பேராசிரியர் வகுப்புக்குள் வந்தார். வருகைப் பதிவேட்டைத் திறந்து ஒவ்வொரு பெயராய் அழைக்க மாணவர்கள் ஒவ்வொரு வரும் "உள்ளேன் ஐயா" என்று குரல் கொடுக்க வருகையைப் பதிவு செய்தார்.
பின்னர் எழுந்து கரும்பலகை பக்கம் சென்று அதில் சில தலைப்புகளை எழுத ஆரம்பித்தார். அப்போது பின்னால் இருந்து காகித அம்பு ஒன்று சர்ரென வந்து துல்லியமாய் அவருடைய கழுத்துப் பட்டையில் ஊடுருவியது.
கையை கழுத்துப் பட்டையில் நுழைத்து அக்காகித அம்பை எடுத்தபடியே திரும்பியவரின் முகத்தில் கவனச்சிதறல் மற்றும் மாணவர்களின் சிரிப்பால் ஏற்பட்ட சினம் மின்னலாய் ஊற்றெடுத்தது.
" யார் இந்த அம்பை எய்தது" என்று பொங்கி வந்த சினத்துடன் வினாவினார். சிரிப்பும் சலசலப்பும் உடனே அடங்கிப் போயின. வகுப்பில் ஒரே மயான அமைதி.
"இந்த அம்பை யார் எய்தது...? உடனே எனக்குத் தெரிய வேண்டும்" என்று கூறிய படியே மாணவர்களை நோக்க... அங்கு எவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. மாணவர்களின் உளவியல் அவருக்கு நன்றாகவே தெரியும்.
"அப்படியானால் நானும் இன்று வகுப்பு எடுப்பதாக இல்லை" என்று சொன்னபடியே நாற்காலியில் அமர்ந்தவர், "ஆனால் ஒன்று... இன்று உங்களுக்கு ஓர் கதை சொல்லப் போகிறேன்" என்று சொல்ல... "ஹே" என்றவாறே மாணவர்கள் மத்தியில் ஓர் உற்சாகம் கலந்த சலசலப்புடன் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
சமீபத்தில் ஒரு நாள் இரவு மணி பதினொன்று இருக்கும்... சாதாரணமாகப் பத்து மணிக்கே உறங்கிப்போகும் நான் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் நெருங்க வில்லை. என்ன செய்வது சிந்திக்கலானேன்.
காலையில் காருக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும்... அதை இப்போதே நிரப்பிக் கொண்டால் காலையில் நேரம் மிஞ்சும் என்று நினைப்பில் படுக்கை விட்டு எழுந்து உடைகளை மாற்றிக் கொண்டு காரில் அமர்ந்து எரிசக்தி நிலையத்துக்குப் பயணமானேன்.
எரிசக்தி நிரப்பியதும் அங்கிருந்து வெளியேறி சாலையில் வலப்புறம் வண்டியைத் திருப்பினேன். சற்று தூரம் வந்திருப்பேன். அங்கிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வெளியே ஒரு தேவதையின் கை அசைப்பு. சொக்கி இழுக்கும் அழகு... நிச்சயமாக அவள் எதோ விழாவில் கலந்து கொண்டு வந்திருக்க வேண்டும்.
அத்தேவதையின் முகத்தைப் பார்த்த பிறகும் கடந்து செல்ல மனம் ஒப்பவில்லை. காரைச் சில அடிகள் பின்னோக்கி நகர்த்தி ... அருகாமையில் அத்தேவதையின் முகம் நோக்க...
அத்தேவதை "என்னை என் வீடு வரையில் விட முடியுமா"... எனத் தேன்தமிழில் கொஞ்ச "ஓ... தாராளமாய் என்ற படியே முன் கதவைத் திறந்து விட... அத்தேவதை இப்போது என்னுடைய ரதத்தில்... முன் இருக்கையில் ... எனக்கு வெகு அருகில்... இதுவரையில் நுகர்ந்திராத புது மணத்துடன்... கனவா ...நனவா... ஒரு முறை என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
அவளுடன் உரையாடியதில் அவள் ஓர் அசாதாரண அறிவார்ந்த பெண்மணி என்றுப் புரிந்து கொண்டேன். அவளுடைய வீடு வரும் வரையிலும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். என்னைப் பற்றியும் கேட்டாள். நான் ஓர் பேராசிரியர் என்றும் நான் பணிபுரியும் கல்லூரியைச் பற்றியும் கூறினேன்.
அதற்குள் அவளுடைய வீடு வந்து விட வண்டியை நிறுத்தினேன். அத்தேவதை நன்றியுடன் இறங்கிக் கொண்டது. இறங்கிய தேவதை ஒரு கோப்பை குளம்பி அருந்தி விட்டுச் செல்லலாமே என்று கொஞ்சும் தமிழில் அழைக்க... அதற்காகவேக் காத்திருந்த நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.
இருவரும் சுவையான குளம்பி பருகினோம். இருவரும் தொடர்பு இலக்கங்களையும் பரிமாறிக் கொண்டோம்.குளம்பி அருந்தி முடித்து எழும் முன் அத்தேவதை... "என் இளவலும் உங்கள் வகுப்பில்தான் படிக்கிறான்" என்றது.
"பெயரென்ன" என்று கேட்டேன்... நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறி வழி அனுப்பி வைத்தாள்.
அதற்குப் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறோம். எங்கள் காதல் வளர்ந்து வருகிறது. இப்படியான நேரத்தில் ஒரு நாள் "நீ உன் தம்பியைப் பற்றிச் சொல்லவில்லையே" என்றேன்.
அதற்கு அவள் நீங்களே அவனைத் தெரிந்து கொள்வீர்கள் என்றாள்... எப்படி என்றேன்... அவனுக்கு மிகத் துல்லியமாய்க் காகித அம்பு எய்தும் பழக்கம் என்றாள் என்று கூறி நிறுத்த...
இப்போது அனைத்து மாணவர்களின் பார்வையும் ஒருவனையே உற்று நோக்க... அவன் தலை குனிந்து கொண்டான்.
பேராசிரியர் தன் மனதுக்குள் கண்ணா... என்கிட்டயேவா ... இது வரை நான் என் அனுபவத்தில் உங்களைப் போல் எத்தனைப் பேரைப் பார்த்திருப்பேன்.... பேராசிரியரின் முகத்தில் ஓர் அலாதியான புன்முறுவல்.