வாடிக்கையாகப் பூ வாங்கும் இடம் தான். மடிப்பாக்கம் பிள்ளையார் கோவில் முக்கில் உள்ள கடை அது. தினமும் அந்த அம்மாளைப் பார்த்து பூ வாங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வருமளவுக்குக் காலை ஆறு மணிக்கேக் குளித்த தலையும் மஞ்சள் பூசிய நெற்றியில் ஒரு ரூபாய் அளவுக்கு வைத்துள்ள குங்குமப்பொட்டுடனும் அவளின் வியாபாரம் தொடங்கும். இரவு எட்டு மணிக்குப் போனாலும் அதே அளவு சுறுசுறுப்புதான். பல வருடங்கள் வாடிக்கையாகப் பூ வாங்குவதால் அவளைப் பற்றிய சிறுசிறு தகவல்கள் தெரிந்திருந்தது. இவர்களின் தலையெழுத்தோ என்னவோ பூக்காரி, கீரைக்காரி, காய்கறிக்காரி என எந்தக் காரிகளிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டாலும், அது ஊட்டாண்ட குந்திகினு குடிச்சிகினே இருக்கும். எம்மாங்காசு குடுத்தாலும் பத்தாது. பிள்ளைங்களுக்காக உழச்சுத்தானே ஆவணும் என்பார்கள்.
ஒரே மாதிரி அடித்துத் துன்புறுத்தும் குடிகாரக் கணவன்மார்கள். அது நல்லபடியா ஊட்டப் பாத்துக்கிச்சினா நான் ஏன் இங்க கடந்து கஷ்டப்படறேன் என்ற பொலம்பல்.
போன ஞாயிற்றுக்கிழமை அவளைப் பார்த்தது. நாளைக்கு அம்மாவாசை ஊராண்ட போறேன். அடுத்தநாள் பாட்டியம்ம கெளம்ப முடியாது. அதனால புதன் கிழமை வா. கட போடுவேன்னு சொல்லிட்டுப் போனவ. ஞாயிறு ஆயாச்சு இன்னும் வரவில்லை. அவ பக்கத்துல செருப்பு பாத்துக்கற முருகன் இருப்பான். அவனையும் ஒருவாரமாக் காணவில்லை. பச்சைப்புடவை பிச்சக்காரி மட்டும் தினமும் உட்காருகிறாள். அவ்வளவுதான்.
என்னவாகியிருக்கும். அக்கம்பக்கத்தில் கடைகள்னு ஒண்ணும் இல்ல. கொஞ்சம் தள்ளி மண் பானை விக்கறவ உக்காருவா. அவகிட்ட இன்னிக்குக் கேட்டுப்பாத்துற வேண்டியதுதான்.
தினமும் கோவிலுக்கு வரும்போது நினைப்பேன். தேவையில்லாம இந்தப் பூக்காரி நைநைனு பேசறானு. ஆனா ஒரு வாரமா அவ இல்லாததும் என்னமோ போலத்தான் இருக்கு. மெதுவாக மண்பானை அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். அவள் ஆரம்பித்தாள்.
பூக்காரியும், செருப்பு பாத்துக்கறவனும் போலீசுக்குப் பயந்து வராம இருக்காங்கனு தெரியும். எதனாலனு எனக்குத் தெரியாது. அன்னைக்குப் பெரிசா சண்ட நடந்துச்சு. நீங்க கோவில் பூசாரியக் கேட்டுக்குங்க என்றாள்.
ஆர்வத்தில் திரும்பவும் கோவிலுக்குள் போய் ஓரிரண்டு அர்ச்சனைகள் முடித்து பூசாரி சன்னதிக்கு வெளியே வரும்வரை காத்திருந்து வம்பு கேட்க ஆரம்பித்தேன்.
அது வேற ஒண்ணுமில்ல. பூக்காரி ஈஸ்வரிகிட்ட செருப்பு முருகன் பத்துரூபா கடனா வாங்கிண்டுருக்கான். அவள் திருப்பி கேட்டப்போ தரமாட்டேன்னுட்டு தகராறு பண்ணிருக்கான் போல. பூக்காரிக்குக் கோபம் வந்ததால ஒண்ணு ரெண்டு கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டிருக்கா. அந்த வார்த்தைகளக் கேட்டா யாருக்குன்னாலும் கோவம் வரத்தானே செய்யும்.
என்ன வார்த்தையாக இருக்கும் நான் யோசிப்பதைப் புரிந்து கொண்டவர் போல் சுவாமி கைங்கர்யம் பண்ற நான் அந்த வார்த்தையெல்லாம் சொல்லப்படாது.
கோவம் வந்த முருகன் செருப்பத் தூக்கி ஈஸ்வரி மேல எறிஞ்சுட்டான். வேற வினை வேணுமோ. அம்பாள் பேர வச்சிண்டிருக்கற பூக்காரி கோவத்தோட போலீசக் கூட்டிண்டு வந்துட்டா. அவர்பேரு நமச்சிவாயம். என்னயக் கூப்பிட்டு உட்டார். இவா ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி தகராறு பண்ணிருக்காளானு கேக்கறதுக்கு. நான் இல்லைன்னுட்டேன்.
வெளில போனப்புறம் அவா ரெண்டு பேர்கிட்டயும் என்ன பேசினாரோ என்னவோ தெரியல. அடுத்தநாள் காலைல மொதல்ல பூக்காரி வந்து ஒக்காந்து பிள்ளையார்கிட்ட ஒருபாட்டம் அழுதுட்டுப் போயிட்டா. நான் என்ன தப்பு பண்ணினேன் எனக்கு எதுக்கு இப்படி தண்டனைனு.
அடுத்தாப்ல செருப்பு முருகன் வந்து சுவாமி முன்னால நின்னு ஒப்பாரி வச்சான். அவன்கிட்ட விசாரிச்சதிலேந்து தெரிஞ்சது பொது இடத்துல தகராறு பண்ணி மத்தவங்களுக்கு இடையூறு பண்ணின குற்றத்துக்காக போலீஸ்காரர் ரெண்டு பேரையும் தனித்தனியா ஸ்டேஷன்ல வந்து நூறு ரூபாய் அபராதம் கொடுக்கணும்னு சொல்லிட்டாராம்... இல்லன்னா கோவில் வாசல்ல கடை போட முடியாதாம்...
எங்கிட்ட உதவி கேட்டான். நானும் பூக்காரியும் சேர்ந்து பிள்ளையார்க்கு ஏதாவது பரிகாரம் பண்ணிடறோம். என்னால போலீசுக்கு நூறு ரூபாய் கொடுக்க முடியாது. நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கன்னு. நான்என்ன பண்ணமுடியும்.
தண்டனை கொடுத்தது சிவன் பேர வச்சிண்டிருக்கற போலீசாச்சே. எல்லாத்துக்கும் பதில உள்ள சிலையா நிக்கற அவர் பிள்ளை கணபதி சொல்லுவார் எது நியாயம்னு.
இதில் என் பங்குக்கு நான் என்ன செய்யமுடியும் என யோசித்தேன். ஏதாவது ஒரு வக்கீலிடம் சொல்லிக் கேட்கலாமா என யாருக்குத் தெரியும். அவரது நியாயத்திற்கு என்ன விலையோ, இருந்தாலும் மனம் கேட்காமல் வெளியூரில் வசிக்கும் வக்கீல் தோழியைக் கைபேசியில் அழைத்தேன்.
உன்னய மாதிரி எத்தனை பேர் அவகிட்ட பூ வாங்குவாங்க. அதுல யார்கிட்டயாவது இந்நேரத்துக்கு அவ உதவி கேட்டிருப்பா. யாருக்குத் தெரியும் இந்நேரத்துக்கு யாரையாவது கூட்டிட்டுப் போய் போலீஸ்கிட்ட சமாதானம் பேசியிருப்பா. ஒவ்வொரு நியாயத்துக்கும் விலை இருக்கு. ஆளப்பொறுத்து வேறுபடும். காசு இருக்கறவன் எல்லா நியாயத்தையும் விலைக்கு வாங்கிடுவான். இது என் தொழில் அனுபவம். உனக்கு சொன்னாப் புரியாது. நீ ரொம்ப யோசிக்கற.
நம்மகிட்ட உதவினு கேட்டு வரவங்களோட பிரச்சினைய மட்டுந்தான் சரி செய்ய யோசிக்கணும். அது கூட பெரும்பாலானவங்க எனக்கு எதுக்கு வம்புனு விலகிப் போயிருவாங்க. நாமே வலியப்போயி சுத்தி இருக்கறவங்களோட பிரச்சினைகள்ல தலையிட ஆரம்பிச்சோம்னா அதுக்கு முடிவே இருக்காது. நம்மளச் சுத்தி இருக்கற இந்த உலகம் ரொம்ப வித்தியாசமானது. இப்ப நீ கடவுள் புண்ணியத்துல சந்தோசமா இருக்க. அதனால உலகத்துல இருக்கற எல்லாரையும் நம்பி அவங்களுக்கு உதவ நினைக்கற. அதுவே ஒரு பேச்சுக்கு என்னிக்காவது நீ பணத்தத் தொலைச்சிட்டு நடுத்தெருவுல நின்னு பாரு. அப்ப தெரியும். உன்னயச் சுத்தி இருக்கற நியாயவாதிகளோட விலை என்னன்னு...
கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் கூட மனம் கேட்கவில்லை. இந்த விலை போகும் நியாயங்களைத் தடுத்து நிறுத்த என்னால் முயன்ற வரை ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் யோசிக்க ஆரம்பித்தேன். நீங்களும் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்...