தனியொரு மரமாய்த் தவித்திருப்பதின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. அந்த அவஸ்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள்தான் சொல்லிக் கொள்வார்கள், “தலைவலியும் வயித்துவலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்“. எப்பவும் நாலைந்து பேரோடுப் புழங்கியவர்கள் திடீரென பெரும் சுழலில் மாட்டி எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்து நிர்கதியாய் நிற்பது போன்ற வலி உலகத்தில் எதுவுமில்லை. எப்பவும் யாரோ ஒருவரின் சத்தத்தோடு காட்சி தரும் வீடுகளை அடர் மௌனத்தில் காண நேர்கையில் பழகியவர்களுக்குப் பதறிவிடும். அணுக்கமாய் நின்றவர்கள் கைவிட்டுப் போய் அதே வீட்டில் மிச்சப்பட்டவர் வாழ நேர்ந்தால் வீட்டின் மௌனமே அவரைக் கொன்று விடும். பலரும் அப்படிப் போய் சேர்ந்திருக்கிறார்கள்.
முகுந்தனும் நானும் அப்படியோர் இல்ல மௌனச் சுழலில் தான் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். துளியும் சிந்தாமல் மலையுச்சி கொண்டுச் சேர்க்க, நிபந்தனையில் கொடுக்கப்பட்ட கண்ணாடிக் குப்பி கைநழுவ, நட்டாம் பாறையில் போட்டுச் சுக்குநூறாய் உடைத்தது போலாகி விட்டது. முகுந்தன் இப்படிச் செய்வானென நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. கண்டவர்கள் அவனை வார்த்தை ஊசிகளால் சல்லடையாக்கியிருந்தார்கள். மூதேவி, பேய், பிசாசு, தரித்திரமென்று சிறப்புப் பட்டங்கள் வேறு. அடைமழையையொத்த இடைநில்லாத் தீச்சொல்மழை. அதில் மூழ்கித் திணறினான் முகுந்தன். சாபச் சொற்களின் வசைமொழியை அவன் மீது பூக்களைப் போலப் பலரும் சொரிந்து கொண்டேயிருந்தனர். பயமும் நம்பிக்கையின்மையும் கூடி நின்று என்னைப் படுத்தின. பதற்றத்தில் விழிகள் பிதுங்கி அதிர்ந்து நின்று கொண்டிருக்கிறேன்.
என் மகன் என்பதற்காக அவனுக்குச் சப்பைக் கட்டவில்லை. ஒரு நாளும் அப்படியொரு முடிவுக்குப் போக மாட்டேன். அவன் செய்தது தவறல்ல. மகாதவறு. சகிக்க முடியாப் பெரும்பாதகம். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால்? அறியாத வயது. இழப்பின் ரணம். துயர வண்டு எலும்பு மஞ்சைக்குள் ஊடுறுவித் துளைக்கும் வலி. வெதும்பிய மாம்பிஞ்சு உள்ளம். கைநழுவிப் போன ஏமாற்றம். எதிர்பாராது கிட்டிய திடீர் அதிர்ச்சியில் அவன் உலகம் பேரிருள் சூழ்ந்து சூனியமாகி போன பிரமை. அவனால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.
அவனுக்கு எதிர்கொள்ளும் பக்குவமில்லை. முன்பே தெரிந்திருந்தால் கூட மனம் அதற்கேற்பத் தயாராகிவிடும். ஆனால் இஃது அப்படி நிகழவில்லை. யாரும் நினைத்துப் பார்த்தோமா? ஆளும் பேருமானவர்களே இன்னும் செரித்துக் கொள்ள முடியாமல் தவிக்க, அவன் என்ன செய்வான்? விளையாட்டுப் புத்தி கூட மாறாப் பாலகன்.
ஆறு மாதம் முன்வரை அவன் போலப் பிள்ளையுண்டா? என்று புகழ்ந்தார்கள். இதற்கு முன்பு அவன் இப்படிக் கீழ்த்தரமாய் நடந்து கொண்டதில்லை. தெருவே அறிவுக்கொழுந்து என அவனைக் கொண்டாடிற்று. அப்படிப் பெயரெடுத்தவன். அவன் வயதொத்தவர்கள் அவனைப் பொறாமையில் கரித்துக் கொட்டுவதுண்டு. எல்லாவற்றிலும் சுட்டியாகத்தான் இருந்தான். அவன் உதட்டைச் சுழித்துக் கொஞ்சிப் பேசும் தமிழுக்கு அடிமையாகதவர் இந்தத் தெருவில் யார்? “முகுந்தா செல்லம் முகுந்தா செல்லம்“ என்று வாய்க்கு வாய் கூப்பிட்டுக் கொஞ்சிய மனங்கள் இப்போதென்ன, பாறையாய்ச் சமைந்து விட்டனவா? நானும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆளாளுக்கும் வியாக்கியானம். அவர்களால் முடிந்த கொடுஞ் சொற்கள். முடியவில்லை. அவன் வயதில் அவர்கள் இப்படிக் கொடும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்களா? இழப்பின் வலி உணரா மனசு என்ன மனசு? குப்பைக் கூடை.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச எனக்குத் தெரியாதா? எத்தனை நேரமாகும்? பழகிய பழக்கத்திற்கு அதுவா அழகு? ஏற்கனவே நொந்து நூலாகிக் கிடக்கிறேன். அந்த நூலிலா தோரணம் கட்டி விளையாட நினைப்பது? அறுந்த நூலின் வலி தோரணக் காகிதம் அறியுமா? தாங்கி நின்ற நன்றிக்கடன் காகிதத்திற்கு இருக்காதா? ஆளாளுக்கு இப்படி நடந்து கொள்கிறார்கள்? நூல் வீழ்ந்தால் தோரணக் கதி அதோ கதிதான். அதை உணரும் நிதானம் யாருக்குமில்லை.
முகுந்தன் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. தவமணி, பனிமலர் புகைப்படங்களின் கீழ் அவர்களை வெறித்தபடி அமர்ந்து கொண்டிருந்தான். கண்களுக்குள்ளிருந்து யாரோ கோலிக் குண்டுகளை உருட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். துயரத் துளிகள் கண்ணாடித் திரவமாய் உருண்டுக் கொண்டேயிருந்தன. பிள்ளை இந்தப் பாடு படுகிறான். தாய் கல் மனத்தோடு அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். புகைப்படச் சட்டகத்திற்குள் அப்படியென்ன ஒய்யாரச் சிரிப்பு? தாயின் புன்னகையை விழிகளில் ஏந்தியபடி விடாமல் தேம்பிக் கொண்டிருந்தான் முகுந்தன்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என அப்பா அடிக்கடிச் சொல்வதுண்டு. நானும் ஒரு முட்டாள். துளியும் ஐயமில்லை. அவனை இந்நேரத்தில் அடித்திருக்கக் கூடாது. பொறுமையைக் கையாண்டிருக்க வேண்டும். நிதானமாக யோசித்திருக்க வேண்டும். என்ன செய்வது? அவனை அடிக்க வேண்டுமென்றா அடித்தேன்? அதுயென்ன என் வாழ்நாள் இலட்சியமா? ஒவ்வோர் அடியும் அவன் மீதா விழுந்தது? என் உயிர் மீதல்லவா விழுந்தது. மற்றவர் வாயை மூட எனக்கு வேறு வழி தெரியவில்லை.
என்னை நானே தாக்கிக் கொண்டதைப் போல நான் துடித்ததை நீங்கள் அறிவீர்களா? என் உயிர் பட்ட அவஸ்தையை நான் யாரிடம் சொல்லியழ முடியும்? கூட அழவும் ஆளில்லாமல் தவமணி போய்விட்டாள். போனவள் எங்களையும் சேர்த்து அழைத்துச் சென்றிருக்கலாம். ஒரு வழியாய் எல்லாம் முடிந்து போயிருக்கும். இப்படி நாளும் கிழமையும் நாயாய் இம்சை படத் தேவையில்லை.
ஊருலகம் தெரியாத ஆம்பளையை இப்படி அனாதையாக விட்டுப் போகிறோமே என்று கொஞ்சமாவது யோசித்தாளா? ஆத்திரத்தில் எனக்கு என்னென்னவோ கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகின்றன. எனக்கென்ன தெரியும்? வெந்நீர் போடக்கூடத் தடுமாறுவேன். அவளுக்குத் தெரியாதா? எரிவாயு அடுப்பைப் பற்ற வைக்க திறப்பியைக் கீழே அசைக்க வேண்டுமா? மேலே அசைக்க வேண்டுமா என்பது கூட அறிந்தவனல்லன் நான். பாத்திரம் விளக்குவது, வீட்டைக் கூட்டுவது, குழம்பு தாளிப்பது, கறிக்காய் வெட்டிக் கூட்டு செய்வதென்று எத்தனை வேலைகள்? ஏதாவது தெரியுமா எனக்கு?
அம்மா சிறு பிள்ளையாய் இருந்த போதே “ஆம்பளைக்கு அடுப்படியில என்ன வேலை“ என்று விரட்டி விடுவாள். அம்மா படும் வேதனை தாளாமல் உதவி செய்ய திரும்பவும் ஓடுவேன். விட மாட்டாள். இட்லி மாவறைப்பதற்கு ஆட்டுக்கல்லில் அவள் போராடுவதைப் பார்க்க கண்ணில் நீர் வந்து விடும். நான் ஆட்டுறேன்மா என்று துக்கத்தில் என் குரல் கம்மும். “நீ போயி பாடத்தைப் படி ராசா. உன் கைய்யி கடுக்கும். தாங்க மாட்டே“ என்று கருமமே கண்ணாகி விடுவாள். அப்படி வளர்ந்த பிள்ளை நான்.
திருமணத்திற்குப் பின் தவமணி முழுவதுமாய்த் தாங்கிக் கொண்டாள். எந்த வேலையும் அவள் எனக்குக் கொடுத்ததுமில்லை. நான் செய்ததுமில்லை. திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் பிரிந்திருந்த நாட்களை எண்ணி விடலாம். ஒட்டுப் புல்லைப் போல் ஒட்டிக் கொண்டாள். என்னை விட்டு எங்கும் போக மாட்டாள். எங்காவது உறவினர் வீட்டிற்குச் சென்றால் கூடத் தங்க மாட்டாள். “அவிங்களுக்கு ஒரு வேலையும் தெரியாது. சாப்பிடக் கஷ்டப்படுவாங்க” என்று ஓடி வந்து விடுவாள்.
இப்படி இருந்தவனிடம் இரவில் திடீரென உதிரும் எரிநட்சத்திரம் போல ஒரே இரவில் எல்லாமும் கைவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும்? நடுக்கடலில் வீழ்ந்த ஆகாயவிமானம் போல் அன்று வீழ்ந்தேன். உதிரி பாகஙகளும் கிடைக்காத வீழ்ச்சி. தவமணி மட்டுமா போனாள்? துணைக்குப் பனிமலரையும் அழைத்துச் சென்று விட்டாள். பாழும் பிஞ்சு என்று பார்த்தாளா?
பனிமலர் இந்த வீட்டின் தேவதை. இது தவமணிக்குத் தெரியாதா? வீட்டில் இருந்தவர் இரண்டு பெண்கள். இருவரும் ஒரே நேரத்தில் மரண வாகனமேறினால் நாதியற்ற ஆண் எங்கே போவான்? அவனுக்குப் போக்கிடம் ஏது? மகள் வயது ஏழு தான். விடுத்தான் பிள்ளை. வாண்டுக்குட்டி. நான் அப்படி என்றாவது நினைத்ததுண்டா? இரவில் என் மயிரடர் மார்பில் பரவிக் கொண்டு அவள் படுத்தும் இம்சைகளை அத்தனை ஆனந்தமாய் அனுபவிப்பேன். அவள் என் மீசை முறுக்கி விளையாடுவாள். ஒரு பக்கம் முறுக்கி மறுபக்கம் தாழ்த்தி முகுந்தனை அழைத்து “அப்பாவைப் பாரேன்டா” என்று கேலிச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு நொடியில் உருக வைக்கும் இராசாயனக் கலவை. அவளை என் தாயென்று அழைப்பேன். உச்சி முகர்வேன். முத்தங்களை அள்ளியள்ளி வாரி இறைப்பேன். அவள் மூச்சுத் திணறிச் சிணுங்குவாள்.
அத்தனை துடுக்காகப் பேசும் பிள்ளையை யாராவது கண்டதுண்டா? எங்கள் வீட்டின் மூத்த கிழவியென்று கேலி பேசுவேன். அத்தனை சின்ன வயதில் அப்பன் மீது யாராவது அவ்வளவு பாசம் வைக்க முடியுமா? தெரியவில்லை. என்னை விளையாட்டாய் யாரும் திட்டினால் கூட வரிந்து கட்டிக் கொண்டு வாயடிப்பாள். வம்பிழுத்து உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாள். வீட்டுக்கு வரும் சமயம் என் தங்கை பவித்ரா வேண்டுமென்றே என்னுடன் வம்பிழுப்பாள். பனிமலர் முகம் மாறி விடும். உம்மென்று பார்த்துக் கொண்டேயிருப்பாள். அப்பனைத் திட்டுவதைக் காணப் பொறுக்காமல் கண்கள் கரை கட்டி நிற்கும். கண்ணீரோடுச் சண்டைக்கு மல்லுக் கட்டுவாள்.
ஒரு நாள் தங்கை கேட்டாள்.
“உங்க அப்பா என்ன ஊரிலில்லாத அதிசயமா?“
“ஆமா... எங்களுக்கு அதிசயந்தான்.“
“இது உங்க அப்பா இல்ல. எங்க அண்ணன். எங்க அண்ணனை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்“
“ம்.. என்னை விட்டுட்டு வர மாட்டாங்க.“
“நீயும் உங்க அம்மாவும் தனியா இருந்துக்கிடுங்க. நீங்கதான் ஒழுங்கா சோறு கூடப் போட மாட்டேங்கறீங்களாமே“
அவளை வெறுப்பேற்றுவாள்.
“இல்லை..நான் எங்க அப்பா கூடத் தான் தினமும் சாப்பிடுவேன். நீங்க பொய் சொல்றீங்க“.
“சரி சரி வாண்ணே. நாம போவோம்.“
என்னை இழுப்பது போல நடிப்பாள் தங்கை.
“அப்பா வந்தா நானும் கூட வந்திடுவேன்”
“எங்க அண்ணனுக்கு மட்டும் தான் சோறு போடுவேன். நீ பட்டினியாத்தான் கிடக்கணும்”
“நீங்க கொடுக்க வேண்டாம். அப்பா எனக்குக் கொடுப்பாங்க“
“நான் பிடுங்கிக்கிடுவன்“
“சோறு இல்லன்னா பரவாயில்லை. எங்க அப்பா கூட இருந்தா எனக்குப் பசிக்காது.“
அவள் இறப்பதற்கு முன்பு நடந்த கடைசி உரையாடல் இது.
ஐயோ என் மகளே. இப்படி அநியாயமாய்ப் போவதற்காப் பேசினாய்? போகும் போது அப்பனையும் அண்ணனையும் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா? இதோ அண்ணன் செய்த கொடுஞ் செயலைப் பார்த்தாயா? யாராவது செய்யத் துணிவார்களா? ஒன்றுக்கும் கையாலாகா உன் அப்பன் நானென்ன செய்வேன்?
அந்தப் பக்கத்து வீட்டு அத்தை பரணிகா எப்படியெல்லாம் பழகினாள்? காலையில் அவள் போட்ட பேயாட்டத்தைப் பார்த்தாயா? அவளும் என்னதான் செய்வாள்? ஸ்கூட்டி வாங்கி ஒரு மாதம்கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் அவள் கண்ணெதிரே எரிந்து பஸ்பமானால் யார் தாங்கிக் கொள்வார்கள்.?
உன் அண்ணனுக்கு அப்படியென்ன ஆத்திரம்? கேட்டால் நீயும் அம்மாவும் வைத்திருந்த வண்டி இதுதான் என்கிறான்... அதுவும் சிவப்பு வண்ணமாம். சிவப்பு வண்ணத்தில் உலகத்தில் ஒரே வண்டிதான் இருக்குமா? பார்த்தவுடன் உங்கள் நினைவுகள் வந்து விட்டதாம். நீங்கள் இறப்பதற்கு இந்த வண்டிதானே காரணமென்று பைத்தியம் பிடித்தவன் போலச் செயல்பட்டிருக்கிறான். வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துப் போய் தீ வைத்திருக்கிறான். சற்று நேரத்தில் இடமுலை பிய்த்தெறிந்த கண்ணகியின் மதுரை போலச் சிதிலமாகி விட்டது வண்டி...
தீப்பற்றிய வண்டியைப் பார்த்துக் காறிக் காறித் துப்பியிருக்கிறான். பின் கைக் கொட்டிச் சிரித்தானாம். யாரால்தான் இதைப் பொறுத்துக் கொள்ள முடியும்? காசு போட்டு வாங்கியவள் இதைக் கண்ணால் பார்த்துச் சும்மா இருப்பாளா? பிடித்து நன்றாகச் சாத்தி விட்டாள். வண்டி எரிந்த வேதனையில் அவள் நிதானமிழந்து விட்டாள். ஆனால் அவள் கணவர் சற்றுப் பொறுமையாக நடந்து கொண்டதுதான் சற்று ஆறுதல்.
தகவல் கேட்டவுடன் பதறி ஓடிப் போய்ப் பார்த்ததும் நான் அதிர்ந்து விட்டேன். இந்தச் சம்பவத்தைக் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை. “டேய் என்ன காரியம்டா செய்திருக்க?“ என்று ஓங்கி இரண்டு அடிகள் போட்டேன். அவன் சுருண்டு விழுந்து விட்டான். இல்லையென்றால் பரணிகா விட மாட்டாள் போலிருந்தது. அவள் மேலும் அடிக்கப் பாய்ந்தாள். அவள் கணவர் ஓடி வந்து தடுத்தார். அவர் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
“விடுங்க சார். அவன் குழந்தை. எதோ ஒரு வேகத்துல செய்திட்டான். வண்டிதானே வாங்கிக்கிடலாம். தாயில்லாப் பிள்ளையப் போட்டு அடிக்காதிங்க என்றார். ஆனால் பரணிகா விடுவதாய் இல்லை. அவள் பத்ரகாளியாய் மாறியிருந்தாள். ஒப்பாரி வைத்துக் கூப்பாடு போட்டாள். ஊரே கூடி விட்டது. வேறு வழியில்லை. நானாகவே முந்திக் கொண்டேன்.
“செஞ்சது தப்புதான் பரணி. சின்ன பையன் தெரியாம செய்திட்டான். மன்னிச்சிக்கிடும்மா. பிரச்சனைய பெருசாக்க வேண்டாம். நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத. நான் புதுவண்டி வாங்கித் தந்திடுறேன்“ என்றேன்.
அவள் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை. பேயுரு கொண்டு கத்தினாள்.
“இங்கப் பாருய்யா... நீ வாங்கித் தரலைன்னா யாரு விடுவா? புள்ளையாப் பெத்து வச்சிருக்க? பேயி... சண்டாளி... அது மூஞ்சையும் முகரையையும் பாரேன்“ என்றாள் பரணிகா.
நான் விக்கித்துப் போய் நின்றேன். இப்படிப் பேசுவாள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. புதுவண்டி வாங்கித் தருகிறேன் என்று சொன்ன பிறகும் கூட அவள் விடுவதாய் இல்லை. இப்படி மோசமாக நடந்து கொள்கிறாளே என்று மனம் துடித்தது. பெரும் வேதனையாக இருந்தது. பழகிய முகத்தைக் கூடப் பார்க்காமல் எடுத்தெறிந்து பேசினாள்.
அவள் கணவர் நெருங்கி வந்தார்.
“சார்... நீங்க போங்க. அப்புறம் பேசிக்கிடலாம்“ என்றார்.
“யோவ்... இங்கப் பாருய்யா. வாங்கித் தாரேன்னு ஊருக்கு முன்னால வாயில வடை சுட்டிட்டு அப்பனும் மவனும் எங்காவது கிளம்பிப் போயிடாதிங்க. இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள எனக்கு வண்டி வந்தாகணும் ஆமா“ என்றாள்.
அவளை மடக்கினார் கணவர்.
“சாயந்தரத்துக்குள்ள வண்டி ஏற்பாடு செய்திடுறன் சார்” என்று உறுதி கொடுத்த போது என்னையுமறியாமல் எனது குரல் உடைந்தது. பொதுவெளியென்பதால் மிகவும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன். வீட்டிற்கு வந்து விட்டோம். மனம் ஓரிடம் நின்று நிலைகொள்ளாமல் மின்கம்பியில் அடிப்பட்ட பறவையாய்த் துடித்தது. பரணிகாவின் வார்த்தைகள் நெருப்புக் கொப்புளங்களாய் உள்ளுக்குள் எரிந்தன.
எப்படியெல்லாம் பழகியவள். தவமணியிருந்த போது எப்படியெல்லாம் உறவு கொண்டாடினாள்...? அவள் இருந்திருந்தால் இப்படிப் பேசியிருப்பாளா...? அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை மருகியவள், வாய்யா போய்யா என்று பேச எப்படி மனம் வந்தது? செய்த தவற்றை ஒப்புக் கொண்டாகி விட்டது. பதிலியாக புது வண்டி வாங்கித் தருவதாக உறுதியும் கொடுத்தாகி விட்டது. என் உயிரைப் பணயம் வைத்தாவது மாலைக்குள் வாங்கித் தருவேன். அதில் தவறினால் நீ கேள். அதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்?
முகுந்தன் நல்ல நிலையில் இல்லை. தாயிழந்த அவன் மனம் பழம் பறி கொடுத்த வெற்றுக் காம்பாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. அவனை அடிப்பதால் என்ன பயன்? தாய், தங்கை நினைவுகள் அவனைப் படுத்துகின்றன. அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. வண்டி விபத்து நடந்து, அம்மாவும் தங்கையும் இறந்தார்கள் என்பதை அவனால் செரிக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் அந்த வண்டிதான் காரணமென்பதை மட்டுமே அவன் மனம் நம்பித் தொலைக்கிறது. அந்தப் பாதிப்பிலிருந்து முதலில் அவனை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு நல்ல உளவியல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவனோடு மனம் விட்டு ஆழமாக உரையாட வேண்டும். உண்மை என்னவென்பதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.
வண்டி பிரச்சனையை விட்டுவிட்டு என் மனம் முகுந்தனைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது செய்ய வேண்டியது இது தான். அவன் மனத் துக்கத்தை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தூர வீச வேண்டும். அவனுக்கான மனமகிழ் சூழலைக் கட்டமைக்க வேண்டும். அவனைப் பண்பட்ட நிலமாக மாற்ற வேண்டும். அதில் உள்ள களைகளை அகற்றி தூர எறிய வேண்டும். பிறகு, நல்ல விதைகளைத் தூவிப் பயிரிட வேண்டும். அதற்கு அறம் தெளித்து நல்லுரமிட வேண்டும். அதில் செழிக்கும் செடி கொடிகளை ரசிக்க அவனைப் பழக்க வேண்டும். விளையும் காய்கனிகளைப் புசிக்க பழக்க வேண்டும்.
பக்குவம் ஒரு நாள் வாழும் ஈசலில்லை. அஃது ஆலமரம். ஆழமாய் வேர் பிடிக்க வேண்டும். சுற்றிலும் விழுதிறக்க வேண்டும். அதற்குச் சில காலம் பிடிக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். அது வரை பொறுமை காப்பதே புத்திசாலித்தனம்.
பரணிகா அத்தனை நிகழ்வுகளையும் உடனிருந்து பார்த்தவள். தவமணி இழந்த சமயம் என் ரத்த உறவுகளை விட அதினமான வேதனையில் துடித்தவள். அவளுக்கே அப்படியெனில் தவமணி உதிரத்தில் உதித்தவன். அதுவும் பன்னிரண்டு வயது பாலகன். தாயிழந்த அதிர்ச்சியிலிருந்து அவனால் இன்னும் வெளிவர முடியவில்லை.
“நான் வாங்கித் தந்துவிடுகிறேன் பரணிகா. உன் வார்த்தைகளை இனியும் கேட்க எனக்குச் சக்தியில்லை. எப்பாடுபட்டேனும் இன்று மாலைக்குள் உனக்கு வண்டி வந்து விடும்”
மன உறுதியுடன் முகுந்தனைப் பார்த்தேன். அவன் இப்போது சற்று ஆறுதலடைந்திருந்தான். பிரச்சனையை மறந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் பார்த்து மகிந்து சிரித்துக் கொண்டிருந்தான். நான் தவமணியின் புகைப்படத்திற்கு முன்பு நின்றேன்.
என் கையில் அவள் அணிந்திருந்த சங்கிலியும் தாலியும் இருந்தன. அவள் நினைவாகப் பொக்கிசமாக் காத்து வந்தவை. பிள்ளையும் புருசனும் அவமானப்பட்டுத் துடிக்கையில், அவள் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாள். பொக்கிசத்தை விட மானம் மரியாதை முக்கியம். என் கண்கள் உருகி ஒழுகின. தீபம் ஏற்றி அவளுக்கு முன் வைத்தேன். மேலெழும் ஒளி துடித்து ஆடியது. அவள் தலையாட்டுவது புரிந்தது. நான் புறப்பட்டு விட்டேன்.
மாலை அதே போன்ற சிவப்பு நிற வண்டியைப் பரணிகா வீட்டின் முன் நிறுத்தினேன். “அய்.. அம்மா உன் புது வண்டி திரும்ப வந்திடுச்சி“ என்று துள்ளினாள் பரணிகா மகள் செளந்தர்யா. அவள் முகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பளீர் மின்னல். வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெளியில் வந்தாள் பரணிகா. பக்கத்தில் அவள் கணவர் வந்து “வாங்க சார்“ என்றார்.
அவருக்கு ஒரு புன்னகையை வலிந்து கொடுத்தேன்.
“ஏன் சார் அவ எதோ ஆத்திரத்துல பேசிட்டா. அதுக்காக இப்பவேப் போய் வாங்கிட்டு வரணுமா?“ என்றார்.
நான் எதுவும் பேச முடியவில்லை. சிரிப்பதைப் போல நடித்தேன். வண்டியைச் சுற்றி ஏற இறங்கப் பார்த்தாள் பரணிகா. ஒரு வார்த்தை பேசவில்லை. இத்தனைச் சீக்கிரம் வாங்கித் தருவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள். உடனே கிடைத்ததும் அவள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது அவள் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. வண்டியின் சாவியைப் பரணிகா கணவரிடம் ஒப்படைத்தேன்.
“வர்றேன் சார்“
“உள்ள வாங்க சார். டீ சாப்பிட்டுப் போலாம்“
எப்போதும் போல அழைத்தார்.
“பரவாயில்லை. வர்றேங்க“ என்று திரும்பிய போது சௌந்தர்யா ஓடி வந்து மாமா என்றாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் தூக்கிக் கொஞ்சி பழக்கியாயிற்று. தன்னைத் தூக்கச் சொல்லிக் கைகளை உயர்த்தி நின்றாள். என்னால் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியவில்லை. “ம்...தூக்குங்க“ என்றாள் மழலை மொழியில் கட்டளையாக. அதற்கு மேல் தட்ட முடியவில்லை. தூக்கிய போது என் கண்கள் தானாய்க் கலங்கின. அவள் என் கண்களின் மீது தன் பிஞ்சு கரங்களை இசைத்தாள். இதயத்திலிருந்து ஒரு முத்தமெடுத்துப் பரிசளித்தேன். குழந்தையும் தெய்வமும் ஒன்று. அந்த மனத்தில் கறைகளுக்கு வழியேது?
இரவு எட்டு மணி இருக்கும். முகுந்தனும் நானும் உணவருந்தினோம். மனம் லேசாகியிருந்தது. முகுந்தனுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது. அத்துடன் சிரமப்பட்டுத் தெலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அந்த இடத்திலேயே தூங்கிப் போய்விட்டான். நான் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
“சொல்லுங்க சார்“ என்றான்.
“வர்றீங்களா?“ கேட்டேன்.
“சரிங்க சார்“
“இரண்டு பசங்களை அழைச்சிட்டு வாங்க“
“சொன்னீங்களே சார்.“
“மறந்திடுவீங்கன்னு ஞாபகப்படுத்தினேன்“
“மறக்க மாட்டேன் சார். இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பன்“
பத்து நிமிடத்தில் வந்து நின்றான் சாகுல். அவனுடன் இரண்டு கல்லூரி மாணவர்கள். படித்துக் கொண்டே பகுதிநேரப் பணியாற்றுபவர்களாம். அரைமணி நேரத்தில் அத்தனை பொருட்களையும் வண்டியில் ஏற்றிவிட்டார்கள். தூக்கத்திலிருந்த முகுந்தன் எழுந்து திருதிருவென முழித்தான். கிளம்பிய போது வெளியில் நின்றிருந்த மஞ்சள் அரளி போக வேண்டாம் எனக் காற்றில் அசைந்தது. தரையில் சில மஞ்சள் கண்ணீர் துளிகள் உதிர்த்திருந்தன.
எல்லாவற்றையும் விட முகுந்தன் எனக்கு முக்கியம். அவன் இயல்பாக எல்லாவற்றையும் மறக்க வேண்டும். அவனை உயர்ந்த இலட்சிய மகனாக வளர்க்க வேண்டும். இங்கிருந்தால் அதற்குச் சாத்தியமில்லை. இந்த வேதனை மேலும் அவனை மனநோயாளி ஆக்கிவிடக்கூடாது. கொஞ்ச காலம் விட்டுப் பிடிப்போம். முகுந்தன் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வரட்டும். என்னைச் சமாதானப்படுத்த முயலாதீர்கள். என் வலி எனக்குத்தான் தெரியும். நான் போய் வருகிறேன்.