"ஏய் காமாச்சி! ஏ...!காமாச்சி...! ன்னு ஓலை குடிசைக்கு வெளியே கால் மேல சுடுதண்ணிய ஊத்திகிட்டதப் போல கத்திக்கிட்டிருந்தாள் பார்வதி.
"ம்...யக்கா...! இதா வந்ததுட்டேன்! செத்த இருக்கா...!" என்றவாறு, உள்ளே மவனின் மூக்கில் கையை வச்சிக்கிட்டு,"சிந்துடா...! ம்...இன்னும் வேகமா! ம்ம்ம்...இன்னும்!” என்று சிந்திபோட்டு, மிச்சத்தை அழுக்கு முந்தானையைக் கொண்டு தேய்த்துவிட்டாள்.
"சீக்கிரம் வாடி! எல்லோரும் போய்ட்டாளுக! அப்புறம் அந்தக் கெழவன் கத்தப் போறான்!”
“அவ்ளோதான்க்கா, கெளம்பலாம்! சரி வாடா கண்ணு!" என்று மவன் கையைப் புடிச்சு இழுத்துகிட்டே வாசப்பக்கம் வந்தாள். உள்ளே தெக்கே மூலையிருந்த ஒரு ஓலை தட்டியை இழுத்து, அதைக் கையில தாங்கிக்கிட்டே எதையோத் தேடினாள்.
"இன்னும் என்னாத்தடீ பன்னிகிட்டு இருக்க? ஆமா...! ஒம் மவன பள்ளிகொடம் அனுப்புலயா நீ?”
தேடிக்கிட்டுருந்த காமாட்சிக்கு "சம்மட்டி"யும், சுத்தியும் கிடைக்க, இரண்டையும் எடுத்துக் கொண்டு தட்டியால் வாசலை மூடி, கயிற்றால் பூட்டிக்கொண்டே,
"இல்லக்கா அவனுக்கு போட்டுவுட பள்ளிகூடச் சட்டையே இல்ல! புதுசாதான் எடுத்து தைக்கனும்! கலர் சட்டையில அனுப்புனா, அந்தக் குந்தானி டீச்சரு பெரம்புல அடிச்சிப்புடுவா! ஊரான் அடிக்குறதுக்கா ஒத்தப் புள்ளைய பெத்துருக்கேன்?"
"ம். சர்தான்! வாடியம்மா மணி ஆச்சி!”
"அய்யோ மறந்தேப் போய்ட்டேன்!" என்று, கையில் இருந்த சம்மட்டியையும் சுத்தியையும் கீழேப் போட்டுவிட்டு, கட்டிய தட்டியை அவிழ்த்து உள்ளேப் போனவள், மண் தரையில் வைக்கப்பட்டிருந்த போட்டோவின் கீழே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கில் சிறிது எண்ணெய் ஊற்றிவிட்டு, கீழே கிழிந்த செய்தித்தாளில் சிதறியிருந்த திருநீரை நெற்றியில் தேய்த்துக்கொண்டு, ஓட்ட ஓட்டமாக வெளியே வந்தாள்.
"பார்த்தி...! இந்தா வா..,!”வென அழைத்து, கையில் மிச்சமிருந்த திருநீரை அவன் நெற்றியில் தடவினாள். பின் தட்டியை வாசலின் குறுக்கே வைத்துக் கட்டினாள். பின் கீழேயிருந்த சுத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு, சம்மட்டியைத் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
"ம்.. !வாடா பார்த்தி...!” என இன்னொரு கையில் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு காமாச்சியும், பார்வதியும் நடையாய் ஓட்டம் பிடித்தனர்.
பார்த்தியோ இடுப்பில் நிக்காத டவுசரை அரைஞாண் கயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு, அம்மா பின்னே ஓடிக்கொண்டிருந்தான்.
வழியில் பார்வதி பேச்சுகொடுத்தாள்.
"ஏண்டி காமாச்சி உன் புருஷன் செத்து எவ்ளோ நாளாச்சி?"
"இன்னும் மூணு நாள் வந்தா தொண்ணூறு நாளு ஆகுதுக்கா! மூனாம் மாசம் படையல் வேறப் போடனும். அன்பு ஐயா கிட்டதான் பணம் கேட்டிருக்கிறேன்.
"ஏது? அந்தக் கெழவன் கிட்டயாக் கேக்கப் போற? உன் புருஷன் செத்தன்னிக்கே ஒரு மாலை வாங்கியார துப்புல்லாதவன், அவனா நீ கேட்ட உடனேயே காசக் குடுக்குறேன்னு சொன்னான்? "
"இல்லேக்கா! நான் கேட்டதுக்கு, இன்னைக்கு வேலை முடிஞ்ச பிற்பாடு தாரேன்னு சொன்னாரு! அதான்”
"ம்...! தந்தா சரி...! அப்படியே உம் மவனுக்கும் சட்டை வாங்கி பள்ளிக்கூடத்துக்கு அனுப்புற வழியப் பாரு. ஆம்பல புள்ளயப் படிக்க வச்சா, நாளைக்கு அவன் ஒனக்குக் கஞ்சி ஊத்துவான்! புருஷன வேற எழந்துட்டு நிக்கிறே! நீ ஒத்த ஆளு தான் அவன கரையேத்தனும்!" என்றவுடன் ‘மளமள’ ன்னு கண்ணீரை விட்டுபுட்டா.
சற்று விம்மி விம்மி அழுதுகிட்டே,
"பாவி மவன்! கடைசி வரைக்கும் இருக்குற எல்லாத்தையும் குடிச்சே அழிச்சிபுட்டு எங்கள இந்தப் பாழாப்போன குடிசையில விட்டுப் போய்ட்டான்! அந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்ல! இந்தப் பச்சப் புள்ளய மூஞ்சப் பாத்தும் அவனுக்கு யரக்கம் இல்லியே!" ன்னு ஒரு கையில் மகனின் தலையை வருடிக் கொடுத்தாள்.
"அடி அழாதடி...! உனக்குத்தான் ஆண்டவன் ஆம்பளப் பயலக் குடுத்துருக்கான்ல! எதுக்கு அழுவுற? பொட்டப் புள்ள பொறக்கலயேன்னு சந்தோஷப்படு, அதுக்கு நல்லது, கெட்டது சங்கிலி சாமானம் ன்னு செஞ்சுருக்க முடியுமா? ஆம்பளப் பயலப் பெத்ததால இன்னொருத்தன் ஒதவி கேட்ட சரி, இதேப் பொட்டப் புள்ளய வச்சிருந்து ஒதவி கேட்டுருந்தா, அவன் உன் முந்தானய கடனா கேட்டுருக்கமாட்டானு என்ன நிச்சயம்? வழியில்லாம நீயும் முந்திய விரிச்சிருக்கனும்"
"ச்சீ...! அப்போ ஊர்ல தாலியறுத்த அம்புட்டு பொம்பளைகளும் இன்னொருத்தனுக்கு முந்தி விரிச்சிட்டுத்தான் இருக்காங்களா பார்வதியக்கா? " என்றாள்.
"அடி கிருக்கி மகளே! நான் அப்படிச் சொல்லலடீ! நீ சும்மா இருந்தாலும் ராத்திரியில உன் வீட்டுக் கதவத் தட்ட, தெனம் நாளு பேராச்சும் வருவானுங்க, நீயே இல்லன்னாலும் ஊரு அப்படித்தான் கத கட்டிவுடும்" என்றாள்.
"அந்த எச்ச வாழ்க்கை, எனக்கு வேணாம்! அப்படித்தான் வாழனும்னா, இப்பவே நான்டுக்கிட்டு செத்துடுவேன்"
நீ நாண்டுகிட்டு செத்துட்டா? உம் புள்ளய என்ன பண்ணுவ? கழுத்து நெருச்சிக் கொன்னுருவியா?" என்றதும்,
மறுபடியும் “ஓ.....”ன்னு அழுது கொண்டே, மவனைத் தூக்கி இடுப்பிலே வச்சிகிட்டு நெத்தியிலே ஒரு முத்தம் வச்சா. அந்தப் பிஞ்சோ, தனது பிஞ்சுக் கையில் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு,
“ம்மா... அழாதம்மா!” என்று சொல்ல, காமாட்சியின் கண்கள் காவேரியாய் கரைபுரண்டது. அந்தக் காட்சி பார்வதிக்கும் நெஞ்சடைத்து, பேச்சும் மூச்சும் சமமாக முட்டியது.
இருவரும் வந்துசேர சிறிது தாமதமானதால், கிழவன் என்ன சொல்லப் போறானோ! என்ற அச்சத்தில், பார்வதி பம்மிக்கொண்டு போக, கிழவன் இன்னும் வந்திருக்கவில்லை. மெல்லச் சுதாரித்த அவள், தன் சம்மட்டியை எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கல்லை உடைக்க ஆரம்பித்தாள்.
காமாச்சி தன் மகனை அகன்று வளர்ந்த ஓர் புங்கம் மரத்தின் கீழே அமர்த்திவிட்டு, இடுப்பில் சொருகியிருந்த சுத்தியை அவனருகே போட்டுவிட்டு வந்தாள்.
நாளு கிலோ இருந்த சம்மட்டியைத் தூக்கி, மூச்சைப் பிடித்துக்கொண்டு கல்லை உடைக்க, எளிதில் சோர்ந்து போனாள். குடமளவு வந்த வியர்வையோ தேகம் முழுக்க நனைத்தது. நெற்றியில் இட்ட திருநீரையும் சேர்த்து அழித்தது.
காமாட்சி சோர்ந்த நேரம் பார்த்து கிழவன் வந்தான்.
"என்ன காமாச்சி, இப்பவே ஆளு தலைய தொங்கப் போட்டுட்டே? சாயங்காலம் வரைக்கும் என்ன பண்ணுவ? எப்படித் தாங்குவே? " என்று கேட்டுக்கொண்டிருக்க, பார்வதியின் வலது காதும் கண்களும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
"அதெல்லாம் ஒன்னுமில்லை ஐயா நான் செய்வேன்! மனசுல தெம்பு இருக்கு!”
"நீயா...? செய்யுவியா? ஹா ஹா ஹா...! சரி சரி செய்யு பார்க்குறேன்!" என்று நக்கலாய் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.
காமாச்சி தூரத்தில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த பார்த்தியை அழைத்தாள்.
"பார்த்தி! டேய் ராசா...! மகனே...!"
தூரத்திலிருந்த அந்த பிஞ்சோ, "இன்னாம்மா...!” என்றதும்,
"அந்தச் சுத்தியை கொஞ்சம் எடுத்துக்கிட்டு வாப்பா...!" என்றாள்.
அச்சிறுவனோ மெல்ல நடந்து வந்து, சுத்தியை அம்மாவின் இரு கைகளில் வைத்துப் புன்முறுவல் செய்ய, காமாச்சி தன் இரு கைகளையும் வாரி தலையிலிட்டு இருகைவிரல்களிலும் லட்டை உடைத்துக் கொண்டாள்.
"சரிடா தங்கம்! நீ போய் மரத்துக்கும் கீழே போய் உக்காரு அம்மா வாரேன்! சரியா...!" என்று அனுப்பி வைத்தாள்.
ஏதேதோ நினைப்புகளோடு கற்களைச் சுத்திக்கு கீழும், காரணங்களை நெஞ்சினுள்ளும் வைத்து ஒன்று சேர நொருக்கிக் கொண்டிருக்க, குறி தவறிய சுத்தி கை விரலின் மேல் வீழ்ந்தது.
"அய்யோ அம்மா...!" என்று வலி தாங்க முடியாது கத்த, பாறைக்கு வெடிவைத்த சத்தம்போல் எல்லா மலை இடுக்குகளிலிருந்தும் எதிரொலிக்க, அங்கிருந்த அனைவரின் கவனமும் ஒன்றுசேர திரும்பியது. அதற்குள் காமாட்சியின் கையை ரத்தம் நனைத்துவிட்டது.
பார்வதியோ சர்வீஸ் ரூம்க்கு ஓடிப்போய், டின்ச்சரும் பழைய கிழிந்த வேட்டித் துண்டுகளையும் கொண்டு வந்தாள். அதற்கு முன் அங்கே வந்த கிழவன்,
“ஏன் எதுக்கு கூடுறீங்க? என்ன உசுரா போச்சி? போய் வேலையப்பாரு!” என எல்லோரையும் துரத்திவிட்டான். பார்வதி கையிலிருந்த டின்ச்சரை வெடுக்கென பிடிங்கி அவளையும் துரத்திவிட்டான்.
"என்ன காமாச்சி! என்ன இது? நான் நல்லா வேலை செய்வேன்னு சொன்னே? இப்படிக் கையை முறிச்சிகிட்டு வந்து நிக்கிறே!"என்றவாறே டின்ச்சரை தெளித்தான். அதுவோ எரிச்சலையூட்ட, வலியில் மேலும் முனகினாள்.
"இந்தா பாரு காமாச்சி இந்த வேலையெல்லாம் உனக்குப் பழக்கமில்லை, ஒத்துவராது. நான் உனக்கு ஜல்லி மெஷின் ஆப்பரேட்டரா வேலை போட்டுத் தரேன் அந்த வேலை செய்யி! அலுங்காம வேல செய்யலலாம் என்னங்குற?" என கேட்டுக்கொண்டே கையில் மீண்டும் டின்ச்ரை ஊற்றினான்.
"ஆமா! நீ என்கிட்ட காசு கேட்டல? மறந்தே போய்ட்டேன்! இந்தா, இந்த இருநூறு ரூபாய வெச்சிக்கோ! இப்போ நீ வீட்டுக்கு போ! ராத்திரி ஒம்பது மணிக்கு மேல வந்து கணக்குப் பாத்துத் தரேன்! உனக்கு இன்னும் வேனும்முன்னா என்கிட்ட கேளு, நான் தரேன்! ராத்திரிக்கு தட்டிய சாத்திப்புடாத சரியா காமாச்சி?"ன்னு கூறிக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தவாறு மீண்டும் டின்ச்சர் ஊற்ற, தன்னுடைய மனவலியை பொறுத்துக் கொள்ள முடியாதவளாய் காமாட்சி, கிழவனின் கண்ணத்தில் ‘பளீர்...!’ என்று அறைந்தாள்.
அந்த அரைச் சத்தமும் நான்கு மலையைத்தாண்டி எதிரொலியாய் திரும்பவும் கேட்க, கிழவனின் கன்னத்தில் விரலின் ரத்தக்கறை படிந்திருந்தது.
கீழிருந்த சம்மட்டியை ரத்தம் சொட்டும் விரல்களிலேயே எடுத்துக்கொண்டு, இன்னொரு கையில் மரத்தடியிலிருந்த மகனின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக நடைபோட்டாள்.
காமாச்சியின் கை விரல்களில் வடிந்த ரத்தம், “சம்மட்டியின்” அடிவரை, சொட்டு சொட்டாய் போய் மண்ணில் இறங்கியது.