பெருமாள் கோவில் வாசலில் ஒரே கூட்டம்.
கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தால் வாசலை ஒட்டிய இடத்தில் இருந்த உடல். அது யாருடையது என்ற ஆவலில் இன்னும் சற்று எம்பிப் பார்த்தால் முகம் தெரிகிறது.
அது கோயில் ஆழ்வானின் உடல் தான்.
கூட்டத்தில் பரபரப்பு... சீனிவாச பட்டர் வந்திருந்தார்.
'அட... நம்ம கோயில் ஆழ்வானாச்சே... என்ன ஆச்சு அவனுக்கு... நேத்துக் கூட நல்லா இருந்தானே...'
அதற்குள் ஊர் வைத்தியர் வர, நாடி பிடித்துப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கியபடி... 'உசிரு போயிருச்சி... மாரடைப்பா இருக்கலாம்...' என்றார்.
'அடடா... இப்ப என்ன பண்றது... கோயில் வாசல்லே ரொம்ப நாழி பொணங் கிடந்தா நல்லால்லியே...' என்றபடி முணுமுணுத்தார் ஒருவர்.
'பஞ்சாயத்திலேச் சொல்லி அனாதைப் பிணத்தை அடக்கம் பண்றவா கிட்டேச் சொன்னா எல்லாக் காரியமும் முடிஞ்சிடும்' சொன்னது வரதாச்சாரி.
நேற்றுவரை எடுத்ததுக்கெல்லாம் கோயில் ஆழ்வானை ஏவி ஏவி வேலை வாங்கியாச்சி... மூச்சுக்கு முந்நூறு தடவை 'டேய் நீ நம்மாத்து ஆளுடா... உனக்கு ஏதாச்சிம்னா விடுவோமா...' என்று சொல்லியேத் தலயிலே மொளகா அரச்சாச்சி....இன்னைக்கி அனாதைப் பிணமாப் போயிட்டானோ...
சீனிவாச பட்டருக்கு உள்ளுக்குள் கொதித்தது.
'யோவ் வரது... என்ன பேச்சுப் பேசறீர்... நேத்து வரைக்கும் ஒண்ணுலே ஒண்ணா இந்த அக்ரஹாரத்து ஆளுகளோட ஆளா ஒவ்வோர் ஆத்துக்கும் ஓடியாடி வேலை செஞ்சானே... எதுக்கெடுத்தாலும் ஆழ்வானக் கூப்பிடு... ஆழ்வானக் கூப்பிடுன்னு வேல வாங்கினேளே... இன்னைக்கி அவன் அனாதப் பொணமாப் போயிட்டானா...'
சீனிவாச பட்டர் கத்த, அக்ரஹாரம் ஸ்தம்பித்தது.
'அதுக்காக மொறயா அவனுக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணணுங்கிறீரோ...'
கூட்டத்தில் குரல் கேட்க, குரல் வந்த திசையை சீனிவாச பட்டர் நோக்கினார்.
'ஏன்... பண்ணினா... என்ன குத்தம்...?'
பட்டரின் கேள்விக்கு முணுமுணுப்புச் சத்தந்தான் கேட்டது.
'அவன் எந்த ஜாதியோ... என்ன குலமோ... யாருக்குத் தெரியும்... ஆரம்பத்திலேர்ந்தே கோவில்லே அவனச் சேக்கக் கூடாதுன்னு சொல்லிட்டிருந்தேன்... யாரு எம் பேச்சைக் கேட்டா...'
வரதாச்சாரி சொல்லிக் கொண்டேப் போக சீனிவாச பட்டருக்கு அந்த நாள் நினைவில் வந்தது.
பெருமாளுக்கு நைவேத்தியம் காட்டிவிட்டுப் பூசை முடிந்ததும் பிரசாதத்தை விநியோகிக்கும் போது, அழுக்கு நிறைந்த கரமொன்று நீண்டது. பிரசாதம் வழங்கும் போது இதையெல்லாம் கவனிக்காமல் தான் வழங்குவார்.
ஆனால், இன்று இங்கே நீண்டிருந்த கை ஊருக்குப் புதிய கையாகத் தெரிந்தது.
கைக்கு உரிய முகத்தை உற்று நோக்க, புதுமுகம் என்று உறுதி செய்து கொண்டார்.
'ஏய்... கைய அலம்பிண்டு சுத்தமா வா... அப்பத்தான் பிரசாதம்...' என்று சொன்னவுடன் ஓடிப்போய் தெருக்குழாயில் கை காலை அலம்பிண்டு முகத்தைத் துடைச்சிண்டு வந்தான். கையை நீட்டினான் அப்புதியவன்.
'ஊருக்குப் புதுசா..." என்றபடி சீனிவாசபட்டர் பிரசாதத்தை நீட்ட, அதை வாங்கி அவசரஅவசரமாக அள்ளி விழுங்கினான்.
பிரசாதம் சாப்பிட்டதும் மீண்டும் கையை அலம்பிக் கொண்டு வந்தான்.
பிரசாதம் கோயிலில் சிந்தியிருப்பதைக் கண்டு, கையில் உள்ள துணியால் அதை நன்றாகப் பெருக்கிச் சுத்தப்படுத்தினான்.
அங்கே உள்ள விளக்குமாறை எடுத்துக் கோவில் முழுவதும் பெருக்கி, குப்பையை அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டியில் போட்டான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசபட்டரைப் பார்த்துச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு சீனிவாசபட்டரை என்னவோ செய்தது.
'உன் பேரு என்ன... நீ எந்த ஊரு...' என்று கேட்க ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி நின்றிருந்தான்.
கோவில் கதவைச் சாத்திவிட்டு, வீட்டுக்குத் திரும்பும் போது, அவனைப் பார்த்தவர் கூட வருமாறு கையால் சைகை செய்ய, ஒரு நாய்க்குட்டி போல அவரைப் பின் தொடர்ந்தான்.
வீட்டுத்திண்ணையில் அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
தாம் சாப்பிடும் முன்பு அவனுக்கு ஒரு தட்டுச் சாதமும் குழம்பும் ஊற்றிக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
குடிக்கத் தண்ணீர் வைத்தார்... சாப்பிட்டு முடிந்ததும் தட்டை எடுத்து உள்ளேச் சென்றார்.
திரும்ப வந்து பார்க்கத் திண்ணையில் தூங்கிவிட்டிருந்தான்.
இப்படித்தான் அவன் வருகை அந்த ஊரில் நிகழ்ந்தது.
அதன்பின் அவன் கோவிலிலேயேப் பழியாய்க் கிடந்தான்.
காலை எழுந்ததும் கோவில் முழுதும் தண்ணீர் கொண்டு அலம்பி சுத்தம் செய்வான். கோயில் முழுதும் தூசி தட்டி நூலாம்படை எடுத்து ஒரு இண்டுஇடுக்கு விடாமல் சுத்தம் செய்ய, ஒரு வாரத்தில் கோயில் முழுதும் பளிச்சென ஆனது.
'யாருங்காணும்... புதுசா... நம்ம ஊர்லே... அதுவும் கோயில்லே இப்படிச் சுத்தமா வச்சிருக்கறது... கவனமா இருக்கணும்... இப்பத்தான் புதுசு புதுசா கோயில் சிலையத் திருட வர்ராணுகளே... இதுவும் ஒரு டெக்னிக்கா இருந்துடப் போறது...'
வரதாச்சாரி சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை.
நாளடைவில் அவரே சின்னச் சின்னச் வேலைகள் சொல்லிப் பழக்கி அவரது வீட்டு வேலைக்காரனாகவே ஆக்கி விட்டார்.
அக்ரஹாரத்தில் மற்றவர்களும் சும்மா இருப்பார்களா...? ஆளாளுக்கு வேலை சொல்லி, அவனில்லாமே ஒரு வேலயும் நடக்காதுங்கற அளவுக்குக் கொண்டு வந்து விட்டான்.
இத்தனைக்கும் அவனுக்குப் பேர் ஏதும் இல்லாமலேயே சைகை பாஷையிலேயே தொடர, வரது தான் அவனது கோயில் கைங்கர்யத்தைப் பார்த்து கோயில் ஆழ்வான் என்று பெயரிட, அதுவே நிலைத்துவிட்டது.
அப்பேர்ப்பட்ட கோயில் ஆழ்வானுக்கு இப்படியொரு திடீர்ச் சாவு...
என்ன செய்வது என்பது தான் பிரச்சினை...
சீனிவாசபட்டர் தான் துணிந்தார்.
'அவனுக்கு ஆசாரப்படி அந்திமசம்ஸ்காரம் நான் பண்றேன்... என்னைப்பொறுத்தவரைக்கும் அவனும் ஒரு வைணவன் தான். கோயில் ஆழ்வான் பேர வச்சதுமே வைணவனாயிட்டான். இது நாள் வரைக்கும் யார் மனசும்
நோகாம சொன்ன வேலையச் சொன்னபடி செய்திருக்கான். சொல்லாமலேயே இந்தக் கோயில் சுத்தத்துக்குப் பொறுப்பேத்து செஞ்சிருக்கான்... அவனுக்குக் குலம் வைணவ குலம் தான், கோத்திரம் விஷ்ணு கோத்திரந்தான்..... ஸ்ரீராமானுஜர் காட்டிய வழி தான்... பெரியநம்பிகள் மாறனேரி நம்பிகளுக்கு அந்திம சம்ஸ்காரம் பண்ண மடத்திலே இருந்த வைஷ்ணவா எல்லாம் பெரியநம்பிகளை ஒதுக்கி வைக்க, ராமானுஜர் பெரியநம்பிகளோட பெருமையச் சொன்னதுமில்லாமே, மாறனேரி நம்பிகள் ஆளவந்தாருக்கு எப்பேர்ப்பட்ட கைங்கர்யம் பண்ணியிருக்கார்ங்கறத விளக்கி வைணவத்தால் எல்லோரும் ஒரு குலம் என்பதை நிரூபிச்சார்.
அப்படி ராமானுஜர் காட்டிய வழியிலே நான் நின்னு கோயில் ஆழ்வானுக்கு அந்திம சம்ஸ்காரம் முறையாப் பண்றேன்... இதனாலே நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லே... தான் ஒருத்தன் மட்டும் நரகம் போனாத் தேவல... எல்லோருக்கும் சொர்க்கம் கிடைக்குமேன்னு ஆசார்யன் வாக்கையும் மீறி அஷ்டாட்சர மந்திரத்த கோபுரத்து உச்சியிலேறி எல்லோருக்கும் ஓம் நமோ நாராயண என்று போதித்தாரே நம் ராமானுஜர், அவர ஆசார்யனா வரிச்சுண்ட நான் கோயில் ஆழ்வானுக்கு இந்தத் தொண்டு கூடச் செய்யலேன்னா...'
சீனிவாசபட்டர் சொல்லச் சொல்ல வரதுவே முன்வந்து சீனிவாசபட்டர் அருகில் நிற்கலானார்.