மகளிர் மன்றக் கூட்டம் தொடங்க இன்னும் முப்பது நிமிடங்களே உள்ள நிலையில், வந்திருந்த பெண்களின் மொத்தப் பார்வையும், நுழைவு வாசலில் நிலை குத்தியிருந்தது.
‘இன்னும் தேவிபிரியாவைக் காணவில்லையே...' அவர்களின் எதிர்பார்ப்பு இதுதான்.
இன்று, எவ்வளவு விலை உயர்ந்த புடவை கட்டியிருப்பாளோ... கழுத்தில், காதுகளில் புதுத் தங்க ஆபரணமோ. வைர அணிகலணோ, செருப்பு கூட புடவைக்கு ஒத்த மாதிரியேப் போட்டிருப்பாள். அதிக ஒப்பனையில் சினிமா நடிகையாட்டம் ஜொலிப்பாளே... இந்த நேரத்துக்கு வந்துருக்கணுமே... என்னாச்சு? ஒருவேளை வெளியூர் போயிருப்பாளோ?
ஒவ்வொருவர் எண்ணத்திலும் கேள்வியாக, நீடித்துக் கொண்டிருந்த குழப்பத்திற்கு முற்று வைப்பது போல்.
“தேவிபிரியா வீட்டுக்கு போனா என்ன?” என்றபடியே அலுவலக அறையிலிருந்து வந்தாள், பானு என்ற பானுமதி. அவ்வளவுதான், அங்கே இருந்த எல்லோரும், ‘அதெல்லாம் வேணாம்...' சொல்ல, புதியதாக மன்றத்தில் மெம்பரான பானு ஆச்சரியமானாள்.
தேவிப்பிரியா, இந்த மன்றத்துக்கு வருகை தந்திருந்த அன்னிக்கே, ‘என் வீட்டுக்கு, உறுப்பினர்கள் எது விசயமாகவும் வரவேக் கூடாது. அப்படி உறுதினா நான் இங்கே உறுப்பினரா சேர்ந்துக்கிறேன்'ன்னு ஒரு கோரிக்கை முன் வைத்தாள்... அரியலூரிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் நிறுவன மேல்லதிகாரியின் மனைவி, அதுவுமில்லாம எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பாக, நட்பாக பேசும் வெளிப்படை குணமுடைய அழகானவள். கம்பெனி கார் போக, சொந்தக் காரில் வளம் வரும் வசதியில் செழித்தவள். அதனாலயே மன்றத் தலைவியும், மற்றவர்களும், ‘தேவிபிரியா எங்கள் தோழி...' என்ற சொல் அடையாளம் விரும்பி ‘சரி, ' என்றனர்.
தவறாமல், மன்றம் வந்துவிடுவாள் தேவிபிரியா. பெண்கள் கூடும் இடமென்றாலே பொலிவுதானே, அதில் அவளின் வருகை மட்டும் தனித்தன்மை பெற்றுவிடும். அப்படியொரு தோற்ற நிமித்தலோடு இருப்பாள். பிறப்பு, வளர்ப்பு, அமைந்த வாழ்க்கை... எல்லாமேப் பொருளாதார உயர்வு!
தேவிபிரியாவோ, தான் இங்கே சக உறுப்பினர்... சம மனுஷியென ஒட்டுதலுடன் எல்லோரிடமும் பாகுபாடு இல்லாது இயல்பாகவேப் பழகினாள்.
இப்போது, தேவிபிரியாவை, வழக்கமான கண்ணோட்டத்தில் எதிர்பார்த்திருந்தாலும், மன்றத்தின் செயலாளர் வனிதாவின் மகளுக்குத் திருமணம். அதற்கு, மரியாதை நிமித்தமாக முதல் அழைப்பிதழை அவளுக்குத் தரவேண்டும் என்பதற்காகவேக் கொஞ்சம் கூடுதலான எதிர்பார்ப்பு!
வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தயக்கமாயிருக்கிறது.
வாரம் முழுவதுமே வருகையில்லை. விசாரித்த போது... தனது சொந்த ஊரான திருச்சி சென்றுள்ள தகவல் கிடைத்தது. கூடவே, வெள்ளிக்கிழமை இங்கே தேவிபிரியா வரும் தகவலும்.
அன்னிக்கே நாம, வீட்டுக்குச் சென்று, கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்து முறைப்படி அழைக்கலாம்” தலைவி இதைக் கூறியபோது
“வீட்டுக்கு வரவேணாம்ண்ணு சொல்லியிருக்கையில் நாம போறது முறையில்லையே மேடம்” என்று தயக்கம் தெரிவித்தாள் வனிதா.
“மன்ற வேலையாக நாம போகலையே வனிதா, அதுவுமில்லாம எனக்கென்னவோ அவளோட ஆடம்பரப் பகட்டான வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்துப் பொறாமை அடையக்கூடாது, கண் வைத்து விடுவார்கள் என்ற குறுகிய எண்ணத்தில்தான் அப்படியொரு கண்டிசன் வைத்திருப்பாள் போலத் தோணுது. அதனாலயே இந்தக் காரணத்தினால் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறேன்” தலைவிதான்.
பொதுவாக இருக்கும், ‘தெரிதல்' வனிதாவிடமும் எட்டிப்பார்த்தது.
“இதுல, பெரியதாக தப்பொண்ணும் இருக்கறதா எனக்குத் தெரியல, அப்படியா வீட்டுக்கு வந்தவங்கள சட்டுண்ணு அவமானப்படுத்தி அனுப்பிருவா தேவிபிரியா? வசதியில் அவளுக்கு ஈடாக நாம இல்லனாலும்... வயசு, பதவி, தகுதியில் சமமானவங்கதான். பூரணி, கோமதி, பத்மாட்டலாம் பேசிட்டேன் தாராளமாகவேப் போகலாம்” முடிவாகவேத் தலைவி கூறிவிட்டாள்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தங்களை அலங்காரப்படுத்தி, வீட்டிலிருக்கும் நகைகளையெல்லாம் அணிந்துகொண்டு, காட்சி மிடுக்குடன் கிளம்பிவிட்டனர்.
வேலைக்காரப் பெண் வந்து கதவு திறந்து விட்டாள்.
வீட்டுக்குள் நுழைந்த மன்றத்து உறுப்பினர்களால் கொஞ்சம் தர்மசங்கடப்பட்டாள், தேவிபிரியா. எதிர்பாராத வருகை.
பரஸ்ப்பரப் பேச்சுக்கு ஊடே வந்தவர்களின் பார்வை, கவனித்தல், மொத்தமும்... அந்த ஹாலின் சுவரோரத்தில்... தரை மெத்தையில் பதினேழு வயது மதிக்கத்தக்கப் பையன் படுத்திருந்தான்... அவனின் தலையில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் அணியும் தலைக்கவசம், கால்களில், ‘சூ,' கை, இரண்டும் அகண்டிருந்து. தலையை மெல்ல ஆட்டியபடியே இருந்தான்.
இந்த பையன் யார்?
இப்படி இருக்கிறானே? தேவிப்பிரியா... மகனாயிருப்பானோ...?
அவனின் நிலையைப் பார்க்கவே ஒருமாதிரியாக இருந்தன.
நிமிடங்கள் தான்... அடுத்தங்கே, மெளனமே நிலவியது. உபசரிப்பு முறையில் வேலைக்காரப் பெண்ணே வந்தவர்களுக்கு, குளிர்பானம் தந்து, சகசநிலையை ஏற்படுத்தினாள்.
“என்ன... வரவே இல்லேண்ணு பார்க்க வந்துட்டீங்களா மேடம்?” வழக்கமான புன்முறுவலுடனே கேட்டாள் தேவிபிரியா.
பேச்சு வரவில்லை. ஏதோ தலையசைத்தாள் தலைவி.
“பொண்ணுக்கு கல்யாணம்... முறைப்படி நேரில் வந்து பத்திரிக்கை வைக்கணுமேன்ணுதான்...” அதற்கு மேல் வனிதாவுக்கு வார்த்தைகள் இல்லை... இனம்புரியாத கனம் மேவியது.
“ஓ... அப்படியாக் கொடுங்க” அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டாள்.
அங்கிருக்க வந்தவர்களுக்கு எப்படியோ இருந்தது.
“அப்ப நாங்க கிளம்புறோம் அவசியம் கல்யாணத்துக்கு சாருடன் நீங்க வரணும்” எழுந்து கொண்டபோது,
“என்ன மேடம் இங்கே இருக்க ஒரு மாதிரியாத் தோணுதா...?”
மனவோட்டத்தை அப்படியேச் சொல்றாளே... அனைவரையும் சங்கடமான இறுக்கம் சூழ்ந்து கொள்கிறது.
“இவன், என்னோட ஒரே பையன் பெயர், ராம்... ஏழு வயசுவரை நல்லாத்தான் இருந்தான், ஒருநாள் ‘ஃபீவர்' னு டாக்டர்ட்டக் கூட்டிப் போனோம்... அந்த வைரஸ், இந்த வைரஸ்ன்னு வைத்தியம்... எந்த முன்னேற்றமும் இல்லை. மருந்து, மாத்திரையில் ஏதோக் கோளாறு... திடீர்னு சிரிச்சான், கத்தினான், யாரும் கவனிக்காத நேரத்துல... ரத்தம் வழிய, வழிய சுவத்துல முட்டினான். ஒவ்வொரு மாற்றமா வந்து இப்படி உருமாறிப் போயிட்டான், ராம். மருத்துவ ரீதியா நிறையப் பாத்தாச்சு, விட்ட விதினு ஆனபிறகு எதையுமேச் சரி பண்ண முடியாதே... நம்ம வாழ்கையோட நாடகத்துல குடும்பப் பாத்திரம் இப்படிதாண்ணு, மேல இருக்கறவன் நூல் ஆட்டிக்கிட்டு இருக்கையில் அந்த தோதுக்கு, நாம் ஆடித்தானே ஆகணும். இவனோட பிடிவாதம், ஆர்ப்பாட்டம், அமைதி... பழகிப்போச்சு. வீட்டில் இப்படியொரு நிலை காரணத்தினால்தான் முடிந்தவறை அவருக்குச் சார்ந்த, எனக்கு சார்ந்தவர்களின் வருகையானாலும் தவிர்த்துக் கொள்வோம்” என்றாள் வருத்த மிகுதியுடன்.
பூரணியும், வனிதாவும் கிட்டத்தட்ட விசும்பியே விட்டனர்.
வெளித்தோற்றத்தை மட்டுமேப் பார்த்து தேவிபிரியாவை ஒருவிதக் கண்ணோட்டத்தில் எண்ணத் தோன்றியது எவ்வளவு பெரிய தவறு, முட்டாள்தனமும் கூட என்பதை அனைவரும் உணர்ந்து வெக்கித் தலைகுனிந்து அங்கிருந்து வெளியேறினர்.