“ரொம்ப முக்கியமான விஷயம்டா… ப்ளீஸ் வீடு வரைக்கும் வர்ரியா?” என்று அசோக் போனில் கெஞ்சியதை‘லவுட் ஸ்பீக்கரில்’ வைத்து கேட்டது தவறு என்று பட்டது.
அவன் வீட்டுக்கு சென்று வந்த பின்பும், அவனது பிரச்சினையே மனதில் உலாவியது.
“யார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்... ரகசியமாகவே இருக்கட்டும்...” என்றவனிடம் தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் எனது உள்ளமோ யாரிடமாவது அதைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது. அந்தத் துடிப்பை மேலும் அதிகரிக்கும் விதத்தில் ஆஷாவும் அம்மாவும் அனத்திக் கொண்டிருந்தனர். சில நேரங்களில் இவர்களிடம் சொல்லி விடலாமா என்ற விபரீத ஆவலும் அவ்வப்போது தலைகாட்டி விட்டுச் சென்றது.
“அசோக் என்ன சொன்னான்?” ஆர்வத்தைக் காட்டிவிட்டார் அம்மா.
“ஒண்ணும் பிரமாதமாயில்லைம்மா...”
“ரொம்ப முக்கியமான விஷயம்ன்னு அவர் சொன்ன மாதிரி இருந்ததே” இம்முறை ஆஷா.
“அது வந்து, ரகசியமா இருக்கணும்ன்னு சொன்னானா... அதான்...” என்றேன் சற்று தெம்புடன்.
“அம்மா கிட்டக்கூடச் சொல்லாமல் அப்படி என்னடா ரகசியம்?”
“கணவன் மனைவிக்குள்ள ஒளிவு மறைவே இருக்கக் கூடாது தெரியுமா”
இருவரும் என்னிடமிருந்து விஷயத்தைக் கறக்காமல் விடுவதில்லை என்றிருந்தனர். இருப்பினும் ரகசியமாயிற்றே! இருவருக்கிடையில் இருந்தால்தானேஇரகசியம். அதே, மூன்றாவது நபருக்குத் தெரிய வந்தால் செய்தி ஆகிவிடுமே!
ஒரு நிமிடம் ஆழமான யோசைனைக்குள் மூழ்கினேன். பின்பு, இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தேன்.
“யாரிடமும் சொல்வதற்கில்லை” என்றபடி நகர்ந்து சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.
ஆமாம், அது என்ன ரகசியம் என்று எங்களிடமாவது சொல்லிவிடுங்களேன்... என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது...
ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டுமே!