல்லாம்… நான் துபாயில் எந்த விஷயம் செஞ்சாலும் என் அப்பாவின் நினைவுகளை ஒவ்வொரு விஷயமும் ஞாபகப்படுத்தும்…

ஒருநாள் கம்பெனி அருகே உள்ள அந்த ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டேன், மிகவும் ஆறிப்போய் இருந்தது. அந்தச் சிக்கன் துண்டு. அந்தச் சிக்கன் துண்டைச் சிறிது எடுத்தேன். கொஞ்சம் பிங்க் கலரில் இருந்தது… நிறம் மாறி இருந்தும் வேறு வழி இல்லாமல் உண்டேன். ஆனால் என்னையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது… காரணம், எங்க அப்பா எனக்காக விடியற்காலை அஞ்சு மணிக்கே எழுந்து சந்தைக்குப் போய் உயிரோடு இருக்கிற விடக் கோழியை வாங்கி வந்து காலை12 மணிக்குள்ளே எல்லா மசாலாவும் இட்டு அதைப் பக்குவமா சமைத்து அது அடுப்படியில இருக்கிற சூட்டோட இருக்கிறப்பவே எனக்கு எடுத்து வந்து அவர் கையாலேயே ஊட்டிவிடுவார்… அப்படி வாய்க்கு ருசியாச் சாப்பாடு போட்டு வளர்த்த அப்பா நான் இப்படி சாப்பிடுறது தெரிஞ்சா நிச்சயம் மனசு உடைஞ்சு போயிடுவாரு, அதனாலேதான் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் என் அப்பாவுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் தினம்தினம் உருகும் மெழுகுவர்த்தியாய் என்னை உருக்கிக் கொண்டு என் குடும்பத்துக்கு வெளிச்சம் தர ஆசைப்பட்டேன். மாசமாசம் தங்குற இடம், சாப்பாடு போக ஒரு நையா பைசா கூட எனக்குன்னு எடுத்து வைக்காம குடும்பத்துக்காக அனுப்பி வைத்தேன்…

வாழ்க்கை நல்லபடியாகப் போய்க் கொண்டு இருந்தது… என் கடன் முடிவடையும் தருணம், அப்பா சொன்னார் “கண்ணா வாசு நீ மீண்டும் அந்த ஊர்ல எங்கள எல்லாம் விட்டிட்டுத் தனியா கஷ்டப்பட வேண்டாம். நீ சீக்கிரம் வந்திடு, உனக்குப் பொண்ணு பாக்குறேன், உனக்குப் பிடிச்சிச்சுனா கல்யாணம் வச்சுக்கலாம். அதன்பிறகு நீ ஊரோட வந்து ஏதாவது பிழைப்பைப் பாரு. நீ எங்களோட இருந்தாத்தான் எங்களுக்கு சந்தோசம்”ன்னு சொன்னார்.

அந்த வாரம் நான் பெற்ற இன்பத்தை இந்த உலகில் யாரும் பெற்று இருக்க மாட்டார்கள். என் மனம் வண்ணத்துப்பூச்சி போல ஆயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் எல்லையில்லா மகிழ்ச்சியில் பறந்தது… அப்பா, அம்மாவோடு ஊரில் காரில் போவது போலவும், வருங்கால மனைவி யாரென்று தெரியாத போது, முகம் தெரியாத என் கற்பனை மனைவியோடு படம் பார்க்க சினிமா தியேட்டர் போவது போலவும், அவளோடு சின்னச்சின்ன சேட்டைகள், குறும்புகள் செய்து செல்லத் திட்டுகள் வாங்குவது போலவும், இந்த உலகைப் பார்க்காத என் குழந்தையை நான் ட்ரோலியில் வைத்துக் கடற்கரையோரம் வாக்கிங் கொண்டு செல்வது போலவும், ஆயிரம் கனவுகள், கற்பனைகள்…

எத்தனை சந்தோசம், மகிழ்ச்சி. நான் நினைத்தவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என மனசு ஏங்கியது… அப்பா அனுப்பும் பெண்ணின் புகைப்படத்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தேன்… என் அப்பா அம்மாவோட என் வருங்கால மனைவியோட என் தாய்நாட்டுல நல்லபடியா செட்டில் ஆகணும் அதுதான் என் வாழ்க்கையோட லட்சியமாக இருந்துச்சு… நம்ம ஊர்லயே ஒரு வேலை, அப்பா, அம்மா ஆசைபட்ட மாதிரி ஒரு இடம் வாங்கியாச்சு, ஊர்ல போய் நல்லபடியாத் தொழில் செஞ்சு வீட்டைக் கட்டிடலாம் என்ற நம்பிக்கை மட்டும் என் நெஞ்சில் இருந்தது…

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் என் தாய்நாட்டுக்குச் செல்லப் போகிறேன். இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்று மனசு சந்தோசப்பட்டுக் கொண்டது…வாழ்க்கை சில நேரங்களில் சினிமாவை விட அதிகத் திருப்பங்கள் வரும், சோதனைகள் வரும், துயரங்கள் வரும் என்பதை என் வாழ்க்கையின் மூலமே நான் அறிந்து கொண்டேன்…

பெண்ணின் புகைப்படம் வரும் என்று எதிர்பார்த்தவனுக்கு அப்பாவின் உடல்நிலை சரி இல்லை அதனால் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம் கொஞ்சம் சீரியஸ் என்று செய்தி வந்தது… பதறி அடித்துக் கொண்டு எமர்ஜென்சி லீவு வாங்கிக் கொண்டு இந்தியா சென்றேன். அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பத்து லட்சம் செலவாகுமாம், அந்த ஆப்ரேஷன் கொஞ்சம் மேஜர் ஆப்ரேஷனாம். அப்பாவுக்குக் கொஞ்சம் சுகர் கம்பிளைன்ட் வேறு இருக்கு வேளாவேளைக்குச் சரியா சாப்பிடலைன்னாலும், டென்ஷன் ஆனாலும் கொஞ்சம் மயக்கம் வரும் நானும் அம்மாவும் அப்பாவை நல்லபடியாத்தான் பார்த்துக்கிட்டோம்… அந்த ஆண்டவனுக்கு கண்ணு இல்லைன்னு சொல்லலாம் யாருக்கும் மனசால கூட எந்தக் கெடுதலும் செய்யாத எங்க அப்பாவுக்குக் கல்லீரல்ல கேன்சரைக் கொடுத்தான். அந்தக் கேடுகெட்ட ஈவு இரக்கமில்லாத ஆண்டவன். இருக்கிறவனா இருந்தா வாரிவாரிக் கொடுக்கலாம். ஆனா நானோ இல்லாதவன். இப்பத்தான் தட்டுத்தடுமாறி, முட்டி மோதி அடுத்தவனும் மனுஷனா மதிக்கிற மாதிரி வளர்ந்து வரும் நிலையில இந்தச் சோதனையை, துன்பத்தை அந்த ஆண்டவன் கொடுத்தது தப்பு… அந்த வியாதி எங்க அப்பாவுக்குப் பதில் எனக்கு வந்தா கூட சனியன் போனா போயிட்டு போதுன்னு விட்டிடலாம்…

என் குடும்பத்தோட ஆணி வேர், தூண், உயிர் எல்லாமே என் அப்பாதான்… என் அப்பாவ எப்படியாவதுக் காப்பாத்திடணும் அதுமட்டும்தான் என் கண்ணுக்குத்தெரிஞ்சது. என் அப்பாவை விட இந்த உலகத்துல எதுவும் பெருசாத் தெரியலை... சொத்து பணம் எல்லாம் என் அப்பா கால் தூசுக்குச் சமம். அதனாலே, வேறுவழி இல்லாமல் அவசரத்துக்கு நான் வாங்கிய லேண்ட்டை சேல் செய்தேன் எட்டு லட்சம் மதிப்பு உள்ள இடம் என் சூழ்நிலை அறிந்து அந்த நிலத்தை அஞ்சு லட்சத்துக்குத்தான் புரோக்கர் மூலமாக ஒருவன் வாங்கினான்… சீட்டுப் பணம் ரெண்டு லட்சம் கடன் வாங்கினேன், உறவினர் ஒருவர் சகோதரி உறவுமுறை எனக்கு வேண்டும். அவர் நகையை அடமானம் வைத்துப் பாங்கில் வைத்து மூன்று லட்சம் பணத்தைப் பெற்றேன்… எப்படியோ என் அப்பாவைக் காப்பாற்ற ஆப்ரேஷனுக்குரிய பணத்தைச் சேர்த்து விட்டேன்… டாக்டர் சொன்னார் தம்பி கவலைப்படாதீங்க, அப்பாவுக்கு எதுவும் ஆகாது.. ஆபரேஷனுக்கு அப்புறம் அப்பா நல்லபடியாய் ஆயிடுவார். பழைய மாதிரி நீங்கள் உங்கள் அப்பாவைப் பார்க்கலாம் என்றார்.

ஒரு வழியாக ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது... அப்பாவை ஐ.சி .யு-வில் பத்துநாள் வைக்க வேண்டும் என்றனர். எனக்கு லீவு முடிந்து விட்டதாலும், என் கடனும் என் சூழ்நிலையும் மீண்டும் அந்த நரகத்துக்குப் போக வைத்தது.. வர மனமில்லாமல் அப்பாவை ஐ .சி.யு அறை கண்ணாடி வழி மூலம் பார்த்துவிட்டு என் உயிரை அப்பா காலடியில் வைத்துவிட்டு செத்த பிணமாக விமானத்தில் ஏறி மீண்டும் அந்த நரகத்துக்குச் சென்றேன்… ஒரு மாதம் அப்பா அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்க வைக்கப்பட்டார். அம்மா கையில், காதில் இருந்த தங்கநகையை விற்று அப்பாவுக்கு வைத்தியம் பார்த்தாள்… யார் கண்ணுபட்டதோ என்னவோ தெரியவில்லை… ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்த சில வாரங்களில் அப்பாவின் உயிர் இந்த உலகைவிட்டுப் போனது… அந்தப் பாழாய்ப் போன டாக்டர் காலில் எத்தனை முறை விழுந்து இருப்பேன். நீங்கதான் எங்க அப்பாவைக் காப்பாத்தணும் என்று... ஒரு தெய்வம் போல அவனை நம்பி இருந்தேன்... லட்சக்கணக்குல பணத்தை வாங்கிட்டு என்ன வைத்தியம் பண்ணான்னுதெரியலை… ஆப்ரேஷன் பண்ண ஒரு சில மாதத்திலேயே அப்பா செத்திட்டாரு… அவருடைய இறப்பு என் கண்ணின் வசீகரத்தை எடுத்துச் சென்றது .. என் உதட்டில் இருந்து உண்மையான புன்னகையை எடுத்துச் சென்றது…

ஒவ்வொரு பிள்ளையும் தன் பெற்றோர்க்குக் கடைசிக்கால சடங்கை நிறைவேற்ற வேண்டுமாம். என் அப்பாவின் இறப்பிற்குக் கூடத் தாயகம் வரமுடியாத பாவியாகி விட்டேன்… நெஞ்சம் வலித்தது… துடித்தது, கனத்தது… அம்மாவுக்கு எதுவும் தெரியாதே .. அப்பா இல்லாமல் அம்மா என்ன என்ன கஷ்டத்தை அனுபவிப்பா, அதை நினைக்கும் போதே மனசு வலிச்சு, இந்த உலகமே வேண்டாம்னு உயிரை மாய்ச்சுக்கலாம்னா நானும் இல்லைன்னா அம்மாவை யார் பார்த்துக்குவா? என்னவிட்டா அம்மாவுக்கு வேறு நாதிஇல்லையே? சீட்டுக் கடன் லோன், உறவினரான சகோதரியின் கடனுக்காக அம்மாவைத் தனியே வேதனையில் மூழ்கடிக்கவிட்டு நானும் அந்தப் பழைய நரகத்திலேயே தினம் தினம் நொந்து நொந்து சாகலாம் என முடிவெடுத்தேன்… என் வாழ்க்கையில் மேடு இருக்கிறதோ இல்லையோ... ஆனால் நிறைய பள்ளங்கள் இருக்கிறது. தினம்தினம் விழுகிறேன், பல காயங்களோடும், வலிகளோடும் சிகரம் மேல வெற்றி என்னும் இலக்கை அடையப் போராடிக் கொண்டு இருக்கிறேன் என் தாயின் புன்னகைக்காக… கண்ணு இல்லாத, இரக்கம் இல்லாத கடவுளே என் தாய் அவள் வாழ்நாள் முடிவடைவதற்குள்ளாவது அவளுக்கு சந்தோசத்தைத் தரக்கூடிய வகையில் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்து… வாழ்க்கையில் சோதனை இருக்கலாம்… சோதனையே வாழ்க்கையாகக் கூடாது கடவுள்னா இரட்சிக்கணும், துன்புறுத்தகூடாது?!


வாசுவின் வாழ்வில் போராட்டம் தொடர்கதையாகிறது... வெளியே அழகாய் மிளிரும் அடுக்கு மாடி கட்டிடங்கள் உள்ளே அலங்கோலமாய் அடுக்குமாடி கட்டில்கள் முதுகு தட்டி உறங்க வைப்பாள் என் அன்னை - இங்கோ என்னை உறங்க விடாமல் உடம்பை இரணப்படுத்துகிறது- மூட்டப்பூச்சி

அம்மா ஊட்டும் அறுசுவை உணவுக்கு ஈடாகுமா? அரபு நாட்டுக் குளிர்சாதனப் பெட்டிகளில் கிடைக்கும் காஸ்ட்லி பிஸ்சாவுக்கும், பர்கருக்கும்… ஆற்றுநீராடல், வாய்க்கால் பாய்ச்சல், பம்புசெட்டு குளிகை மறந்தே போச்சு அனல் கக்கும் வெந்நீர் குளியலில்… பாவாடை, தாவணி உடுத்தும் கன்னியர்களின் கலையழகை கவலையில்லாமல் கள்ளத்தனமாய் ரசித்த விடலை விழிகள் ஏனோ விகாரமாய் மேக்அப் பூசும் பிலிப்பிணிகளின் சிலிகான் முகத்தை ஆடை குறைத்துக் காட்டும் வெள்ளைத் தோல் உடலை இளமை இருந்தும் ரசிப்பதில்லை - விரும்புவதில்லை. அப்பாவின் அனுசரணையான அன்பு பேச்சு… அம்மாவின் மடி சாய்ந்து கவலை இல்லாமல் உறங்கும் கள்ளம் கபடமில்லாத அந்தக் குழந்தைப் பருவம் மீண்டும் கிடைக்குமா என்ன? எல்லாம் கனவில் மட்டுமே நடக்கக்கூடிய கானலாய் என் காலம் மாறிப்போச்சு…

அப்பாவின் மரணம் கேட்டு உயிர்மூச்சு மட்டும்தான் நின்னு போகவில்லை… வாழ்வின் மற்றவைகள் எல்லாம் காணாமல் போச்சு… இங்கு அழுதால் அழுவதற்கும் யாருமில்லை சிரித்தால் சிரிப்பதற்கும் யாருமில்லை நான் பார்க்கும் முகக்கண்ணாடியைத் தவிர…

ஏனோ நட்பு, உறவு கூட நாடகமாய்த்தான் தெரிகிறது…..பல சோதனை, துயரம் வந்த போதும் இந்த நரகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். என் தாயின் புன்னகைக்காக… நான் சேர்க்கும் ஒவ்வொரு காசும் தூக்கத்தை மட்டும் தொலைத்து சேமித்தது அல்ல… நிம்மதியை தொலைத்து சேமித்ததும் தான்… என் வாழ்க்கை எப்படி, என்ன ஆகப் போகிறது என்பது அந்த நீதி, நேர்மை, இரக்கம் உள்ள அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்… உண்மையுடன் இந்த நொடிப் பொழுது வரை உழைக்கிறேன்… என் தாயின் புன்னகைக்காக…! உயிர்மூச்சுடன் மெழுகைப் போல் உருகிக் கொண்டு இருக்கிறேன்.

அழிவது நான் என்றாலும் பரவாயில்லை. ஆனால், என் தாயின் வாழ்வில் ஒளி பிரகாசமாய் வீசணும். அதுவே என் ஆன்மாவின் துடிப்பு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p287.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License