“என்னங்க, நான் சொன்னதப்பத்தி யோசிச்சிங்களா... என்ன முடிவு எடுத்துருக்கீங்க..?” டீ கப்புடன் வந்தாள் மாலா.
“இந்த நிமிஷம்வரை யோசிக்கவே இல்லை, இதுல முடிவென்ன...” கடுப்புடன் கப்பை வாங்கிக் கொண்டான் அருண்.
“செஞ்சதெல்லாம் பெரிய தப்பு தப்புனு மனப்பூர்வமா உணர்ந்து பூஜையறைக்கு முன்னாடி மன்னிப்பு கேட்டுட்டேன், இனிமே பழைய மாதிரியெல்லாம் நடந்துக்கவே மாட்டேன்னும் உங்க தலையில அடிச்சு சத்தியமும் பண்ணிட்டேன்ல பெறகென்ன...” எப்படியாவது கணவனை இளக வைக்க வேண்டுமென உருக்கத்துடன் பேசினாள்.
“ஆமா, கங்கணம் வச்சு செஞ்சமாதிரி ஒரு வருசமா குத்திக் காயப்படுத்திட்டு மன்னிப்புனா...” காலி கப்பை நீட்டி முறைத்தும்... அவள் விடுவதாக இல்லை.
“அண்ணிட்ட அப்பப்ப பேசிட்டுத்தான் இருக்கேன்... இதப் பத்தி பேசினா ஏதாவது கோபப்பட்டுருவாங்களோன்னுதான் பயப்படுறேன். அதுவுமில்லாம நீங்க பேசுறதுதான் சரியா இருக்கும்” கப்புடன் கணவனின் கையையும் பற்றினாள்.
மனைவியின் கையை உதறி விட்டாலும், அருணின் மனசுக்குள்ளே யோசனை வந்துவிட்டிருந்தது. முடிவுதான் கொஞ்சம் தயக்கம் காட்டியது.
பாத்திரங்கள் கழுவி முடிய, மகளை எழுப்பி விட்டதும், காலை டிபனுக்கு விபரம் கேட்கும் சாக்கில், நாளிதழ் வாசிப்பிலிருந்தவனின் முன் வரவும், இதற்காகத்தான் வருவாளென்ற கணிப்போடு நாளிதழ் விலக்கி,
“பூரி போடு” சொன்னான்.
“என்ன கேட்டாலும் பண்ணிதாரேன்... சொன்னத மட்டும் செய்யுங்க...” கெஞ்சுவது போல் கை சைகை காட்டினாள்.
முகம் கழுவி டவல் ஒற்றியவாறே வந்த மகள், “அம்மா பாவம்பா...” என்றாள்.
அதற்கு மேல் நீட்டித்தல் கூடாதென ‘சரி' னாலும், பயண யோசனை மீதம் இருக்கத்தான் செய்தன.
கிராமத்தில் இருந்தனர் அம்மா அப்பா, திடீர்னு அப்பா இறந்துவிடவும், அம்மா அங்கு தனியா இருப்பதேன் என அழைத்து வந்து விட்டான் அருண்.
அப்போதே, ‘டே...தம்பி, மாலா குணத்துக்கும், அம்மாவுக்கும் ஒத்து வராதுடா உனக்கும் இப்ப தொழில் சரியா இல்ல, மாமாட்ட சொல்லிட்டு நாவேனா கூட்டிப்போய் வச்சுக்கிறேன்... வற்புறுத்திய அக்காவுக்கு, அதுமுறை இல்லக்கா, நா பேலன்ஸ் பண்ணிக்கிறேன் என்றான்.
ஒரு மாசத்துக்குள்தான் தாக்குப் பிடித்தன, அதுவும் அம்மா, வீட்டு வேலைகளில் நுழையாதிருந்ததால்... வீட்டின் மூலையில் முடங்கிக்கிடக்க அம்மா ஒண்ணும் தெம்பு குன்றியவள் இல்லையே... வேலை வேலையென சுறு சுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவள், கணவரின் எதிர்பாராத இழப்பு வருத்தத்தில் இருந்து மீண்டு, மகன், மருமகள், பேத்தி நம்ம குடும்பம் என்ற இயல்புக்கு வந்தபோது வீட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்தினாள்.
அப்பாவுடன் வாழ்ந்ததையே ஞாபகத்தில் நிறுத்தி, மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் முன்போலான அம்மாவாக அவள், மாறியதில் அருணுக்கு மகிழ்ச்சியே... மாலாதான் அதை ஏற்கவில்லைபோல், ஏதாவது ஒரு காரணக் குறையை கணவனிடம் இரவு வேளையில் படுக்கையில் ஓத ஆரம்பித்தாள்.
முதலில் சின்னச்சின்ன கசப்பு... பிறகு சகிப்பு... நாளடைவில் எல்லாம் சரியாகும் என்று மனசு தேற்றினான்.
மகள், வளர்ச்சியில் குடும்பத்தில் ஏதேதுக்கோ பிரச்சனைகள்... சிலநேரம் நிம்மதி இழக்கும் பிரமையில் அருண்.
எப்போதோ ஒருநாள் வந்து போகும் அக்காவுக்கு அரசல்புரசலாக தெரிந்து அடிக்கடி வரவும்தான் இருக்கையிலேயே வாக்கு வாதம்... யாருக்கவள் சாதகம் பேசுவாள்?
பேருந்து ஏற்றிவிட வந்த தம்பியிடம் ‘மாலாவுக்கு பொறுமை போதாது, குடும்ப உரிமைய மாமியா பறிக்கிறான்னு ஏதோ மனவியாதியாட்டம் ஆதங்கப்படுறா... ஏதும் புத்திமதி சொல்லாம்னா, அத அம்மாவுக்கு சாதகமானவங்களா நம்மகூட வேகத்த காட்டுவா, பிரச்சனை எல்ல மீறினா... அவ குணம்தான் நமக்கு தெரியுமே தம்பி, என்னமோ இப்பத்தான் ரெண்டு பெரிய வேலைய பாக்குற, இதையெல்லாம் மாலா யோசிக்க மாட்டா... நம்மவீட்டுக் கதைய வீதிக்கு கொண்டு போயிருவாடா... அக்கா ஒண்ணும் நெனைக்கல, மாமாவும் இப்பவே கூட வந்தாலும் அழைச்சுட்டு வந்துருனு சொல்லித்தான் அனுப்பினார், நா வேனா இங்கே இருக்கேன் போய் அம்மாவ கிளப்பி கூட்டிவா...'
சண்டை சச்சரவில்லாது தம்பி, இருக்கட்டும்னு அக்கரைப்பட்டாலும், ஏற்கனவே கூறியதில் உறுதியாய் தம்பி இருந்துவிட, வந்த பேருந்தில் ஏறிக் கிளம்பினாள் அக்கா.
எவ்வளவோ அம்மாதான் விட்டுக்கொடுத்தாள்... ஒரேடியாக வீட்டில் முடங்கிக் கிடக்கவும் முடியவில்லை. நம்ம மருமகதானே என்று... வேல ஏதாவது சொல்லுமா... சும்மாவே இருக்க மனசும், உடம்பும் எப்படியோ இருக்குமா... ன்னு உரிமையாகக் கேட்டாலும், சம்மந்தமே இல்லாத ‘வெடு'க்கானாள்.
நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தி, நடுஹாலில் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி திரும்பத் திரும்ப காட்டும் நிகழ்ச்சியைச் சானல் மாற்றி, மாற்றியேப் பார்க்க வேண்டிய பரிதாபத்துடன் சேரில் அமர்ந்து விடுவதை வாடிக்கையாக்கினாள்.
ஒரு நாளும் அம்மா, காட்டிக் கொள்ளமாட்டாளென்றாலும் அருணுக்கு அவளின் இறுக்கம் தெரியப்படுத்திவிடும். மாலாவிடம் அதை விசாரித்தால் அவ்வளவுதான் பூதாகரம் வெடித்துவிடும், அம்மாவின் நிலையுணர்ந்து தனக்குள் குமுறுவான்... நாட்களின் நகர்வில்... கான்ட்ராக்ட் கட்டுமானப்பனியில் கவனக்குறை ஏற்படும் நிலைக்கு குடும்ப குழப்பம்...
பெரிய கொத்தனார் வசம் முன்கூட்டியே முகப்பு மாடல் விபரம் சொல்லாது விட, அவர் ஏதோ கட்டிவிட, வீட்டுக்காரர் வந்து ‘மாடல் இது இல்லையே...' சந்தேகம் எழுப்ப, கட்டியதை இடித்து, மறுபடி மாடல்... கட்டுக்கூலி, இடிப்புக்கூலி பொருட்கள் என அனைத்தும் விரயம். தொழிலில் கவனம், அக்கரையுடன் மிக நேர்த்தியாக செய்து கொடுத்தால் மட்டுமே அதைப்பார்த்து இன்னொருவர் வீடு கட்ட முன் வருவர்... அதில் சறுக்கா... சிந்தித்த அருண், இரவு அம்மா உறங்கவும் மாலாவிடம் பேசினான்.
வழக்கமான குறை பல்லவிலேயே அவள்... ‘அப்படினா, அம்மா இங்க இருக்கறது உனக்கு பிடிக்கலயா...?
இக்கேள்விக்கு எதிர்மறை பதில் வந்துவிடுமோனு மனபதட்டமுடனிருக்க,‘கல்யாணத்தின் போது என்ன சொன்னீங்க...அம்மாவும் அப்பாவும் ஊர்ல இருப்பாங்க...நாம தனியா சிவகாசி வீட்ல இருப்போம்னுதான...' அப்பா இல்லாத நிலையில்தான் அம்மா இங்கே வரவேண்டிய கட்டாயமென்பதைக்கூட உணராத மாலாவின் கந்தக வெளிப்பாடு...‘உங்க அம்மா எதுக்கு கூட இருக்காங்க,' என சுட்டபோதே முடிவுக்கு வந்து, அடுத்து ஒரு வார்த்தையும் பேசாது படுத்து விட்டான்.
ஊரடங்கு.
மனிதர்களை... அவர்களின் இயல்பான போக்கை...வேகமெடுத்த சமூக வாழ்க்கையை... ஆங்காங்கே நடக்கும் சமுதாய நடப்புகளை... நெகிழ்ச்சியான நிகழ்வுகளை... பரிதாபங்களை... கேட்டு, தொலைக்காட்சியில் பார்த்து, நிறையவே சிந்திக்க வைத்து, பக்குவமாக்கி... சகிப்பின் பலதரப்பு உண்மை அனுபனங்களை புரிதல் செய்தன. உறவின் நெருக்கம் உணர்த்தின...
பத்து நாட்களாகவே அருணுக்கு இருப்பு இல்லை...
நாளை மறுதினம் அம்மாவைப் பார்த்து வரலாம் என்றிருக்கையில், ஊரடங்கு தடை விழுந்துவிட்டது.
அக்காவுடன் பேசி,அம்மாவையும் விசாரித்தாலும், மனசு ஏனோ சரிகொள்ளவில்லை. நாள்தோறும் மாலாவுடன், பேத்தியுடன் பேசுவாள்.
ஆனாலும் ஞாபக நீர் சுழல்... அம்மா, தனது வீட்டில் இருத்தல் விருப்பினான்... பல கிலோ மீட்டர் தொலைவு சைக்களில் சென்று அம்மாவைப் பார்த்தது, உடல் நிலை சரியில்லாத மனைவியை சைக்களில் மருத்துவமணை அழைத்து சென்ற காட்சி ... செய்திகள் மனமுருக்கியது.
மாலாவோட மனமாற்றத்திற்கும் இதுமாதிரியான நெகிழ்வுகள் காரணமோ...
‘எப்படியாவது போய் அத்தைய கூட்டிவாங்க...வாங்க...'னு வற்புறுத்துறாளே...
அக்கா இருப்பதோ மதுரை வாடிப்பட்டி, இங்கிருந்து நூறு கிலோ மீட்டருக்கு அதிகமிருக்கும், டூவீலரில் பயணித்து, அம்மாவை அழைத்து வரலாமென்றால் சரியான காரணமில்லையே... தீர்வு கிடைக்காது தத்தளித்தான் அருண்.
“இதோ பாருங்க,மறுபடியும் ஊரடங்க நீட்டிக்க வாய்ப்புள்ளதுனு செய்தியக் கேட்டதுலருந்து, பாட்டிய பாக்கனும்னு மகவேற அடம்போடுறா அத உங்கட்ட சொல்லப் பயப்படுறா... எனக்கும் அத்தைய இந்த நேரத்துலக் கூடவே இருக்க வச்சு கவனிக்கனும்னு தோணுது... அவங்க பெத்த புள்ள, உங்களுக்கு இருதயம் துடிக்க வேணாம்..? தைரியமா பைக்க எடுத்துட்டு போங்க வழியில நிருத்துற போலீஸ்க்கு எதையாவது சொல்லுங்க...அத்த நம்ம வீட்டுக்கு வந்தே ஆகனும்”
மாலாவினுள் படிந்திருந்த அம்மா, மேலிருந்த முகஞ்சுழிக்கும் பிடியாமை, வீண் சண்டையிடும் முனைப்பு, வெறுப்பு,வேகமெல்லாம் துடைத்ததுபோல் இருந்தது.
அருணின் அலைபேசி அழைப்பு...
சார்ஜ் டேபிலிருந்து எடுத்து வரும் போதே, “அண்ணி... விசயத்தச் சொல்லிட்டு காலையில் வெள்ளன கிளம்புங்க”என்றாள்.
அப்பவும் கிளிக் ‘கீச்'யென அதையே வெளிப்படுத்திய மனைவியை ஊடுறுவி ஏறிட்டான். அப்படி இருந்தால் நெருப்பாயிருக்கிறாள்... இது மாதிரி மாறினாலும் நெய்யுருகலாகிவிடுகிறாளே...
பேசியில் பச்சைப்பட்டன் அழுத்தி ‘அக்கா...' என்றான்.
“வீட்லதான இருக்க,தம்பி..?”
“ஆமாக்கா”
“அம்மா... நம்ம காய்கனி வேன்ல வருதுடா...”
“என்னக்கா சொல்ற...” அருண்,கொஞ்சம் பதட்டமாக, ‘என்னவாம்..,'என்பதாக மாலாவும்தான்.
“நானும் மாமாவும் எவ்வளவோ சொலியும் கேட்காம, மகனப்பாக்கனும், மருமக, பேத்தியப்பாக்கணும்னு கிளம்பி வருதுடா... தகவல் தெரியப்படுத்த வேணாம்... அங்க போய்ச் சொல்லிக்கிறேன்னுச்சுடா, ஆனாலும் மனசு கேக்கல மாமாதான் உனக்கு போன்போடச் சொன்னாரு”
“வண்டி விருதுநகர்தான வரும்கா...”
“பைப்பாஸ்ல எறங்கி நடந்தே சிவகாசிக்கு போய்க்கிறேன்னு ரொம்பப் பிடிவாதம் பண்ணிருச்சுடா...” அம்மாவின் பெத்த பாசத்துக்கு, இந்த ஊரடங்கெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதாக உணர முடிந்தது.
மாலாவுக்கு விசயத்தையும், அம்மாவை இங்கே கூட்டிவரும்படி மனைவி உண்மையாக நச்சரித்ததை அக்காவுக்கும் கூறினான் அருண்.
“அம்மா,எதுக்கும் துணிந்த திடமான மனுஷிடா தம்பி, ஊர்ல,காட்டுக்கு களை எடுக்க ஆறு மைல் தொலைவு நடந்தேபோய் நடந்தே வரும்... பயப்பட வேணாம், எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துரும்னு நெனக்கிறேன்” தைரியப்படுத்தியதும்...
“இப்படியான இக்கட்டுச் சூழலில் அம்மா, அங்க வாரது மனச்சங்கடமானாலும், மாலா மாறிட்டானு நீ சொல்றதை கேட்க ரொம்பம் சந்தோசமா இருக்கு தம்பி”
“சரிக்கா வச்சுறன்... அம்மா வரவும் போன் செய்றேன்...”
அருணின் எண்ணவோட்டம் அம்மாவின் வருகையிலேயே ஓடிக்கொண்டிருக்க,
“இப்பவாவது சொல்றத கேளுங்க எப்படியும் மெயின் ரோட்லதான் வருவாங்க போய் கூட்டி வாங்க...” சட்டை, டூவீலர் லைசன்ஸ், சாவி தந்தாள் மாலா.
மனதில் அப்பாவை நினைத்து வாசலுக்கு வந்தபோது... ‘அருண்... மாலா...' காம்பவுன்ட் கேட்டுக்கு வெளியே அம்மா, நின்றிருந்தாள்.
பார்த்த மாத்திரத்தில் விசும்பல் முட்டிக்கொண்டுவர, ஆர்ப்பரித்து கேட் திறந்து ‘அம்மா...'னு கட்டிக் கொள்ளும் பாசவேகமெடுத்த அருண்...
தனக்குள் துளியளவும் பழைமைத்தனம் இல்லாத வெளிப்பாட்டுடன் ‘அத்தை...' என்று மகளைத் தூக்கிப் பின் தொடர, அவர்களை நோக்கி, ‘நில்லுங்க...' என்றாள் அம்மா.
ஆர்வத்தில் சட்டென அவர்களுக்கு புரியவில்லைதான்.
“வெளிலருந்து வாரன்ல மொதல்ல குளிச்சுக்கிறேன்...” என்றதும் பேத்திக்குக் கண் சிமிட்டல் செய்தபடியே நுழைந்தாள்... வீட்டை ஒட்டினாற்போல் சுற்றிலும் மறைப்பு உள்ள புளுகலர் தகர செட், அதணுள்ளேயே சிறிய லெட்டின் பாத்... வாளியில் தண்ணீர், துண்டு, சோப்பு,சாம்பு, மாற்று உடைகள்எல்லாமும் அங்கு வைத்தாள் மாலா.
தான் எடுத்து வந்திருந்த துணிகளை அலச தண்ணீயில் முக்க, ‘அத்தை, துணிகள அப்படியே வச்சுருங்க நான் அலசிக்கிறேன்...' இது மனைவி.
கேட்டபடி இருந்த அருணுக்கு ‘இது போதும் மாலா...' சத்தமிட்டு கத்தணும்னு தோன்றியது.
மகளுக்கு போன் பண்ணச் சொன்னாள், பேசினாள்...
ரெண்டு வாரத்துக்குத் தன்னை தனிமைப்படுத்தி செட்டில் இருந்து கொள்வதாக சொன்னாள்...முகக்கவசம் அணிந்து தன்னருகே வரலாம், உணவு தரலாம், பேசலாம் என்றாள்... கிட்டேவிடாமல், தொடாமல் பேத்தியை எதிரே அமர்த்தி கதைகள் கூறுவதாக கூறி, பேத்திக்கு, சிரிப்புத்தன மழிப்புக் காட்டினாள்.
“அத்த...உங்களிடம் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன், சரியா...நமக்குள்ள எதுமே நடக்கல, இன்னிக்குதான் சந்திக்கிறோம். அதுவும் அம்மா மகள் என்ற ஒட்டுதலில், உங்களை எனக்கு தெரியும் மனசுல எதையும் வச்சுக்க மாட்டீங்க... நானும் இனிமே அப்படியேதான். முன்பு நடந்தவைகளை ஒதுக்கித் தள்ளிட்டு நமக்கான வாழ்க்கைய சோட இல்லாம நகர்த்தலாம்”முகமலர்ச்சியுடன் சாப்பாடு கொண்டு வந்த மாலா, மொத்தமும் இயல்புடன் மாறியிருந்தாள்.
“சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்கத்த... அப்புறமா வெது வெதுப்பா சுடுதண்ணி போட்டுத்தாறன்... கால்களில் ஊத்துனா இதமா பதமா இருக்கும்” சொன்னாள்.
அம்மாவின் வருகை, மாலா நடந்து கொள்ளுதல்... தனித்திருத்தல்...இனியான நாட்களில்... விட்டுத்தரும் புரிதல் வெளித்தன்மை வாழ்க்கை தொடருமென்ற நம்பிகையோடு அருண்.