எவ்வளவு நல்ல மனிதர், அவரை இனிமே பாக்கவே முடியாதுனு நெனச்சா நம்பவே முடியல. இந்த நாலு நாள சந்தோசமாக் கழிக்கணும்னு வந்தேன். வந்த ரெண்டாம் நாளே இப்படி ஆகிப் போச்சு. யோசித்துக் கொண்டே பால்கனியில் அமர்ந்திருந்தேன். எதிர் ப்ளாக் கிரவுண்ட் ப்ளோரில் தான் அவரோட வீடு.
அம்மா காபி கொண்டு வந்தாள்.
தலய நல்லா துவட்டினியா. சளி புடிச்சுடப் போகுது. என்ன யோசன. சாமிநாதன் மாமாவுக்கு எண்பத்திரெண்டு வயசுடா. அதோட இது ரெண்டாவது ஹார்ட் அட்டாக். அதான் பட்டுன்னு போய்ட்டாரு. சோமு அத்ததான் பாவம். இனி என்ன செய்யப் போகுதோ. வேலுவுக்கு சொல்லி உட்டுட்டாங்களா?. என்னமும் உதவி வேணும்னா கேட்டுச்செய்.
காபியை உரிஞ்சுக்கொண்டே வெளியேப் பார்க்க ஆரம்பித்தேன். நினைவு தெரிந்ததிலிருந்து இதே வீட்டில் தான் வாசம்.
எங்க ரெண்டு குடும்பமும் சொந்தக்காரங்களப் போலதான் பழகினோம். அதனால தான் அவங்கள உரிமையா மாமா, அத்தை னு கூப்பிடற பழக்கம். அவரோட மகன் வேலு என் கிளாஸ்மேட் தான். படிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்குப்போனவன். அப்பறம் வந்து கல்யாணம் கட்டிக்கிட்டு பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போனான். அவ்ளோதான். ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒருக்க வரான் போல. அவன் புள்ளயும் என் மகளோட ஒட்ட தானாம்... என்ன... கொஞ்சம் மாச வித்தியாசம் இருக்கும்னு ஞாபகம். இதெல்லாம் அம்மா சொன்ன தகவல்...
இருந்தாலும் காலையில பாத்த விசயத்த நம்பவே முடியல. நினைவுகளை அசை போட்டேன். அத்த கூப்பிட்டப்போ காலங்காத்தால நாலு மணி இருக்கும்னு நெனைக்கறேன்.
தம்பி எனக்கு லேசா நெஞ்சு வலிக்குதுடா. என் கூட வாஷ்ரூம் வர வா. அப்புறம் டாக்டருக்குப் போன் பண்ணு. எப்பொழுதும்போல் நிதானமான குரலில் கூறினார் சாமிநாதன் மாமா.
கொஞ்சம் தண்ணி கொண்டு வரச் சொல்லு அத்தய. என அத்தையை அனுப்பிவிட்டு ரகசியக் குரலில் அத்த கிட்ட சொல்லாத கத்துவா. நேத்தைக்கு டூவீலர் ஓட்டிட்டு போறப்போக் கீழ விழுந்திட்டேன். குப்புற விழுந்ததுல நெஞ்சுல அடி. உடனே டாக்டர் கிட்ட போயிருக்கணும். அதான் இப்ப வலிக்குதுபோல. அவர் காண்பித்த இடத்தில் ரத்தம் கன்றியதைப் போல சிறிது நீலம் பாரித்திருந்தது. வாஷ்ரூம் கதவைத் தொட்டவர்தான் அங்கேயே சரிந்து விழுந்துவிட்டார். உடனே உயிர் போய் விட்டது. டாக்டரைஅழைத்து உறுதி செய்து கொண்டு அக்கம்பக்கத்து மனிதர்கள் உதவியுடன் அவர் பாடியை ஹால் வரை எடுத்து வந்தவுடன் அத்தை மெதுவாக ஆரம்பித்தாள்.
இப்ப நான் என்ன கண்ணு செய்யணும். முதன் முறையாக தாழ்ந்த குரலில் பேசுகிறாள்.
வேலுவுக்கு மொதல்ல சொல்லணும். அவன் மஸ்கட்லேந்து வரணுமில்ல. போன் நம்பரக் குடுங்க. நான் கூப்பிடறேன்.
எனக்கு நம்பர் தெரியாதுப்பா. எல்லாம் இவரோட மொபைல்ல தான் இருக்கும். இவர் குடுத்தப்போ நான் பேசுவேன் அவ்ளோதான்.
அத்தை எழுந்து தேட ஆரம்பித்தாள். கூடவே அம்மா, என் மனைவி யார் தேடியும் கிடைக்கவில்லை. ஒருவழியாக உள்ளூர் நண்பனிடம் மெயில் ஐடி வாங்கி மெயில் மூலம் தகவல் அனுப்பியாகிவிட்டது.
பணம் , கிரெடிட் கார்டு, எதைக் கேட்டாலும் அத்தைக்குத் தெரியவில்லை. அழுவதற்கு கூட மறந்து எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருந்தோம்.
பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் ஐஸ் பெட்டி வரவழைக்க ஏற்பாடு செய்தாயிற்று.
அம்மங்கோவில் பூசாரியின் மகள் மஸ்கட்ல இருக்காளாம். அவள் மூலம் வேலுவுக்கு தகவல் சொல்லலாம் என பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன ஆலோசனைப்படி நம்பர் வாங்குவதற்காக நான் குளித்துவிட்டு ரெடியாகிறேன். அத்தை கூட என் மனைவி அமலா மட்டுந்தான் இருக்கா.
என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போலவே அம்மா பேசினாள்.
நடக்கறது எதுவும் நம்பற மாதிரி இல்லடா சாமி. உங்க சோமு அத்த பொழுது விடிஞ்சதுலேந்து அடையறது வர சத்தமா பேசிக்கிட்டே தான் இருக்கும். எத்தன வருசமா நான் பாக்கறேன். பைய மாட்டிக்கிட்டு மார்க்கெட்டுக்கும் பையனோட பள்ளிக்கூடத்துக்கும் அவ தான் போவா. ஒருநாளும் உங்க மாமா குரல நான் கேட்டதே கெடையாது. என்னமோ உங்க அத்த முன்னாடி அவர் பயந்து பம்மிக்கிட்டு நிக்கற மாதிரி தான் தோணும். ஆனா எல்லார்கிட்டயும் பேசும்போது மாமாவ உட்டுக்கொடுக்காம அவருக்கு ஒண்ணுந்தெரியாது. ரொம்ப அமைதின்னு சொல்லும். காலையிலேந்து ராத்திரி வர தெனைக்கும் எம் மருமக அங்க என்ன செய்யறானு ஒண்ணுவிடாம எனக்குத் தெரியும்னு சொல்லும். எந்த முடிவு எடுக்கணும்னாலும் என்கிட்ட கேக்காம மகனும் மருமகளும் செய்ய மாட்டாங்க. நாம எப்படி அக்கறையா இருக்கோமோ அப்டிதானே அவங்களும் இருப்பாங்க. நீங்களும் என்னமாதிரி பாசமா இருங்க. மருமக கூட பிரச்சினையே வராதுனு பக்கத்துவீட்டுஅம்மாவுக்கு போனவாரம் அட்வைஸ் வேற குடுத்திச்சு. நான் கூட இவ்ளோ நாளும் சோமு அத்தை எல்லா வெவரமும் தெரிஞ்சவங்கன்னு நம்பினேன். இத நான் மட்டுமில்ல. பக்கத்து வீட்டுக்கார அம்மாவும் தான் சொல்லுது. இன்னிக்கு என்னடான்னா எனக்கு எதுவுமே தெரியாதுங்கறா. செத்தவரு எந்திரிச்சு வந்து எல்லாத்தையும் செஞ்சுகுடுத்துட்டு போய்ப் படுத்தாத் தேவல மாதிரி நடந்துக்கறா. எது நெசம்னு தெரியல.
அம்மா புலம்பிக்கொண்டிருக்கும்போதே அமலா வந்து விட்டாள்.
மொபைல் கெடச்சிருச்சு. ஐஸ் பெட்டிக்குள்ள வைக்கும்போது அவர் பாண்ட் பாக்கெட்ல இருந்ததப் பாத்துட்டாங்க. இப்ப போன எடுத்து வேலு அண்ணனுக்கு தகவல் சொல்லியாச்சு.
சரி நீ இங்க பாத்துக்கோ. நான் அவளுக்குத் தொணைக்குப் போறேன். அம்மா கிளம்பி விட்டாள்.
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா அமலா ஆரம்பித்தாள். அத்த சொன்னாங்க இவ்வளவு வருசமும் இந்த மனுசன் உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிச் சொல்லி எல்லாப் பொறுப்பையும் தானே வச்சிக்கிட்டிருந்தது. அந்த ஆத்தாமையில மத்தவங்க என்னய குறைச்சலா நினைக்கக்கூடாது னு நெனச்சி வலியப் போயி இட்டுக்கட்டி நான் தான் எங்க வீட்ல எல்லாம் செய்யறேன். நான் இல்லேன்னா ஒண்ணும் நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். உண்மையில வீட்டுக்குள்ள ஒரு பொறுப்பும் இல்லாம சந்தோசமாத்தான் இருந்தேன்... மத்தவங்க முன்னால நிரூப்பிச்ச நேரம் நேரடியா இந்த மனுசன்கிட்டயே சண்ட போட்டு பொறுப்ப பகிர்ந்துட்டிருந்திருக்கலாம்.
இப்ப நெசமாவே எனக்கு எதுவும் தெரியாதுனு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இனிமே என்னய யாரு மதிப்பாங்கன்னு வருத்தப்பட்டாங்க.
இப்பவும் அத்தைக்கு தனக்கு ஒண்ணும் தெரியலங்கறதவிட அடுத்தவங்க முன்னால தன்னோட இமேஜ் போச்சேன்னு வருத்தந்தான்.
மனதில் நினைத்துக்கொண்டேன். சாகற வரை அப்பா கூட சோமு அத்தை கிட்டேந்து நெறைய விசயங்களக் கத்துக்கணும். எப்படி புருசன தாங்கறா பார்னு அம்மா கிட்ட சொல்லுவார்.
இந்த உலகத்தில சில பேர் உள்ள ஒண்ண வச்சிக்கிட்டு வெளில வேற வேசம் போட்டு தன் வீட்டுக்குள்ள அதுவும் குடும்பத்துகுள்ளேயே நடிச்சிட்டிருக்காங்க. இன்னும் பல பேர் வீட்டுக்கு வெளியில அக்கம்பக்கத்துல வேற வேசம் போட்டு நடிக்கறாங்க. இவங்க வாழ்க்கையோட குறிக்கோளே அடுத்தவங்ககிட்ட நல்லபெயர் வாங்கறதுதான். இவங்களயெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது. ரொம்ப கவனிக்க ஆரம்பிச்சா கிறுக்குதான் புடிக்கும். அப்புறம் யாரப் பாத்தாலும் இவங்க நடிக்கறாங்களோன்னு சந்தேகப்படத்தோணும். நம்பிக்கைதான் வாழ்க்கை. அதனால என்னயச் சுத்தி இருக்கறவங்க எல்லாம் உண்மையாத்தான் இருக்காங்கன்னு நம்பிட வேண்டியதுதான். இப்போதைக்கு இப்படியும் சிலர் உள்ளனர் என்று இந்த விசயத்தைக் கடந்து போகணும். தீர்மானித்துக் கொண்டு எழுந்தேன் சோமு அத்தை வீட்டுக்குச் செல்வதற்கு.