காலை ஏழு மணி தொடங்கி சூரியனைப் போலவே கதகதப்பாய் அனல் கக்கிக்கொண்டே இருந்தது அன்னலெட்சுமியின் அடுப்பு. தினந்தந்தி, தினமலர், தினகரன், இடைஇடையே தீக்கதிர் என அரசியல் பேதமின்றி அன்னத்தின் கையில் நாளிதழ்கள் கிழிபட்டுக் கொண்டிருந்தன.
இட்லி, பனியாரம், ஆப்பம் என்று எது கேட்டாலும் கிடைக்கும். இடையிடையே முட்டையை உடைத்து ஊத்தி உள்ளூர் பிள்ளைகளுக்குத் தருவதுண்டு. சாவகாசமாய் டீக்கடைகளில் அரசியல் பேசும் ஆண்களைப் போல, அன்னத்தின் கடையில் பெண்கள் படும் அல்லல்கள் மையப்பொருளாய் இருக்கும்.
ஐம்பது, ஐம்பத்திரண்டு வயதாகும் அன்னம் இருபத்தைந்து வயதிலேயேக் கணவனை இழந்து தாலியறுத்தவள். பெரிதாய் கணவன் கட்டிவைத்த சாம்ராஜ்யம் என்று எதுவும் கையிருப்பில்லை.
மூன்று பிள்ளைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அழுது தீர்த்த கண்ணோடு அப்பொழுதிருந்த கௌப்பு(ஹோட்டல்) கடைகளில் வேலைக்குப் போனாள். பிள்ளைகள் வளரவும், சாலையோரமாக இரண்டு புளியமரங்களுக்கு இடையில் ஒரு சிறு அடுப்பு, மாவு பாத்திரங்கள், ஆப்பச் சட்டி, இட்லிச் சட்டி, பனியாரச்சட்டி போன்றவை சகிதமாக அமர்ந்து கடை போட்டாள். நன்றாகத்தான் ஓடுகிறது.
இன்று இந்தத் தொழிலை ஆரம்பித்து 22 வருடங்களுக்கும் மேலாகிறது. அவள் அடுப்புக் கூட்டுவது ஆறு மணிக்குத்தான். ஆனால், காலை சாப்பாட்டு வேலை முடிந்து எடுத்து வைக்க பன்னிரண்டு மணிக்கு மேலாகும். அதன்பின் அடுத்த நாளுக்கான வேலைகள் என ஆரம்பிக்க வேண்டி வரும்.
அசதியில் படுத்துறங்கிக் கூட பல வருடங்கள் ஆகியிருக்கும். அப்படித்தான் அன்றைக்கும் அன்னலெட்சுமி பாத்திரங்களைத் தயார்படுத்தி விட்டு எதிராய் இருக்கும் காளியாத்தாளிடம் எல்லா மனக்குமுறலையும் ஒப்படைத்துவிட்டு வந்தமர்ந்தாள். சாம்பார் தாளித்து, சட்னிகளைத் தாளித்து, அது அதற்குறிய சட்டிகளில் நிரப்பிவிட்டு, ஆப்ப மாவு, இட்லி மாவு, பனியார மாவு தயாராக வைத்துக்கொண்டு மூன்று அடுப்புகளிலும் மாறிமாறி உயிரைக் கொடுத்து நெருப்பைக் கக்க வைத்துக் கொண்டிருந்தாள். எட்டு மணியிலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும்.
அவசர அவசரமாய் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இங்குதான். அரக்கப் பறக்க ஆத்தா எனக்கு ரெண்டு இட்லி, எனக்கு மூணு, எனக்கு ஒரு ஆப்பம் என்கிற மெனுக்களோடு மனக்கணக்காக எல்லோர் தட்டையும் வயிறையும் ஒரு சேர நிரப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரம்தான். சிறிது படபடப்பாய் கைகள் தளர ஆரம்பித்தது. எப்பவும் போலத்தான் என்று நினைத்து வியர்வையோடு எண்ணத்தையும் துடைத்துவிட்டு, ஆப்பம் பனியாரமென அடுத்தடுத்து வருபவர்க்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
மணி பத்தை நெருங்கிவிட்டது. ஆட்கள் வரத்துக் குறைந்துவிட்டது. சரியென்று பேத்தி எட்டு மணிக்குக் கொண்டு வந்த டீச்செம்பை அப்பொழுதுதான் கவனித்தாள். ஒரு மடக்கு டீயவாச்சும் குடிப்போம் என்று கங்கு அனலில் வைக்க, ஆப்பச் சட்டியை இறக்கி வைத்தாள்.
அப்பொழுதுதான் வேகவேகமாக ஆட்டோ டிரைவர் வந்து அம்மா ஒரு அஞ்சு இட்லி கொடுங்கன்னு சொன்னதும், இன்னும் ரெண்டு பேர் சாப்பிட வரவும் கங்கில் வைத்த டீ வற்றி கருப்பாவதும் மறந்து போனது. அவர்களின் வயிற்றை நிரப்பி அனுப்பிவிட்டு, கருகிய டீயின் சொச்சத்தை எடுத்து தொண்டையை நனைத்துக் கொண்டாள்.
தன்னிடம் வந்து வீட்டு அல்லல்களைப் பேசும் பெண்களை மனது சாந்தப்படுத்தி அனுப்பும் வேலையும் அன்னத்திற்குத்தான். நாளில் பகுதி நேரம் கடையிலேயே இருந்தாலும் ஊரில் நடக்கும் அனைத்து விசயங்களும் அவளுக்குத் தெரியாமல் இராது.
முடிந்தது மாவும் காலை உணவுக் கடையும் தகரத்தால் அடுப்பை மூடிவிட்டு கங்கை அணைத்துவிட்டு எல்லாத் தட்டு முட்டுச் சாமான்களையும் தேய்ப்பதற்காக எடுத்துப் போட வேண்டும். கொஞ்சம் மன சஞ்சலமாய் இருந்தது.
எல்லோர் வீட்டுப் பிரச்சனைகளையும் கேட்டுக் கொள்ள காதினைக் கொடுத்துவிட்ட காளியாத்தாவை நினைத்துச் சிரித்துக் கொண்டாள். அத்தனை வேலைகளையும் ஒத்தையாளாய்ச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ரெண்டு மகன்கள் மருமகள்கள் ஏழு பேரன் பேத்திகள் என்று பெரிய குடும்பந்தான். இப்பொழுதுதான் ஒரு பேத்தியின் திருமணம் கூட அன்னத்தின் காசில் நடந்தது. வீட்டில் இருக்கும் பல பொருட்களும் இவளுழைப்பால் வாங்கியதுதான்.
நேற்றிலிருந்து அந்தச் சம்பவம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. தான் இத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது யாருக்காக…? என்ற நினைவு இன்றுதான் அவளுக்கு அதிகமாய் மேலெழுந்தது.
இவ்வளவு வேலைகளைச் செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது நிமிர்ந்து கூட நடக்க முடிவதில்லை. உட்கார்ந்தே 22 வருடங்களாகச் செய்த வேலையாலும், முதுமையாலும் முதுகில் கூன் விழுந்துவிட்டது. அத்தோடு யாரும் வீட்டில் இல்லை என்பதால் தலையணையைப் போட்டு சற்று இளைப்பாற காத்தாடியையும் போட்டுவிட்டு, டி.வி. பொட்டியைப் போட்டாள் அன்னம்.
இப்பொழுதுதான் டி.வி.பார்ப்பதற்கு என்னென்னமோ அமுக்க வேண்டியிருக்கே, போராடி போட்டதும் பழைய படம் போட்டார்கள். “நெஞ்சில் ஓர் ஆலயம்” நல்ல படம்தான் பாக்கலாமே என்று உட்கார முடியாமல் படுத்துக்கொண்டு எப்படி லயித்தேளோ தெரியவில்லை. அம்மா தன் பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என் கையிலும், அந்த டாக்டர் இறக்கும் போதும் கண்களில் நீர்நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுது மருமகன் வந்தானோ தெரியவில்லை. டி.வி பொட்டியை படக்கென்று அமத்திவிட்டான்.
இந்த வயசுல ஒங்களுக்கு டி.வியெல்லாம் தேவையா? என கேட்டும் விட்டான். மனது கொந்தளித்து விட்டது. ‘வீட்டை, இந்த டி.வி பொட்டியை, இந்தக் காத்தாடியை வாங்கிப் போட்டது நான். ஆனாலும் அதைப் பார்க்கவோ அனுபவிக்கவோ உரிமையில்லையா?’ என நொந்து கொண்டாளே தவிர ஒரு வார்த்தையும் மருமகனைப் பார்த்துப் பேசவில்லை.
மருமகள்கள் எடுத்தெறிந்து பேசினாலும் அதைப் பொறுத்துக் கொண்டே தான் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தாள். அன்னத்திற்கு, “இதுவரையில் எனக்குன்னு ஒரு சட்டத்துணி எடுத்துருப்பனா” என்று மனது அடித்துக் கொண்டது.
அப்பொழுதுதான் முதன்முதலாக தன் இல்லாமற் போன துணையை நினைத்துக் கொண்டாள். அவர் மட்டும் இருந்திருந்தால்…
காசுதான் இல்லை ஆனாலும் தன்னை வேலைக்கு அனுப்பியதில்லை. பிள்ளைகளை எப்பொழுதும் கண்ணின் மணிகளாய்த்தான் பார்த்தார் என்ற நினைப்பெல்லாம், இன்றும் தூக்கம் வராமல் இந்த பன்னிரண்டு மணிக்கு மேலாகவும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
அதற்குப் பின்தான் வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கங்கள் அதன் பின்னே பிள்ளைகளை வளர்த்து முதலில் பெண்ணைத் திருமணம் செய்வித்து, பின் மகன்களுக்கு நல்ல பெண்களாகப் பார்த்து முடித்துவிட்டு, ஆளுக்கு ரெண்டு பிள்ளைகள், அவளுக்கு பெண் பிறந்துவிட்டது என்று எத்தனை முறை அவளை பிறந்த வீட்டிற்கு அடித்து விரட்டியிருப்பான் அவளின் கணவன்.
அனைத்தையும் சமாளித்து மூன்றாவதாய் அவள் கர்ப்பமானபோது காளியாத்தாவிலிருந்து கடற்கரை வேளாங்கண்ணி மாதா வரைக்கும் எத்தனை வேண்டுதல்கள் பெண்ணாய் பிறந்துவிடக் கூடாதென்று.
அவளை பேறுகால ஆசுபத்திரிக்குக் கொண்டு சென்று சேர்த்தது முதல் கௌதமின் பிஞ்சு விரல்களைக் கையில் தொடும்வரை எத்தனைக் கவலைகள்... ஒரு பெண்ணை தானே மகனிடமும், மருமகளிடமும் திட்டு வாங்கிக்கொண்டு வளர்த்து வருவதும், அத்தனை பேரன், பேத்திகளுக்கும் தன்னுடைய வருமானத்தில்தான் அத்தனைப் படிப்புச் செலவுகளும் செய்வது தானாய் இருந்தும்… என்று நினைத்து மருகினாள்.
அப்பொழுதுதான் திடீரென பாசமாய் உருவி உருவி வளர்த்த குரும்பன் என்ற குரு எனும் மகனின் இழப்பு. அதுவும் அவள் கண்முன்னே, குருவுக்கு ரெண்டு பிள்ளைகள் அன்றும் இன்று போல்தான் கடையை எடுத்து வைத்து விட்டு வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.
“அம்மா பிள்ளைகளை கூட்டிட்டு வந்திடறேன்” என்று நேற்றுத்தான் புதிதாக வாங்கிய பைக்கை உசுப்பி கிளம்பி ஒரு விநாடிதான் இருக்கும். அதற்குள்ளாக எங்கிருந்தோ வந்த லாரி சட்டென்று மோதி குரு எங்கு போய் விழுந்தான் என்றே தெரியவில்லை. காளியாத்தாவின் கோவில் முன்னே சிறிய சதைப்பிண்டம் இரத்தத்தோடு கிடந்தது. என்னவென்று அன்னம் நிதானிப்பதற்குள் அவள் நினைக்கவே நடுங்கும் அந்த சம்பவம் நடந்தேறி விட்டது. பிள்ளையின் உடலைத் தேடி பதட்டத்துடன், அன்னம் நடக்கையில் கொஞ்சம் தள்ளி, குருவின் உடலில் எந்த இடத்திலும் அடியில்லை, என்று பார்த்து விட்டு முகம் பார்க்கையில் பிணமாகவே ஆகிப் போனாள் அன்னம்.
கண்ணைத் திறக்க இயலவில்லை. காதில் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு இப்பொழுது ஏதும் கேட்காத வெளிக்குப் போனாள் அன்னம்.
அவள் மகன் குரு இறந்த இடத்தில் நினைவுகள் ஊடாக குருவை மடியில் படுக்க வைத்து அணைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே பிணமாக வீழ்ந்து போனாள் இட்லிக்கடை அன்னலெட்சுமி.