ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில் ஏறி மல்லாக்கு படுத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் முழுவதும் இருட்டாத அந்தி மாலைப் பொழுது. கூட்டம் கூட்டமாகப் பறவைகள் எங்கிருந்தோ அவசரமாகத் திரும்பி வீட்டிற்குப் போவது போல் போய்க் கொண்டிருந்தன. தூரத்தில் அம்மங்கோவிலிலிருந்து பாட்டு மாரியம்மா... மாரியம்மா... திரிசூலியம்மா... பக்கத்திலிருந்த வேப்பமரம் ஏதோ அந்தப் பாட்டுக்குத் தலையாட்டுவது போலவே அசைந்து கொண்டிருந்தது.
மனசு வேற எதையோ யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஓரிரு மழைத்துளிகள். லேசாக முகத்தில் பட்டுத் தெரித்தது. எதையும் யோசிக்காம இப்படியேப் படுத்துக்கிட்டு இருக்கணும். காற்று பலமா இருக்கு. மழை வராது. அசையாமல் படுத்துக் கொண்டே காற்றால் விரட்டப்பட்ட மழை மேகங்கள் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ திரும்பவும் ஜோசப்பின் ஞாபகம்.
அதான் நாலு வருசத் தகவல்களையும் ஒண்ணு விடாம பொலம்பியாச்சே. இப்ப என்ன. மனம் தனக்குத்தானே கேள்வியையும் கேட்டு விடையும் சொல்லிக் கொண்டிருந்தது. இல்ல இப்ப அவன் என்ன சொன்னான்னு அசை போடணும்.
ஆமாம். என்னடா புது மாப்பிள்ள லைப் எப்படி போகுதுன்னு நான் கேட்டேன். அதுக்கு அவன் சூப்பர்டா. சும்மாவா. நான் சாமியாடியல்ல கல்யாணம் பண்ணியிருக்கேன்னான். மத்தபடி சொன்ன எல்லாம் புரிஞ்சது. இது மட்டும் எப்படி. அவன்கிட்ட நேரடியாக் கேக்க முடியல.
விமல்தான் அவன் கிட்ட அப்பப்பப் பேசுவான். அவனுக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சுருக்கும். காதல் கல்யாணமாத்தான் இருக்கும். ஆனா அது எப்படிஅவன் வீட்ல ஒத்துக்கிட்டாங்க. அவங்க அம்மா எதுக்கெடுத்தாலும் பிரேயர் பிரேயர்னு உருகுவாங்களே. எப்டி சாமியாடற பொண்ண மருமகளா ஏத்துக்கிட்டாங்க. ஆச்சரியமாத்தான் இருக்கு.
எப்படியும் அடுத்தவாரம் பெங்களூரு டூர் போகணும். நேர்ல போய் ஒரு ஹலோ சொல்லிப் பாத்துட வேண்டியதுதான். தீர்மானித்தவுடன் மனம் லேசானது.
இந்த மனசு இருக்கே பொல்லாதது. குழப்பம்னு வந்தாச்சு தீர்வு கெடக்கற வர விடாது. அதுக்குள்ள விமலப் பாத்தாக் கேட்டுறணும். அடுத்த நாள் எதிர்பாராத விதமா வீட்டுக்கு வந்த விமல், டேய் கண்ணன் அதான் நீ போகப்போறயே. நேர்லயே பாத்துக்க. அதுக்குள்ள என்ன அவசரம். முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் போய்விட்டான். அடுத்தவன் பொண்டாட்டியப் பத்தி அதுக்கு மேலத் துருவித்துருவி கேக்கறதும் அநாகரீகம். சரி பாத்துக்கலாம் விட்டுவிட்டேன்.
அவன் வீட்டுக்குள்ள வந்து சோபாலையும் உக்காந்தாச்சு. மனசு படபடன்னு அடிக்குது. அவன் மனைவி எப்படி இருப்பாங்க. மஞ்சள் பூசி குளிச்ச முகத்துலப் பெரிய குங்குமப் பொட்டு அதுக்கு மேல திருநீற்றுப் பட்டை. அல்லது மூணு திருநீற்றுப்பட்டை போட்டு அதுக்கு நடுல குங்குமப்பொட்டு வச்சிருப்பாங்களோ. கண்டிப்பா துளசி மாலை போட்டிருப்பாங்க. அது துளசி மணி போடுவாங்களா, ருத்திராட்சமா. ஒரு வேள ரெண்டும் ஒண்ணுதானோ. கூகுள்ல போட்டுப்பாத்துற வேண்டியதுதான். ஒரு சாமியாடி வேற எப்டியெல்லாம் இருப்பாங்க. சரிகை வச்ச பட்டுப் புடவ தான் கட்டியிருப்பாங்க. அதுவும் மஞ்சள்ல சிவப்பு பார்டர் அல்லது சிவப்பு, பச்சை அந்த காம்பினேஷன்ல தான் இருக்கும். எது எப்படியோ. தெய்வ கடாட்சம் உள்ளவங்க. பேசும்போது ரொம்ப மரியாதயா பேசணும். அம்மாகிட்ட இதப் பத்தி சொல்லும்போது கூட சொன்னாங்க. ஜோசப் ரொம்ப நல்லவன்டா. அதான் கடவுளாப் பாத்து சாமியாடிப்பொண்ண காமிச்சுக் குடுத்துருக்காருன்னு.
என்னய உக்காரச்சொல்லிட்டு உள்ள போன ஜோசப் தண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள இத்தன யோசனை. டேய் என் வைப் கிட்ட பேசிட்டிரு. நான் பக்கத்துல இருக்கற கடை வரப் போயிட்டு வந்திடுறேன். நான் மறுப்பு சொல்லவில்லை. அப்பாடா கடைசில ஜோசப் மனைவியப் பாக்கப் போற மனசு சொல்லியது.
அழகான நீல கலர் ஷிபான் புடவையில் அவள் வந்தாள். தன் பெயரைச் சொல்லிப் பேச ஆரம்பித்த அவளின் பேச்சு எதுவும் என் காதில் விழவில்லை. என்ன அநியாயம். நான் மனசுல கற்பனை செஞ்ச மாதிரி அவள் இல்லைன்னவுடனே இந்தப் பொல்லாத மனசு ஏத்துக்க மாட்டேங்குது. அவள் கால்களைப் பார்த்தேன். கொலுசு , மருதாணி ஏதும் இருக்கா. ஒன்றும் இல்லை. அழகாக நெயில் பாலிஷ் தெரிந்தது. அசடு வழிந்து கொண்டே அவளை முழுவதும் கவனித்தேன். பொட்டில்லாத முகம். கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின். அதில் ... ஆமாம் சிலுவைதான் தொங்குகிறது. காதில் சிறிய ஜிமிக்கி. தலைவாரி பின்னவில்லை. நாகரீகமாகத் தலையை விரித்துப் போட்டிருக்கிறாள். அதற்குமேல் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவசரமாகப் போன் பேசுவது போல் பொய்யான பாவனையுடன் வெளியே வந்தேன். வெளியில்வந்தவுடன் தான் கொஞ்சம் நிம்மதி.
என்னடா கண்ணன் வெளில நிக்கற. ஷீலா கூட பேசிட்டிருப்பன்னு நெனச்சேன். ஜோசப்பின் குரல்.
நீ உள்ள போ. நான் போன் பேசிட்டு வரேன். அதே பொய் பாவனையைத் தொடர்ந்தேன்.
எதுஎப்படியோ. ஜோசப்பின் மனைவி ஷீலா பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறாள். அவனுக்குத்தான் இன்னும் நக்கல் குணம் போகவில்லை போல. இவங்களைப்போய் சாமியாடினு சொல்லிட்டான்.
உள்ளே சென்று தேநீர் பிஸ்கட் உபசரிப்பு முடிந்தவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றேன்.
ரூமிற்குள் நுழைந்து பையைக் கட்டிலில் வீசிவிட்டு அமர்ந்தவுடன் தான் ஞாபகம் வந்தது. அவனின் கல்யாணப்பரிசை கொடுக்காமலே வந்துவிட்டோமே. சரி ஒருமணிநேரம் களைப்பாறிவிட்டு மீண்டும் சென்று சர்பிரைஸ் ஆகக் கொடுத்துவிடலாம்.
அவன் வீட்டு வாசலுக்குச் சென்றவுடன் வீட்டிற்குள் பெரிய களேபரம் நடப்பதை உணர முடிந்தது. என் பெயரும் அடிபடுகிறதே.
உங்க ப்ரெண்ட் அவன் பேரு என்ன ஆந்தக்கண்ணன். அவன எதுக்கு இங்க வரச்சொன்னீங்க. அதுவும் அவன உக்காத்திவச்சிட்டு வெளிய வேறப் போயாச்சு.
அதான் சொன்னேனே. வீட்ல பிஸ்கட் இல்ல அதான் வாங்கப்போனேன்.
ஏதோ ஒரு சாக்கு. கண்டவனையும் வீட்டுக்குள்ள வச்சிட்டு ... வசைகள் தொடர்ந்தன.
பேச்சுவாக்கில் என் குடும்பமும் இழுக்கப்பட்டது. ஆஹா திட்டுவதில் கூட என்ன ஒரு அலாதியான கற்பனைத்திறம். என் குடும்பத்தைப்பத்தி எதுவுமே தெரியாமலேயே இவ்வளவு திட்டுகிறாளே. திட்டுக்களோடு சேர்த்து சாமான்கள் உருட்டும் சத்தமும்.
நண்பனின் குரலே கேட்கவில்லை. மீண்டும் அவளே தான்.
வெளியில நின்னு ரெண்டு பேரும் என்ன பேசினீங்க.
அதான் சொன்னேனே ஒண்ணும் பேசல.
மீண்டும் அவளே. எனக்குத் தெரியும். என்னயப் பத்தி தான் பேசியிருப்பீங்க. இப்போது நண்பன் என்ன பேசியிருப்பான் என்ற அவளின் கற்பனைக் கதையோடு திட்டல் தொடர்கிறது.
பாவம் ஜோசப். அவங்களைப் பாத்தா நம்பவே முடியலயே. நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் வெளியே வந்தான்.
என்னடா . எப்ப வந்த. எல்லாத்தையும் கவனிச்சிட்டியா. இது எப்போதும் நடக்கறதுதான். நீ ஒண்ணும் பயந்துக்காத. காலையில வீட்லேந்து கிளம்பினதிலேந்து திரும்பி வரவரை ரிப்போர்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். கல்யாணம் முடிஞ்சு இந்த நாலு மாசத்துல எனக்குப் பழகிப்போச்சு. எங்கம்மாகூட ஒத்துக்கிட்டாங்கன்னா பாத்துக்கோயேன். இவன் விரக்தியில் சொல்கிறானா. சப்பைகட்டு கட்டுகிறானா. ஒன்றும் புரியவில்லை.
இந்தாடா இதக்கொடுக்கத்தான் வந்தேன். எதேச்சையாக வெளியே வந்த அவள், வாங்க அண்ணே. வாசலோட நின்னுட்டு எதுக்கு. உள்ள வாங்க. கனிவான குரலில் அழைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
ஏன் ஜோசப் உன் மனைவிக்கு ஏதும் பிரச்சினை ஒண்ணுமில்லையே. ஏன் கேக்கறேன்னா கொஞ்ச நேரம் முன்ன நான் வந்தப்போ என்னய உள்ள அந்த திட்டு திட்டிட்டு இருந்தாங்க. இப்ப எப்படி.
கேட்டுட்டயா. இன்னிக்கு டாபிக் நீ அவ்வளவுதான். நீ வந்திருக்கலன்னா வேற ஏதாவது சாக்கு கெடைச்சிருக்கும். அத வச்சி சாமியாடிருப்பா என்றவுடன் தான் புரிந்தது சாமியாடிக்கான விளக்கம். இனிமேல் தான் பெண்பார்க்கும் படலத்தைத் தொடங்க வேண்டும். பாக்கற எல்லாரையும் இனிமே சாமியாடியாதான் நெனைக்கத் தோணும். இதில உண்மைய எப்படிக் கண்டுபிடிக்கறது. புரியவில்லை. யோசித்துக் கொண்டே வெளியேக் கிளம்பினேன்.