“அழகாய் இருக்கிறாய் என்று
சொன்னதைக் கேட்டு
கன்னம் சிவக்க வெட்கமடைந்தது
அந்திசாயும் வானம்”
இப்பொழுது இருக்கும் ஆகாயத்தைப் பார்த்து இப்படியொரு கவிதை சொல்லத்தான் தோன்றியது. எதையும் ரசிக்கும் திறன் இருந்தால் எங்கிருந்தாலும் கவிதை எழுதும் திறன் ஓடி வந்து நம்முள் ஒட்டிக் கொள்கிறதல்லவா? கடவுள் எப்படி இருப்பார்? எவ்வளவு அழகாக இருப்பார்? என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவருடைய படைப்பில் எல்லாமும் எல்லோரும் விந்தையான அழகே.
கொரோனா என்னும் பேரிடர் சிறிது சிறிதாகத் தேய்ந்து, நாளடைவில் (மாதக்கணக்கில்) காணாமற் போனது, ஏதோ ஒரு பெரிய கனவு வந்து போனது போல இருக்கிறது. இந்த மாலை நேரப் பூங்காவில் முழுசாக இரண்டு வருடம் கழித்து இத்தனைச் சிரித்த முகங்களைப் பார்க்கிறேன். யாரையும் சற்று நேரம் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அத்தனை இன்பமும் நிம்மதியும் ஒவ்வொரு முகங்களிலும் தென்படுகின்றது. ஏதோ ஒரு சொர்க்கப் பூமிக்குள் நுழைந்துவிட்டது போல் உணர்கிறேன். நாங்கள் அமர்ந்திரக்கும் இந்த மர பெஞ்ச் கூட தேவலோக வாகனமாய் இருக்கலாம்.
‘நாங்கள்’ என்று சொன்னேனல்லவா? ஆம், என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்ரேயாவும் என்னருகில் அமர்ந்திருக்கிறாள். இந்தப் பூங்காவில் எனக்கு தெரிந்த ஒரே நபர் ஸ்ரேயா என்பதால் அவளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அதிர்ஷ்ட வசமாக (அல்லது துரதிஷ்ட வசமாக), நாங்கள் இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறோம். பார்த்த மாத்திரத்திலேயே இன்னவர் இப்படிப்பட்டவர் என்பதை யூகித்து அவர்களுக்குச் சான்றிதழ் அடித்துவிடுவாள் ஸ்ரேயா. சில சமயம் அவளது யூகம் சரியாக இருந்தாலும், பல சமயம் தவறாகவே இருந்தது. வேலையில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருப்பதால், ஸ்ரேயாவை தோழி என்ற வட்டத்திற்குள் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்பதில் குழப்பம்.
‘வேர்ஹவுஸ்’ - இந்தப் பதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்றுமதி - இறக்குமதிச் சாமான்களை ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப் பயன்படுத்தும் மிகப்பெரிய குடோன். அப்படிப்பட்ட வேர்ஹவுஸ் ஒன்றில் ‘ஆர்டர் பாக்கிங்’(order packing) செக்சனில் ஸ்ரேயாவும் நானும் பணிபுரிகிறோம். இந்தக் கணினி யுகத்தில் எங்களது வேலை மிகவும் சுலபமானது. இந்த மாதத்திற்குள் இத்தனைப் பொருட்களை பாக் பண்ணவேண்டும், இதுவரை எத்தனை பேக் பண்ணப்பட்டிருக்கின்றன மற்றும் இன்று எத்தனை பேக் பண்ண வேண்டும் என்பதை அழகாகக் காட்டிவிடும் எங்கள் செல்லக் கணினி. இதில் எங்கள் வேலை என்னவென்றால், எங்கள் கையில் இருக்கும் பேக்கிங் ஸ்லிப்பை கணினியின் டேட்டாவுடன் தினமும் ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். அவ்வளவே... இத்தனை சவுகரியங்கள் இருந்தும் வேறு ஏதாவது டிபார்ட்மெண்டில் சேர்ந்தால் நல்லா இருக்கும் என்று கூட அவ்வப்போது தோன்றும். காரணம் புலப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. சரி, வேர்ஹவுஸ் பாடம் போதும். பூங்காவிற்கு வாருங்கள். இத்தனை நேரம் ஸ்ரேயா அமைதியாய் இருக்கிறாள் என்றால் என்னைப் போலவே அவளும் இங்குள்ளவர்களை ரசித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அதோ அந்த மஞ்சள் டீ-ஷர்ட் சிறுவன் எத்தனை வேகமாக ஓடுகிறான். காற்றை மிஞ்சி விட வேண்டும் என்ற ஆவலோ என்னவோ! அவன் தந்தையோ, அவன் பின்னாலேயே அவனைத் துரத்திக் கொண்டிருக்கிறார். அவன் தாய் பூங்காவில் இருக்கும் செடிகளை ஒவ்வொன்றையும் நெருங்கி, சற்றுநேரம் தலையைச் சாய்த்துச்சாய்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். செடிகளின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு, அவளது கணவனையும் மகனையும் சற்று பொறாமைப்பட வைக்கலாம்.
அடுத்து திசையின்றி குதூகலமாய் ஓடித்திரியும் குழந்தைகள். அவர்களில் யாருக்கும் பதினைத்து வயதிற்கு மேல் இராது. ஏன் எதற்கு என்று தெரியாமல், ஒரே ராகத்தில் (ராகம் பெயர் கேட்காதீர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிடுவதில் அப்படி என்ன சுகம் கண்டுவிட்டனர் என்று புரியவில்லை. முடிந்த அளவு வேகமாக ஓட, சற்றுக் களைப்புத் தீர மூச்சிரைக்க வந்து ஓரிடத்தில் நிற்க, பின்புறத்தில் இருந்து இன்னொரு குழந்தை கத்த, மறுபடியும் முகமெல்லாம் அதிர்ச்சியும் சிரிப்புமாக ஓட்டம் பிடிக்க என்று தங்களது பிரத்தியேக உலகத்திற்குத் தனி அர்த்தம் வகுத்துக் கொண்டிருந்தனர்.
இவர்களை ரசித்தவாறேத் திரும்பிப் பார்த்தால் இன்னும் இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள். எங்களுக்கு எதிர்ப்புறம் அமைந்திருந்த இன்னொரு மரப் பெஞ்சின் ஓரத்தில் ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும், இன்னொரு ஓரத்தில் சுமார் இருபது வயதிருக்கும் வாலிபனும் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண்மணியின் கண்களில் அமைதியும் ஆனந்தமும் நிலவியது. அதேசமயம் அவர் கண்களில் இருந்த ஒருவித ஆர்வம் பூங்காவில் உள்ள குழந்தைகள், செடிகள், மலர்கள், பச்சை இலைகள், இளைஞர்கள், தம்பதிகள் என எல்லாவற்றையும் தழுவிக் கொண்டு இருந்தது. இத்தனை அழகாக, ஆழமாக இந்த வயதில் கூட உலகத்தை ரசிக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.
அந்தப் பெண்மணியின் அருகிலிருந்த வாலிபன் கையில் ஒரு திறந்து வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகமும் பேனாவும் இருந்தன. கல்லூரி மாணவனாக இருக்கலாம். படிப்பதற்காக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து படிப்பது என்றிருந்தான். அப்போது சில வரிகள் எழுதவும் செய்தான். அவை கவிதை வரிகளாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுவரை நான் பார்த்த அத்தனை முகங்களிலும் ஒருவிதக் கவலையோ பதற்றமோ அவசரமோத் தென்படவில்லை. இங்குள்ளவர்களின் முக மலர்ச்சியை ஆமோதிக்கும் வண்ணம் செடிகளும், மரங்களிலிருந்த இலைகளும் சீரான வேகத்தில் மென்மையாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. இயற்கையும் மனிதனின் சிரிப்பும் ஒன்று சேர்வது எத்தனை பெரிய வரம்!
இத்தனை நேரம் அமைதி காத்திருந்த ஸ்ரேயா திடீரென்று, “ஊரா இது? நம்ம ஜனங்கள் இப்படி மாறிப் போயிட்டாங்க பாரேன்...” என்றாள் சலிப்புடன்.
எனக்குத் துளியும் விளங்கவில்லை. “எல்லாம் நல்லாத்தானேப் போய்கிட்டு இருக்கு” என்றேன்.
“என்னத்த சொல்ல... அங்க பாரு அந்தாம்மாவை.. இயற்கையை ரசிக்குதாம். அதுக்காகப் பிள்ளையை மறந்துடறதா? அவன் அப்பா அவனைச் சமாளிக்க என்ன பாடுபடுறார்...? அவுங்க என்னடான்னா ஹாய்யா செடிகள் கூட டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க...” கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு, “பத்தாததுக்கு இந்த பார்க்ல எங்க பார்த்தாலும் கன்னாபின்னான்னு கத்திட்டு ஓடுற குழந்தைங்க... அவங்க அம்மா அப்பாவெல்லாம் பார்த்துட்டுச் சும்மாவேதான் இருக்காங்க... அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை, நமக்கு எதிரில உக்கார்ந்திருக்கவங்களப் பாரு” என்றபடி குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.
“அவங்களுக்கு என்ன?” என்றேன் புரியாமல்.
“தனியா வந்திருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. இவுங்க பசங்கெல்லாம் ஃபாரின்ல செட்டிலாகி இருப்பாங்கன்னு நினைக்குறேன்... வயசான அம்மாவைத் தனியா இங்க விட்டுட்டு, அவங்க மட்டும் அங்க நல்ல வாழ்க்கையை வாழ்றாங்க...”
“அவங்க தனியாத்தான் இருக்காங்கன்னு எப்படிச் சொல்ற?”
“இல்லன்னா பேரன் பேத்தி கூடல்ல வந்திருக்கணும்.. அட்லீஸ்ட் இந்த பார்க்ல இருக்கற குழந்தைகளைப் பார்த்தாவது மனச ஆத்திக்க வந்திருக்கணும்...”
“அவங்க பக்கத்துல ஒரு பையன் உக்காந்திருக்கானே... அவனையாவது உன் யூகப் பார்வை விட்டு வெச்சுதா இல்லையா?”
“விடலையே... அவன் திருதிருன்னு முழிச்சிட்டு, திருட்டுத்தனமாப் பாக்கறத வச்சுச் சொல்றேன், நிச்சயமா அவன் காதல் கடிதமோ அல்லது காதல் கவிதையோதான் எழுத வந்திருக்கணும்...”
“சரி, எழுதிட்டுப் போகட்டுமே... அதனால நமக்கென்ன நஷ்டம்?”
“நமக்கு மட்டுமில்ல... இந்த நாட்டுக்கே இவன மாதிரிப் பசங்களால நஷ்டம்தான். படிக்கிற வயசுல ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளாம, இப்படியாக் காதல் பண்ணிக்கிட்டு... சேச்சே...” என்று அர்த்தமின்றி அலுத்துக் கொண்டாள்.
ஸ்ரேயாவுடன் பழகியது வெறும் ஒரு மாதமே ஆனாலும், ஒரு வண்டி குறைகளையும் மற்றவர்களைப் பற்றிய தனது தவறான யூகத்தினையும் நிறையவே என்னிடம் திணித்திருக்கிறாள். இதுவரை அவள் புறம் பேசியது, உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான். ஆனால் இன்றோ, இந்தப் பூங்காவில் உள்ள யாவரையும் சரியாகத் தெரியாமல், தனக்குத் தோன்றியதையெல்லாம் கொட்டி விட்டாள்.
என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று எழுந்து, “சரி, நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றேன்.
“ஹேய் ஸ்வேதா, என்ன அதுக்குள்ள?”
“இல்லப்பா... எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு... அதான்...” என்று அவளது பதிலுக்கு எதிர்பாராமல் விருட்டென்று நடந்து வந்தேன். உண்மையில் எனக்கு எந்தவித அலுப்பும் இல்லை, ஸ்ரேயாவின் வார்த்தைகளை கேட்கும் வரையில். அலுவலகத்தில் டிபார்ட்மெண்ட் மாற வேண்டும் என்ற நினைப்பிற்குக் காரணம் இன்று கிடைத்து விட்டது.