கொஞ்ச நேரத்துலேயே எப்படி இந்த உலகமே மாறிப் போயிடறது? கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியினால இந்த உலகமே ஸ்தம்பித்தல்லவா போய்விட்டது? ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையையும் அப்படியே இந்த கொரோனா வைரஸ் புரட்டியல்லாவா போட்டுவிட்டது.
இப்படியெல்லாம் நடக்குமென்று யாராவது நினைத்தோமா? இல்லையே! எங்கோ சீனாவுல வூகான் மாகாணத்துலதான இந்த வைரஸ் வந்தது. நமக்கும் அதுக்கும் தொடர்பே இல்லையே. அதுவும் நம்ம நாட்டோட வெப்பநிலைக்கு அந்த வைரஸ் கிருமியெல்லாம் தாக்குப் பிடிக்குமா? நம்மைப் பார்த்தே அந்தக் கிருமி ஓட்டமெடுத்துவிடும் என்று பலவாறு பேசித் தம்பட்டம் அடித்துக் கொண்ட நம் வாழ்க்கையில் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கிருமி எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
நல்லா மானமா உழைத்துப் பிழைத்து வாழ்ந்தவர்கள், இன்று ஒருவேளை உணவிற்குக் காத்துக்கிடக்கும் நிலை வந்துவிட்டதே? இந்த நோய் நமக்கெல்லாம் வராது என்று இருமாப்போடு பேசியவர்களின் வாய் இன்று அடைத்துப் போய்விட்டது.
வாய் மட்டுமா அடைத்துப் போனது? வாழ்க்கையின் கதவுகளும் அல்லவா அடைபட்டுப் போனது. நேயத்தோடு பழகியவர்கள் இன்று இவருக்கு நோய் இருக்குமோ இல்லையோ என்று சந்தேகத்தோடு பார்க்கும் பார்வைக்குத் தள்ளப்பட்டது வேதனையிலும் வேதனை. என்ன செய்வது? இது இறைவனது கட்டளையா? அல்லது சோதனையா? மருந்தே இல்லாத இந்த நோய் நம்மைவிட்டு எப்போது போகும்? எல்லோரும் எப்போதும் போல இயல்பான வாழ்கையை எப்போது வாழ்வார்கள்?
அரசாங்கம் இந்த நோயை விரட்டுவதற்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. இந்த ஊரடங்கைத் தவிர வேறு மருந்தே தற்போது இந்த நோய்க்கு இல்லை. திடீரென்று ஊரடங்கு அறிவித்துவிட்டதால் அனைவரும் நிலைகுலைந்து போனார்கள். ஊருக்குப் போகமுடியாமலும், அவசரத் தேவைக்கு உணவுப் பொருட்களை வாங்க முடியாமலும் அன்றாடம் தள்ளுவண்டியில் சாலையோரத்தில் கடைவைத்திருந்தவர்களும் திக்குமுக்காடிப் போனார்கள். அவர்களது வாழ்க்கை நாளைக்கு என்ன செய்வோம்? என்ற நிலைக்குப் போய்விட்டது. அவர்கள் இந்த ஊரடங்கை எதிர்பார்க்கவேயில்லை. யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. உள்ளே பசி. வெளியில் வந்தால் கொரோனா தொற்று. இந்த நிலையில் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிற்று.
நம் கடைமுன் நடைபாதையில் சிறுசிறு வியாபாரம் பார்த்தவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களால் எப்படிச் சமாளிக்க முடியும்? அவர்களது குடும்பத்தில் இருப்பவர்களின் கதி என்னவாகும்? ஐயோ கடவுளே இவர்களுக்கு ஏதாவது நாம் உதவி செய்ய வேண்டுமே?
என்ன செய்வது? எப்படிச் செய்வது? ஒன்றுமே புரியவில்லையே! ஆண்டவனே... என்று பலவாறு பலப்பல கேள்விகள் முத்தையாவின் மனதைப் போட்டுப் பிசைந்து கொண்டே இருந்தன. முத்தையாவிற்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. இந்தச் சாமானிய மக்களுக்காக நாம் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இரவுப் பொழுதை படுக்கையில் உருண்டு கொண்டே கடத்தினார்.
விடிந்ததும் தனது வீட்டில் உள்ள அலமாரியைத் திறந்தார். திறந்து அங்கிருந்த பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார்.
காலையில் டீப்போட்டு எடுத்துக் கொண்டுவந்த அவரது மனைவி கமலம் அவரது செயலைப் பார்த்து சிலையாக நின்றுவிட்டாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு கணவனைப் பார்த்து, “ஏங்க… நீங்க என்ன பண்றீங்க? எதுக்காக நம்ம மகள் கலியாணத்திற்காக வைச்சிருக்கிற பணத்தை எடுக்குறீங்க? கொரோனா வைரஸ் வந்ததால ஆறு மாசம் கழிச்சு கலியாணத்தைத் தள்ளி வச்சிருக்கோம். பேங்கெல்லாம் மூடியிருக்கு. அப்படி இருக்கையில ஏன் அலமாரியில இருக்கிற பணத்தை பேக்குல எடுத்து வச்சிக்கிட்டு இருக்குறீங்க?” என்று கோபம் தலைக்கேற படபடவென்று பொரிந்து தள்ளினாள்.
அதையெல்லாம் கேட்டுக் கொண்டே டீயை வாங்கிய முத்தையா, “இங்க பாரு கமலம் ஊரடங்கு உத்தரவுனால நாளையில இருந்து எல்லாக் கடைகளையும் அடைச்சிரணுமாம். யாரும் தேவையில்லாம வீட்டை விட்டு வெளியில வரக்கூடாதாம். அப்படி வந்தா அவங்க மேல ஊரடங்கு உத்தரவ மீறியதுக்காக வழக்குப் போட்டுருவாங்களாம். நம்ம கடையை சுற்றிலும் வண்டியில் காய், பழம் விக்கிறவங்க, நடைபாதை வியாபாரிங்க, கூடையில் கீரை விக்கிற பொம்பளப் பிள்ளைகள், செருப்புத் தக்கிற வயசானவங்க, கூலித் தொழிலாளிங்க அப்படினு நெறைய பேர் இருக்காங்க. இவங்கள்லாம் தினம் வேலை செஞ்சு அந்த வருமானத்த வச்சுதான் சாப்பாடு, வீட்டு வாடகை மத்த செலவெல்லாம் செய்வாங்க. முன்னறிவிப்பு ஏதுமில்லாம கொரோனா தொற்று வரக்கூடாதுனு கடையை மூட சொல்லிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கணும்னா அவங்க எல்லாம் என்ன செய்வாங்க? கைக்குழந்தைகளோட நெறைய பெண்கள் கீரை, காய், கெழங்கு, மீன் எல்லாம் விக்கிறத பாத்துருக்கேன். இதையெல்லாம் நெனச்சு எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமேயில்லை. அவங்களுக்கு நம்மால முடிஞ்சத ஏதாவது செஞ்சே ஆகணும். அவங்களுக்குச் சாப்பாட்டுக்குத் தேவைப்படற சாமான்களை மட்டும் இந்தப் பணத்துல வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்றேன். நம்ம மக கல்யாணத்துக்கு நிச்சயம் ஆண்டவன் ஏதாவது ஒரு வழியக் காட்டுவான். நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் போயிட்டு வர்றேன்” என்று டீடம்ளரைக் கமலத்திடம் கொடுத்துவிட்டு சாமான்கள் வாங்கப் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
கமலத்தால் பதிலேதும் சொல்லமுடியவில்லை. அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றாள். அவளின் மனதிற்குள் மகளின் கல்யாணத்தைப் பற்றிய எண்ணச் சுழல்கள் சுழன்ற வண்ணமிருந்தது. ஆறுமாசங் கழிச்சு கல்யாணத்துக்கு பணம் வேணுமே? அப்போதைக்கு பணத்துக்கு நாம என்ன செய்யப் போறோம்? எப்படி நடத்தப்போறோம்? பணமில்லாம எப்படிச் சாமாளிக்க முடியும்? ஐயோ கடவுளே இது தெரிஞ்சா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொல்லப் போறாங்களோ தெரியலையே? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள், கவலைகள் பட்டாம்பூச்சி போல் அவளைச் சுற்றி வட்டமடித்தன. கமலம் ஒன்றுமே செய்யப் பிடிக்காமல் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்குத் தெரியாது. செல்போன் சிணுங்கிய சத்தம் கேட்டுத்தான் நடப்பிற்கு வந்தாள் கமலம். என்னமோ எதுவோ என்று நினைத்துக் கொண்டே மெதுவா எழுந்துபோய் எடுத்தாள், யாரா இருக்கும்? என்று நினைத்து செல்போனை எடுத்தவளுக்கு அதில் மாப்பிள்ளையின் அம்மா பெயரைப் பார்த்ததும் மயக்கமே வந்துவிட்டது.
பேசாமலிருந்தால் நல்லாயிருக்காதே, அடக்கடவுளே! இதென்ன சோதனை? செல்போனை ஆன் செய்து காதில் வைத்தவுடன், “அம்மா கமலம் ஒரு முக்கியமான சேதிம்மா. கல்யாணத்துக்கு நீங்க ஒரு செலவும் செய்ய வேணாம். எல்லாம் நாங்க பாத்துக்கறோம். பொண்ணுக்கு நகைகள், துணிமணி உள்பட எல்லாமே எங்க பொறுப்புதான். கொரோனா தொற்று சீக்கிரமா போகட்டும். ரொம்ப சிம்பிளா கல்யாணத்த நடத்திருவோம். நாங்களே எல்லாத்தையும் செய்யணும்னு விரும்புறோம். இது எங்க குடும்பத்தோட ஒட்டுமொத்த விருப்பம். இதை தயவு செஞ்சு வேணாம்னு சொல்லிடாதீங்க. அண்ணன் வந்தா அவருக்கிட்ட சொல்லிருங்க” என்றவரிடம், ‘‘அண்ணி நல்ல சேதிய நீங்கதான் சொல்லியிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். அவங்க வந்தவுடனே சொல்லிட்றேன். எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க’’ என்று கூறி செல்போனை வைத்துவிட்டு கமலம் தன் கணவரின் வருகைக்காக காத்திருந்தாள்.
நாம என்னமோ நினைச்சோம். ஆனா இறைவன் நமக்கு நல்ல வழியக் காண்பித்துவிட்டார். நாம நல்ல மனசோட மத்தவங்களுக்கு ஒதவுனா இறைவன் அந்த நல்ல உள்ளத்திற்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியக் கொடுக்குறாரு. இவ்வளவு சீக்கிரம் மகள் கல்யாணத்துக்கு நல்ல வழி காண்பித்த ஆண்டவனே ஒனக்கு ரெம்ப நன்றிப்பா. இது மாதிரியே கொரோனா வைரசும் போயிடணும்பா என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் கமலம். என்றைக்கும் இல்லாமல் அன்றைக்குக் கமலத்தின் உள்ளம் முழு நிறைவாக இருந்தது. நல்ல மனத்தை என்றும் இறைவன் துன்பப்பட விடமாட்டார். இந்த உண்மையை தன் கணவனின் வழியாக கமலம் நன்றாக உணர்ந்தாள். அவளின் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. எங்கிருந்தோ வானொலிப் பெட்டியிலிருந்து, ‘‘நல்ல மனம் வாழ்க’’ என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது.