அந்தத் தனியார் மருத்துவமனையின் ஆலோசனை அறையில் இருந்து வெளிவந்த குமணனின் மனைவி முகத்தில் பிரதிபலித்தது, அவர்கள் செலுத்தி விட்டு வந்த தொகையின் அளவு.
"என்னங்க இப்படி பிச்சிப் பிடுங்கறாங்க..." என்ற மனைவியின் புலம்பலைத் தன் காதில் வாங்கவில்லை குமணன்.
"உங்களுக்குப் பணத்தைப் பற்றிக் கவலையே இல்லை" என அவள் பாட்டுக்கு முனகியபடியே நடந்தாள்.
மருத்துவ மனையின் வாசலை வந்தடைந்தனர் குமணன் தம்பதியர்... அங்கு நின்றபடியே வாகன நிறுத்தத்தைத் தன் பார்வையால் துழாவினார் குமணன்.
வாகனம் தென்பட்டது... ஓட்டுனர் தென்படவில்லை. தன் செல்பேசி எடுத்து ஓட்டுனரின் இலக்கத்தைத் தட்ட... ஓட்டுனர் தொடர்பில் வந்தார்.
செல்பேசியில் பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் அந்தப் பெண் தயங்கித் தயங்கி குமணனின் அருகே நெருங்கி வந்தாள்.
களையான முகம் தான்... ஏதோ கலவரமும் சோகமும் நிறைந்து இருந்தது. முப்பது வயதிருக்கும்... கையில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. உயர் நடுத்தர வர்க்கத்தை வெளிப்படுத்தியது அவள் உடுத்தி இருந்த ஆடை.
ரொம்பவே அழுதிருக்க வேண்டும்... வீங்கி இருந்தன விழிகள்.
செல்பேசியில் பேச்சை முடிக்கக் காத்திருந்தவள், குமணன் பேசி முடித்ததும்... அவனிடம் பேச முயற்சித்தவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவரத் தயங்கின.
தன்னிடம் தான் ஏதோ பேச விழைகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட குமணன் என்னம்மா... என்னிடம் எதுவும் சொல்ல வேண்டுமா? என்று கேட்க
பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடியே, "சார், நான் இங்கே ஓர் திருமணத்துக்காக நேற்று இந்த ஊருக்கு வந்தேன்... வந்த இடத்தில் குழந்தைக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது. இந்த மருத்துவமனையில் தான் சேர்த்து வைத்தியம் பார்த்தேன்.
கையில் இருந்த தொகை செலவாயிடுச்சு...இப்ப நான் திருச்சிக்குத் திரும்பப் போகணும்... கையில் காசில்லை. நீங்க ஏதாவது உதவி பண்ணிணீங்கன்னா... ஊர் போய்ச் சேர்ந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறேன்" என்று சொல்லி முடிக்க அவள் கண்களில் இருந்து பொல பொலவென அருவியாய்க் கண்ணீர்.
அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் பொய் சொல்லவில்லை என்பது அவளுடைய பேச்சில் இருந்து புரிந்தது. அப்படியும் குமணனுக்கு ரொம்ப இளகிய மனம்.
"சரிம்மா... இப்ப உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை" என்று குமணன் கேட்க...
ஒரு ஐநூரு ரூபா கிடைச்சா ஊர் போய்ச் சேர்ந்திடுவேன். அங்க போனதும் உங்க பணத்தை அனுப்பி விடுவேன் என்று பதிலளித்தாள்.
பின் பாக்கெட்டில் இருந்து பர்ஸை வெளியில் எடுத்து அதில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை வெளியே எடுத்தவன், ஒரு நிமிடம் எதோ யோசித்து உடனே இன்னொரு ஐநூறும் எடுத்து இரண்டு தாள்களை நீட்ட அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டவள்...
தயங்கியபடியே, சார் நீங்க செஞ்ச இந்த உதவி நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்... சார் உங்க செல் நம்பர் எனக் கேட்க அது எல்லாம் எதுக்கு மா... என்று கூற... இல்ல சார் உங்க பணத்தை அனுப்பத்தான் என்று சொல்ல ... குமணன் தன் தொடர்பு இலக்கத்தைக் கூற அவள் அதைக் குறித்துக் கொண்டு உடனே தன் செல்லில் இருந்து குமணனுக்கு அழைப்பு விடுக்க, அது குமணனின் செல்லில் பதிவாகி அழைப்பிசைக்க .... குமணன் அதை நோக்க... அது தான் சார் என் நம்பர்...குறிச்சி வெச்சிக்கோங்க என்று சொல்ல...
அதற்குள் அவனுடைய கார் அவனை நெருங்க தன் மனைவியைத் திரும்பிப் பார்க்க... அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே இருவரும் காரில் அமர ஓட்டுனர் காரை அங்கிருந்து நகர்த்தினார்.
வீட்டை அடையும் வரை குமணனும் அவன் மனைவி கல்யாணியும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வண்டி போர்டிகோவில் நிற்க கல்யாணி மட்டும் வெகு வேகமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவ்வில்லத்தின் அவைத் தலைவர் சம்பந்தம்... சம்பந்தமில்லாமல் தன் மருமகள் கல்யாணி கோபக்கனலுடன் உள் நுழைவதைக் கவனிக்காமல் இல்லை...
வந்தவள் தன் மாமனாரின் சாய்வு நாற்காலிக்கு அருகில் இருந்த நாற்காலியில் பொத்தென உட்கார்ந்தாள். "என்னம்மா... டாக்டர் என்ன சொன்னார்" என்று வினவ... ஒண்ணுமில்ல மாமா... தைராய்டு பிரச்சினைதான்" என்று பதில் அளித்தாள்.
"பின்ன ஏம்மா ஒரு மாதிரியா இருக்கே"... என்று கேட்க... இதோ வராரில்ல...உலக மகாக் கொடை வள்ளல்... உங்க மகன்... அவர் கிட்டயேக் கேளுங்க" என்று வாசலில் உள்நுழைந்த குமணனைக் கை காட்டினாள்.
"என்னடா சொன்னார் டாக்டர்?" என்று கேட்ட தந்தையிடம், "இவளுக்குத் தைராய்டு பிரச்சினையாம்... தொடர்ந்து மருந்து சாப்பிடச் சொல்லி இருக்கார்... மருத்துவச் சோதனைகள் மற்றும் மருந்துக்குக் கொஞ்சம் அதிகம் செலவாயிடுச்சி... அதுக்காகக் கோபிச்சிட்டு வந்திருக்கா"என்று சொல்லி முடித்தான்.
"நம்ம உடம்பை நாம்தானே பார்த்துக்கணும்... அதுக்கு ஆகுற செலவை எல்லாம் பெருசா... நினைக்கக் கூடாதம்மா" என்று சொல்லி முடித்தார் சம்பந்தம்.
"ஆமாம்...பெரிய்ய தர்மதுரை பாரிவள்ளல் நெனப்பு... யாராவது வந்து பிச்சை கேட்டால்... அஞ்சோ பத்தோ... கொடுத்துட்டு நகர வேண்டியதுதானே... அது என்ன ஆஆஆஆயிரம் ரூபா... அள்ளி கொடுத்துட்டு... சபலம்... எந்த ஆணை விட்டுச்சு" புலம்பித் தள்ளினாள்.
"தொபார்... அநாவசியமா... பேச்சை வளர்க்காதே... உனக்கேன் வக்கிரப் புத்தி... பாவம்... அந்தப் பொண்ணு... படிச்ச நல்ல குடும்பத்தச் சேர்ந்தவளாத்தான் தெரியிரா... ஏதோ போதாக்காலம்... வந்த இடத்தில இப்படி ஆகிப்போச்சு... இந்த நெலம யாருக்குமே வரலாம். நீயும் ஒரு பெண்தானே... ஒரு பெண்ணைப் பற்றிக் கேவலமாகப் பேச எப்படி முடியிது உன்னால'' என்று பொறிந்து தள்ளினான் குமணன்.
"அழகா வசதியாக ஒரு ஆண் கண்ணுல படக்கூடாது... உடனே மயக்க வந்திடுவாளுங்க... பெரிய ரம்பா என நெனப்பு... ஜாலக்காரி... பொறிந்து தள்ளினாள்' கல்யாணி.
" ஏன்டா... என்னடா ஆச்சு... நல்லாத்தானே போனீங்க ரெண்டு பேரும்... இப்ப என்னவாச்சு" என்று கேள்வி கேட்டார் சம்பந்தம்.
அவருக்கு மருத்துவமனை சென்றது முதல் வீடு வந்து சேரும் வரையிலும் நிகழ்ந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் குமணன்.
"ஏம்மா... இதுக்கெல்லாம் கோபிக்கலாமா... அவன் செஞ்சது தர்மகாரியம் தானே... இதப் போய் பெரிசு படுத்தலாமா" என்று சமாதானம் கூறினார் சம்பந்தம்.
அப்படியும் சமாதானம் ஆகவில்லை கல்யாணி. "அழகா ஒரு பெண்ணைப் பார்த்திடக் கூடாது... பொங்கி வந்திடும் பாசம்... சபலம்... சபலம்..." முனகிக் கொண்டே இருந்தாள். பெரியவருக்குத் தெரியும்... இது உடனே அடங்கப் போவதில்லை என்று.
இரவாயிற்று... பெரியவர் பசி தாங்க மாட்டார்... இரவு உண்டிக்கு சப்பாத்தியும் குருமாவும் செய்திருந்தாள். அவற்றைக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு... பெரியவரை மட்டும் சாப்பிட அழைத்தாள்.
சாப்பாட்டு மேசைக்கு வந்தவர் மகனையும் அழைத்தார்... நீங்க சாப்பிட உக்காருங்கப்பா... நான் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு வரேன் என்று குமணன் சொல்ல சம்பந்தம் சாப்பிட ஆரம்பித்தார். அவருக்குச் சாப்பாடு பரிமாறிவிட்டு குமணன் வரும் முன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
குமணன் சாப்பாட்டு மேசைக்கு வரும் போது சம்பந்தம் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக்கொண்டு இருந்தார். குமணனுக்குக் கல்யாணியைப் பற்றித் தெரியும்...தானே... உணவைப் பரிமாறிக் கொண்டு உண்டு முடித்தான். கல்யாணி சாப்பிடாமலே சென்று படுத்து விட்டாள்.
குமணன் படுக்கை அறைக்குச் சென்றான்... கல்யாணியைச் சாப்பிட அழைத்தான்... அவள் உறங்குவது போல் படுத்து விட்டாள். "சரி... கோபம் எல்லாம் வேணாம்... போய் சாப்பிட்டுவிட்டு வந்து படு" என்று கூறி விட்டு தொலைக்காட்சி பார்க்க அடுத்த அறைக்குச் சென்று விட்டான்.
தொலைக்காட்சியைக் காண நாட்டமில்லாமல் சில நிமிடங்களில் மீண்டும் படுக்கை அறைக்கு வந்தான். அவளை எழுப்பிச் சாப்பிட அழைத்தான்... அவள் ஊடலின் உச்சத்தில் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கட்டிலில் அவள் பக்கத்தில் படுத்தான். அவள் உடனே ஒரு போர்வையையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு கீழிறங்கித் தரையில் படுக்க...
குமணனும் அவளை நெருங்கி, தானும் அங்கு படுக்க அவள் கோபம் தணியாமல் அடுத்த பக்கம் திரும்பி படுக்க... குமணன் அமைதியாகப் படுத்துவிட்டான்.
விடிந்தது... கல்யாணியிடம் எந்த மாற்றமும் இல்லை. காலைதோறும் அன்புடன் பரிமாறப்பட்ட குளம்பிக் கோப்பை... ஊடலுடன் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த குமணன் முன் வைக்கப்பட்டதில்... சில துளிகள் சிதறித் தரையை அலங்கரிக்க... குமணன் மனைவியின் மனநிலையைப் புரிந்து கொண்டான்.
கல்யாணியின் அதே போக்கு காலைச் சிற்றுண்டியின் போதும்... மதிய உணவின் போதும் தொடர்ந்தது... அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் குமணன் வீட்டிலேயே இருந்தான்.
திருமணம் முடிந்த நாள் முதலே கல்யாணிக்குத் தன் கணவனுடன் எந்தப் பெண் பேசினாலும் பிடிக்காது... அதற்கு முழு முதல் காரணம்... அவள் தோழி ரஞ்சனா தான்... முதல் இரவன்று கல்யாணியை " அடியேய்...மாப்பிளை ரொம்ப ஹாண்ட்சமா இருக்கார்... அவரை முந்தானையில் முடித்து வெச்சக்க... இல்லாட்டி நானே அவரைத் தள்ளிக்கிட்டும் போய் விடுவேன்... என்று உரு ஏத்தியதில் இருந்து இப்படி ஆகிவிட்டாள் கல்யாணி...
அன்றில் இருந்து தலையில் சூடும் பூ வாங்குவது என்றாலும், தன்னுடன் குமணன் இருந்தால்... பெண்கள் இருக்கும் பூக்கடையைத் தவிர்ப்பாள். குமணன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
மாலை மணி ஐந்திருக்கும் குமணன் வரவேற்பு அறையில் தொலைக்காட்சியில் லயித்திருந்தான். சம்பந்தம் சாய்வு நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருந்தார். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. வாசலில் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கல்யாணி தலை நிமிர அங்கு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஓர் வாலிபன் நின்று கொண்டிருந்தான்.
கல்யாணி அவனை யாரென்று நோக்க... முன்பின் பார்த்திராத அவன் "குமணன் சார் வீடு இது தானே?” என்று கேட்க...அதே நேரத்தில் குமணனும் வெளியே வந்தான்.
வந்தவன் அந்த வாலிபனைப் பார்த்து "என்ன வேணும்?” என்று விசாரிக்க... குமணன் சார்.... என அவன் குரலை நீட்ட... நான் தான்... என்று சொல்ல... அவன் சார் நேற்று சுசிலாங்கறவங்க உங்க கிட்ட காசு வாங்கினாங்களே... அதைக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஓர் வெள்ளை உறையை நீட்டினான்.
சரி... எவ்வளவு இருக்கு இதுல என்று கூறியவாறே கையை நீட்டிய குமணனிடம் "ரெண்டாயிரம் இருக்கு... எண்ணிக்கங்க" என்று சொல்ல... குமணன் இல்லையே... ஆயிரம்தானேக் கொடுத்தேன்... ரெண்டாயிரம் இல்லையே... என்று கூறிய படியே அவ்வுறையில் இருந்து இரு ஐநூறுகளைத் திருப்பித் தர...
சார்... மன்னிக்கணும்... இதை நான் வாங்க முடியாது... ஏன்னா... அவங்க ரெண்டாயிரம்தான் தரச் சொன்னாங்க... சரி வரேன் சார் என்று கூறியபடியே அந்த வாலிபன் நகர... குழப்பத்துடன் குமணன் மனைவியை நோக்க அவள் வாயடைத்து போய் அசடு வழிந்து நின்றாள்.
அந்த நேரம் பார்த்து அவனுடைய செல்லில் எவரோ அழைக்க ... அந்த அழைப்பை ஏற்க குமணன் வீட்டுக்குள் சென்றான்.
அதே நேரத்தில் அண்டை வீட்டம்மா... கல்யாணி... என்று அழைத்துக் கொண்டு வர... கல்யாணி அந்த அம்மாவுடன் பேசலானாள்.
உள்ளே சென்ற குமணன் செல்பேசியை எடுக்க அது அமைதியானது. அழைப்பு யாரிடமிருந்து என்று நோக்க... அது செல்பேசி நிறுவனத்தின் சேவை அழைப்பு. செல்பேசியை அணைத்து வைத்துத் திரும்பிய போது ..
சம்பந்தம் கண்விழித்தார். என்னடா ரெண்டாயிரம் வந்திடுச்சா... என்றார். ஆமாம் பா...வந்திடுச்சி... அந்தப் பெண்ணை பார்த்தப்பவே... அவ ஒரு நல்ல குடும்பப் பெண்ணாத் தெரிஞ்சா... பாருங்க... பணம் கைக்கு வந்திடுச்சி... ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசுப்படுத்தி... என்று சொல்ல
இப்ப சந்தோஷம்தானே என்று சம்பந்தம் கேட்க... அப்போதுதான் அவனுக்குப் பொறி தட்டியது...
அப்பா...என ஆச்சரியத்துடன் பெரியவரைப் பார்க்க... அவர் அர்த்தத்துடன் புன்னகை பூத்தார். அன்பு பெருக அப்பாவைக் கட்டித் தழுவினான்.
பிறகு அவர் காதில் "உங்களைப் போல ஓர் அப்பா குடும்பத்தில் இருந்தால் போதும்... எந்த மாதிரி குழப்பம் வந்தாலும்... அதைச் சுமுகமாக போக்கிடலாம் என்று முனக...
பெரியவரின் முகத்தில் பூரிப்பு. குமணன் அப்பாவின் பெருந்தன்மையில் நெகிழ்ந்து போனான்.