அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும் யாராயினும் அவளருகேச் செல்ல சிறிது யோசிக்கத்தான் செய்வார்கள். அன்று அமாவாசை தினம் என்பதால் கடல் சற்று ஆக்ரோசமாகவே இருந்தது. ஆனால் அதை விஞ்சும் ஆக்ரோசம் சுனாமியாக அவளது மனதில் தாண்டவம் ஆடி கண்கள் வழியாகக் கொப்பளித்தது.
அந்தக் கடற்கரை மணலில் கடல் அலைகளின் கைகளுக்கு எட்டாதவாறு அமர்ந்து வெகு தூரத்துப் புள்ளியில் கடலோடு இணையும் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா. அவளது சிந்தனைகள் மற்றும் செயல்கள் அனைத்திற்கும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கச் சுற்றம் எப்போதுமே தயங்கியது இல்லை. அதற்கு அவர்களிடம் எண்ணிலடங்கா துரு ஏறிய பழங்காரணங்கள் கொட்டிக்கிடந்தன.
அடங்கொன்னா ஆற்றல்களுக்கெல்லாம் பெண்களின் பெயரைச் சூட்டுவது மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும் அங்கிகாரமா?
உடல்ரீதியான ஈர்ப்புக்கும் மனரீதியான பகிர்தலுக்கும் ஒரு துணை தேவை என்பது இயற்கை. ஆனால், இன்றளவும் அந்தத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கூட அவளுக்கான பங்கீடு என்பது மிகச் சொற்பமாக இருக்கும் சமுதாயத்தில். நமது கருத்தை ஏற்காதது வியப்பொன்றும் இல்லை. ஆனால் மிக மோசமாகக் காயப்பட்டதற்குப் பின்பும் புராதனக் காரணங்களையும் இந்தச் சமூகக் கட்டமைப்பையும் காரணம் காட்டி மேற்கொண்டு சமாதானம் செய்து கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
பெண்ணியத்தை வரையறுக்க முடியுமா? பெண்ணிற்கும் பெண்ணியத்துக்குமான வரையறை என்பதை யாரோ ஒருவர் தீர்மானிப்பது பிறவியிலேயே பார்வைத் திறன் அற்ற ஒருவர் யானையை விவரிப்பதற்குச் சமம் ஆகாதா? ஒரு பெண்ணின் அலுவல் பணி என்பது அவளது சுயமரியாதை என்பதையும் தாண்டி அவளுக்கான அனுபவத்தையும் அறிவையும் விஸ்த்தரிக்கும் கருவி அல்லவா. அதைப் பறித்து ஏதேதோ காரணம் காட்டி அடுப்பங்கறையிலும், படுக்கையறையிலும் அடைக்க நினைக்கும் இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது.
இப்படிப் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த அவளது பார்வை, வெளியோடு கலக்கும் சுவாசம் போலக் கடலோடு கலந்து கொண்டிருந்த சூரியனின் மேல் விழுந்தது. இப்படி ஒரு மதி மயக்கும் மாலை நேரத்தில் தான் அவனைப் பார்த்தாள் கண்ணம்மா.
அதுவும் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு. வீட்டில் பெண்பார்க்கும் சம்பிரதாயத்தில் அவளுக்கிருந்த உவர்ப்பு அந்தச் சந்திப்பை இந்தக் கடற்கரை கோவிலில் நிகழ்த்தியது.
மேலும் ஒரு மணித்துளி சந்திப்புக்குப் பின் சம்மதம் தெரிவிக்க மறுத்தவள் அவனோடு பேசிப் பழகாத திருமணத்தைக் கேள்விக்குள்ளாக்கினாள். நான்குபெண்குழந்தைகளின் ஏழைத் தந்தையான எழுத்தர் பார்த்தசாரதிக்கு தனது மூத்த மகளைச் சம்மதிக்க வைக்க அவள் மூத்தவள் என்பதே போதுமானதாக இருந்தது.
திருமணத்திற்குக் கண்ணம்மாவின் ஒரே நிபந்தனை திருமணத்திற்குப் பிறகும் அலுவலகப் பணியைத் தொடர வேண்டும் என்பதே...
பெரும்பான்மையானோர்களுக்கு வேலை என்பது பணம் ஈட்டும் வழி அவ்வளவே. ஆனால் ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் வேலை உணர்வோடு கலந்து உதிரத்தில் ஓடுவது. அவர்களைப் பொருத்தவரை அதில் கிடைக்கும் வருமானம் பெரிதல்ல ஆனால் ஆத்ம திருப்தி...
கண்ணம்மா இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவள். நண்பர்கள் எல்லோரும் பொறியியல் மற்றும் மருத்துவத்தின் பின் ஓடிய போது தனது விருப்பமான வரலாறு பாடத்தைத் தேர்ந்தெடுத்தவள். நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் போட்டித் தேர்வில் வென்று இந்தியத் தொல்பொருள் துறையில் சமீபத்தில் தான் வேலை கிடைத்தது.
பணியைத் தொடருவதில் ஆட்சேபனை இல்லை என்ற பதில் அவளைத் திருப்திபடுத்தியிருந்தது. அதுமட்டுமல்ல ரகுவரன் அந்த ஒரு மணி நேர உரையாடலில் தன்னை முடிந்தவரை மென்மையானவனாகவும் சமுதாய அக்கறையுள்ளவனாகவும் பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும் காட்டிக்கொண்டான்.
நமது சமூகத்தைப் பொருத்தவரை பெண்களை வேலைக்கு அனுப்புவதும், அவளைக் கேள்வி கேட்க அனுமதிப்பதும், இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிப்பதும் பரந்த மனப்பான்மை தான் என்பதையும் அது அவனிடம் இருந்தது என்பதையும் அவள் திருமணமான ஓரிரு நாட்களில் தெரிந்து கொண்டாள்.
ஆனால் இந்தச் சமூகத்தைப் பற்றியும் பெண்களைப்பற்றியுமான அவனது கருத்து அவளை வெகுவிரைவில் எதிர் கருத்தை வைக்கத் தூண்டியது. அது அவர்களது திருமண வரவேற்பு அன்றே துவங்கியது. கணவனை இழந்த அவளது அத்தை ஓரங்கட்டப்பட்ட விதம் அதற்கு ரகுவரனின் ஒத்துழைப்பு அவர்களுக்கிடையான முதல் வாக்குவாதத்தைத் தூண்டியது.
நீங்கள் இதை ஆதரித்திருக்கக் கூடாது. உங்கள் அம்மா சொன்னாலும் அதற்குச் செவி சாய்க்காது நேரத்தை கடத்தியிருக்க வேண்டும் என்றாள்.
அந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று எண்ணியே உன் அத்தையை மேடையை விட்டுக் கீழ் இறங்கச் செய்தேன் என்றான்.
இதே நிலையில் உங்கள் அம்மா இருந்திருந்தாலும் பிரச்சினை எதற்காக என்றுதான் முடிவெடுப்பீர்களோ என்றாள்.
நம் சமுதாயத்தில் பெரும்பான்மை ஆண்கள் பெண்ணியத்திற்கான தனது வரையறைக்குள் தாரத்தையும் வரையறைக்கு அப்பால் தாயையும் (அதற்கும் அவர்களுக்கே உண்டான வரையறை இருக்கும். ஏனெனில் தாயும் பெண்தானே) வைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களுள் ஒருவனான ரகுவரனுக்கு எடுத்த எடுப்பிலேயே தன் தாயை விவாதத்திற்குள் அதுவும் யாருமே நினைக்க விரும்பாத கோலத்தோடு ஒப்பிட்டுப்பேசியது அவனுடைய கோபத்தைத் தூண்டியது... கோபத்தில் பால் பாத்திரத்தைச் சுவரை நோக்கி வீசி எறிய ஆணாதிக்கத்தின் முதல் துளியைச் சுவைத்தாள் கண்ணம்மா.
அடுத்த ஒரு மாதம் இயல்பான புதுமணத்தம்பதியரின் புரிதலோடும், புணர்தலோடும் கடந்தது. தாமதமான அலுவலக நாட்கள் மீண்டும் விவாதத்தை விதைத்தது. அவளது தாமதம் சில நாட்களில் வீட்டு வேலையின் பாரத்தை ரகுவரனின் தாய் தலையில் நிறுத்தியது. ஆனால் அதன் அழுத்தம் இயல்பாக ரகுவரன் தலைக்கு நகர்த்தப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.
நாளை முதல் சீக்கிரம் வந்து வீட்டு வேலைகளையும் கவனி என்ற புள்ளியில் வெடிக்கத் தொடங்கியது...
ஏன் வாரம் முழுவதும் வீட்டு வேலைகளை நான் பார்க்கும் பொழுது ஓரிரு நாள் அவர்கள் பார்த்தால் என்ன தவறு என்று கேட்டாள்.
உன் அம்மாவாக இருந்தால் இப்படிப் பேசுவாயா என்பதே பதிலாக...
ஏனோ அம்மாவுக்கும் மாமியாருக்குமான தராசு முள் எப்போதும் நடுநிலையில் இருப்பதில்லை.
என் அம்மாவாக இருந்தால் இந்த ஒரு நாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்வோடு எனக்காக வீட்டு வேலையைச் செய்வார்கள். இதே உங்கள் தங்கையாக இருந்தால் உங்கள் அம்மா இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்றாள் கண்ணம்மா.
அந்தத் தராசு ஒத்த வயதுடைய மகளுக்கும் மருமகளுக்கும் கூட ஏற்ற இறக்கம் காட்டுவது விந்தைதான்.
என் தங்கையாக இருந்தால் அவர்களை இப்படிக் கஷ்டப்படுத்த மாட்டாள் வேலையை உதறிவிட்டு அவருக்குத் துணையாக வீட்டிலேயே இருந்திருப்பாள் என்றான்.
தன் இரத்தம் தன்னோடு கலந்த இரத்தம் இதற்கான வேறுபாட்டையும் காட்டும் தராசு விந்தையிலும் விந்தை.
அப்போ உங்கள் தங்கை ஏன் வேலைக்குப் போகிறாள் வேலையை விட்டுவிட்டு அவளுடைய மாமியாரைப் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்க வேண்டியது தானே என்றாள்.
தராசின் தடுமாற்றம் அவனிலும் தெரிந்தது.
ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் மறந்து இறுதி வெற்றி யாருக்கு என்பதை நோக்கிய விவாதமாக மாறிப்போனது.
என் தங்கை மாமியாருக்கு உதவிக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் அவள் மாமியாரின் வயது மற்றும் உடல் நலனோடு ஒப்பிடும் பொது என் தாயோ உடல் நலம் குன்றியவர், மிகவும் வயதானவர் என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவினான்.
மனைவிகளுக்கு எதிரான கணவனின் பிரம்மாஸ்திரம் மட்டும் எப்போதும் வெற்றிபெறுவதில்லை. இதுவும் அதற்கு விதிவிலக்கில்லை...
அம்மாவின் மீது அவ்வளவு அக்கறை உள்ள நீங்கள் எனக்குத் தாமதமாகும் நாட்களில் அந்த வேலையைச் செய்யலாமே?அல்லது குறைந்த பட்சம் உங்கள் அம்மாவிற்கு உதவுங்கள். இல்லை எனில் வேலைக்கு யாரேனும் ஆள் கிடைக்கிறார்களா என்று பார்ப்போம் என்றாள்.
ஓர் ஆள் பார்த்து அவருக்கு ஊதியம் கொடுப்பதற்குப் பதில் நீ வேலையை விட்டுவிட்டு வீட்டிலே இருந்து விடேன் என்றான்.
ஏன் நீங்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருங்கள் என்றாள் எந்தத் தாமதமும் இன்றி. மேலும் அவருக்கு ஊதியம் தருவதற்குப் பதில் என்றால் என்ன அர்த்தம் என்ற எதிர்க்கேள்வியும் எழுப்பினாள்.
நான் வேலைக்குச் செல்வதும் நீ செல்வதும் ஒன்றா? உத்தியோகம் புருச இலட்சணம் என்பதைக் கேள்விப்பட்டது இல்லையா என்றான்.
அது சோம்பேறியாக இருப்பவர்கள் உத்வேகம் பெறச் சொல்லப்பட்டது என்றாள்.
பெண் மென்மையானவள் எதற்காகக் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்... என்றான்.
ஆடு நனைகிறது என ஓநாய் வருத்தப்பட்டதாம்... என்றாள் நமட்டுச் சிரிப்புடன்.
குடும்ப நலனுக்காக, கணவனான எனது சொல்லிற்கு மதிப்பு கொடுத்தாவது நான் செல்வதைக் கேட்கக் கூடாதா... என அவன் முடிப்பதற்குள் உணர்வுப்பூர்வமான அச்சுறுத்தல் எனப் பதில் தந்தாள்.
அவனுக்குள் இருந்த ஆண் தலைதூக்கினான்.
கணவன் சொல் என்றும் பெண்களை நல்வழியில் தான் நடத்தும். கல்லானாலும் கணவன் என்ற பழங்கூற்றையும் மறந்து விட்டாயா? பெண் எப்பொழுதும் பாதுகாப்பிற்காக உடல் வலு மிக்க ஆணை சார்ந்தே இருக்க வேண்டியது இயற்கை. அப்படி இருக்கும் போது ஆணின் சொற்படி நடப்பதில் தவறு என்ன இருக்கிறது. கணவன் சொல் தட்டாத இதிகாசப் பெண்களை நாம் இன்றும் தெய்வமாக வழிபடுகிறோம். வீம்பிற்காக வேண்டும் என்றே எதற்கெடுத்தாலும் மறுப்பும் எதிர் வாதமும் புரிந்து குடும்ப நலனைக் கெடுக்காதே. விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்றான்.
வலுவான ஆணுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் என்ற கருத்து கண்ணம்மாவின் பெண்ணிய உணர்வைத் தூண்டி உணர்ச்சிவசப்படுத்தியது.
பத்தினி மற்றும் பெண்மை என்ற ஆணின் கருவிழியில் விரியும் பெண்ணின் பிம்பம் அவர்களாலே சித்திரமாக்கப்பட்டு கைதேர்ந்த ஆண் சிற்பியால் பின்புசிலையாக வடிக்கப்பட்டுப் பல நூறு ஆண்டுகளாகப் பெண்களையும் இதுவே பெண்மைக்குண்டான வடிவமாக நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனது சிற்பத்தைத் தானே வடிவமைத்தவன் ஆண். உங்களுக்காக உங்களால் உருவாக்கப்பட்ட சுரண்டி எடுக்கப்பட வேண்டிய அடிபுடித்த கல்லானாலும் கணவன் என்பன போன்ற பழங்கூற்றை மேற்கோள் காட்டாதீர்கள்.
எந்தப் பெண்ணும் ஆணை பாதுகாப்புக்குச் சார்ந்திருக்கவில்லை. அவளுக்கு இயல்பாகவே இருக்கும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது இருந்தால் போதும். அதையே ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கிறாள். இந்த உலகில் யாரும் தனித்து வாழ்வது சாத்தியம் இல்லை. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதே இயற்கை. அப்படி வாழும் பொழுது ஒருவருக்காக மற்றவர் நியாயமான முறையில் விட்டுக்கொடுப்பது என்பதே அந்த உறவை மேம்படுத்தும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
வாரம் முழுவதும் வீட்டிலும் அலுவலகத்திலும் வேலை செய்யும் என்னால் ஓரிரு நாள் முடியவில்லை எனில் நீங்கள் முன்னின்று அந்தத் தினங்களை இலகுவாகக் கடக்க எனக்கு உதவுவது தானே சரியான விட்டுக்கொடுத்தலாக இருக்க முடியும். அதை விடுத்து வலிமை உள்ளவன் வாழ்வான் என்ற தத்துவத்தை தாம்பத்திய உறவிலும் பெண்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவது அபத்தம். மேலும் ஆணே பெண்ணை விட வலுவானவன் என்ற கருத்தும் விவாதத்துக்குரியதே என்றாள்.
ஒவ்வொரு விவாதமும் ஏற்படுத்தும் விரிசலைப் பிளவுக்கு முன் இயல்பாய் வந்து இணைக்கும் இயற்கை பசி... தணிந்த பசியால் மீண்டும் விரியும் விரிசல். அந்த விரிசலிலிருந்து தலைதூக்கும் ஆண்மை மற்றும் பெண்மை என்பது தொடர்கதையானது.
ஆனால் சமீபத்திய விவாதம்... விவாதமாக மட்டுமின்றி விஸ்வரூபம் எடுத்தது.
தேடலின் இறுதி வடிவத்தை இயற்கை இயல்பாய் அங்கு அரங்கேற்றியிருந்தது...
மனமலர்ச்சியோடு கருவுற்ற செய்தியை ரகுவரனிடம் தெரிவித்த கண்ணம்மாவிற்குச் சமாதானமே செய்து கொள்ள முடியாத இரு தேர்வுகள் கணவனால் முன்னிறுத்தப்பட்டது.
குழந்தை அல்லது அலுவலகம்... தேர்வு உன்னுடையது... ஆனால் ஏதேனும் ஒன்றைத்தேர்வு செய் என்றான்.
கனல் பார்வையை அதற்கு பதிலாக விடுத்து வந்தவளின் மனம், தனது மூன்றாவது தேர்வு தீர்வாகுமா என்ற சிந்தனையை ஏதோ ஒரு குளுமை கலைப்பதை உணர்ந்தாள்...
கழி ஓதத்தால் கடலலைகளின் கைகள் அவளது கால்களை எட்டிப் பிடித்து இறந்த கால நினைவில் தத்தளித்த அவளை நிகழ் காலத்தில் கரையேற்றி இருந்தது.
வழக்கம் போல் முடிவு எட்டப்படாத சில மணிநேர சிந்தை விரயத்திற்குப் பின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
வழியில் தென்பட்ட சுவரொட்டி அவள் கவனத்தை ஈர்த்தது. "பெண்மையைப் போற்றுவோம்" சிறப்புரை மைத்ரேயி நவீன பெண்களின் முன்னோடி... நாள்-நேரம் மற்றும் இடத்தைக் கவனித்துக் கண்டு கடந்து சென்றாள்.
மைத்ரேயினுடைய சொற்பொழிவில் அனல் பறந்தது. எந்தப் பேதமுமின்றி அனைத்துச் சமுதாயக் குறைகளையும் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டாள். பெண்மையின் மேன்மை பற்றியும் அவர்களுடைய தைரியத்தைப் பற்றியும் பெண்கள் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறை பற்றியும் அருமையான மேற்கோள்களுடன் உணர்வுப் பூர்வமாகப் பேசி முடித்தாள்.
இவரைப் போன்றோருடைய நட்பு நம் சிந்தனையை மேலும் செம்மைப்படுத்தும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க மேடைக்கருகில் இருந்த ஒப்பனை அறைக்குச் சென்று அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள் கண்ணம்மா. மைத்ரேயினுடைய கைப்பேசி உரையாடல் கண்ணம்மாவைக் கதவருகே நிறுத்தியது.
ஒரு பெண்ணாக அடக்கமாக நடக்க வேண்டாமா? என்ற அவளது கைப்பேசி உரையாடலின் ஊடே உதிர்ந்த வார்த்தைகள் கண்ணம்மாவை நெருடியது. மேற்கொண்டு அங்கே நிற்க மனமில்லாமல் கதவைத் திறந்து வெளியேறினாள்...