வீட்டின் அழைப்பு மணிக்கான மின் பட்டனை அழுத்தினார் பரமானந்தம். உள்ளே மெல்லிய இசைச் சத்தம் எழுந்து ஓய்ந்தது. சற்று இடைவெளி விட்டு, இரண்டாவது தடவையாக அழுத்தினார்... அதே இசை தன் வெளியிடலைக் குறைத்துக்கொள்ளும் முன்... கொஞ்சமாய்க் கதவு திறக்கப்பட்டது.
அறுபது, அறுபத்திரண்டு வயது மதிக்கத்தக்க பெண்மனி எட்டிப் பார்க்க, வந்திருப்பவர் இன்னாரென அனுமானிக்க முடிந்தாலும் இவர்தான் என்று சட்டென வரவேற்க முடியாது யோசித்திருக்க,
“என்னக்கா தெரியலயா...? நான்தான் பரமானந்தம்” தன் பெயரை ஞாபகப்படுத்தவும்தான்...
‘அதான் நெனச்சேன்யா... பாத்து ரொம்ப நாளாச்சா... வாயா உள்ள வாயா' கதவை மொத்தமும் திறந்து, உட்கார சோபா காட்டி, மின் சுற்றி இணைப்பு பட்டனை அழுத்திவிட்டு, தண்ணீர் கொடுத்தவாறே...
‘இருயா காபி கலந்துட்டு வாறென்... சாப்பாடும் பண்றேன்யா' என்று, சமையலறைக்குள் நகர்ந்தபோது,
‘செய்தலில் அக்கா இன்னும் அப்படியே இருக்கு' இப்படி அவர் நினைத்து, தன்னிலிருந்து மீனாக்காவுக்கு ரெண்டு, மூணு வயசு கூடுதலாக இருக்கும், நல்லா தெம்பாயிருப்பாங்களே... இப்ப உடல் தளர்ந்து தெரியறாங்களே... யோசனையில் உட்காந்திருக்கையில்
“வீட்ல நல்லா இருக்காங்களாயா..?” காபி ‘கப்' நீட்ட,
“கடவுள் புன்னியத்துல குடும்பமே சவுக்கியங்கா, உங்க மகன், மருமக பேரெனெல்லாம் எப்படி இருக்காங்க...?” என்று கேட்டுக் கப்பை வாங்கிக்கொள்ள, எதிர் ஒற்றை சோபாவில் அவள் அமர்ந்த போது சமையலறையை அடுத்துள்ள அறைப்பக்கமிருந்து ஓடி வந்த சிறுவன் ‘பாட்டீ...' என கால்களைக் கட்டி முகம் தேய்க்க,
“ராசா கெளம்பிட்டாரா... இவருதான்யா மைனரு வெளியில போறாங்க... ஒரு கொறையும் இல்லயா” பேரனைக் கண்ட, கொஞ்சிய சந்தோசத்தில் மீனாம்மாள் சொன்னது பரமானந்தத்துக்கு துளியும் கேட்கவில்லை, சிறுவனின் ‘பாட்டீ...'என்ற மழலைக் குரல் தான் அவரின் காதுகளை கனமாக்கியது.
‘என்னக்கா பாட்டீ...னு..,' கேள்வி கொண்டு ஏறிட, அதைப் புரிந்து ‘காப்பிய குடியா' என்பதாய் சாடையுணர்த்திய மீனாம்மாளின் மனசில் ஏதோவொரு ஏக்கம், அழுத்தம் இருப்பது உணரமுடிந்தது. சின்னதான மவுனம் இருவரையும் அமைதியாக்கி வைத்திருக்க,
மீனாம்மாளின் மகனும்,மருமகளும் வந்தனர்...
பரமானந்தத்தை, அவர் குடும்பத்தை பரஸ்ப்பரம் விசாரித்து ‘கிளம்பலாமா...'என்றதும் பையனை கையில் பிடித்து
“அம்மா, மதியம் சாப்பாடு செய்யவேணாம் நாங்க சாயந்திரம்தான் வருவம்...” அவ்வளவுதான் கிளம்பி விட்டனர்.
மறுபடியும் கேள்வியாகவே பார்த்தார்...
காலியான கப்பை எடுத்துப் போய் சிங் தொட்டியில் வைத்ததும் வந்து, தலை நிமிராது “வாய் நிறைய அப்பத்தானு கூப்பிடவேண்டிய பேரன் பாட்டினு ஓடிவரானேனு நெனக்கிற என்னய்யா..,” னு ஒரு பெருமூச்சை வெளியாக்கி சோபாவில் உக்கார்ந்து கொள்ளவும்.
‘ஆமாக்கா...பாட்டீனு உங்க பேரன் கூப்பிட்டது என்னமோபோல இருக்கு,' என்பதாக அவர்...
மீனாம்மாளே தொடர்ந்து பேசினாள்.
“பேரன் பேச ஆரம்பிச்சதும் அப்பத்தான்னு கூப்பிடு... அப்பத்தான்னு கூப்பிடுன்னு ஆசை ஆசையாக் கொஞ்சுவேன் அவனும் கொழஞ்சி கொழஞ்சி கூப்பிட்டான் மருமக என்ன நெனச்சாளோ, அவனுக்கு நல்லா பேச்சு வரவும் அப்படி கூப்பிடக்கூடாதுனு அதட்டி அதட்டிப் பாட்டினுதான் கூப்பிடுனும்னு சொல்லிக் கொடுத்தாய்யா... ஏம்மா நம்மல்ல மகன் புள்ள அப்பத்தானு கூப்பிடுறது வழக்கம்னேன். நான் சொல்றத அவ காதுலயே வாங்கலய்யா, பச்ச மண்ணுக்கு என்ன தெரியும்... நாளடைவுல பாட்டினே கூப்பிடப் பழகிட்டது” பேரன் ‘அப்பத்தா'னு அழைக்கவில்லையே என்ற ஏக்கம் ததும்பிய ஆதங்கம் அந்த வார்த்தைகளில் பதிந்திருந்ததை உணர்ந்தவர்
“உங்க பையன் ஒன்னும் சொல்லையாக்கா..?” கேட்டார்.
“அது பெரிய கொடுமய்யா, எங்கடா மகன் ஆத்தாவ அப்பத்தானு கூப்பிட்டுவானோனு, அதனால பொன்டாட்டிட்ட தேவையிலாம பிரச்சனையச் சந்திக்கனுமேனு பாட்டிட்ட போ பாட்டிக்கு டாட்டா சொல்லு பாட்டிட்டப்போய் பால் பாட்டில் கேளு...னு மூச்சிக்கு மூச்சி ‘பாட்டிய' ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்தான், ஏப்பா பரமா... அப்பத்தானா அசிங்கமான வார்த்தையா..?” என்று, வெகுளியாக, வெள்ளந்தியாகவும் கேட்ட மீனாம்மாளை பரிதாபமாகப் பார்த்தார் பரமானந்தம்.
கைப்பிள்ளைக்காரியா கணவனை விபத்தில் இழந்து, சொந்தங்கள் ஆதரவற்று வாழ்க்கையில் நிறைய சிரமப்பட்டாள். ஒரே மகன் அவனுக்கென்று எதுவுமே இல்லை என்ற வேகத்தில் அவனுக்கு எல்லாவற்றிலும் நல்லவைகள் கூறியே வளர்த்தாள், நன்றாக படிக்க வைத்தாள், வேலையும் வாங்கிக்கொடுத்து, கல்யாணமும் செய்து வைத்தாள்.
அக்கம் பக்கத்து சனங்கள் ‘மனுஷினா மீனாதாம்பா...' என வாயாரிக்கொள்வார்கள்.
சின்ன வாழ்க்கையையும் சிறப்புடன் காலத்தோடு நகர்த்தலாம்... மீனாம்மாளைக் கவனித்தே பரமானந்தமும் குடும்பத்தில் இணக்கம் காட்டினார். பணிமுடிந்து மகள் வீட்டோடு மதுரைக்குச் சென்ற போதும், மனதோரத்தில் மீனாம்மாளின் நினைவு இருந்து, சமயம் கிடைக்கையில் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்கனும்...
ஞாபகத்தில் வைத்திருப்பார்.
நீண்டநாள் எண்ணம் நிறைவேறிது போல்,விருதுநகரில் நண்பர் வீட்டு திருமணவிழாவிற்கு வந்தவர் அப்படியே இங்கே வந்தார்
.
வாழ்க்கையில் பெருசா எதையுமே எதிர்பார்க்காத மீனாக்கா தன் ரத்ததொடர்பில் வந்த உயிர் சொல்லில் ‘அப்பத்தா' அழைப்பு இல்லையென்பதில் வருத்தமுட்டி, அதை வெளியிலும் காட்ட முடியாமலும் கனத்துப்போய் இருக்கும் இந்த மனிஷிக்கு என்ன ஆறுதல் சொன்னா மனசு லேசாகும்...
உறவு கொண்ட துடிப்பு, உணர்வு சம்மந்தப்பட்டது, அவ்வளவு இலகுவா அக்காவின் ஏக்கத்தை வேறு பேச்சு கலப்பில் மாற்றிவிட முடியும் என்று அவர் நம்பவில்லை. அமைதியாகவே இருந்தார்.
“தோச ஊத்துறேன் சாப்பிடுயா”
“இல்லக்கா வரும்போதுதான் சாப்பிட்டேன். மத்தபடி ஒண்ணும் பிரச்சனை இல்லைலக்கா..?”கொஞ்சம் தயங்கி, நெஞ்சுக்குழிக்குள் கட்டியாகக் கிடப்பதை வெளியேற்றினால் தேவலைபோல் தோன்ற,
“பையனுக்கு கல்யாணம் முடிச்சா எல்லா குடும்பத்தில் வரும் கசப்புகள்தான் இங்கேயும் வந்தது, அதுகூட நாளடைவில் பக்குவமாயிருச்சி ஆனா...பேரன் பாட்டினு கூப்பிடுறத்தான் ஏத்துக்கவே முடியலேயா, அவன் அப்படி கூப்பிடும்போதெல்லாம் மூணாம் மனுஷியாத்தான் என்னை நான் உணர்றேன், அப்பத்தானு வாய் நெறஞ்சி கூப்பிட்டா நம்ம மகன்வழி புள்ளனு அப்படியொரு ஒட்டுதல் இருக்கும்யா...” கடைசியாக அந்த வார்த்தையை ஏதோ பரவசமாகவே வெளிப்படுத்தி, முகம் மலர்ந்த மீனாக்கா, பேரன் அப்பத்தா... அப்பத்தா என்று அழைக்க வேண்டுமென்ற தனதின் உள்ளத்து ஆர்வத்தைக் கண்ணாடியாகக் காட்டிக் கொண்டிருக்க, சட்டென கதவு திறபட்டுது.
மருமகள் வீட்டுக்குள், வந்தாள்... பின்னாலேயே மகன் தன் மகனுடன்.
பரமானந்தத்திற்கு சங்கடமாயிருந்தது. இவ்வளவு நேரம் பேசிய பேச்சுக்களை கேட்டுருந்துவிட்டு, வந்திருப்பார்களோ...?
“என்னப்பா திரும்பிட்டீங்க..?” வாய் கேட்டதே தவிர, கண்களில் மிரட்சி நெஞ்சுக்குள் படபடப்புடன், மீனாம்மாள்.
“இல்ல...” ஒற்றை வார்த்தை உதிர்வு... அவர்கள் அறைக்குள் நுழைந்து, கதவு சாத்திக்கொள்ள,
“சரிக்கா நான்...” கிளம்பிவிட்டார், பரமானந்தம்.
அடுத்து வந்த ஒவ்வொரு நொடிப் பொழுதும் இறுக்கம் கொண்டே நகர்ந்தது உறக்கமின்றி இமைகள் மூடியிருக்க, எப்போது அசந்தது என்றே தெரியாது, கதவு தட்டும் சத்தம் கேட்டு அவசர கதியில் எழுந்தவளின் கண்களில் மணி எட்டு என சுவர் கடிகாரம் காட்ட, ‘ச்சே இம்புட்டு பொழுது ஒறங்கிட்டேனே...' ஓர்வித பதட்டத்துடன் போய் கதவு திறந்ததுதான் தாமதம்..?
‘அப்பத்தா... அப்பத்தா... அப்பத்தா...' இப்படியே மாறி,மாறி பேரன் அழைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
மீனாம்மாளுக்கு இருப்புக்கொள்ள வில்லை, இனம் புரியாதொரு தெம்பு அவளை நெம்பிவிட்டாற் போலே... வேகமாய்போய் வாசில் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, சேலை முந்தியால் துடைத்தவாறு வந்து பேரனைத் தூக்கி, ‘போதும் ராசா போதும்...' என்றபடியே தலை கோதினாள், உச்சி முகர்ந்தாள் முத்தமிட்டாள்... மனசுக்குள் அப்படியொரு ஆனந்தம், சந்தோசத்தை அந்த நிமிடத்தில் அனுபவித்தாள், நெகிழ்து, இதுவே போதுமென்பதாகவும் உணர்ச்சி கொண்டு பொங்கினாள்.
“ராத்திரி ரொம்ப நேரம் தூங்காம இருந்து உங்க பேரனுக்கு இத சொல்லிக் கொடுத்தோம் போதுமாம்மா...” அங்கே வந்த மகனும், மருமகளும்.
“போதும்... வேற என்ன எனக்கு வேணும்... இப்பவே செத்தாமும் பரவால” குமுறியேவிட்டாள்.
“என்னமா பேசுறீக உங்களுக்குள்ள இப்படியொரு தாக்கம் கனமாயிருக்கும்னு நாங்க நெனச்சுப் பாக்காம இருந்தது பெரிய தப்புதான் மன்னிச்சுருங்கம்மா...” என்றாள் மருமகள்.
“ஏமா அந்த வார்த்தலாம் சொல்ற... என்னோட அக்காளுக மகன் வயித்து புள்ளைக அவங்கள கட்டிக்கொண்டு ரொம்ப ஒட்டுதலா அப்பத்தானு கூப்பிடும் போதெல்லாம் நம்மளையும் இப்படிதான் பேரனோ பேத்தியோ கூப்பிடும்னு தோனிக்கிட்டே இருக்கும், அந்த நெனப்புக்கு மாறா நடக்குதேனுதான் வருத்தமா இருந்துச்சுமா... அது நாளாக நாளாக...” மீனாம்மாளுக்கு வார்தை வரவில்லை சந்தோசம் அவளை ஆட்கொண்டுவிட்டது.
“சரிமா இனிமே உங்க பேரன் ‘அப்பத்தா' னே கூப்பிடுவான் போய் டீயப்போடுங்க”, இது மகன்.
அப்போது, தனது பிடியிலிருந்து திமிறி பேரன் இறங்கிவிட்டது போலவே மீனாம்மாளை சுற்றியிருந்த இறுக்கம், கனம் காணாமல் போயிருந்தது. காற்றில் மிதப்பது போல் பூரிப்புடன், தேனீர் கலக்க சமையலறையை நோக்கிச் சென்றாள்.