“டேய் செல்லம்..! ரெண்டே மாசத்துல இவ்வளவு அழகா வளர்ந்திருக்க... பார்த்தியா…? நீ ரொம்ப நல்ல பையன்டா” என்று பால்கனி தோட்டத்தில் இருக்கும் ரோஜாச் செடியை பாராட்டிக் கொண்டிருந்தாள் அனுஷா. “அட என் தங்கமே! நீயும் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டியா? ” என்று கற்றாழைச் செடியை வியப்புடன் மெச்சினாள்.
“ஆரம்பிச்சுட்டியா உன் வழக்கமான வேலைய...” நக்கலாகக் கேட்டுக்கொண்டே வந்தான் அசோக்.
“கிண்டல் பண்ணாதீங்க. இவங்கெல்லாம் நம்ம குழந்தைங்க மாதிரி. நல்ல இனிமையான வார்த்தைகளைச் செடிகள் கிட்ட பேசப் பேச அதுங்க நல்ல வளருமாம்”
“அடேங்கப்பா! இப்படிப்பட்ட விஷயத்தை எங்கிருந்து கத்துக்கிற...? யூ- டூப்ல இருந்தா...?” என்று கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தான்.
“கேலி பண்ணதெல்லாம் போதும். நேத்து நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை. நாளைக்கு எங்க ஊருக்கு வர்றீங்களா இல்லையா? அங்க ஒரு வாரமாத் திருவிழா ரொம்ப விமர்சையா நடந்துக்கிட்டு இருக்கு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. வந்தா என்னவாம்...? அதுவும் காலைல போனா இராத்திரி வந்திடலாம்ங்க...”
“ஐயோ அனுஷா. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு நாள் லீவு. அதுலயும் அங்க வா... இங்க வா... ன்னு கூப்பிட்டு ஏன் டார்ச்சர் பண்ற?” என்று அலுத்துக் கொண்டான்.
“அப்ப நீங்க நாளைக்கு வரல?”
“ஆமாம்”
“சரி, அப்போ ஒரு வேலை பண்ணுங்க. மறக்காம நாளைக்குச் சாயந்திரம் செடிகள் எல்லாத்துக்கும் தண்ணி விட்டுடுங்க”
“அதெல்லாம் ஊத்திடறேன். எப்படியோ உங்க ஊர்த் திருவிழாவிலிருந்து தப்புச்சா அதுவேப் போதும்” என்றான் உற்சாகமாக.
அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் அனுஷா.
மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக அனுஷா செடிகளுக்கு ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தியபடி நீர் வார்த்தாள். பின்பு, எட்டு மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டாள். சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பதில் கெட்டிக்காரி. டாக்ஸி வருவதற்கும் அவள் தயாராகி வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.
புறப்படும் முன் அனுஷா, ”என்னங்க... மறக்காமச் செடிகளுக்கு...”
“...சாயந்தரம் தண்ணி ஊத்தணும், அவ்வளவுதானே...? நீ கெளம்புமா” என்று புன்னகையுடன் அவளை வழியனுப்பி வைத்தான் அசோக்.
அனுஷா சென்ற சிறிது நேரத்தில் அசோக்கின் நண்பன் சுரேஷ் வீட்டிற்கு வந்தான்.
“குடி வந்து ரெண்டு மாசத்துலேயே வீட்டை ரொம்ப அழகா மாத்திட்டடா”, என்று வியந்தான் சுரேஷ்.
“இதெல்லாம் அனுஷாவுடைய கைங்கரியம்தான். நான் எதுவும் பண்றதில்ல”, என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கேன். வீட்டைச் சுத்திக் காமிக்க மாட்டியா?” என்று உரிமையாகக் கேட்ட சுரேஷுக்கு, “அதுக்கென்ன! தாராளமாக் காமிக்கிறேன். வா என்கூட...” என்றபடி எழுந்தான் அசோக்.
வீடெல்லாம் சுற்றி முடித்து, கடைசியில் பால்கனியை அடைந்ததும், அங்கிருக்கும் சிறு தோட்டத்தைப் பார்த்து, “செடி வளர்ப்பது நல்ல விஷயம்தாண்டா... ஆனால் நிறைய பூச்சிகள் வீட்டுக்குள்ளே வருமே... !” சந்தேகத்துடன் கேட்டான் சுரேஷ்.
“அப்படியா? இதுவரைக்கும் எதுவும் வந்தது இல்லையே!”
“சரி விடு. அதுகூட பரவாயில்ல. ஆனா இந்தக் கத்தாழச் செடிய ஏன் வச்சிருக்கீங்க?”
“அந்தச் செடிக்கு என்னடா? அது ஏதோ ஒரு மூலிகைச் செடியாமே! அதைச் சாப்பிட்டாலும் நல்லது தான்; கை, கால், முகத்தில் தடவினாலும் நல்லது தான்...”
“யாருடா சொன்னது இதெல்லாம்...?”
“வேற யாரு, என் மனைவி அனுஷாதான்”
“எல்லாம் சரிடா... ஆனா இந்தக் கத்தாழச் செடியைப் பாரு... எவ்ளோ முள்ளு இருக்குன்னு... எப்பவாவது அவசரமாப் பால்கனில நடக்கும்போது, இந்த முட்கள் கிழிச்சுக் காயம் பண்ணினா நமக்குத்தானடா தேவையில்லாத பிரச்சனை. அதுமட்டுமில்லாம, உங்களுக்கும் கல்யாணம் ஆகி மூணு மாசம்தான் ஆகுது. நாளைப் பின்ன குழந்தை பிறந்ததுன்னா இந்தப் பக்கம் கூட்டிட்டு வர்றதே ஆபத்தேடா”
“அட, ஆமால்ல! இத நான் யோசிக்கவே இல்லடா”
“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில வீட்டிலிருந்து இந்தச் செடியை எடுத்துடுடா. அது மட்டுமா...? முள்ளுங்கறதே எதிர்மறையான விஷயத்தை குறிக்கக் கூடியதுதான... இதெல்லாம் காட்டுல மேட்டுல இருக்க வேண்டிய செடிகள். அதப் போயி எதுக்கு வீட்டில வச்சுக்கிட்டு...?”
“நீ சொல்றதும் சரிதான். இத எடுத்தேயாகனும். இன்னிக்கி ராத்திரி அனுஷா வந்துருவா. நிச்சயமா இத பத்தி அவகிட்டப் பேசுறேன்.” இத்துடன் கற்றாழையைப் பற்றின உரையாடல் நிறைவடைந்தது.
சிறிது நேரம் இருந்துவிட்டு சுரேஷ் கிளம்பிச் சென்றான்.
இரவு ஏழு மணிக்கு அனுஷா வீட்டையடைந்தாள். வந்தவுடன், “ஏங்க, சொன்ன மாதிரி செடிகளுக்குத் தண்ணி ஊத்துணீங்களா?”
“அய்யோ என்ன மன்னிச்சிடு அனுஷா. நான் சுத்தமா மறந்தேப் போயிட்டேன். என் ஃப்ரெண்ட் சுரேஷ் வந்திருந்தான். அவன்கிட்டக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். அப்புறம் படம் பாத்துட்டு, சாப்பிட்டு தூங்கிட்டேனா... சுத்தமா ஞாபகமில்லை..!”, என்று அசடு வழியச் சிரித்தான்.
“சரிதான், உங்ககிட்ட ஒரு வேலையக் கூட உருப்படியா எதிர்பார்க்க முடியாது போல இருக்கே”, சற்றுக் கோபத்துடன் கூறிவிட்டுப் பால்கனியை நோக்கி விரைந்தாள் அனுஷா.
அங்கிருந்த கற்றாழைச் செடியின் நிலைமையைப் பார்த்தவளுக்கு உலகமே இருண்டு போனது. காரணம், கற்றாழைச் செடியின் கிளைகள் வாடி வதங்கிப் போயிருந்தன. பச்சைப் பசேலென்று இருக்கும் அதன் உடல் கருகினாற்போல் தோற்றமளித்தது. திடீரென்று உயிர்பிரிந்த செடியை அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கோபப்படாத அனுஷா... . நானே வந்து தண்ணி ஊத்துறேன்”, என்று பால்கனிக்கு வந்தவன், சோகமான அனுஷாவைப் பார்த்துக் கவலையடைந்தான்.
சற்று சுதாரித்து, “அட, நானே உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன், இந்த கத்தாழச் செடி நமக்கு வேண்டாமுன்னு... ஏன்னா இதுல முள் நிறைய இருக்கு பாரு... அவசரமா போகும்போது குத்திடுச்சுன்னா...? அதான் இந்த செடிய எடுத்தறலாம்னு காலைல சுரேஷும் நானும்...”
“என்ன சொன்னீங்க? இந்தச் செடி பக்கத்தில நின்னுட்டு ‘இத எடுக்கப் போறேன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்களா...? அடக்கடவுளே! அதனாலதான் என் குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கு”, என்றவளின் குரல் தழுத்தழுத்தது.
“நீ சொல்றது எனக்குப் புரியல. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்...”
“கடுமையான வார்த்தைகளாலப் பேசினாலோ, திட்டினாலோ மனுஷங்களே மனமுடைஞ்சு போறப்ப, இந்த மாதிரி ஓரறிவு செடிகளெல்லாம் எம்மாத்திரம்? எவ்வளவு சின்ன செடியா இருந்தாலும் சரி, பெரிய மரமா இருந்தாலும் சரி, மனிதர்களுடைய சுடுசொல் தாங்காத மென்மையான உயிரினங்கள் இவை... அதனாலதான் ‘தனக்கு இருப்பிடம் கொடுத்தவரேத் தன்னை அழிக்கறதாச் சொன்னதைக் கேட்டு இப்படிக் கருகிப் போயிடுச்சு”, என்று சொல்லி முடிக்கும் முன்பே அனுஷாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
தனது கடுஞ்சொல்லால் ஒரு உயிரைக் கொலை செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் நின்ற அசோக்கின் கண்களிலிருந்து வாழ்நாளில் முதன்முறையாக செடிகளுக்காகக் கண்ணீர் துளிர்த்தது.