ராசேந்திரன் என்னைப் பார்த்ததும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு வணக்கம் சொன்னார்.
எனக்குக் கூச்சமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக இந்தக்கதை தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடைக்குச் செல்லும் போது, டிபன் வாங்கி வரும் போது, விநாயகர் கோவிலில் இருக்கும் போது, காலை மாலை நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது... இப்படி எங்கேப் பார்த்தாலும் ஒரு கணம் தயங்கி என் கண்ணில் படுமாறு நின்று வணக்கம் சொல்வார், நானும் பதிலுக்குக் கைகூப்பி வணக்கம் சொல்லி ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவேன்.
"...சார்.....சார்... ..."
வாசலில் கீரைக்காரனிடம் கீரை வாங்கிக் கொண்டிருந்த போது, குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், ராசேந்திரன் தான் நின்று என்னை அழைத்துக் கொண்டிருந்தார்.
நான் என்ன என்பது போல் பார்க்க, அவர் என்னை நாடி வந்தார்.
".... உங்களாலே எனக்கு ஒரு வேலை ஆகணும். எனக்கு வயது எண்பது நெருங்கி விட்டது. முதியோர் பென்சனுக்காக எழுதிப் போட்டேன். கலெக்டர் ஆபிசிலே அந்தத் துறையிலே போய்க் கேட்ட போது, அவனியாபுரத்திலே உள்ள வங்கியிலே ஒரு சேமிப்புக் கணக்குத் துவங்கி அதோட பாஸ்புக் நகலக் கொண்டாரச் சொல்றாங்க.....நானும் மூனு நாலு முறை போயிட்டு வந்துட்டேன், கணக்கத் திறந்து கணக்கு எண்ணைக் கொடுக்கச் சொன்னா... மூனு நாலு மாசம் ஆகும். அதுவரை பொறுங்கன்னு சொல்றாங்க... கலெக்டர் ஆபிசிலே கேட்டா ஒரே பல்லவி பாட்றாங்க, வங்கி கணக்கைக் கொண்டாந்தா உடனே எழுதிப் போட்டு வாங்கிரலாம்
னாங்க... நானும் வங்கிக்கும், கலெக்டர் ஆபிசுக்கும் அலைஞ்சி அலைஞ்சி ஓஞ்சிப் போயிட்டேன். அதுவுமில்லாம ஒரு முறை போய் வர நூறு நூத்தம்பது ரூவா வரை செலவாகுது... உங்களுக்குத் தான் நெறயப் பேரத் தெரியும்கறாங்க... எனக்கு எப்படியாவது வங்கிக் கணக்கத் திறந்து எண் வாங்கிக் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்..."
உண்மையில் அங்கே யாரையும் எனக்குத் தெரியாது. ராசேந்திரனோ இதற்காகத்தான் இவ்வளவு கும்பிடு போட்டாரா என்பது தெரிய வந்தது.
எங்கள் வீட்டிற்கு எதிர்ப் பகுதியில் இரண்டு வீடுகள் தள்ளி அவரது வீடு. அண்மையில் தான் குடி வந்தவர்.
வர, போகப் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறு அறிமுகம் கிடையாது. என்னை விட இருபது வயது மூத்தவர் என்பது இப்போது தெரிகிறது. ஆனால் பார்த்தால் அவ்வளவு மதிப்பிட மாட்டார்கள். எப்போதும் நடந்து சென்று இவரே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார். நல்ல உயரம். அந்தக் கால உடம்பு எனத் தோற்றம் கம்பீரம் காட்டும்.
இதற்குள் என் மனைவி..." ஏங்க கீரை வாங்கறீங்களா... இல்லே கீரைக்காரனையே வெல பேசுறீங்களா..." என்றபடி வர, நான் ராசேந்திரனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, "ஏங்க ....உள்ளே வந்து உக்காந்துதான் பேசுங்களேன்... பாவம், பெரியவர எவ்வளவு நேரந்தான் நிக்கவச்சிப் பேசுவீங்க... வாங்க பெரியவரே... உள்ள வந்து உக்காருங்க..." என்று அழைத்தார்.
"வணக்கம்மா..." என்றபடி பெரியவர் என்னையும் எதிர்பார்க்காமல் உள்ளே நுழைய, நானும் வாங்க என்றபடி அவருக்கு நாற்காலி இழுத்துப் போட்டு அமரச் சொன்னேன்.
"... என்ன விஷயம்..." எனக் காப்பி கலந்தபடி மனைவி வர, நானும் ராசேந்திரனும் யார் முதலில் சொல்வது என ஒருவரை ஒருவர் பார்த்தோம்.
"...அது ஒண்ணுமில்லே யோகம்... சாருக்கு முதியோர் பென்சன் கிடைக்கணுமாம்... ஒரு பாங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண ஒத்தாச பண்ணச் சொல்றார்..."
"... அவ்வளவு தானே... இதிலே என்ன கஷ்டம்...போனா ஓப்பன் பண்ணிக் குடுத்திடுவாங்களே..."
"...அது சர்வீஸ் பிராஞ்ச்... முதியோர் பென்சன் தர்றதுக்காகவே இருக்கற பாங்க்... இதுலே முதல்ல பணம் ஏதும் போடாம அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்னா கொஞ்சம் அவங்க சொல்றதக் கேட்டுத்தான் நடக்கணும்... அதுக்குத்தான் ஒத்தாச பண்ணச் சொல்லிக் கேக்கறார்..."
"... ஆமாம்மா... ஒவ்வொரு நாளும் நடையா நடக்கக் கஷ்டமா இருக்கு... என்ன பண்றது... பெத்த புள்ளங்க ரெண்டு பேர் இருந்தும் இந்தக் கஷ்டம் படவேண்டியிருக்கு... என் மனைவிக்கு அறுபத்தெட்டு வயசு ஆகறது... நானும் அவளும் ரெண்டு பேரும் இந்தத் தள்ளாத வயதிலே தனியாக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கோம்..."
" ஏன் புள்ளைங்க வீட்டிலே இருக்கலாமே..." என்று என்னைப் பார்த்தவாறே என் மனைவி கேட்க,
"மூத்தவன் வீட்ல தான் இருந்தோம்... ஏதோ ஒரு பேச்சிலே சண்டையாயி முத்திப்போக மகனே எங்களை வெளியேப் போகச் சொல்லிட்டான்... இனிமே உங்களப் பாத்துக்க முடியாது... நீங்க உங்க வழியப் பாத்துக்குங்க... எல்லா நல்லது கெட்டதும் இனிமே நமக்குள்ளே கிடையாது... உங்க சாவுக்கும் நாங்க வர மாட்டோம்... கொள்ளிகூடப் போடமாட்டேன் நான்னு சொல்லி விரட்டியடிச்சிட்டான்... இதுக்குமேல மானங்கெட்டு இருக்க முடியாமத் தான்..." என்றபடி அழ ஆரம்பித்துவிட்டார்.
"சரி... சரி... முதல்லே காப்பி சாப்பிடுங்க... மனச ஆத்திக்குங்க... இந்தக் காலத்திலே எல்லாம் இப்படித்தான் போயிட்டிருக்கு... ஏதோ நீங்க திடமா இருக்கறதால தனியா வந்து உங்க கால்லே நிக்கிறீங்க... பரவால்லே... ரெண்டாவது மகன்..." என்று மனைவி தான் பேச்சை திசை மாற்றினார்.
"அவன் சரியாப் படிக்காம நின்னவன்... ஏதோ கூலி வேலை செஞ்சி ரெண்டு பசங்க, ஒரு பொட்டப் பிள்ளையோட அவன் பொழப்பு ஓடிக்கிட்டிருக்கு... மாசாமாசம் ஆயிரம் ரூபா நான் கொடுத்துர்றேன்பா... என்னைய விட்டுடுங்கன்னு அவனும் நழுவிட்டான்... என்ன செய்றது...இந்தக் குடியிருப்பிலே பி பிளாக்குலே இருக்குற எம்பொண்ணு இங்கே வீட்டைப் பாத்துக் குடி வச்சா... வாடகைய அவ குடுத்திடுவா... வீட்டிலே ஏதும்
இல்லாதப்ப இங்கே வந்து சாப்பிட்டுக்குங்கோன்னு சொல்லிட்டா... இன்னொரு பொண்ணு வெளியூர்ல இருக்கா... அவளும் அப்பப்ப ஏதாவது பணங்கொடுப்பா... என்ன பண்றது இருக்கற காலம் வரைக்கும் இப்படி லோல்பட வேண்டியது ... இதிலே இந்த முதியோர் பென்சன் கிடைச்சதுன்னா..."
"...ஏங்க... நம்ம பிரேம்நாத் இருக்காரே... அவருக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருப்பாங்களே..." என மனைவி யோசனை சொன்னார்.
"... அட எனக்குத் தோணாமப் போச்சே..." என்றபடி மொபைலில் பிரேம்நாத் எண்ணைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டேன்.
பிரேம்நாத் சமூக சேவை, சங்க வேலை என இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர். அதன் மூலம் அவருக்குப் பல தொடர்புகள் இருக்கும்.
"... வணக்கம் தலைவரே.... என்ன ... என்னைக்குமில்லாம அதிசயமாக் கூப்பிட்றீங்க..."
எப்போது அழைத்தாலும் தலைவரே என்று தான் அழைப்பார். அதிலேயே ஆள் கவிழ்ந்து விடவேண்டும் என்பார்.
நல்ல பழக்கம் தான் என்று நினைத்தேன்.
"...சரி...கோவில் கும்பாபிசேகத்துக்கு நாள் குறிச்சாச்சா..."
அவர் பகுதியில் உள்ள கோவில் கும்பாபிசேகக் கமிட்டித் தலைவர் என்பதற்காக அது பற்றிய விசாரணையில் ஆரம்பித்து, மெள்ள ராசேந்திரன் முதியோர் பென்சன். வங்கிக் கணக்குத் தொடக்கம் பற்றிக் கூறலானேன்.
பிரேம்நாத் பதிலும், அவருடைய யோசனையும் கேட்கக்கேட்க ராசேந்திரன் விஷயம் இவ்வளவு எளிதில் முடியும் என எதிர்பார்க்கவில்லை. அனைத்தையும் பேசி முடித்தபின், "அக்காவைக் கேட்டதாச் சொல்லுங்க தலைவா.." என்று முத்தாய்ப்பாய் முடித்தார்.
யோகத்தை அக்கா என்றே அழைக்கும் பழக்கம்... ஒரு பாச விசாரணை...
"சரிங்க ராசேந்திரன்... உங்க வேலை முடிஞ்சதாவே நினைச்சுக்குங்க... ஓரிரு நாள்லே அதுக்கான ஏற்பாடு செய்றேன்னுட்டார்... அதனாலே நம்பிக்கையா இருங்க..." என்றபடி ராசேந்திரனைப் பார்த்தேன்.
அதற்குள் யோகம் என்னை உள்ளே வருமாறு சைகை செய்ய உள்ளே சென்றேன்.
அவர் பேசியதைக் கேட்டதும், "ஏம்மா... இதெல்லாம் நீங்கக் கேக்கணுமா என்ன... நீங்களே இதைச் செய்யலாமே..." என்றபடி வெளியே வந்தேன்.
"ராசேந்திரன் சார்... இந்த மாசமே உங்களுக்குப் பென்சன் கிடைச்சிருச்சு பாருங்க... வயசானவங்க கண்கலங்கினா என் யோகத்துக்குத் தாங்காது... அதனாலே..."
"அய்யா... இந்தாங்க... இதை வாங்கிக்குங்க..." என்றபடி ஒரு தாம்பாளத் தட்டில் இரண்டு ஆப்பிள் பழமும் ஆயிரம் ரூபாயும் வைத்து என்னுடன் சேர்ந்து நின்று கொடுத்தார்.
ஒரு கூச்சத்துடன் நெளிந்தவாறு, "ரொம்ப நன்றிங்கம்மா... எப்பவும் எங்களோட ஆசீர்வாதம் தெய்வ அருளோடு சித்திக்கட்டும்" என்று வாழ்த்தியபடி எடுத்துக் கொண்டார்.
"... ஆமா... உங்களுக்கு எத்தினி குழந்தைங்க... எல்லாரும் கல்யாணமாகி வெளியூர்லே இருக்காங்களா..." என்றபடி எங்கள் இருவரையும் ஏறிட்டுப் பார்த்தார்.
நாங்கள் பூசை மாடத்தைப் பார்த்தோம்.
"... அதோ... அந்தப் பூசை மாடத்திலே இருக்குற எல்லாத் தெய்வங்களும் எங்க குழந்தைங்க தான்..."