Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அம்மாவை யார் பார்த்துக் கொள்வது?

என். ஸ்ரீதரன்


எஸ்தருக்கு பஸ் மிகவும் மெதுவாக ஊர்ந்து போவது போல் தோன்றியது. நேற்று காஞ்சிபுரத்தில் அண்ணன் பெண்ணின் கல்யாணத்துக்குப் போனவள் இரவு தங்கி விட்டு இன்று காலை சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள். அவள் வசந்தா கேன்சர் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறாள். நர்ஸ் ஆக அல்ல. நர்ஸ் போல. பெரிய டாக்டர் சிவகுமாரிடம் கெஞ்சிக் கூத்தாடி விடுமுறை பெற்று கல்யாணத்துக்கு போய்விட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

நேற்று இரவே அவள் வீட்டுக்குத் திரும்பியிருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக அவளுக்கு வீசிங் அதிகமாகிவிட்டதால் கல்யாண வீட்டிலேயே இரவு தங்க நேர்ந்து விட்டது.

எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளுக்கு டையபர் ஒரு வரப்பிரசாதம். அதைக் கட்டி வைத்துவிட்டால் போதும் மலம், சிறுநீர் எல்லாம் கழிந்தாலும் அது உறிஞ்சி விடும். சில மணி நேரம் தாக்கு பிடிக்கும்.

அவள் ஆஸ்பத்திரியில் வேலை செய்தாலும் பக்கத்தில் உள்ள சில படுத்த படுக்கையாய் இருக்கும் வயதான பெண்களுக்கு டையபர் மாற்றுவதையும் தொழிலாகச் செய்து கொண்டிருக்கிறாள். கூடுதல் வருமானம் வருகிறது என்பது உண்மைதான். ஆனால் குடும்பம் நடத்த எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் வாங்க வேண்டியிருக்கிறதே. அவள் சமயம் கிடைக்கும்போது ஆஸ்பத்திரியிலிருந்து நோயாளிகள் வீட்டுக்குப் போய் டையபரை மாற்றி விட்டுத் திரும்பி விடுவாள். ”யார் டையபரை கண்டு பிடிச்சானோ அந்தப் புண்ணியவானுக்கு நன்றி. அவனால் என் பிழைப்பு ஓடுகிறது. இல்லாவிட்டால் படிப்பு அறிவும் இல்லாமல், கணவனுடைய உதவியுமில்லாமல் எப்படிச் சமாளிப்பது?” என்று மனதுக்குள் நன்றி செலுத்துவாள்.

இன்று காலை அவள் மடி பாட்டியை எட்டரை மணிக்குக் குளிக்க வைத்து டையபர் மாற்றி விட வேண்டும். அவள் தன் வேலையை செவ்வனே முடித்து விட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேரும்போது ஒன்பது மணி ஆகிவிடும். அடுத்தது பொம்மை பாட்டி. இரவு பகலுக்கு வித்தியாசம், என்ன சாப்பிடுகிறோம் ... எதுவுமே தெரியாது. எல்லாவற்றையும் மறந்து பரபிரம்மமாக இருக்கும் ஒரு ஆத்மா. அங்கும் டையபர் மட்டும் மாற்றி வரவேண்டும். அவளுக்கு அது பத்து நிமிட வேலைதான். இருந்தாலும் அவள் போகாவிட்டால் அவர்கள் தவித்து போய் விடுவார்கள். அவள் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறாள். படிப்பு எல்லாம் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. எட்டாவது வரைதான் படிக்க வைக்கப்பட்டாள். அதற்கு மேல் வீட்டில் படிக்க வைக்கவில்லை. கல்யாணமும் ஆயிற்று. முன்பு கணவன் குடி பழக்கத்தில் ஈடுபட்டு வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்கிக் கிடைக்கும்போது இரண்டு குழந்தைகளை வளர்க்க அவள் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்தாள். பத்து வருடம் வேகமாக ஓடிவிட்டது. பையன் ஜேம்ஸ் பிளஸ் டூ பெயில் ஆகி விட்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். பெண் பிஏ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். கணவன் பிழைப்புக்காகக் கஞ்சா கடத்த குருவியாய் மலேசியா போனவன் ரொம்ப நாள் திரும்பி வரவில்லை. என்ன ஆனான் என்று தெரியாது ” கணவனுடன் கூட மலேசியாவில் சிறையிலிருந்தவன் விடுதலை ஆகி இந்தியா வந்தவன் அவளை சந்தித்தது உண்மையைச் சொன்ன பிறகுதான் கணவன் வருவதற்கு மேலும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று அவளுக்குத் தெரிந்தது. இப்போது முப்பத்து ஐந்து வயசில் தன்னந்தனியாக வாழ்க்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறாள்.


பல இடங்களில் பஸ் நின்று கடைசியாய் அவள் இறங்குமிடம் வந்து சேரும் போது ஒன்பது மணி பதினைந்து நிமிடம் ஆகி விட்டது. ஓரு ஆட்டோவைப் பிடித்து வீட்டை வந்து அடைந்தாள். வீட்டில் போட்டது போட்டது இருந்தது. ஜேம்ஸ் தூங்கிக் கொண்டிருந்தான். மகள் பியூலா மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்”

“ஏண்டி பியூலா சமையல் ஏதாவது செய்யறதுக்கென்ன? நான் வரும்வரைப் பாட்டு கேட்டுண்டு சும்மாதான் இருப்பியா. போடி போய் சாண்ட்விச் செய். நான் குளிச்சிட்டு வரேன் என்று குளியலறைக்குள் புகுந்தாள். அவசர அவசரமாகக் குளித்து விட்டு வந்த எஸ்தர் தன் கூந்தலை முடித்துக் கொண்டு அதற்குள் பியூலா பண்ணி வைத்திருந்த சாண்ட்விச்சை சாப்பிட ஆரம்பித்தாள்.

“அம்மா நீ மொபைலை இங்கேயே வைச்சுட்டு போ. எனக்கு வேண்டும்” என்றவாறு மொபைலை எடுத்துக் கொண்டாள்.

“என்னமோ செய். என்னை யாராவது கூப்பிட்டால் நான் வீட்டிலியே மொபைலை வைச்சுட்டேன்னு சொல்லு. யார் போன் பண்றாங்கோன்னு கேட்டுக்கோ”

அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு, “நான் ஆஸ்பிட்டல் போயிட்டு ராத்திரிதான் வருவேன். பத்திரமா இரு” என்று சொல்லிவிட்டுத் தன் டிவிஎஸ் பிப்டி வண்டியில் வேகமாகச் சென்றாள். ஆரோக்கியமும் திடமான உடற்கட்டுடன் அவள் உடல் வனப்பு செழிப்பாக இருக்கும்.

“போச்சு இன்னைக்கு ஆரம்பமே லேட். எல்லாமே லேட்டாகத்தான் போகப் போகிறது” என்று மனசுக்குள் நினைத்தாள்.

முதலில் மடி பாட்டி வீட்டுக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததும், “ஏன் எஸ்தர் லேட்? அந்த ராட்சசி சாப்பிட எதுவும் கொடுக்காமல் என்னைப் பாடாப் படுத்தறாள்” என்று புகார் சொன்ன பாட்டியிடம், “நான் காஞ்சிபுரத்திலிருந்து இன்று காலைதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு பாட்டியைக் குளிக்கும் அறைக்குள் கொண்டு விட்டாள். பாட்டி மெல்லிய குரலில் ”நாராயணா நமோ நராயணா” என்று பகவான் நாமத்தைச் சொல்லிக்கொண்டே குளித்து முடிந்ததும் பாட்டிக்கு நைட்டியை மாட்டி, டையபரையும் போட்டு விட்டாள்.

“நீ வந்து டையபர் மாற்றும் வரை எதுவும் சாப்பிட கொடுக்க மாட்டேன் என்று சகுந்தலா என்னைப் பட்டினி போட்டாள். சாப்பிட்டால் நான் மலம் போய் விடுவேனாம். பாவி. நன்னா இருப்பாளா அவள்” என்று மருமகளைச் சபித்தாள். பாட்டி, நான் தான் வந்துட்டேன் இல்லையா? இனிமே உங்களை மாமி நல்லா கவனிச்சிப்பாங்க என்று வாயால் சொன்னாலும், பாவம் மருமகள் மாமியாரை நல்லா நடத்துவதில்லை என்று நினைத்தாள். அங்கு தன் வேலையை முடித்துவிட்டு பொம்மை பாட்டி வீட்டுக்குச் சென்றாள். அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது. அதற்கு நாலு வீடு தள்ளித்தான் அவள் வேலை செய்யும் ஆஸ்பத்திரி இருக்கிறது. பொம்மை பாட்டி எல்லாவற்றையும் மறந்து விட்ட பாட்டி. ஆனால் மலம் சிறுநீர் வரும்போது சொல்லிவிடுவாள். வீட்டில் இருக்கும் மகனோ அல்லது மருமகளோ அவளுக்கு ஒத்தாசை செய்வார்கள். மகன் அரசு வேலையிலிருந்து ரிடையர்ட் ஆகி வீட்டில் இருக்கிறார். மருமகள் வங்கியில் பணி செய்கிறாள். பாட்டியைக் குளிக்க வைத்து படுக்கையில் உட்கார வைத்து விட்டு வருவது எஸ்தரின் வேலை.

அவள் ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது பதினோரு மணி... சின்ன ஆஸ்பத்திரி. பத்து படுக்கைகள் கொண்டது. டாக்டர் சிவகுமார் கேன்சர் நோயால் மறைந்த தன் அன்னை வசந்தா நினைவாக அந்த ஆஸ்பத்திரியைக் கட்டி நோயாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை செய்கிறார். அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த ஆஸ்பத்திரி காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டு மணி வரை பிசியாக இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும் மருத்துவ வசதி உண்டு.

“ரமா, டாக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்கிறாரா?” என்று எஸ்தர் அவளுடன் கூட பணி புரியும் நர்ஸிடம் கேட்டாள்.

உனக்கு இன்னைக்கு நல்ல காலம். டாக்டர் இதுவரை வரவில்லை என்று சொல்லி கொண்டிருக்கும்போதே டாக்டர் சிவகுமார் வந்துவிட்டார். எஸ்தரைப் பார்த்து, நேற்று சாயங்காலம் வந்த கேன்சர் பேஷண்டை நல்லா கவனிச்சுங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் முதல் மாடிக்குப் போய்விட்டார்.

“அது யாருடி? புது பேஷண்ட்.. எப்போ வந்தாங்க?”

“நேற்று சாயந்தரம் நீ போன பிறகு அட்மிட் ஆனாங்க, ஐந்தாம் நம்பர் ரூமிலே இப்போ இருக்காங்க. பதினாறு ரேடியேஷன் பண்ணனுமாம். ஒரு மாசம் இங்கு இருக்க வேண்டியிருக்கும்” என்றாள் ரமா.

அப்போது அங்கே வந்த நர்ஸ் நளினி, நாலாம் நம்பர் பேஷ்ண்ட்டுக்கு காபி வேண்டுமாம். எஸ்தர் நீ போய் என்னன்னு கவனி என்று கூறவும், “சரி சிஸ்டர்” என்று கூறி விட்டு எஸ்தர் நாலாம் நம்பர் அறைக்குள் நுழைந்தாள். காபி வாங்கி பேஷ்ண்ட்டுக்கு கொடுத்து விட்டு ஐந்தாம் நம்பர் அறைக்குள் நுழைந்தாள்.

அங்குத் தலை மயிர் நரைத்த வயதான அம்மாள் விட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்மணியைப் பார்த்ததும், “இவங்களுக்காக கேன்சர்” என்று எஸ்தர் அவளுக்காகப் பரிதவித்தாள்.

“எப்படி இருக்கீங்க அம்மா ஏதாவது வேணுமா?” என்று கனிவுடன் கேட்டாள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.

“என் பெயர் விமலா. நான் நேற்று சாயந்தரம் அட்மிட் ஆனேன். எனக்கு கருப்பப்பை கேன்சர். ஆப்ரேஷன் செய்து கர்ப்பப்பையை எடுத்தாகி விட்டது. இங்கு ஒரு மாசம் தங்கி ரேடியேசன் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறேன். எனக்கு இரண்டு பசங்க. பெரியவன் அமெரிக்காவில் இருக்கிறான். சின்னவன் டெல்லியில் இருக்கிறான். என் கணவர் இறந்து பத்து வருடம் ஆகிறது. மத்திய அரசில் பெரிய வேலையில் இருந்தார். அவராலே எனக்கு மாசம் நாற்பதாயிரம் ரூபாய் பென்சன் வருகிறது. நான் தனியாக மாம்பலத்தில் வாடகை வீட்டில் இருக்கேன். என்னைப் பற்றியேச் சொல்லிண்டு இருக்கேன். உங்க பேர் என்ன? நீங்க இங்கே நர்ஸா இருக்கீங்களா?” என்று தன்னைப் பற்றிய விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னாள்.

என் பெயர் எஸ்தர். நீங்க நினைக்கிற மாதிரி நான் நர்ஸ் இல்ல. நான் இங்கே வேலை செய்யும் ஆயா. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கி வந்து கொடுப்பேன்” என்று சொல்லி விட்டு விமலாவின் படுக்கையைச் சீர்படுத்தினாள்.

“நீ நேர்த்தியாய் புடவை கட்டியிருக்கே. அழகாய் இருக்கே. உன்னைப் பார்த்து நா நர்ஸ்ன்னு நினைச்சேன்”

“நாந்தான் நர்ஸ் யுனிபார்ம் போடலியியே. நீங்கள் சீக்கிரம் நல்லா ஆயிடுவிங்க” என்ற எஸ்தர் தன் உடலில் சிலுவைக் குறியை இட்டுக்கொண்டாள்.

“எனக்கு மத்தியானம் சாப்பிட ஏதாவது வாங்கிண்டு வாங்க” என்று நூறு ரூபாய் பணத்தைப் பர்சிலிருந்து எடுத்துக் கொடுத்தாள் விமலா.

சில நாட்களில் எஸ்தரை மிகவும் பிடித்துப் போனதால் விமலா உள்ளன்போடு தன் உற்ற உறவினரிடம் பழகுவது போல் அவளிடம் பழகினாள். இருவருக்குள் நல்ல அன்யோன்யம் ஏற்பட்டது. விமலா தன் பசங்கள் தன்னிடம் ஒட்டுதல் இல்லாமல் இருப்பதைச் சொல்லி வருத்தத்துடன் பெரு மூச்சு விடுவாள். எஸ்தர் குடும்பம் நடத்தப் பணமில்லாமல் தான் படும் கஷ்டத்தைக் கூறி மனப்பாரத்தை இறக்கி வைப்பாள். விமலாவுக்கு நல்ல மனசு. சாப்பாடு, டிபன், காபி... எது வாங்கி வந்தாலும் எஸ்தருக்குப் பாதி கொடுத்து விடுவாள். வங்கியில் பத்து இலட்சம் பேலன்ஸ் இருக்கு. மாசம் பென்சனும் வருது. என் செலவை நானே பார்த்துக்கிறேன். என் பசங்க பெரிய வேலையிலே இருக்காணுங்க. எல்லாருக்கும் சொந்த வீடு இருக்கு. என் கிட்டே அவங்க எதையும் எதிர்பார்க்கல” என்று தாராளமாய் செலவு செய்வாள்.

“எப்போ எனக்கு உடம்பு குணம் ஆகி எப்போ நான் வீட்டுக்குப் போவேனோ…” என்றாள் விமலா.

“ஏம்மா உற்சாகம் இல்லாமச் சொல்றீங்க. உங்க உடம்பு சீக்கிரம் குணமாகிறதுக்கு ஒரு டிப்ஸ் தரேன். முதலாவது எனக்கு நல்லாயிடும்னு நீங்க உறுதியாய் நம்பனும். இரண்டாவது எனக்குக் குணம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று நீங்க நினைக்கணும். மூன்றாவது இந்த ஆஸ்பிட்டலை விட்டுக் குணம் ஆகிப் போவது போல் கற்பனையில் காணவேண்டும். இந்த மூன்றையும் செய்தால் நீங்க கண்டிப்பாச் சீக்கிரம் நல்லா ஆயிடுவீங்க”.

“அப்படியா ? எனக்கு இதுவரைக்கும் தெரியாதே. நீ சொல்வதைச் செய்கிறேன்”

அடுத்த நாள் எஸ்தர் மடி மாமி வீட்டுக்குப் போய் டையபர் மாற்றினாள். அவள் லாவகமாக செயல்பட்டதை பார்த்து மடி பாட்டி அதிசயப்பட்டாள். பத்து வருடம் ஒரே வேலையைச் செய்யும் போது திறமை தானாகவே வந்து விடுகிறது.

ரேடியேஷன் முடியும் தறுவாயில் வந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். விமலா சோகமாய் இருந்தைப் பார்த்து என்ன பாட்டி ஆஸ்பத்திரியை விட்டு போறோமே என்று வருத்தப்படறிங்களா? என்று கேட்டுச் சிரித்தாள்.

அதற்கு விமலா, நாளை என் இரண்டு பையன்களும் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள். அவர்கள் யாராவது ஒருவனுடன் போய் இருக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வளவு நாள் தனியாக இருந்து விட்டேன். எனக்கு பென்ஷன் வந்தாலும் என்னால் இனிமேல் தனியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. உன்னை விட்டு வெகு தொலைவு போகப் போகிறேன் என்று நினைக்கும் போது மனசுக்குக் கஷ்டமாயிருக்கிறது” என்றாள்.

ஒரு நாள் சாயந்தரம் விமலா இருந்த அறைக்குள் இரண்டு பேர் காரசாரமாய் உரத்த குரலில் விவாதித்து கொண்டிருந்தனர். ஏன், சண்டையே போட்டார்கள் என்று சொல்லலாம். அவர்கள் பேசியது அங்கிருந்த எஸ்தருக்குச் சிறிது விளங்கியது.

அவங்க இரண்டு பேரும் பென்சன் பாட்டியின் பசங்கள். ஒருவன் அமெரிக்காவில் இருக்கான். சின்னவன் டெல்லியில் இருக்கான். சிங்கப்பூரில் வேலை கிடைத்து நாலு நாட்களில் புதிய வேலையில் சேரப் போகிறான். யார் அம்மாவை பார்த்துக்கிறது? என்ற காரணத்தால்தான் வாக்குவாதம். “நீதான் அம்மாவைப் பார்த்துகணும்” என்று இரண்டு பேரும் தன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறாங்க என்றாள் ரமா மெதுவான குரலில்.

“நான் அமெரிக்காவில் இருக்கேன். அங்கே எப்படி நான் அம்மாவைக் கூப்பிட்டு போகிறது?” என்று பெரியவனும், “எனக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைச்சிருக்கு, நான் எப்படி உடனே அம்மாவை அங்கே அழைச்சிட்டு போறது. அதனாலே அம்மாவை நீ பார்த்துக்கோ” என்று சின்னவனும் ஒரு காரணம் சொல்வது கேட்டு எஸ்தர் மனசுக்குள் சிரித்தாள்.

இரண்டு மகன்களும் போன பிறகு அவளிடம், “உங்க மகன்கள் என்ன முடிவு எடுத்தார்கள்?” என்று வினவினாள் எஸ்தர்.

“அவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்களே தவிர, யார் என்னை அழைத்துக் கொண்டு போவார்கள் என்பதை சஸ்பென்ஸ் வைச்சுட்டு போயிருக்கானுங்க. அடுத்த வாரம் நா இந்த ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதுதான் நான் யார் கூடப் போகப் போகிறேங்கறது தெரியும்”

“எனக்கு நீங்க போறீங்களே என்று வருத்தமாய் இருக்கு”

“வருத்தப் படாதே. நான் அடிக்கடி உன்னை அலைபேசியில் தொடர்பு கொள்வேன்”

அன்று விமலா டிஸ்சார்ஜ் ஆகும் தினம். தன் கையில் வைத்திருந்த பணத்தைக் கொடுத்து ஆஸ்பத்திரிக்குச் செட்டில் பண்ணிவிட்டு, எஸ்தர், நீ என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டதற்கு நன்றி. உனக்கு நான் தரவேண்டிய பணம் வாங்கிக்கோ..” என்றதும் எஸ்தர் பணத்தை வாங்கிக் கொண்டாள்.

“நீ இரங்கா எனில் புகல் ஏது?” என்று உருக்கத்துடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த விமலாவின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் வழிந்தோடியது. அதைப் பார்த்த எஸ்தரின் முகத்தில் தோன்றியது இரக்கம்.

“இன்னும் யாரும் வரலையாம்மா?” கனிவுடன் கேட்டாள்.

“வருவாங்க, பாரேன்” என்று விமலா சொல்லிக் கொண்டிருக்கும் போது, பெரிய பையனின் சம்பந்தியும், அவர் மனைவியும் அவளறைக்குள் நுழைந்து இருவரையும் திடுக்கிட வைத்தார்கள்.

“உங்களை நினைச்சு ராத்திரி எல்லாம் நான் தூங்கவே இல்லை” என்றாள் சம்பந்தி அம்மா. அதைக் கேட்டு எஸ்தருக்குச் சிரிப்பு வந்தது. சம்பந்தி ஐயாவும் தன் பங்குக்கு “உங்க பெரிய மகன் அதாவது மாப்பிள்ளை எல்லா விஷயத்தையும் எனக்குச் சொன்னார். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்க நாங்க காரிலே வந்திருக்கோம். வாங்க போகலாம்” என்று சொன்னதைக் கேட்டு எஸ்தர் முகத்தை வேறு பக்கம் திருப்பித் தன் வாயில் கையைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

“என்னை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்குச் சிரமம் வேண்டாம்” என்று விமலா நாசுக்காக மறுத்ததும் அவர்கள் வற்புறுத்தாமல் உடனே போய் விட்டார்கள்.

சோகமான சூழ்நிலை இருக்கும்போது, இடுக்கண் வரும்போது நகுக என்பதற்காகவே ஏதாவது ஒர் சம்பவத்தை நடத்துவது இறைவனின் இயல்பு போலும்.

அவர்கள் போனதும், “அம்மா உங்க மகனுக்குப் போன் பண்ணுங்க. என்ன சொல்றாங்கன்னு கேளுங்க” என்றாள் எஸ்தர்.

“நா போன் பண்ணிட்டேன். பெரியவன், “தம்பி பார்த்துப்பான்” என்று அமெரிக்கா போய்விட்டான் என்று தெரிந்தது. பாவம் அவன் என்ன பண்ணுவான். அமெரிக்காவில் டாக்டரிடம் போனால் நிறையச் செலவாகிவிடும். அதனால் என்னை அமெரிக்காவுக்குக் கூட்டிப் போவதில் அவனுக்குத் தயக்கம். சின்னவன் சிங்கப்பூரில் புது வேலையில் சேர்ந்து விட்டது தெரிந்தது. அவன் மனைவிக்கும் அவன் வேலை செய்யும் கம்பெனியிலேயே வேலை கிடைத்து விட்டதாம். நீ நல்லா இரு என்று வாழ்த்தினேன்” என்று சொல்லிச் சந்தோசப்பட்டாள். எங்காவது தாயுள்ளம் குற்றம் பார்க்குமா…?

“பெத்த மனம் பித்து” என்று எஸ்தர் தொடங்கியதும் விமலா குறுக்கிட்டு, “பிள்ள மனம் கல்லு என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். யதார்த்தத்தைத்தான் நாம் பாக்கணும். என் பிள்ளைகளை நான் எப்பவுமே குறை சொல்ல மாட்டேன். நான் இவ்வளவு நாள் தனியாகவே இருந்து விட்டதாலே என்னால் தனியாக இருந்து சமாளித்து விட முடியும்” என்று என் இரண்டு பையன்களும் நினைக்கிறார்கள் போல் இருக்கிறது” என்றாள் விமலா விட்டுக் கொடுக்காமல்.

“நீங்க என்ன செய்ய போறீங்கம்மா?”

“எனக்கு கேன்சர் இருக்கறதாலே என்னால் தனியாக இருக்க முடியாது. யாரிடம் தஞ்சம் புகுவது? என்ன செய்வதென்று தெரியல”

எஸ்தர் சிறிது யோசித்தாள்.

“அம்மா, இவ்வளவு நாள் பழகின உரிமையில் உங்களைத் தாயென நினைந்து ஒண்ணு கேட்கறேன். நீங்க என் வீட்டில் இருக்கலாமே. என் அறையில் உங்களுக்காக ஒரு ஆஸ்பிடல் கட்டிலை போட்டு விடுகிறேன். மருந்து கொடுப்பது, டாக்டரிடம் அழைத்துப் போவது... வேண்டிய உதவியை வேலைக்குப் போய்க் கொண்டே பண்ணுகிறேன். தயவு செய்து மாட்டேன் என்று சொல்லி விடாதீர்கள்”என்றாள்.

“எஸ்தர், நீ என்ன சொல்றே? உன் கூட இருப்பது எனக்குச் சம்மதம்தான். ஆனால்...” என்று இழுத்தாள் விமலா.

“என்ன ஆனால்... எனக்குத் தெரியும், நான் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவள் என்றுதானே யோசிக்கிறீங்க. நா உங்களை என் அம்மாவாகத்தான் பார்க்கிறேன்”

“சே! சே !! அதுக்கில்லை.’யாவரும் கேளிர்’என்று நினைப்பவள் நான். மதமான பேய் என்னைப் பிடிக்கவில்லை. நீ உதவி செய்ய முன் வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. திடீரென்று உன் கணவர் வந்து விட்டால்...? என்பதற்காகத்தான் தயங்குகிறேன்”

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. குழந்தைகள் பியூலா, ஜேம்ஸ் இரண்டு பேரும் நீங்க என் கூட இருந்தா நிச்சயமாச் சந்தோசப்படுவாங்க. என் கணவர் வருவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். ஒருவேளை அவர் சீக்கிரம் வந்து விட்டாலும், உங்களுக்கு வேறு வழி ஏற்பாடு செய்து விடலாம். ஒரு சன்னல் மூடினால் இன்னொரு சன்னல் திறக்கும்” என்றவள், பொண்ணுக்கு ஒரு பொண்ணு செய்யும் உதவியை மறுக்காதீங்க. உங்கள் மகன்கள் எதுவும் சொல்ல மாட்டார்களே?”

“என் பசங்க ஒண்ணும் சொல்ல மாட்டார்கள். தெய்வம் உதவி செஞ்சிருக்குன்னு எண்ணிச் சந்தோசப்படுவார்கள் ”நா இன்னும் எவ்வளவு மாசம் உயிரோடு இருக்கப் போறேனோ தெரியல. நா வாழ்வதற்கு யாருடைய துணையாவது எனக்கு வேண்டியிருக்கு. நீ மகள் போல என் மேலே பிரியமாய் இருக்கே. அதனாலே உன் கிட்டே அடைக்கலம் கோருகிறேன். நீ மனிதாபிமானத்தோடு செய்யப் போகும் தொண்டிற்கு உனக்குக் கோடி புண்ணியம். எனக்குத் தாராளமாய் பென்சன் வருகிறது. நீ கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுகிறேன். உன்னுடைய பணப் பிரச்சனையும் கொஞ்சம் குறையும்”

"நா போய் பெரிய டாக்டரிடம் போய் ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நெஞ்சில் நிறைவுடன், உவகையுடன் முதல் மாடிக்கு ஓடிச் சென்ற எஸ்தரை, ”மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அசாதாரண பெண் இவள்” என்று நினைத்த விமலாவின் கண்கள் பனித்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p296.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License