சற்றும் எதிர்பாராத வெற்றியைக் கொடுத்திருக்கிறது நான் எழுதிய சிறுகதை ‘தாராளம்’. தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான ராம்மோகன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது எனது சிறுகதை. அதுவும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுடன்... இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு ஆனந்தம் இருக்க முடியுமா...? இது வெறும் குருட்டு அதிர்ஷ்டமா...? இல்லை உண்மையாகவே என் திறமைக்குக் கிடைத்த வெகுமதியா...? என்று சற்றுக் குழம்புகிறேன். ஆதலால், அந்தக் கதையை ஒரு வரியில் உங்களிடமே கூறி விடுகிறேன். நீங்களே முடிவு செய்யுங்களேன்...
‘தாராளமாகப் பணத்தைச் செலவழித்து வீணடித்துக் கொண்டிருந்த கதாநாயகன், எப்படி, யாரால் திருத்தப்படுகிறான், அத்துடன் கடைசியில், அதே தாராளக் குணத்துடன் எல்லோருக்கும் உதவவும் செய்கிறான்’ என்பதே கதை.
இந்தக் கதை வெற்றியடைந்த காரணத்தினால், இதில் வரும் கதாநாயகனைப் போல நானும் இன்று முதல் தாராளமாக நடந்துக் கொள்ளப்போகிறேன். இந்தப் பரிசை அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி கூற வேண்டும். ஆதலால், நானும் என் மனைவியும் கோயிலுக்கு செல்லவிருக்கிறோம். உண்டியலிலும் அர்ச்சகர் தட்டிலும் காணிக்கை இடுவதற்காகச் சில நோட்டுகளை அவசரமாக எடுக்கும் போது, ஒரு பத்து ரூபாய் நோட்டு ஒன்று ஓரத்தில் கால் இன்ச் கிழிந்து விட்டது.
“அதை ஒட்டி விடலாமே...” என்றாள் மனிஷா.
அவள் சொன்னதைக் கவனிக்காதது போல் அதை எனது பர்ஸ்சுக்குள் திணித்தேன்.
நான் செய்ததை மனிஷா பார்த்துவிட்டாள்.
கோயில் ஒன்றும் அத்தனை தூரம் இல்லை எங்கள் வீட்டிலிருந்து, அடுத்த இரண்டாவது வீதியில் இருப்பதால் நடந்தே சென்று விட்டோம்.
கோயில் வாசலை அடைந்ததும், அங்கு பூ விற்கும் பெண்ணிடம் நூறு ரூபாய்க்கு நான்கு முழம் மல்லிகைப் பூ வாங்கினேன். குறிப்பாக மனிஷா என்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே...
கோயிலில் நுழைந்தவுடன் முதல் வேலையாக உண்டியலைத் தேடி அதில் புத்தம் புதிய நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைக் காணிக்கையாக்கினேன். இதை மனிஷா பார்த்தாளா என்றால், இல்லை. அவளது கவனம் முழுவதும் கம்பீரமாக நின்று தரிசனம் அளிக்கும் திருமாலிடமே இருந்தது. பின்பு சன்னதியை அடைந்து கண்களை மூடி மனதார எனது வெற்றிக்காகப் பெருமாளிடம் நன்றி கூறினேன். தீபாராதனை முடிந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தட்டுடன் அர்ச்சகர் வந்து கொண்டிருந்தார். அவரது தட்டில் ஐம்பது ரூபாய் நோட்டைப் புன்னகையுடன் இட்டேன். நல்ல வேளை... இதையாவது மனிஷா பார்த்தாளே... பெருமிதத்துடன் அவளைப் பார்த்தேன். ஆனால் அவள் கண்களோ வேறு ஒரு செய்தியை சொன்னது. அது எனக்கு அப்போது புரியவில்லை.
நல்ல தரிசனம் கிடைத்த நிம்மதியுடன் வெளியேறினோம். அப்போது மனிஷா, “எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது. வீடு வரைக்கும் நடந்து வர முடியுமான்னு தெரியல” என்றாள் தயங்கியபடி.
“அட, அவ்வளவுதானே..! இங்க, பக்கத்திலேயே ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு. ஆட்டோவிலேயே வீட்டுக்கு போயிடலாம்”
பதிலுக்கு அவள் தலையசைத்ததாள்.
ஆட்டோ நிறுத்தத்தில் முதலாவதாக இருந்த ஆட்டோக்காரனிடம், “ஏம்பா, ஆட்டோ வருமா? இங்கதான் பக்கத்துல ரெண்டு வீதி தள்ளி...”
“நூறு ரூவான்னா வரேன் சார்”
“என்னது! இங்கிருக்கிற வீதிக்கு நூறா?” என்று சற்றே முகம் சுளித்தேன்.
“சரி சார். எண்பது ரூபா குடுங்க போதும்”
இதற்கு மேல் குறைக்க மாட்டான் போலும். “சரி சரி” என்றபடி நானும் மனிஷாவும் ஆட்டோவில் ஏறினோம்.
சகஜமாக, “ஏம்பா, ஆட்டோ ஸ்டாண்ட்ல எல்லா ஆட்டோவும் இங்கேயே நிக்குதே, சவாரி சரியா வர்றதில்லையா?” என்று கேட்டேன்.
“எங்க சார்! இந்த கால் டாக்ஸினு ஒண்ணு வந்ததிலிருந்து எங்க பொழப்பு ரொம்ப மங்கிடிச்சு. அதனாலதான் சார், உங்ககிட்ட நூறு ரூவா கேட்டேன். சரி... முதல் சவாரி வேறயா, அதான் இருபது ரூபாய் குறைச்சிக்கிட்டேன்”
“ம்... கஷ்டம்தான்...” என்றேன் போலியான ஆதங்கத்துடன்.
வீட்டை அடைந்ததும், தவறுதலாகக் காலையில் கிழித்த பத்து ரூபாய் நோட்டை, ஒரு ஐம்பது, ஒரு இருபது ரூபாய் நோட்டுகளுடன் மடித்து உள்ளே வைத்து ஆட்டோகாரனிடம் நீட்டினேன். அவன் பெறுவதற்கும், அவனுக்கு ஒரு போன் கால் வருவதற்கும் சரியாக இருந்தது. போனில் பேசும்போது பணத்தைச் சரியாக பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும், மனிஷாவைக் கூட்டிக்கொண்டு விடுவிடு என்று நடக்க முற்பட்டேன்.
வாசலில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் “எக்ஸ்க்யூஸ் மீ சார், நீங்கதான் மிஸ்டர் சம்பத்தா?” என்று வினவினான்.
“ஆமாம். நீங்க?”
“நான் ஒரு குறும்பட இயக்குநர். எம்பேரு அபிஷேக். எழுத்தாளர் ராம்மோகன் நடத்துன சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தாராளம்ங்கற கதை உங்க கதைதானே?”
“ஆமாம். அத நீங்க படிச்சீங்களா?” சிறிது ஆர்வத்துடன் கேட்டேன்.
“படிச்சிட்டுத்தான சார் உங்களைப் பார்க்க வந்திருக்கேன். ஃபஸ்ட் க்ளாஸ் சார். பத்திரிகையில உங்க முகவரியும் கொடுத்ததினால வசதியாப் போயிடுச்சு. நல்லநல்லக் கதைகளை குறும்படமா எடுக்கணுங்கறதுதான் என்னுடைய இலட்சியமே... இதுவரைக்கும் அஞ்சு குறும்படங்கள் இயக்கியிருக்கேன். இப்போ ஆறாவதா உங்க கதையை...”
“தாராளமா எடுங்க... மேற்கொண்டு உள்ள போய்ப் பேசலாமே...” என் மனதுக்குள் கொள்ளை மகிழ்ச்சி.
நான் கேட்டை திறந்து கொண்டிருக்கும்போது, அபிஷேக், “உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது சார், உங்க கதையில வர்ற அந்தத் தாராள கதாநாயகனும் நீங்களும் ஒண்ணுதான்னு” என்றான்.
நான் சற்றே வெட்கத்துடன் சிரித்தபோது, திடீரென்று அந்தக் குரல் கணீரென்று கேட்டது.
“என்ன பெரிய தாராளமானவரு...? சரியாச் சவாரியே கிடைக்காத ஆட்டோகாரன் கிட்டப் போயி இருபது ரூபாய்க்குப் பேரம் பேசினாரு. அதிலேயும் கிழிஞ்ச பத்து ரூபாய் நோட்டை உள்ள மடிச்சு வச்சுக்கொடுத்தாருங்க! என்ன தாராள குணமோ...” என்றபடி, அந்த ஆட்டோக்காரன் நான் தந்த பத்து ரூபாய் நோட்டை என்னிடம் மாற்றுவதற்காக கோபத்துடன் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான்.
“நீ எழுதின கதையை நீயே இன்னொரு தடவை படித்துப்பார்” என்று மனிஷாவின் கண்கள் சொன்ன செய்தி இப்போது புரிந்தது.