தென்றல் லேசாக வீசிக்கொண்டிருந்ததால் உடல் வியர்வையிலிருந்து விடுபட்டுக் கிடந்தாலும் மனப்புழுக்கம் மென்று தின்று கொண்டிருந்தது. ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு என்ன சிக்கலோ என்று எண்ணிக் கொண்டு புரண்டு புரண்டுப் படுத்த வண்ணம் திண்ணையில் விழித்துக் கிடந்தாள் குஞ்சம்மாள். விழித்துக் கிடந்தவளை கவலை அப்பிக் கொண்டது. சொம்பில் பக்கத்தில் வைத்திருந்த தண்ணியைக் குடிப்பதும் எழுந்து சிறுநீர் கழிப்பதுமாக இருந்தவள் மொத சேவல் கூவும் போதே கட்டுத்தறியில் கிடந்த பசுமாட்டை இடம் மாற்றிப் பிடித்துக் கட்டிவிட்டு சாணியைப் பொறுக்கிக் கூடையில் வைத்துவிட்டுப் பக்கத்தில் இருப்பவர்கள் யாரேனும் பார்த்தால் இது என்ன பேய் மாதிரி தூங்காமத் திரியுதும்பாக என்று நினைத்தவள் சத்தம் வராமல் கூட்டினாள்.
தரையைக் கூட்டினாலும் மனப்போரட்டாம் ஓயவில்லை அவளுக்கு. படியா படிக்கிறேன் சொல்றதக் கேட்டாத்தானே.
ஒருத்த எடத்துல அடி வச்சு தோப்புக்குப் போ வேண்டிய அவசியமில்ல சர்க்காரு ரோட்ட விட்டு எறங்குனாத் தோப்பு பாச்சேரி ஏரித் தண்ணியக் காலால மடமாத்தலாம். அதக் கொடுத்துட்டு எங்கோ கருவக்காட்டப் புடுச்சு வாங்குறேன்னு நிக்கிற மகன நெனச்சுதான் விடியவிடியத் தூக்கத்தைத் தொலைத்துக் கிடந்தவள் கூட்டியள்ளிக் கொண்டு தனக்குத்தானே சலப்பிக் கொண்டு நெல கொள்ளாது தவித்தாள். கீழப்பட்டியில் பசி பட்டினி இல்லாது வாழும் குடும்பங்களில் குஞ்சம்மாளின் குடும்பமும் ஒன்று. குஞ்சம்மாளின் கணவன் தவறிய போது மாமியா பொன்னுருவம்தான் குஞ்சம்மாளுக்குப் பலமா தோள் கொடுத்து பேரனையும் மருமகளையும் அரவணைத்துக் கொண்டாள். கீழப்பட்டியில் பொண்ணுக்கு காணியா வந்தவ பொன்னுருவம்.
அவள் வாக்கப்பட்டுப் போன இரண்டு வருசத்தில் கணவனை இழந்தாள். கணவன் வீட்டில் ஆதரவு இல்லாது போனதால் தன்னோட ஒரே மகன் ராசாங்கமும் தானுமாக பொறந்த எடத்துக்கே வந்தாக நாப்பது வருசத்துக்கு முன்னாடி. வீட்டோட வந்த மகளுக்கு பொன்னுருவத்தோட அப்பா ஒரு மூனு ஏக்கர் நெலத்தையும் கொஞ்சம் கட்டுமனையும் கொடுத்து அதில் சின்னதா ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்துப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார். மகனும் தானுமாக அவள் அப்பா வீட்டு அனுசரணையில் வாழ்ந்தாக.
மகன வளத்து சரியான வாலிபத்துல மகனுக்குக் கல்யாணத்த முடுச்சா. கல்யாணம் பண்ணி பேரன் முத்தழகு பத்து வயதாக இருக்கும் போது பொன்னுருவத்தின் கணவனைப் போலவே அவள் மகன் ராசாங்கமும் இறந்து போனான். கணவன் இல்லாத வலியுணர்ந்திருந்த பொன்னுருவம் மருமகள் குஞ்சம்மாளையும் பேரன் முத்தழகையும் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
ஒறமொறையாம் ஊரில் யாரும் பழிக்காம குடும்பம் நடத்த வேண்டும் என்பதில் மாமியா மருமக இருவருமே கவனமாக இருந்தார்கள். பெரியக் கெணத்தோட பம்பு செட்டு, அதோட ஏரித்தண்ணியும் பாயியும் மூனு ஏக்கர் தென்னைக்காக்கிறத் தோப்பு அவர்களுடையது. தேங்காய் ஒரு வெட்டுக்குக் கொறஞ்சது பத்தாயிரம் விழும் அதுலதான் குடும்பத்தை நடத்திக் கொண்டாள் மாமியா பொன்னுருவத்தோடு சேர்ந்து குஞ்சம்மாள். மாமியவிற்கோ உடல் தளர்ந்து வந்தது. அவளையும் பார்த்துக் கொண்டு மகனையும் எங்கும் வெளஞ்சு கெடக்கும் பி.இ பட்டதாரியாக்கினாள்.
படுச்சு முடுச்சவன் சென்னை பெங்களூருன்னு வேல பாத்தான். சில மாதங்களாக அதை விட்டுவிட்டு இப்ப தோட்டத்தைக் கொத்துவதும் வெட்டுவதுமாக தென்னந்தோப்பே கெதியெனக் கிடக்கிறான். நம்மளோட இந்தப் பொலப்பு போவட்டுமுன்னுதானே படிக்க வச்சேன். பத்தாயிரமோ இருவதாயிரமோ சம்பளம் வாங்குனாலும் நெழலுல இருந்து சாப்புடலாம் அதவுட்டுட்டு இப்படி குச்சிய வெட்டுறதும் கோல நடுறதுமா கெடக்கியே எனக் கத்தினார்கள் மாமிய மருமக இருவரும். சில சமயம் ஏ முத்தழகு எதுக்கு நீ இப்டி பண்றேன்னு நொந்து கொள்வார்கள்.
இங்கருங்க நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு பேசினாலும் நா நெலத்துலதான் பாடுபடப் போறேன் என்றவன் சில நாட்களுக்கு முன்பு காக்கிறத் தென்னந்தோப்புல இரண்டு ஏக்கர வெளவச்சு முன்பணம் வாங்கிட்டான். விக்க வேண்டான்னு சொன்னா கேக்கல ஒரு வாரமா வீடே ரகளையாவுது விக்கப்போறது ஊரு பூரா தெருஞ்சு காரித்துப்பாதக் கொறையா பேசுதுவோ. ஒரு பொண்ணு வச்சுருந்து குடும்பம் நொடுச்சுக் கிடந்தாக் கல்யாணம் காச்சிக்கின்னு விப்பாக இப்ப எதுக்கு விக்கிதுவோன்னு கேக்காத ஆளு பாக்கில்ல. வெளியிலத் தலக்காட்ட முடியலேன்னு விடியவிடிய மனப்போராட்டத்தோடு உறக்கமும் இல்லை, இப்பவும் விடிய இன்னும் வெகுநேரமிருக்க கட்டுத்தறியைக் கூட்டியள்ளியவள் கண்கள் கலங்கியபடி வாசலில் நடந்தாள் வடக்கே வானம் மின்னி சற்றைக்கெல்லாம் மழை வரும் போல் மழைக்குறி பட்டது. புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் போனாள். தூங்கிக் கொண்டிருந்த முத்தழகு எப்ப முழுச்சான் என்னான்னு தெரியல கொல்லைப்புறம் முதல்நாள் தயார் செய்த வேப்பவிதைகள் மூடிய விதைப்பந்துகளைக் கூடையில் அள்ளி வைத்துக் கொண்டிருந்தான். வைத்தவன் கூடை நிரைந்தது போக மீதமுள்ளவைகளைத் தோட்டத்து வேலியில் தூவி விட்டான். அவைகளில் சில பந்துகள் அடுத்த வீட்டு வேலியிலும் விழச்செய்தன.
விழும் மழையில் அவைகள் முளைத்துக் கொள்ளும் என்று நினைக்கையில் மழையோ மண்ணோ மனிதர்களைப் போல் வஞ்சகமாய் இருப்பதில்லை என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
பல வருசமா பாடுபட்டுக் காத்த சொத்த எவங்கிட்டயோ கொடுக்க மனம் துணுஞ்சுட்டு இப்ப வேலிக்கு வேப்ப வெததாங்கொறச்சலா என்றபடி வீட்டிற்குள் நுழைந்த குஞ்சம்மாள் முணுமுணுத்துக் கொண்டே பெட்டிக்குள் கெடந்த அவன் ஜாதக நோட்டை எடுத்து மஞ்சப்பையில் சுருட்டினாள். சுருட்டியவள் அலமாரியில் வேலோடு நின்ற சாமி முருகன் போட்டோகிட்ட வச்சுட்டு கிடந்த வேலைகளை மளமளவென செய்தாள் மழை வருவது போல் இருந்த வானம் லேசான தூறலோடு நின்று போனது.பொழுதும் நன்றாக விடியத் தொடங்கி விட்டிருந்தது.
இரண்டு டம்ளர் காப்பிய போட்டு மவனுக்கு ஒரு டம்ளர நீட்டினாள். நீட்டியவளிடம் ‘கொஞ்சம் சிருச்சுக்கிட்டுதான் இந்தக் காப்பியக் கொடுத்தான்னா’ ‘எப்படி சிரிப்பு வரும் காலையிலையே வாயக் கெளறாதே ஈரக்கொல ஆடுது ஊரு செனம் காரி துப்புது இந்தாப் புடி நீ. இவுகப் பாத்துருக்க வேலைக்கு சிரிப்பாவோலம் நா வாங்கி வந்த வரம்அப்படி’ என்று மூக்கைச் சிந்திக் கொண்டாள்.
ஏம்மா பேசாம இரு பொறுமையா எதுக்கு கத்துறே என்றவனின் கைகளைத் தள்ளிவிட்டபடி, படபடத்துப் போய் தூணில் சாய்ந்து ஒங்காந்து கொண்டாள். முத்தழகு திண்ணையில் அமர்ந்து காஃபியை உறிஞ்சானான். அவன் அப்பாயி பொன்னுருவம் பாயோடு ஒடிந்து கிடந்தாள். வீட்டின் சுவர்கள் இவர்களின் மொழிகளைக் கிரகித்துப் பேச்சற்றுக் கிடந்தன. சிறிது நேரத்தில் அவள் மாமியாவும் முழித்துக் கொள்ள அவளுக்கும் ஒரு டம்ளர் காஃபியை நீட்டினாள். அதற்குள் போன மழை திரும்பி அவள் மனம் அழுவதைப் போல் நசநசன்னு தூறிக் கொண்டிருந்தது. மன தவிப்போடு வீட்டைக் கூட்டி மற்ற வேலைகளைப் பார்த்தாள். முத்தழகு ரோட்டுப்பக்கம் எழுந்து போய்விட்டிருந்தான் வெகு நேரம் காணவில்லை.
பானையில் கெடந்த கஞ்சியை ஊத்திக் குடித்தாள். ஓடிப்போயி கீரத்தூரு வள்ளுவங்கிட்ட நோட்டக் காட்டிக் கேட்டுக்கிட்டு வரவேண்டியதுதான் என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
நல்லாத்தான் இதுவரைக்கும் போயிகிட்டு இருந்துச்சு இப்புடி புடிவாதமா பண்ணுறானே என்னப் பண்ணுறது தலக்கி வொசந்த புள்ளைய அதட்டியா சரி பண்ண முடியுமா? இல்ல அடுச்சுதான் சரி பண்ண முடியுமா? கெரகப்பலன் கெடந்து இப்படி ஆட்டி வைக்குமோ அவங் கெரகம் எப்படி இருக்குன்னு தெரியலையே பாச்சூரு பாலாத்தாயி நீதான் தொன நிக்கனும் என்று புலம்பியபடி, கஞ்சியக் குடுச்சுட்டு கெழவிக்கு நாளு சோத்தப் போட்டு கஞ்சியக் குண்டானுல ஊத்தி அஞ்சாறு மோர் மிளகாய வறுத்துத் தொட்டுக்கப் போட்டுட்டுப் பயலுக்கு மீதிக்கஞ்சியப் பானையிலையே மூடிவச்சுட்டு, சேதிய கெழவிகிட்ட சொல்லிட்டு பெட்டி மேலக் கெடந்த குடையை எடுத்துக்கிட்டு மஞ்சப்பையில நோட்ட சுருட்டி மடியில வச்சுக்கிட்டு ஓடுனா கீரத்தூரு வள்ளுவங்கிட்ட கெழவியோ வள்ளுவஞ் சொல்லுறதக் கேட்டுக்கிட்டு அப்படியே வந்துடாமே பரிகாரம் எதனாச்சு கேட்டு துன்னூரும் முடிகயிரும் வாங்கிக்கிட்டு வா என்றாள்.
சரிசரிசத்தம் போடாத எல்லாம் எனக்குத் தெரியும் பாத்துக்கிட்டு வாரேன். அக்கம்பக்கம் உள்ளவுக வித்துப்புட்டு ஊடு காலியானப் போதுமுன்னு நிக்குதுவோ இது வேற கூவிக்கிட்டுக் கெடக்கு. பத்தாதக்கொறையா எங்கெங்கோ சட்டிப்பானையத் தூக்கிக்கிட்டு பொழைக்கப் போனதெல்லாம் கொரனாவுல மீண்டு வந்து இங்கே கெடக்குதுவோ சும்மா கெடந்த வாயிக்குசுக்குக் கெடச்சாப்புல ஆயிபோவுமுல்ல என்ற வாருகையால் சாடைசெய்து கண்ணால் மாமியாவிற்கு செய்தி சொல்லியபடி கோழி கொடாப்பு மேல இருந்த செருப்பை எடுத்து மாட்டிக்கிட்டு பயப்பண்ணுறது இப்படி இருக்கே ஆளாலுக்கு சிருச்சுருட்டுல்ல போவுதுக என்று பொலம்பிக் கொண்டே ஓடினாள்.
குஞ்சம்மா போனப் பொறவு மெதுவா எழுந்துருச்ச கெழவி கொல்லப்புறம் கெடந்தக் காஞ்சத் தென்ன மட்டைகளை அள்ளி வச்சுட்டு கை காலக் கழுவிக்கிட்டு பைப்புல ஊத்துற தண்ணிய மூடி வைத்தாள்.
நசநசத்து தூறிய மழை சற்று விட்டிருந்தது.
அங்குவந்த முத்தழகு ‘ஆயா தண்ணி சும்மாதானே ஊத்திப்போவுது இங்குனைக்கு ஒரு வாழக் குட்டியப் பொதச்சு வச்சா எலையும் காயும் கெடக்கிமுல்ல’
‘ஆமாஊரு மாட்டுப்பண்ணைகளும் ஆட்டுக் குட்டிகளும் விட்டு வைக்குமா’ ‘வீட்டுக்குள்ள சோத்துப்பானைக்கு காவலா கதவப்போட்டு பூட்டுத் தொங்க மட்டும் விடத் தெருஞ்சுதுல்ல இதுக்கொரு படலத்தான் போடனும் போ ஆயா அங்குட்டு என்று சொல்லிவிட்டு கையோடு கொண்டு வந்த மூங்கில் குச்சிகளை ஓரமாக வைத்துவிட்டு வீட்டிற்குள் போனான்.
கெழவிக்கோ அவன் அம்மா எங்கேன்னு கேட்டுட்டா என்னப் பண்ணறதுன்னு மனம் படக்படக்கென்று அடித்துக் கொண்டது. நல்லவேள அவன் எதுவும் கேக்காம கஞ்சியை ஊத்திக் குடுச்சுட்டு கொண்டு வந்த வாழக்கண்ணப் புதைப்பதற்கு நாளு குழிய மண்வெட்டியால வெட்டிட்டு மூங்கிப்படலை கட்டி முடித்தான். கெழவியும் கஞ்சியக் குடுச்சுட்டு திண்ணையில யோசனையா ஒக்காந்துக் கெடந்தா. முத்தழகு விவசாயக் குடும்பத்துல பொறந்த்தாலோ என்னவோ விவசாய வேலைகள் அனைத்தும் அத்துபடி.
அதனால் வாழைக்குட்டியைப் புதைத்து முள்படலைக் கட்டி அடைப்பது பெரிய வேலையாகத் தெரியவில்லை. மீன் குஞ்சுக்கு நீந்தவாக் கத்துக் கொடுக்கனும் என்பது போல அவன் கைவண்ணத்தில் அழகான வாழைத் தோட்டம் கரு கொண்டது. வேலையை முடிக்கையில் வெளியூர் தோழர்களான சுகுவும் இளம்தென்றலும் வந்தனர். வந்தவர்களை அழைத்துக் கொண்டு தோப்புப்பக்கம் போனான். முத்தழகு நண்பன் சுகுவோட மாமா பெரிய பைனான்சியர் காசுபுழக்கம் அதிகம் உள்ளவரு அவருதான் இவனது மூனு ஏக்கர் தென்னையில் இரண்டுஏக்கர் தென்னந்தோப்பை வாங்குகிறார்.
சுகுதான் தோப்பைப் பேசி முடித்தவன். முத்தழகு சொன்னபடியே இந்த வாரத்தில பத்திரப்பதிவு வைத்துக் கொள்ளலாமா என்று மாமா கேட்டுவரச் சொன்னார் என்றான்.
‘வச்சுக்கலாம் வாங்க தோப்பு வரைப் போய் வரலாம்’ ‘ஓ தாராளமா’என்று சொல்லிக் கொண்டே தோப்புக்குப் போனார்கள். தோப்பை மூவரும் சுற்றி வந்தார்கள். தோப்பு பார்பதற்கே மிக அழகாய் மனதை வாரி இழுத்துக் கொண்டது. பெய்த மழையில் சுற்றி இருந்த மரங்களின் இலை வாசனை இதயத்தை நிறைத்தது.
சுகுவும் இளந்தென்றலும் இயற்கை எத்தனை உன்னதமானது அது தன்னளவில் விரிந்து அடர்ந்து அதுவாகவேக் கிடக்கிறது. யாவரையும் வசீகரித்துக் கொள்ளும் ஒரு பெரும்திறல் அதற்கு கையகப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று பேசி கைகுலுக்கிக் கொண்டு முத்தழகுடன் இணைந்து நடந்தனர். ஐந்தாறு இளநீர் காய்களை அங்கிருந்த தொரட்டியால் இழுத்துவிட்டு இளநீரை வெட்டிக்கொடுத்தான் முத்தழகு. இளநீரைக் குடித்தவர்கள் இப்படியான அருமையான பானங்களை மறக்கச் செய்து நம் மக்ககளை பாட்டில் குளிர்பானங்கள் எப்படியெல்லாம் ஆக்கிரமித்துவிட்டன. அதனை விற்பதில் எத்தனைக் கவர்ச்சிகரமான விளம்பரங்கள். உலக நுகர்வுக் கலாச்சாரம் எப்படியெல்லாம் நம்மிடம் ஒட்டிப்போய்விட்டது என்று பேசி மூவரும் அவரவர் பார்வையில் நுகர்வு கலாச்சாரம் குறித்த கருத்துக்களைப் பேசி வருந்தினர்.
பேசிக்கொண்டு வந்தவர்கள் ரோடு மொகனையில் நின்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்பு அவர்களை அனுப்பிவிட்டு தோப்பைப் பத்திரம் செய்து தருவது தொடர்பாக யோசித்தபடி வீடு வந்தான் முத்தழகு. வீட்டில் அவன் அம்மா மத்தியானச் சாப்பாட்டிற்காக அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். அடுப்போ மனவேகத்திற்கு ஏற்ப பற்ற மறுத்தது.
வீட்டுல சாமி போட்டாவுக்குப் பக்கத்துல இருந்த ஜாதக நோட்டைப் பார்த்த முத்தழகு வாய்க்குள் சிரித்தவாறு எங்கம்மா போன காலையிலப் பாத்ததுதான்அதுக்கப்புறம் ஆளக்கானும். அவன் கேட்டதும் தடுமாற்றம் இல்லாம ஏற்கனவே யோசிச்சு வச்சுருந்த முதல் நாள் நடந்த சம்பவத்தோட கொஞ்சம் சேர்த்துச் சொன்னாள். எப்படியாவது தோப்பு விக்கிற யோசனையை விட்டுவிட மாட்டானா என்ற கவலையில்.
‘அதுவா’வடக்க ரெங்கண்ணன் வீடு வரைக்கும் போயிருந்தேன். தென்னந்தோப்புக்கு ஒரம் வைக்கனுமில்ல கையில் பணமில்ல பத்து மூட்ட ஒரம் கடனா கொடுண்ணே பத்து நாளையிலப் பணம் கொடுக்குறேன்னு கேட்டுட்டு வந்திருக்கேன் என்றாள். என்ன கொடுக்குறேன்னு சொன்னுச்சா. என்னத்த சொன்னுச்சு. ஏ ஆத்தா தோப்பே இருக்குமா என்னான்னு தெரியல அதுக்கு நீ ஒரம் கேக்குறே. எதோ ஓம்மொவன்தான் அத விக்கப்போறதா பேசிக்கிறானுவொலே பாத்து பட்டணத்துல கெடந்த பய ஓம் பையன் வேற செவத்தோலு பைய சேட்டு பொண்ணதும் ரெடி பண்ணிருக்கப் போறான் என்றக் கேலியக்கேட்டு கொடலாட வந்ததுதான் மிச்சம். அது சரி கீரத்தூரு வள்ளுவன் அவ்வளவு கரைட்டாவா சொன்னான் என்றவனை நிமிர்ந்து பார்த்த குஞ்சம்மாளின் கண்கள் கலங்கி நீர் வழிந்தது.
அவள் அருகில் சென்றவன் அவளின் சேலை முந்தானையை எடுத்து கண்ணீரைத் துடைத்து விட்டான். துடைத்தவன் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நா யாரு ஓம்புள்ள எதோ எனக்கு கொஞ்சம் அறிவு இருக்கு நீ பயப்படுற மாதிரி நம்ம சொத்த ஒன்னுமில்லாமப் பண்ணுவேன்னு நெனக்காதே. ஊரில அவுங்கவுங்க அறிவுக்குத் தகுந்த மாதிரி எதாச்சு சொல்லுவாங்க வாங்க ஒங்காருங்க கொழம்புக்கு நா காய வெட்டுறேன் வெங்காயத்த எடுத்து வைங்க உருச்சு தாறேன்.
நகரத்துலபக்கத்துக் காம்பௌவுண்டுக்குள்ள என்ன நடக்குதுன்னுக் கூட தெரிய மாட்டேங்குது கிராமத்தப் பாரு அவுங்க வீட்டவீட்டுட்டு அடுத்த வீட்டுல என்ன நடக்குதுன்னுதான் பாப்பாங்கப் போல. அதைக் கேட்டவள் ‘ம்’அதான் கிராமம் என்றாள்.
ஏங் கூட்டாளிகள் இரண்டு பேரும் தோப்பு விசயமா வந்தார்கள். அவர்களிடம் தோப்பைக் காட்டிட்டு அவர்களோட வாரே மேலவுட்டு குப்புசாமித்து… எனத் துப்பிக் கொண்டே சொம்ப வித்துட்டு கலையம் வாங்குறானாம் என்றபடி பேசிட்டு போறாரும்மா அதுக்குள்ள ஊருக்கேத் தெருஞ்சுப் போச்சா என்றான். அடே அப்பு அங்காளிப்பங்காளியிருக்க எடம் அப்படிதான் இருக்கும். காக்கா கூடுகட்ட குச்சிய சேத்த மாதிரி சேத்த சொத்து இது. குப்புசாமி என் சித்தப்பன் அதான் அப்படிச் சொல்லிட்டுப் போயிருக்கும் என்றாள் கேட்டுக்கிட்டிருந்த அவன் அப்பாயி பொன்னுருவம்.
அவன் அம்மாவோ அமைதியாய் அவன் மீது வருத்தம் மேலிட வாயடைத்து ஒக்காந்திருந்தா. பொன்னுருவம் பேரனுக்குப் பதிலச் சொன்னவள் தன் மருமகளிடம் பாத்துடி அத இதச் சொல்லி நெனச்சதச் செஞ்சுட்டுப் போகப் போறான் என்றாள். இங்கரு எதாவது ஒன்னுக் கெடக்க ஒன்னுப் பேசி வம்பிழுக்காத அப்பாயி என்றான். மருமகளைப் பார்த்து இங்கேருடி போனக் காரியம் என்னாச்சு வள்ளுவன் கயிறு கொடுத்தானா அதக்கட்டு மொதல்ல என்றாள். குஞ்சம்மாள் புலம்பிக் கொண்டே அவங்கெரகம் அதப்பண்ணுவோமா இதப் பண்ணுவோமான்னு இருக்கும் பாத்து கெட்டியாயாவே இருங்கன்னுதான் சொல்லறான் என்றவள் முத்தழகு நீயும் கேட்டுக்கோ என்றாள்.
வள்ளுவஞ் சொன்னா சரியாதா இருக்கும் என்று மறுபடியும் கண்கலங்கினாள் குஞ்சம்மாள். முத்தழகன் தன் அம்மாவிடம் மெதுவாக அம்மா கொஞ்சம் நான் எடுக்கும் முடிவுகளுக்குத் துணையா இரும்மா என்று கையைப் பிடித்துக் கெஞ்சினான். அப்பனில்லாது வளத்துருக்கேம்பா தோத்துப் பொயுட்டோமுன்னா ஒறமொறையான் ஊரில் சிருச்சுட்டுப் போயிடுவாங்கப்பா என்று சொல்லி மீண்டும் அழுதாள். அழுதவள் கண்கள் கலங்கியபடி தம்பி முத்தழகு என்னப்பா முடிவு பண்ணிருக்க என்று மீண்டும் கேட்டாள்.
அம்மா காது கொடுத்து என்னாப் பண்ணப்போறேன்னு கேட்டதே பாதி வெற்றிஅடஞ்ச மாதிரிதான் என்று சொல்லிக் கொண்டே அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வடக்கே இருக்கும் பட்டவன் கோயிலுக்குப் போனான்.
புளியமரம் காப்பவனே மொத்த ஊருக்கும் அம்பது வருசமா புளிதரும் தெய்வமே நா ஒன்ன கடவுளா பாத்தத விட வலுவான இயற்கையாத்தான் பாக்குறேன். எடுக்கப் போறக் காரியத்துக்கும் தொணையா இருப்பா என்று அடர்ந்து விரிந்து கிடந்த புளியமர நிழலில் ஓரமாக இருந்த சிமென்ட் கட்டையில் அவன் அம்மாவை ஒக்கார வைத்தான் அம்மாவிடம் பாக்குறத்துக்குதாம்மா தோப்ப வித்துட்டு புதுசா வாங்கப்போற இடம் பயங்கரமான கருவமரங்களும் சீவுப்புல்லும் வெளஞ்சுக் கிடக்கும் காடு ஆனா அருமையான எடம்மா என்றவனிடம் அதவாங்கி என்னாப்பா பண்ண முடியும். மழ காலத்துல போனாக் கூட கருவமரத்து அனலு ரோடுவரை அடிக்கும். அந்த எடத்துல மருந்துக்குக் கூட வேர மரம்கிடையாது. வீடு கூட்டப் பயன்படும் ஊவம்பழம் முள்ளிருக்கும் சீவுப்புல்லும் கருவையும்தான் வெளஞ்சுக் கிடக்கு. தண்ணியும் அவ்வளவு ஈசியா பாயாது மோட்டு நிலம் வேற, ஒரு
தேவதிருனான்னா ஊரு குடிகாரனுவ பூரா கருவைக்குள்ளதான் குடிகெடப்பானுவ, குடியானவன் அத வாங்கி என்னப் பண்ணமுடியும் என்றாள் மகனிடம் குஞ்சம்மா.
தங்கம் கூட மண்ணுக்குள்ளதான் கெடக்கு. அவ்வளவு ஏன் நிலக்கரி எண்ணெய் வளம் இன்னும் எத்தனை எத்தனையோ பெரிய வளங்கள் மண்ணுக்குள்ளதானே கெடக்கு. அந்த நிலத்தின் மதிப்ப வெளியில் இருந்து பாத்தாவா தெரியும் என்றான். அதற்குள் அவ அம்மா அப்போ எண்ணெய் எடுக்கப் போறியா என்றாள் அட போம்மா எண்ணை வளம் இருந்து கோடியில தந்தாக்கூட கொடுக்க மாட்டேன் இது வேற. நீ வா என்றுஅழைத்துக் கொண்டு வீடு வந்தான். இந்த நிலத்தின் உரிமையாளருக்கு திருச்சியில்தான் வீடு. அவரோட தாத்தா நீதிபதியா இருந்தவரு அவரோட அப்பாவும் அப்படிதான். இவரும் உயர்நீதிமன்ற வக்கீலா இருக்காரு ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி என் பிரண்டோட வழக்கு சம்மந்தமா மதுரை கோர்ட்டுக்குப் போனேன். அப்பதான் அவரைப் பார்த்தேன் கீழப்பட்டின்னு சொன்னோன்ன எல்லாத்தையும் விசாருச்சுட்டு இந்த தண்டுக்கார மோட்டு நிலத்தையும் சொன்னாரு. அவர் தாத்தா காலத்துல கோர்ட்டுல ஏலம் வந்தப்போ அரசு ஏல விட்ட தொகையக் கொடுத்து இந்த எடத்த வாங்கிட்டாறாம் என்றான்.
அதைக்கேட்டவள் அது அம்பது வருசத்துக்கு முன்னாடி பேங்குல வாங்குனக் கடன கட்ட முடியாது மேலத்தோப்பு இரமசாமி குடும்பத்த விட்டுப் போன நிலமது என்றாள் பேச்சின் ஊடாக குஞ்சமாள். அதப்பத்தி கொஞ்சம் சொல்லிருக்காரு என்றவன். ஏதேச்சையா அன்னைக்கு பேசிக்கொண்டு இருந்தப்போ தண்டுக்கார மோட்டு நெலத்த விசாருச்சாரு எனக்கு அப்ப எதுவும் தோணல போன் நம்பர மட்டும் வாங்கிக்கிட்டேன் அப்போ. இப்போ கொரோனாவுல வேலை விட்டுட்டு ஊருக்கு வந்த பொறவுதான் ஒருநா அந்த எடத்த பாத்தேன் வெறும் இருவதாயிரம் சம்பளத்துக்கு ஊரவிட்டுட்டு பல மையில் தூரத்தில் இருந்து கொண்டு பன்னெண்டு மணி நேரம் ஒழைக்கிறோம். இந்த நெலத்த வாங்கி நாம நெனக்கிற மாதரி செஞ்சா என்னான்னு தோனுச்சு என்று அவன் அம்மாவிடம் சொல்லும் போதே தென்னந்தோப்பைப் பார்த்துப் போன சுகு அழைத்தான்.
சொன்ன மாதிரியே புதன்கிழமை பத்திரப்பதிவு வச்சுக்கலாம். பத்திர எழுத்தரிடம் கொடுத்து முன்கூட்டியே எழுதி ஏற்பாடு செய். எல்லாமே இணையவழி என்பதால் டோக்கன் போட்டுவிடு முதல் மூன்று டோக்கனில் பத்திரம் செய்து கொள்வது போல் முடித்து வை. அப்போதான் காலையிலேயே இலகுவா முடிக்கலாம் பிற்பகல் என்றால் காத்துக் கிடக்கனுமென்றான். அவனிடம் சரி சொல்லிவிட்டு தனது அம்மாவிடம் பேச்சை தொடர்ந்தவன், தண்டுக்காரன் மோட்டு நெலத்த தோப்பு விக்கிற காச வச்சு வாங்கதான் போறேன். மூன்று ஏக்கரில் இரண்டு ஏக்கர் தோப்பை எழுவத்தஞ்சு லட்சத்துக்குப் பேசி முடுச்சிருக்கேன். நம்ம வாங்கப் போற பத்து ஏக்கர் தண்டுக்கார மோட்டு நிலம் ஏக்கர் மூனு லட்சத்துக்குப் பேசியிருக்கேன் நெலத்த பேச இடைத்தரகர் இல்லாது போனதால் விலை ஒளிவு மறைவு அற்று வெளிப்படையா பேசி முடுச்சாச்சு பத்திரச்செலவு போக ஒரு குறிப்பிட்டத் தொகை கிடைக்கும். அதை வைத்து வாங்கப் போற நிலத்தைப் பண்படுத்திக் கொள்ளலாம் பயப்படாதம்மா என்றபடிபட்டவன் புளியமரத்தடியிலிருந்து பேசிக்கோண்டே வீடு வந்தனர். ஆனாலும் அவள் மனம் சமாதானம் ஆகவில்லை. அவன் அப்பாயி பொன்னுருவமும் புலம்பி அழுவதையும் நிறுத்தவில்லை.
பல பிடிவாதம் குளறுபடிகள் ஏச்சு பேச்சு அனைத்திற்கும் இடையில் தென்னந்தோப்பை விற்று அடுத்தடுத்த நாட்களில் தண்டுக்கார மோடு நிலத்தையும் நில உரிமையாளரான மதுரை வக்கீல் குமரனிடம் பேசி முடித்து பத்திரம் செய்து முடித்தான்.முடித்தவன் தொடர்ந்து சில நாட்களாகப் பெய்து கொண்டிருக்கும் மழையில் மண் ஈரம் கோர்த்துக் கிடந்ததைப் பயன்படுத்தி முதல் வேளையாக இயந்திரங்களின் துணையோடு நிலத்தில் மண்டிக் கிடந்த கருவைக்காட்டை அகற்றி புல் பூண்டுகள் இல்லாவண்ணம் நிலத்தைப் பண்படுத்தினான். பண்படுத்திய நிலம் சிவப்பு மண்ணை சுமந்து பளிச்செனக் காட்சியளித்து. முள்காட்டை அகற்றிய நிலத்தை ஊரே திரண்டுவந்து வேடிக்கைப் பார்த்து. அடேயப்பா மண்ணு பொன்னால்ல கெடக்கு எது போட்டாலும் பட்டுனுல்லப் புடுச்சுக்கும் போல என்று வாயூரிப் போனார்கள்.
ஏ யேஆயா கமுனாட்டி வளத்தது கழுசடையா இருக்கும்பாங்க சரியான சமத்தால்ல கடலு மாதிரி நெலத்த வளச்சுப் புடுச்சுட்டான் ஏயேயப்பா பெத்தாலும் புள்ள இப்படில்ல பெக்கனும் கொல்லையின் கரையில் வாய்பிளந்தபடியொருத்தி நாமலும் தான் புள்ள பெத்துருக்கம் என்று அங்காலாய்த்து அகன்றாள்.
சேலைமுந்தியை தாவாயில் வைத்தபடி புத்தியுல்ல புள்ளதான் பொழங்குமிங்கிறது சரியாப் போச்சு என்ன மாதிரி பூமியாக் கெடக்கு கோடி ரூவா கொடுத்தாலும் இனி இப்படியொரு நெலமாக் கெடைக்கப் போவுது நாமலும் தான் கண்ண வச்சுருந்துருக்கோம்...
ம் புத்தியையையும் வச்சுருந்துருக்கோ என்றபடி முணுமுணுத்து நடந்தாள் ஒருத்தி.
இனிகுஞ்சம்மா குடும்பத்தக் கையிலப் புடிக்கமுடியுமா நானுந்தா ஒரு புருசனக் கட்டிக்கிட்டேன் ஒரு புள்ளையையும்பெத்துருக்கேன். ஏ…யப்பா எமகாதப் புள்ளையால்ல இருந்திருக்கான் குஞ்சி மவன் என்றபடி தோளில் கெடந்த மாராப்பு சேலையை இழுத்துச் சொருவியபடி செம்மண் புரண்டுக்கிடந்த மண்ணைப் பார்த்து பெருமூச்சு வாங்கி நின்றாள் இன்னொருத்தி.
யாருக்கு சொத்து சேரனுமோ அவுகளுக்குத்தான் சேரும்.நாமலும் தான் இந்தக் காட்டுல ஆடு மேக்கிறதும் வெறவு வெட்டுறதுமாக் கெடந்தோம் நமக்கு தோணுச்சா இந்தப் பூமியோட அரும என்று ஆளாளுக்குக் கருத்துச் சொல்லி வாயூறிப்போனார்கள்.
குஞ்சம்மாள் மெதுவாக கருவை முள்மரங்களை அழித்து உழுது கிடந்த கொல்லைக்குள் இறங்கினாள் கொல்லை மாலை நேரக்கதிரவன் ஒளியில் பொன்னாக பளபளத்தது. மெதுவாக தன் மகனருகில் போனவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். குஞ்சமாளைக் கைபிடித்து அழைத்துப் போனவன் கொல்லையின் மூலையில் நின்ற காஞ்சிராச்சி காட்டு மர நிழலில் ஒக்கார வைத்து தானும் அமர்ந்தான். அமர்ந்தவன் தனது திட்டங்களை வரைபடத்தில் வைத்திருந்தபடி விளக்கினான்.
‘அம்மா’ இந்தக் கொல்லையின் மேற்குப்பகுதியில் நாட்டுப் பசுமாடுகள் வளர்க்க இடம். அதைத் தொடர்ந்து நாட்டுக்கோழிகள் வளர்க்க இடம். அதைத் தொடர்ந்து ஒரு சிறிய மீன்குட்டை. அருகிலேயே புல் தோட்டம். பிறகு நீங்கள் இழந்ததாக நினைக்கும் தென்னந்தோப்பு. இதற்கு பொறவு மீதி எடத்துல பருவக்காலத்திற்குத் தகுந்தாற் போலப் பயிர்களைப் பயிரிடுவோம் என்றுஅவன் சொல்லி வருகையில் இடைமறித்த குஞ்சம்மா வடகிழக்கில் சிறிய பத்தைகளாக இருந்த எடத்த அப்படியேப் போட்டுறிக்கியப்பா அதில் ஒன்னும் பண்ணப் போறதில்லையா என்றாள்.
இல்லம்மா, அதில் நாளஞ்சு காட்டுமரங்கள் இருக்கு பல பறவைகள் அங்கு அடையுது அதுனால எடத்த வாங்குறத்துக்கு யோசுச்சப்போவே அத வெட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் கொஞ்சம் வேப்ப விதை பந்துகள் வீட்டிலேர்ந்து கொண்டு வந்துருக்கேன் மண் ஈரம் காயாது இருக்குவாம்மா இப்பவே தூவிட்டு வருவோமென்று அழைத்துப் போனவன் விதை பந்துகளை அவள் கையிலும் மடியிலும் கொஞ்சம் கொடுத்தான் இவன் பையோடு எடுத்துக் கொண்டான் இருவரும் ஆளுக்கொரு திசையில் விதைத்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.
புறப்படுகையில் தனது அம்மாவிடம் இத ஒட்டுனாப்புல கொஞ்சம் பூந்தோட்டம் போடனும் மண்ணுக்கும் அழகு பாக்குற கண்களுக்கும் அழகென்றான். பேசிக்கொண்டு கொல்லையில் நடந்து வருகையில் மேகம் கரு கொண்டு வானத்தை அலங்கரித்தது. ‘அம்மா’. தெக்கேப் போற கெளையாத்து தண்ணிய நாம பாச்சிக்கலாம் கொஞ்சம் மேடானப் பகுதிய தளத்தி புட்டா தண்ணி தலகீழப் பாயியும் அடுத்த வாரத்துல ஆள்துளாய் கிணறு அமைக்க ஏற்பாடு செஞ்சுடுறேன். தண்ணிச் சிக்கலும் தீந்துரும்’என்ற மகனை வாய்நிறைய ‘ஏயப்பா நான் பெத்தரா ஜா’ என்று உச்சி நுகர்ந்தாள்.
கரு கொண்ட வானம் வெகு நேரமாக இடித்து மின்னிய நிலையில் தூறலை தூவத் தொடங்கியது. மெல்ல தூறல் வேகமெடுத்து சற்றைக்கெல்லாம் வெலுத்து வாங்கத் தொடங்கியது. மழையில் நனைந்தபடி வானத்தை அன்னாந்து பார்த்தவள் கையெடுத்து வணங்கலானாள்.
முத்தழகு அவளின் தோளைப் பிடித்தவன் வானத்தைப் பார்த்தான் கருகொண்ட மேகம் அடர்த்தியாய் மேலும் பெய்யத் தொடங்கியது தனது கைகளையும் மழையை நோக்கி விரித்தான் உள்ளங்கையில் விழுந்த மழைத்துளிகள் விரலிடுக்கில் நழுவி நிலத்தில் விழுந்து கொண்டிருந்தன.