கொழகொழத்து சரிந்து விழுந்த திவ்யாவை தூக்கிக்கொண்டு வினோத் ஓட்டம் பிடித்தான். சிறிது முன்வரை பேசிக்கொண்டிருந்தவள் அழுது கொண்டே ‘பொலக்’கென கீழே விழுந்து விட்டாள். தட்டித்தட்டி எழுப்பியும் கண் திறக்கவில்லை. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மனநலப் பிரிவுக்கு எடுத்துச் சென்று பெஞ்ச்சில் கிடத்திவிட்டு வினோத் பெருமூச்சு விட்டான்.
“என்ன? என்ன ஆச்சு?” மருத்துவர் ஏதேதோ கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
வினோத் சிறு அழுகையுடன், “என் தங்கச்சி டாக்டர். அவங்க அண்ணன் இறந்துட்டதா கேள்விப்பட்டதும், அப்படியே அழுதுக்கிட்டே மயங்கி விழுந்துடுச்சு” என்று கேவலுடன் சொல்லி முடிக்கவும்,
‘கவலப்படாதீங்க எழுந்திருவாங்க. கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும் சரியாப் போய்டும். இதோ வந்துர்றேன்’ னு மருத்துவர் வேற நோயாளியப் பார்க்கப் போய்ட்டார். ஆனால் திவ்யா சிறிதுகூட கண்விழிக்கவில்லை. ஒரு மணிநேரத்துக்கு மேலாகிவிட்டது. கையைப் பிசைந்துக்கொண்டு வினோத் மனது துடிதுடிக்க நின்று கொண்டிருந்தான்.
மருத்துவர் இரண்டு மணிநேரம் கழித்து வந்து பார்த்த போதும், திவ்யா கண் திறக்கவில்லை. பொறுமையாக அமர்ந்த மருத்துவர், வேறு ஏதேனும் சிக்கல் இந்தப் பொண்ணுக்கு இருந்ததா? என்று வினோத்தை நோக்கிக் கேட்கவும்,
பெருங்கேவலோடு, மருத்துவமனை முன்பு அழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்து விட்டுச் சொல்ல ஆரம்பித்தான். “டாக்டர், இன்னைக்கு இறந்துபோன இந்தப் பிள்ளையோட அண்ணன் குரு. அவன் சாகிறதுக்கு 18 நாளுக்கு முன்னாடிதான் அவனோட அப்பாவும் இறந்து போனார்.
ஒரு மாசம்கூட ஆகல. அவங்க அப்பா ரொம்ப நல்லவர். சித்த வைத்தியர். நல்லபேர் பட்ட மனுசன். ஆனா குடிக்கிற பழக்கம் அவரு சொத்த எழந்த நாளுல இருந்து தொத்திக்கிடுச்சு. எங்க வீட்டுக்கு எதுத்த வீடுதான். குடிக்க வேணாம்னு இந்தப் பொண்ணும், அவங்க அம்மாவும் அவருகிட்ட கெஞ்சுவாங்க. ஆனால் குடிச்சு குடிச்சு அவரு கொடல்லே வெந்து போச்சு. ஊருக்கெல்லாம் வைத்தியம் சொல்ற சித்த வைத்தியரு. 18 நாளுக்கு முன்னாடி என்ன நெனச்சாரோ, குடி மட்டுமே முக்கியம்னு நெனச்சுட்டாரு போல. கயத்துல தொங்கிட்டாரு”.
“அச்சச்சோ. அப்பறம்” என மருத்துவர் கேட்கவும் “இந்தப் புள்ளக்கி இவுக அப்பான்னா உசுரு. அன்னக்கும் இப்படித்தான் அழுதழுது மயங்கிக் கெடந்துச்சு. அன்னக்கித்தான் இப்பச் செத்துக்கிடக்கானே குரு. ‘அப்பா செத்தா என்ன? நான் இருக்கேன் உங்களுக்கு’ ன்னு அவனும் ஊரு முன்னாடி தண்ணியப் போட்டு வந்து கத்த ஆரம்பிச்சான். அவங்க அப்பா மாதிரி குடிக்க ஆரம்பிச்சிட்டான். இவுக என்ன சொல்லியும் அவன் கேக்கல. திரும்ப திரும்ப எழவு வீட்ல குடிச்சிட்டு வந்து நின்னான்”
“……………….”
“இந்தப் புள்ள எதத் தாங்கும். அவுக அப்பா சொத்த இழந்த சோகத்துல குடிக்கிறேன்னாரு. இப்ப இவன் அப்பா இழந்த சோகத்துல குடிச்சேன்னான். அம்மாவும் புள்ளயும் மழயில நனஞ்ச கோழிக் குங்சு மாதிரி நடுங்கிப் போய்ட்டாங்க. இப்ப இவனும் குடிச்சிட்டு ‘பைக்’க ஓட்டி செத்துப் போய்ட்டான்”
இவ்வளவு அதிர்ச்சி இந்தப்புள்ள வாழ்க்கைல 16 வயசுக்குள்ள நடந்தா கஷ்டமாத்தான் இருக்கும். கேக்குற நமக்கே கஷ்டமா இருக்கு. ஒண்ணு பண்ணுங்க நாங் குடுக்குற மாத்தரய கொடுங்க. ரொம்ப அழ விடாம பாத்துக்கங்க”ன்னு சொல்லிட்டார் டாக்டர்.
வினோத் மருத்துவமனை வண்டியில வச்சு திவ்யாவ கொண்டு வந்து புருசனையும் மகனையும் 18 நாளுக்குள்ள இழந்த அம்மாவின் மடியில் போட்டான்.
திவ்யாவப் பார்த்ததும் கொதித்து நெஞ்சில் அடித்து அடித்து கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள் லெட்சுமி.
“கையி காலு சேதப்படாம, பொத்தி பொத்தி வளத்தேனே…
எஞ் சேனத் தளபதிஎன் கண்ணு
எங் கண்ணக் குத்திப் போயிட்டியே
பாத்த கண்ணு பூத்துப் போச்சு
பச்ச மண்ணு பொதஞ்சு போச்சே….”
‘யாத்தே யாத்தே’ ன்னு சத்தம் போட்டு ஒப்பாரி வைக்கவும், பிள்ளய நெனச்சு நெனச்சு ஏதோ பெத்த மனம் பிதற்ற ஆரம்பிச்சிருச்சு.
அழுது ஓய்ந்த லெட்சுமி திரும்ப மடியில கெடந்த மகளப் பாத்ததும் திரும்பவும் கேவத் தொடங்கினாள். “ஒரு பொட்டப் புள்ளய வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன். நேத்துக்கூடப் பேசினியே. அம்மா நான் வேலத் தளத்துல தான் இருக்கேன். சாப்பிட்டியா மகனேன்னு நான் கேட்டத்துக்கு, நான் சாப்பிட்டுக்கிற்றேன் மா எஞ்சாப்பாட்ட நான் பாத்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு பத்தறமா இருங்கன்னு சொன்னியே. அந்த கடசி வார்த்த நான் இப்படி பாக்கத்தானா?” அழுதழுது முகம் வீங்கிப் போனாள் லெட்சுமி.
திவ்யா கொஞ்சமா கண்ணத் தொறந்ததும். வினோத் ஓடிவந்து ‘அம்மா அழாதீங்க இந்தப் புள்ளத் தாங்காது. இப்பத்தான் காலைல இருந்தே முழுச்சிருக்கு’. சொன்னதும் புடவையை வாயில் பொத்தி இந்தப் பிள்ளையை நினைத்தும் அழத் தொடங்கி விட்டாள்.
மருத்துவமனையிலேயே அந்த நாள் முழுவதும் போனது. தத்தனேரி சுடுகாட்டில் எரிக்கக்கூட இடமில்லாமல், கீரத்துறைக்கு குருவின் உடலை எடுத்துச் சென்றனர். ‘ஒரு வீட்ல இப்படி குடிச்சுக் குடிச்சு நெறய பேரு செத்தா சுடுகாட்லகூட எடம் கிடைக்காதுன்னு ஊரு சனம் பரிதாபப்பட்டது’
கீரத்துறை சுடுகாட்டில் குருவின் உடல் கிடத்தப்பட்ட போது ஒரு 400 வாலிபப் பயல்கள் சுத்தி நின்று அழுது கொண்டிருந்தார்கள். குருவின் உடல் எரிக்க எடுத்துச் செல்லும்போது அவர்களின் சத்தம் முகட்டைக் கிழித்துக் கொண்டு வெளியேறியது.
அழுதழுது லெட்சுமியும் மயங்கிக் கிடந்தாள். எல்லாரும் அவர்களை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து சிறு பிள்ளைக்கு சங்கில் புகட்டுவதைப்போல கொஞ்சம் தேநீரைப் புகட்டி சுவரில் சாய வைத்தனர்.
மூன்று நான்கு நாளில் சடங்கெல்லாம் முடிந்து உறவினர்கள் சென்றனர். நண்பர்கள் சென்றனர். இரண்டு பெண்களும் தனியாய் விடப்பட்டனர். ‘என்ன செய்வது? ஒரு இருபது இருபத்தைந்து நாட்களுக்குள்ளாக கதி கலங்கிவிட்ட தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தாள் லெட்சுமி.
‘திடீர்னு புருசன் கயித்துல தொங்குனதும் திக்குத் தெரியாத லெட்சுமி. ஆம்பளப் புள்ளயாவது நம்மள காப்பாத்தும்ன்னு நெனச்ச பதினெட்டாவது நாள், காலைல மூன்று மணிக்கு யாரோ ஓங்கி கதவத் தட்டுனதும், திறந்தால் குருவின் நண்பனொருவன் நின்றிருந்தான்.
“என்னப்பா இந்நேரம் வந்திருக்க. ஏதும் பிரச்சனையா” திடுக்கிட்டு லெட்சுமி கேட்டதும், ‘ஒண்ணுமில்லம்மா குரு வந்தானா?’
‘இல்லயேப்பா’ என்னன்னு பதற ஆரம்பித்தாள்.
பதறாதீங்கம்மா. குருவுக்கு உடம்பு சரியில்ல போல மதுர பெரிய ஆசுபத்திரில சேத்திருக்காக, நாம போய் பாக்கப் போகணும்”
சொல்லி முடித்ததும் லெட்சுமியும் திவ்யாவும் மாலைமாலையாய்க் கண்ணீர் வடித்தனர். நேத்து ராவுல பேசுன மகனபபத்தி இப்படி ஒரு சேதி கேட்டதும் பெத்த மனசு பித்துப்பிடிச்சுப் போச்சு. ரெண்டு பேரும் இன்னும் சிலரும் சேந்து வண்டியப் புடிச்சு பெரிய ஆசுபத்திரிக்குப் போக,
அங்க வெராண்டாவுல கெடந்தான் குரு. ஏதோ தூங்கிட்டு இருக்க மாதிரிதான் இருந்தது. உசுரு இருந்துச்சு. ஆனா பேசவே இல்ல. என்னன்னு வெசாரிச்சத்துக்கு நர்ஸம்மா வந்து, இல்லம்மா உங்க பையன் நல்லா குடிச்சிருக்காரு. ஹெல்மெட் வெற போடல. ரோட்டுல கம்பு, சோளம் தட்டைகள காய போட்டிருந்திருக்காங்க. நடு ராத்தரியில அது வாரி விடவும் பாலத்துல போயி தல இடிச்சிருக்கு. மண்டயில அடிபட்டதும் உங்க பையன் கோமாவுக்குப் போய்ட்டார். ஏதாவது மருந்து குடுக்கலாம்னா மருந்தும் வேல செய்யாது நல்லா குடிச்சதுனால. இனி டாக்டர் வந்தாத்தான் தெரியும்னு சொன்னதுதான் தாமதம் திவ்யா கீழே விழுந்து விட்டாள்.
லெட்சுமி அழுத கண்ணீர் ‘வைகை’ ஆத்தயே மிஞ்சியிருக்கும். ‘குடி குடிய கெடுக்கும்பாக’ அதுக்குத் தோதா எங்குடும்பம் ஆயிப் போச்சேன்னு அழுதழுது சுய நெனவுக்கு வந்ததும், எவ்வளவு அழுதாலும் செத்தவக வரப் போறதில்ல. அது போல சொந்தம் சொருத்துன்னு ஒத்தாச இல்ல. இந்தப் புள்ளயவாவது காப்பாத்தணுமேன்னு மனசில தைரியத்த ஏற்படுத்திக்கிட்டு, அடுப்பைப் பற்ற வைத்து சோறு ஆக்கத் தொடங்கினாள்.
தன் மகளை நோக்கிச் சொல்லத் தொடங்கினாள் இவ்வாறு, “சொந்தமும் பந்தமும் கடைசி வரக்கும் வராது மகளே! தைரியமா இரு அம்மா நான் இருக்கேன் உனக்குன்னு” சொன்னதும் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள் திவ்யா.