“ராமேஸ்வரம் போயிட்டு வந்திட்டுதான் காசிக்குப் போகணும்னு யார் சொல்லி வச்சாங்க” என்று கேட்டேன்.
அதற்கு என் மனைவி, “அதெல்லாம் தெரியாது. அப்படித்தான் வழக்கம்” என்றாள்.
“அதுசரி, இதுமாதிரி எந்தப் புராணத்திலாவது இல்ல, சாஸ்திரத்திலாவது சொல்லி வச்சிருக்காங்களா?”
“இந்த விதண்டாவாதங்கள்ளாம் பேசினா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. வேணும்னா ஒங்க நண்பரு மதுரை வக்கீல் வரது கிட்டக் கேட்டுப் பாருங்க; அவருக்கு எல்லாம் தெரியும்;
“அப்ப எனக்கு ஒண்ணும் தெரியாதுன்ற” என்று நான் கேட்டதற்கு, அதை நான் வேற என் வாயால சொல்லணுமா? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஒரு மூன்று மாதங்கள் முன்னர் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எல்லாம் ஒரு யாத்ரா டிராவல்ஸ் மூலம் போய் வந்தோம். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வேறொரு சுற்றுலா போகப் போவதாகத் தகவல் அனுப்பி இருந்தார்கள். அதில் ஆக்ரா, குருக்ஷேத்திரம் ஆகியவற்றுடன் காசி, கயா, திரிவேணி சங்கமம் இருந்தன. அதைப் பார்த்தவுடன் அவள் பிடித்துக் கொண்டாள்.
“ஏங்க இதுல கயா காசி போயிட்டு வந்திடணுங்க”
“ஏம்மா நாம்பதான் முன்ன காசி போயிட்டு வந்துட்டமே”
“ஆமா, முக்திநாத் போனபோது போய்ட்டுத்தான் வந்தோம். ஆனா அங்க எதுவுமே செய்யல. இந்தத் தடவை ஒங்க அப்பா அம்மாவுக்கு அங்க திதி குடுத்துட்டு வந்துடணும்”
“சரி” என்று நானும் ஒத்துக்கொண்டு அந்த டிராவல்ஸ் கம்பெனியிடம் முன் பணம் அனுப்பிப் பதிவு செய்துவிட்டேன். அதற்கப்புறம்தான் காசிக்குப் போகும் முன் ராமேஸ்வரம் போகணுமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் வீட்டில் நடந்தது. இப்போது நடுவர் பொறுப்பு மதுரை வரதராஜனிடம் தள்ளிவிடப்பட்டது.
அந்த நடுவரின் தகுதி பற்றியும் சொல்லியாக வேண்டும் அல்லவா? அவன் என் கூடப் படித்தவன். இப்பொழுது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறான்.
இந்த வேதங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் பாடம் கேட்டு எழுத்தெண்ணிப் படித்தவன். அவன் சொல்லும் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று என் மனைவிக்கு மட்டுமன்று; எனக்கும் சரியாகவே இருக்கும்.
இது போன்ற விஷயங்களில் அவ்வப்போது அவன் ஆலோசனைகளைக் கேட்பதும் உண்டு. அதேபோல, இப்பொழுதும் கேட்க அவன் என் மனைவியின் கட்சிக்கேத் தீர்ப்பளித்தான்.
“ஆமாம், மொதல்ல ராமேஸ்வரம் போகணும்; அங்க மண்ணெடுத்துகிட்டு வரணும். அதைக் கொண்டு போய்க் காசியில கரைக்கணும். காசியிலேந்து எடுத்துகிட்டு வந்த ஜலத்தை மறுபடியும் ராமேஸ்வரம் வந்து அபிஷேகம் செய்யணும்” என்று அவன் சொல்ல, “இது என்ன சாஸ்திரமா? என்று நான் கேட்க,
“சிலதெல்லாம் சாஸ்திரத்துல இருக்காது; பரம்பரை வழக்கம்னு ஒண்ணு இருக்கில்ல; நீ எந்தக் கவலையும்பட வேண்டாம்; ராமேஸ்வரத்துல மடத்துல இருக்கற மேனேஜர் கோபால்சாமி எனக்கு வேண்டியவர்; நான் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு தரேன்” என்றான்.
அதேபோல ஏற்பாடுகளும் செய்துவிட்டுத் தகவலும் தெரிவித்து விட்டான்.
நாங்கள் இராமேஸ்வரம் போய் இறங்கும் போது மணி ஆறு இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் மிகவும் தூய்மையாய் அழகாய் இருந்தது. கடைசியாக நான் எப்பொழுது இங்கு வந்தோம் என நினைத்தேன்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது வந்ததுதான். அதாவது பெரிய புயல் ஒன்று அடித்ததே; அதற்கு முன் இங்கு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. தேநீர் குடித்துவிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தோம். தேநீர்க்கடைக்காரர் மடத்துக்கு ஆட்டோவில்தான் போக வேண்டும் என்று கூறிவிட்டார். ஏழெட்டு ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிடம் கோபித்துக் கொண்டது போல ஒரு குதிரைவண்டியும் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தது.
நாமும் குதிரை வண்டியில் போய் வருடக்கணக்கில் ஆகிவிட்டதே என நினைத்தேன். மனைவியும் ஒப்புக்கொள்ள குதிரை வண்டிக்காரரிடம் போய்க் கேட்டேன்.
அவர், “மடத்துக்கிட்ட இப்ப வண்டி ஆட்டோல்லாம் போறதில்லீங்க; மேலவீதி மூலையிலதான் எறக்கி விடுவோம்” என்றார்.
“அங்கேந்து நடந்துதான் போகணுமா? எவ்வளவு தூரம் இருக்கும்”
“ஒரு பதினைஞ்சு நிமிஷம்தான் நடக்கணுங்க”
“சரிப்பா: எவ்வளவு கேக்கற?”
“ஆட்டோவுக்குத் தர்றது தாங்க; ஐம்பதுரூபாதான்”
குதிரை வண்டியில் ஏறியதை எல்லாரும் வியப்புடன் பார்த்தார்கள்.
“என்ன இது? இவை இரண்டும் பைத்தியங்களோ” என்று நினைத்திருப்பார்கள். உலகியலில் பிறர் செய்யாததைச் செய்வதுதானே பைத்தியத்தின் வேலை.
மடத்தில் மேனேஜர் கோபால்சாமி தயாராக இருந்தார்.
“வாங்க வாங்க மதுரை வக்கீல் சொன்னவங்கதானே? ஒங்க ரெண்டு பேருக்குமே மூட்டுவலியாமே? அதால மாடிவேணாம்னு கீழேயே நாலாம் அறை போட்டிருக்கேன்” என்றார் சிரித்துக் கொண்டே.
நமது முட்டிவலி நமக்கு முன்னர் ராமேஸ்வரம் வந்து சேர்ந்து புண்ணியம் தேடிக்கொண்டு விட்டதே என நினைத்துக் கொண்டேன். அவரே ”ஒங்களுக்கு என்னா செய்யணும்” என்று கேட்டார்.
“நாங்க காசிக்குப் போகப் போறோம்; அதுக்கு இங்க என்ன செய்யணுமோ செஞ்சு வைக்கணும்” என்றாள் என் மனைவி.
“அப்படியா, அதுக்கு இங்கேந்து மண் எடுத்துகிட்டுப் போகணும். அதுக்காக ஒரு சங்கல்பம் செய்யணும். ஆயிரத்து இருநூத்தி ஐம்பது கட்டணும்” என்றார்.
நான் பணத்தை எடுக்கப் பையைத் திறந்த போது, “இப்ப வேணாம், எல்லாம் முடிஞ்சா கொடுத்தா போதும். மீதியை இதோ இருக்காரே சுரேஷ்; அவர்கிட்ட கேட்டுக்குங்க” என்று கூறி விட்டார்.
சுரேஷ் பார்ப்பதற்கு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சாஸ்திரிகள் போல இருந்தார். நான் சிறுவனாக இருக்கும் போது சாஸ்திரிகள் பேரெல்லாம் வெங்கட்ராமன், சாம்பசிவம், நரசிம்மன் என்றுதான் இருக்கும். இப்போது கால மாற்றத்தால் சுரேஷ், ரமேஷ், கிஷோர் என்றெல்லாம் வந்துவிட்டது என எண்ணிக் கொண்டேன்.
அவர், “நேரே போய் சமுத்ரத்துல ஸ்நானம் செஞ்சுட்டு வாங்க, அப்பறம் கோயில் உள்ள போயி எல்லா தீர்த்தத்திலும் ஜலம் தெளிச்சுண்டு வரணும். அப்பறம் கடற்கரையிலேந்து ஈரமணலை எடுத்துக்கிட்டு வரணும். அப்பறம்தான் சங்கல்பம் செய்யணும்” என்றார்.
அத்துடன் சீக்கிரமாகக் கோயில் தீர்த்தங்களில் ஜலம் தெளித்துக் கொள்ள ஓர் ஆளையும் ஏற்படுத்தித் தந்தார்.
சங்கல்பத்துக்கு உட்காரும்போது சுரேஷ், ”காசிக்கு மணல் எடுத்துக்கிட்டுப் போகச்சே பிதுர்களுக்கு ஒரு சிரார்த்தம் ஹிரண்யமா செய்யறதும் நல்லது” என்றார். ஹிரண்யம் என்பது இரண்டு பேருக்கு உணவளிக்காமல் தட்சணை மட்டும் தந்து திதி கொடுப்பது ஆகும். இப்பொழுது யாருமே பெரும்பாலும் உணவளித்து முழுமையாக திதி கொடுப்பதில்லை. எல்லாரும் வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் வீடுகளிலேயே ஹிரண்யம்தான்.
“அதுக்கு எவ்வளவு ஆகும்?” என்று கேட்டேன்.
சுரேஷ், ”கூட ஒரு ஆயிரத்து நூத்தி ஐம்பது ஆகும். என்னோட இன்னொருத்தரையும் உக்கார வச்சு செய்யணும்” என்று சொல்ல, என் மனைவி உடனேயே “சரி, அப்படியேச் செஞ்சுடலாம்” என்று சொல்லிவிட்டாள்.
உடனே சுரேஷ், சிரார்த்தம் செய்யறத மேனேஜர் கிட்டயோ மதுரை வக்கீல் கிட்டயோ சொல்லிடாதீங்க; ஏன்னா, எனக்கு அவா ரொம்ப கொறைச்சுதான் குடுப்பா? என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
சுரேஷ் எல்லாவற்றையும் நன்றாகவேச் செய்தார். கொண்டு வந்த ஈர மணலில் மூன்று சிவலிங்கங்களை என் மனைவி கையால் பிடிக்கச் செய்தார். ஒவ்வொன்றுக்கும் மந்திரங்கள் சொல்லச் செய்து என் கையாலேயே பால், தேன், அபிஷேகங்களும் பூக்களால் அர்ச்சனைகளும் செய்து வைத்தார். முடியும் போது, “இதோ பாருங்க, இந்த நடுலிங்கத்தைக் கொண்டு போய் இங்கயே கரைச்சுடணும், வலது பக்கலிங்கத்தைக் கொண்டு போயி காசியிலயும், இடது பக்கத்தைத் திரிவேணிசங்கமத்திலேயும் கரைச்சுடணும்” என்றார்.
தட்சணை கொடுக்கும் போது ”கூடக் கொஞ்ச ம்சேத்து கூடக் கொடுக்கலாம் ஒங்க இஷ்டம்” என்றார். நானும் எல்லாம் எனக்குத் திருப்தியாய் இருந்ததால் மூவாயிரமாகவே கொடுத்து விட்டேன்.
”மறுபடியும் நீங்க காசியிலேந்து ஜலம் கொண்டு வரச்சே எனக்கு போன் செய்யுங்க; நானே இங்க எல்ல ஏற்பாடுகளும் செஞ்சு தரேன்” என்று சொல்லி அவர் எண்ணையும் கொடுத்தார்.
ஒரு வழியாகக் காசிக்குப் போகும் சாமான்களில் இரண்டு லிங்கங்களும் சேர்ந்து கொண்டு விட்டன. ஹரித்வாரை முடித்துவிட்டுக் கயா சென்றோம். அங்கே பல்குனி ஆற்றங்கரையில் பிண்டம் போட்டுத் திதி கொடுத்தோம். மூவாயிரம் மொத்தமாக வாங்கிக் கொண்டு எங்களுடன் இன்னும் இருவருக்கும் உணவளித்துத் திதி கொடுக்கச் செய்தனர்.
மறுநாள் காசிக்குச் சென்றோம்.
கங்கையில் தண்ணீரே மிகக் குறைவு. அங்கே ஒரு லிங்கத்தை இருவரும் சேர்ந்து கரைத்தோம். பிறகு,திரிவேணி சங்கமம். அங்கே படகில் சென்று அக்கரையில் இடுப்பளவு நீரில் நின்று கொண்டு மற்றொரு லிங்கத்தைக் கரைத்தோம். பிறகு, அல்காபாத் சென்று ஜவகர் பிறந்த இல்லம் முதலானவை பார்த்து இரவு காசி திரும்பினோம். சுற்றுலா அமைப்பாளர்களுக்கு எல்லாருடனும் தொடர்பு இருந்தது. அவர்களே அங்கே ஒரு சாஸ்திரிகள் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தவீடு நாங்கள் தங்கியிருந்த கட்டடத்திற்குப் பக்கத்தில் இருந்தது. அதைவிட அவ்வீட்டிற்கு எதிரேதான் பாரதியார் தங்கியிருந்த இல்லம் இருந்தது. ஆனால், பாரதியார் தங்கியிருந்தார் என்பதற்கான அறிவிப்பு எதுவுமே அங்கில்லாதது வருத்தத்தைத் தந்தது. அந்த சாஸ்திரிகள் மொத்தம் ஐயாயிரம் கேட்டார்.
“நாங்கள் பதினோரு பேருக்குச் சாப்பாடு போட்டுச் செய்வோம். நீங்களும் இங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றார்.
என் மனைவி உடனே நாங்கள் வேட்டிகள், தீபங்கள், தீர்த்த பாத்திரங்கள் வாங்கி வந்துள்ளோம்” என்றாள். அவர் உடனே அதற்காக நாங்கள் ஒன்றும் குறைத்துக் கொள்ள மாட்டோம்; நீங்கள் உங்கள் திருப்திக்குக் கொடுத்து விடுங்கள்” என்றார். நானும் ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக, “ஆமாம், கொண்டு வந்ததைத் திருப்பி எப்படி எடுத்துச் செல்வது” என்று கேட்டுவிட்டு, மேலும்” ஹோமம் உண்டா” என்றேன். அதற்கு அவர் ”காசி சிரார்த்தத்தில் எப்பொழுதும் ஹோமமே கிடையாது என்றார்.
சுமார் இரண்டு மணி நேரம் அவர் மிகவும் மனத்திற்குத் திருப்தி ஏற்படும் வகையில் எல்லாம் செய்து முடித்தார். பதினோரு பேரும் நன்றாகவேச் சாப்பிட்டனர். அதுவே எமக்கு மனநிறைவாக இருந்தது. அத்துடன் சுற்றுலா இனிதே முடிந்தது. காசியில் மூன்று கங்கை தீர்த்தச் சொம்புகள் வாங்கிக் கொண்டோம்.
இரவு பத்தரைக்குத்தான் ரயில்.
சிற்றுண்டி முடித்து உட்கார்ந்திருந்தபோதுதான் என் மனைவிக்குத் திடீரென ராமேஸ்வரம் செல்ல வேண்டுமே என்ற நினைவு வந்த்து. சுற்றுலா அமைப்பாளர் பேசும் போது, வீட்டிற்குப் போய் உடனேயே ராமேஸ்வரம் எல்லாரும் போய்விட்டு வந்துவிடுங்கள், ரொம்பநாள் தள்ளிப் போடாதீர்கள்”என்று வேறு சொல்லிவிட்டார். எனவே அவள் ஆரம்பித்தாள்.
”ஏங்க, அந்தசுரேஷ்; அவரே ஏற்பாடு எல்லாம் செய்யறேன்னு சொன்னாரே; அவருகிட்டயேச் சொல்லிடுங்க” என்றாள்.
நான் உடனே என் மூத்த மகனிடம் பேசி, அடுத்த வெள்ளி ராமேஸ்வரம் செல்ல முன்பதிவு செய்யச் சொல்லிவிட்டுச் சுரேஷிடம் பேசினேன்.
“அலோ யாருங்க?” என்று கேட்டார்.
”என்னை ஞாபகம் இருக்குதுங்களா? காசிக்குப் போறதுக்கு முன்னால அங்கவந்து ஹிரண்ய சிரார்த்தமும் சங்கல்பமும் செய்துகிட்டுப் போனேனே? நீங்க கூட மதுரை வக்கீல்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னீங்களே?”
அதைச் சொன்னவுடன் அவருக்கு உடனே நினைவு வந்துவிட்டது, உடனேயே “ஆமாமா, நல்லா நினைவிருக்கு; இப்ப என்னா வேணும் சொல்லுங்கோ”
”காசிக்கு நல்லபடியாப் போயிட்டு வந்துட்டோம். அடுத்த வெள்ளி அங்க வர்றோம்; அங்க என்னா செய்யணுமோ அதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சுடுங்க” என்றேன்.
அதற்கு அவர் உடனேயே, “அடுத்த வெள்ளி மடத்துல அறையே காலியில்ல; யாருக்கோ சஷ்டி அப்த பூர்த்தியாம்; மேலேந்து சிபாரிசு வாங்கியாந்து எல்லா அறையுமே எடுத்தாச்சு; நான் ஒங்களுக்கு வெளியில போடறேன்” என்றார்.
”கோயிலுக்குப் பக்கத்துலயேப் போடுங்க; ரொம்பவும் அதிக வாடகை வேணாம்” என்றேன்.
”ஏசின்னா ரெண்டாயிரம் ஆவும் இல்லன்னா ஆயிரம்தான்” என்றார்.
”அப்பறம் அங்க என்னா செய்யணும்?”
“அதே மாதிரி சங்கல்பம், ஹிரண்ய சிரார்த்தம் செய்யணும்; அதுக்கு ஒரு நாலாயிரம் ஆகும்”
“முன்னாடி வந்தப்ப மூவாயிரம்தான் தந்த மாதிரி ஞாபகம்” என்றேன்.
“அதெல்லாம் இல்ல. மூவாயிரம்தான் அப்பறம் கங்கை சொம்பை வச்சு ருத்ரம் சொல்லணும்; அதுக்குப் பதினோரு பேர் வேணும். அவாளுக்குத் தலா ஐநூறு தரணும்; அதுக்குச் செஞ்சு வைக்க இரண்டாயிரம் ஆகும்”
“ஏன் மூணு பேரை வச்சுச் சொல்லக்கூடாதா?”
“என்னா இப்படிக் கேக்கறீங்க? ஒருத்தர் கூடவே போதும்; எல்லாம் ஒங்க இஷ்டம்தான்: ஒண்ணுமே செய்யாமக் கூட நேரேக் கோயில்ல போயி கங்கை சொம்பைக் கொடுத்திடலாம்” என்றார்.
அவருக்கு லேசாகக் கோபம் வந்துவிட்டதைப் புரிந்து கொண்டேன்.
“சரி, நான் ஒங்களுக்கு எப்ப நினைவூட்டணும்” என்று கேட்டார்.
“ நீங்க ரயில்ஏறும்போது சொன்னாக் கூடப் போதும்” என்றார்.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவ்வளவு ரூபாய் ஆகுமா? என்று யோசித்தோம்.
“அவர் கணக்குப்படி அவருக்கே பத்துலேந்து பதினொண்ணு ஆகும் போல இருக்கே; அதுவும் அறை வாடகை இல்லாம” என்றேன்.
“எனக்கும் புரியல. அன்னிக்கு நல்லா செஞ்சு வச்சாரே: மடத்துல கொஞ்சமாத்தான் குடுப்பாங்கன்னு வேற சொன்னரே! அவருக்குத்தான் நம்ம காசு போய்ச் சேரட்டுமேன்னுதான் கேட்கச் சொன்னேன். ஆனாலும் அவர் இப்படிக் கறக்கறாரே?”
அதற்குள் எல்லாரும் தங்கள் சுமைகளுடன் ரயில் நிலையம் கிளம்பத் தொடங்கினார்கள்.
ரயில் சென்னைக்கு நான்கு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
மறுநாள் காலையில் பயண அலுப்புத் தீர காலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, “எதுக்கும் நீங்க மதுரை வரது கிட்டப் பேசிப் பாருங்களேன்” என்றாள் என் மனைவி.
“அதுவும் சரிதான்”என்று வரதுவிடம் பேசினேன்.
“இன்னும் ஒரு மணி நேரத்துல மேனேஜர் கிட்டப் பேசிட்டு நான் சொல்லறேன்” என்றான் வரது.
அதற்குப்பிறகு வரது பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
“மேனேஜர் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அறையெல்லாம் போட்டுத் தராறாம்” என்று பேசும் போதே நான் குறுக்கிட்டேன்.
“எங்க மடத்துலதானே?
”ஆமாம், வேற எங்காவது வேணுமா?”
“இல்ல அங்கியே இருக்கட்டும்”
”அப்பறம் அவங்க இங்க வரட்டும்; நான் முன்ன மாதிரி எல்லாம் செஞ்சு வைக்கிறேன்னு சொல்லியிருக்கார்” என்றான் வரது.
“என்னாங்க அவரு அங்க அறையே காலியில்லன்னு சொன்னாரே” என்று என் மனைவி கேட்டதற்கு யாரைக் குறை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
சுரேஷிடம் இப்பொழுது வரவில்லை என்று மாத்திரம் சொல்லிவிட்டேன். ராமேஸ்வரத்தில் நேரே பார்த்துவிட்டால் ஏதாவது சொல்லித் தப்பித்துக் கொள்ள எண்ணம்தான்.
ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்ததும், மேனேஜர் “ஒங்களுக்கு நீங்க முன்னாடி தங்கின அறையேப் போட்டிருக்கேன்; சொல்லுங்க ஒங்களுக்கு என்னா செய்யணும்?”என்று கேட்டார்.
“நாங்க காசிக்குப் போயிட்டு வந்துட்டோம் கங்கை சொம்பு கொண்டாந்திருக்கோம்.கோயில்ல போயி அதை சாமிக்கு அபிஷேகம் செய்யணும்; அதுக்கு முன்னாடி இங்க என்னா செய்யணும்?”
“முன்ன இங்க வந்தபோது என்னா செஞ்சீங்க” என்று கேட்டார்.
“இங்க சங்கல்பம் செஞ்சோம்; ஹிரண்யமும் செஞ்சோம்”
“கயாவிலும், காசியிலும் என்னா செஞ்சீங்க?”
“கயாவில மூணு பேருக்குச் சாப்பாடு போட்டுப் பிண்ட சிரார்த்தம் செஞ்சோம். காசியில பதினோரு பேரு சாப்பாடு போட்டு சிரார்த்தம் திருப்தியாச் செஞ்சோம். இங்க முடிந்தவுடன் வீட்ல போயி ரெண்டு பேரைக் கூப்பிட்டுப் பூஜை செஞ்சு சமாராதனை செய்யப் போறோம்”
“போறுமே; அவ்வளவுதான்”
“இங்க சங்கல்பம், சிரார்த்தம் எல்லாம் கிடையாதா?”
”யாராவது எதுவாவது சொல்வாங்க; எத்தனை தடவை சங்கல்ப ம்சிரார்த்தம் செய்யணும்? வீட்டுக்குப் போயிதான் சமாராதனை வேற செய்யப் போறீங்க; இது போதும்,போயி சமுத்ர ஸ்நானம் செஞ்சுட்டுக் கோயில்ல போயி ரெண்டு பேரும் எல்லாத் தீர்த்தங்களிலும் குளிச்சுட்டு வாங்க; அப்பறம் சாயந்தரம் கோயிலுக்குப் போங்க; அப்பதான் கூட்டம் இருக்காது; ஒங்க சொம்பை வாங்கி ஒங்க கண் முன்னாடியேச் சாமிக்கு அபிஷேகம் செய்வாங்க என்று முடிவாகக் கூறிவிட்டார்.
எல்லாம் அவர் சொன்னபடிக்கேச் செய்து முடித்துவிட்டு இரவு ரயிலில் கிளம்பும்போது ஏனோ தெரியவில்லை. மனம் மிகவும் கனமாய்த்தான் இருந்தது.