சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயது வரை இருக்கும். குறிப்பாக, என்னைப் போன்ற ஆண்களைப் பார்த்ததும் யூகித்து விடலாம் நாங்கள் வேலையின்றித் திண்டாடுபவர்கள் என்று. சீராக வாரப்படாமல் இருக்கும் கலைந்த தலை, கண்களில் எப்போதும் தூக்கமா, மயக்கமா என்று கண்டறிய முடியாத ஒரு வித கலக்கம், இஸ்திரி பண்ணப்படாத சட்டையும் பேண்டுமாக இருக்கும் எங்களைக் கண்டுபிடிப்பது அத்தனைக் கடினமாக இராது. இவ்வாறான தோற்றத்திற்குப் பணப்பற்றாக்குறை காரணம் இல்லை; வெறும் மனக்குறை மட்டும்தான். வேலை இல்லாதவனுக்கு வெளித்தோற்றம் முக்கியமா என்ன...! அதே சமயம் என் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக்கொள்வதில் ஒரு சிறிய ஆர்வம் இருந்தாலும், மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மையும், ஒருவித மனத்தடையும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒன்பதரை மணிக்குச் சாலையில் பைக்குடன் நின்று கொண்டிருக்கிறேன். வேறெதற்கு...? இலக்கின்றி நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிவதற்கும், எவ்வளவு பாடாவதி படமாய் இருந்தாலும் அதைப் பார்ப்பதற்குப் பணத்தை விரயம் செய்வதற்கும், மேற்கத்தியப் பாணியில் கட்டப்பட்டிருக்கும் சிற்றுண்டி உணவகத்தில் இன்னும் கொஞ்சம் பணத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கே. கடைசியில் ஒன்றும் அறியாத நல்ல பிள்ளை போல வீட்டை அடைந்து விடுவது. இந்தப் புண்ணிய காரியங்களை ஞாயிற்றுக்கிழமையில்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் எனக்கில்லை. மற்ற நாட்களில், வேலை தேடுவது போலப் பாவனை செய்ய வேண்டுமே! நிறையப் பணம் செலவழிந்து போனது என்றால் வீட்டில் நம்பமாட்டார்கள். உடனே, என் பெற்றோர் கடுமையானவர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அத்தனை கடுமையானவர்களாக இருந்தால் இருபத்தி மூன்று வயது உத்தியோகமில்லாப் பட்டதாரியை இத்தனைக் கரிசனத்துடன் (செலவிற்குப் பணமும் கொடுத்து) பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.
என் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஒரு மெஸ்ஸின் அருகாமையில் தான் எங்கள் நண்பர் குழுவினற்கான ‘மீட்டிங் ஸ்பாட்’. நான்தான் இன்று முதல் ஆளாக வந்து மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான் அந்த இளம்பெண் என்னைக் கடந்து செல்ல இருந்தாள். திருமணம் ஆனதற்கான எந்தவொரு தடயமும் அவளிடம் இல்லை. வயது இருபத்தியிரண்டிற்கு மேல் சொல்ல முடியாது. எளிமையான தோற்றத்தில், அமைதியான முக பாவனையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. எளிமையும் ஒருவித அழகு தானே! ஆனால் அவள் கைப்பையைக் கண்டதும் அவளை வெறுத்தால் என்ன என்று தோன்றியது. வேலைக்குச் செல்கிறாள். அதே சமயம், அவளது அணிந்திருக்கும் மலிவு விலை உடையேக் காட்டிக்கொடுத்துவிட்டது அவளுடைய சம்பாத்தியமும் அவள் குடும்பத்திற்குத் தேவை என்று. எதேச்சையாக அவள் என்னைப் பார்த்த பொழுது லேசாகச் சிரித்தேன். அதில் என்ன அர்த்தம் கண்டு விட்டாளோ தெரியவில்லை, அற்பப் பார்வை ஒன்றைச் சட்டென்று வீசியபடி என்னைக் கடந்து சென்றுவிட்டாள். ம்ஹும்... எல்லாம் பெண்களுக்கே உரிய திமிர்! உத்தியோகத்திற்கு வேறு செல்கிறாள் அல்லவா...? போனால் போகிறது... காதல் பண்ணலாம் என்ற என் எண்ணத்தை ஒரே போடாகப் போட்டு உடைத்துவிட்டது. அவளது கடைக்கண் - ஏளனப் பார்வை.
சிறிது நேரத்தில் அவளது நினைவு மறந்து என் நண்பர்களின் ஞாபகம் வந்தது. இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? சற்று எரிச்சலும் வந்தது அவர்கள் மீது. மறுபடி வேறொரு பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். வயது நாற்பதிற்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றியதால் ‘வந்தாள்’ என்று கூற முடியவில்லை. சில நாட்களாகக் குளிக்கப்படாத உடலும், சிற்சில கிழிசல்கள் மட்டுமே கொண்டிருந்த சேலையும் இந்த தொழிலுக்குப் புதியவர் என்பதை நன்றாகவேத் தெரிவித்தன. உடலில் எந்தப் பகுதியிலும் குறை இருப்பதாகத் தெரியவில்லை. பிசிறு தட்டாத நடையும் கூட. என்னை இன்னும் சற்று நெருங்கி, கைகளில் நான்கு இரண்டு ரூபாய் நாணயங்களை ஏந்தியபடி, “சாமி, தர்மம் பண்ணுங்க” என்றவரின் கண்களும் குரலுடன் சேர்ந்து கொண்டு கெஞ்சின.
இந்தப் பெண்ணைப் பார்த்ததும் முன்பு சொன்ன இளம்பெண்ணின் பார்வை ஏனோ அத்தனை தவறாகத் தோன்றவில்லை. அது ‘அற்ப’ பார்வையல்ல, ‘அர்த்த’ பார்வை என்று இப்பொழுது எனக்கு தோன்றுகிறது.