திண்ணையில் பகடைகள் உருண்டு கொண்டிருந்தன. யாருக்கும் தாயம் மட்டும் விழுந்தபாடில்லை. தாயம் விழாத ஆட்டமும், வெட்டுக் கொடுக்காத ஆட்டமும் என்ன ஆட்டம்? அப்பா மறைந்த இந்த ஒரு வருடத்தில் பெரும்பாலும் யாரும் திண்ணையில் அமர்வதில்லை. ஏதோ பொது முடக்கம் புண்ணியம் கட்டிக்கொண்டது. எப்போதும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும் திண்ணைக் கம்பங்களும், தெருவோரப் புங்க மரமும் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் தனிமையில் தவித்துவிட்டன. அதுவும் இந்தப் புங்க மரம், வீட்டின் கூரை மீது சாய்வது போல சாய்ந்து ஊர்க்கதைகளை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருக்கும். தாயங்களின் ஓய்வில்லாத உருட்டலில், அக்கம் பக்க வீட்டுக் கதைகள் விழுந்து கொண்டிருந்தன. மே மாதக் கத்தரி வெயிலிலும், இந்தக் கதைகள் புங்க மரத்திற்கு ஹார்ஸ்லே ஹில்ஸ் குளிர்ச்சியைக் கொடுத்தன. யாருக்குத் தாயம் விழுந்தாலென்ன? யார் யாரை வெட்டினால் என்ன? பகடைகளோடு கதைகள் உருண்டால் சரி.
புங்க மரத்தில் ஓர் அணிற்பிள்ளையும், அரணையும், ஓணானும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அம்மாவும் எதிர்வீட்டு சாந்தி அக்காவும், தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும், வீட்டில் எங்களைக் கேட்காமலேயே வளர்ந்து கொண்டிருந்த பூனையும் அமைதியாக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பூனைக்கு பெயரெல்லாம் வைக்கவில்லை. வெறும் பூனைதான்.
அம்மாவிற்குத்தான் இரக்க குணம் அதிகம். எப்படியோ அதை மோப்பம் பிடித்துக் கொண்ட அந்த வெறும் பூனை, பசிக்கும் போதெல்லாம் அம்மாவின் சேலை முந்தானையைக் கடித்து இழுக்கும். இப்படிப் பாலுக்கு ஒரு சைகை, எலும்புத் துண்டுக்கு ஒரு சைகை என அம்மாவை அது மயக்கி வைத்திருந்தது.
அம்மா ஆறு தாயங்களும், சில தொகைகளும் போட்டுச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். சாந்தி அக்காவிற்கு இன்னும் தாயமே விழவில்லை. எதிரி காயை வெட்டாமல் பழம் சுவைக்க முடியாது. எல்லாப் பகடைகளும் சகுனிதான் போல. உற்ற நண்பனாகி, உருகிக் கேட்டால், கேட்டது விழுகிறது. இந்த முறை சாந்தி அக்காவிற்காக அம்மாவே கேட்டாள்.
"ஒரு தாயம்..."
தாயம் விழுந்தது.
"மறுதாயம்..."
ஐந்து விழுந்தது.
"மூனு...மூனு..."
மூன்று விழுந்தது.
சாந்தி அக்கா முறைத்தாள். இந்த முறை தனக்குத் தேவையானதை போட்டு, வெளிவந்த ஒரே காயை வெட்டிக் கொண்டாள்.
அதே நேரத்தில், அரணை ஓணான் அணிற்பிள்ளை விளையாட்டில், நேரம் பார்த்துப் புகுந்த அந்த வெறும் பூனை, அணிற்பிள்ளையை கவ்விக்கொண்டு ஓடியது.
"ஹோய்..." தம்பிதான் துரத்திக்கொண்டு ஓடினான்.
ஆட்டம் அத்தோடு நின்றது. அம்மாவும் சாந்தி அக்காவும், அரணையும், ஓணானும், நானும் உறைந்து பார்த்தோம்.
அந்த வெறும் பூனை, அணிற்பிள்ளையை தூக்கிக்கொண்டு பக்கத்து வீட்டு மதிலில் ஏறியது. அம்மாதான் கலங்கிவிட்டாள். உச்சு கொட்டிக்கொண்டே இருந்தாள், "சின்னக் குட்டிடா... அநியாயமா தூக்கிட்டு போய்டுச்சே..."
நானும், தம்பியும் நீண்ட அலகால் குத்தி காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். முடியவில்லை.
அன்று இரவுவரை அம்மா புலம்பிக் கொண்டே இருந்தாள். " பாவம்டா... சின்னக்குட்டி. ராமனுக்கு ஒதவி பண்ண எனமாச்சே..."
"விடுமா... அது ஆயுசு அவ்ளோதான்" நானும் தம்பியும் அந்த வெறும் பூனை அரணையை ஓணானைத் தூக்காமல், ஏன் அணிலைக் கவ்வியது என விவாதிக்கத் தொடங்கினோம்.
இறுதியாக ஒரு முடிவு எட்டப்பட்டது. நாம் எப்படி மட்டன் சிக்கன் மட்டும் சாப்பிடுகிறோமோ அது போல், அந்த வெறும் பூனைக்கும் அசைவ மெனு இருக்கும் என...
ஆனால், அம்மா விடுவதாயில்லை,"வரட்டும்... அந்த வெறும் பூன... அலகுலயே சாத்தறேன். சின்னக்குட்டினு கூட பாக்காம..." பொருமிக்கொண்டே இருந்தாள்.
மறுநாள் காலை, புளியமரத்து கசாப்பு பாய் வந்தார். "வா... அமானே! ரஃபிகிட்ட ஒரு கிலோ குடுத்தனுப்பு. போனவாட்டி குடுத்தது ரொம்ப முத்தலா இருந்துது... எவ்ளோ நேரம் வேகுது! ருசியும் இல்ல. சப்புனு... கொஞ்சம் எளசா இல்ல கடாவா பார்த்துக் குடு இன்னிக்கி..." பேசிக்கொண்டே பழைய பாக்கியைக் கொடுத்தாள்.
பத்து நாட்களாக அந்த வெறும் பூனையைக் காணவில்லை. ஒருவேளை அம்மாவின் கோபம் தணியட்டும் என்றிருந்ததோ என்னமோ. மீண்டும் திண்ணையில் பகடைகள் உருண்டன.
"ஒரு தாயம்..."
"மியாவ்..." அந்த வெறும் பூனை மெதுவாக அம்மாவின் சேலையை இழுத்தது.
நானும், தம்பியும் அந்த வெறும் பூனை அலகால் அடி வாங்குவதை வேடிக்கைப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தோம்.
அம்மா என்ன நினைத்தாளோ, ஒரு கொட்டாங்குச்சியில் பாலை நிரப்பி வைத்துவிட்டு அந்த வெறும் பூனையை வருடிக் கொடுத்தாள். மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
புங்க மரத்தில் அரணையும் ஓணானும் இப்போது புதிதாய் ஓர் அணிற்பிள்ளையும்...
வெட்டுவிழாம என்ன ஆட்டம்?
பகடைகள் உருண்டு கொண்டிருந்தன.