கனி இந்த அழகிய பெயரின் சொந்தக்காரி, நல்ல பொன்னிறம் உடையவள். எலும்புகள் மட்டுமே அரசாளும் உடம்பைப் பெற்றவள். சதைப் பகுதி என்று அவள் உடம்பில் எந்த ஒரு பகுதியையும் பிரித்துச் சொல்லிவிட முடியாது. கச்சிதமாய் செய்தெடுத்த கிச்சென்ற சிலை என்று சொல்லலாம். வயது பதினெட்டு ஆனதும் கனியின் வீட்டில் திருமணப் பேச்சு தொடங்கியது. அவர்களின் தேடலில் பத்துப் பவுன் தங்கத்திற்கும் பத்தாயிரம் ரொக்கத்திற்கும் மாட்டியவன் மூக்கன்தான்.
மூக்கன் கனியின் உருவத்திற்கு நேரெதிர். கனமான உருவம். அடர்ந்த புருவக்கட்டு. அவன் கட்டும் எருமையின் நிறமும் அவன் நிறமும் ஒன்றெனச் சொல்லலாம். அது அவன் தப்பல்லவே, மூக்கனின் அம்மா சொன்னதைப் போல, வெயில் நேர வேலை அவனுடையது. ஆடு, மாடு மேய்த்து வீடு கட்டியாச்சு. வீடு கட்டுனதும் மாடு கட்ட ஆள் தேடினாள் மூக்கனின் அம்மா.
ஆத்தாளுக்கு ஒத்தாசையா வீட்டு வேலை செஞ்சு, சோறு ஆக்கி, குஞ்சும், குட்டியுமா இருக்க வீட்ட கோபுரமாய் மாத்த ஆள் தேடினான் மூக்கன்.
ஒரு வழியாகத் திருமணம் நடந்தேறியது. உரப்பனூர் பொண்ணு ஊமெச்சிகுளப் பெண்ணாகிப் போனாள். புது மஞ்சள் கயிறும், பவுடர் பூசிய முகமும் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்கியது. திருமணம் முடிந்த முதல் வாரம். குல தெய்வம் போய் வந்து, மறுவீடு போய் வந்து, கனிக்கு இன்னும் புது மினுப்பு கூடி அழகு மேனி எங்கும் பரவி இருந்தது.
தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மூக்கனும் கனியின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருப்பதாகத்தான் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மூக்கனின் அம்மா வெள்ளத்தாயின் ஆட்டக் கைகளுக்கு கனியின் வாழ்க்கை சென்றது.
மெது மெதுவாய்ப் பேசி லாவகமாக, கனியின் நகைகளுக்கு கண் வைத்தாள் வெள்ளத்தாயி. அவள் பேசிய பேச்சில், கனியின் நகைகள் செட்டியார் கடைக்குப் போய், பணமாய் மாறி, மாட்டுச் சந்தையில் ஐந்து ஆட்டுக் குட்டிகளாய் மாறிப் போனது.
நகை போய் ஆடு வந்ததிலிருந்து வீட்டு வேலை ஓய்ந்த பாடில்லை கனிக்கு, கூட்டி வந்த முதல் வாரம் கூரையைக் கிழித்துக் கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது ஆடுகள். ஆடுகள மேய்ச்சலுக்கு விடுறது, சாணி கூட்டிப் பெருக்கி, கொட்டம் கூட்டி ஓய்ந்து வீடு வந்ததும் வராததுமா திரும்ப அதுக்கு புல் அறுப்பது, அது பத்தலன்னு மூக்கனுக்கு சொந்தமான நெலத்து மொய் தண்ணிக்கு காத்துக் கிடந்து தண்ணி பாய்ச்சி, அவன் வரப்பு வெட்ட வந்தா சோறு சொமந்து, சொல்ல மறந்த அத்தனை வேளைகளுக்குள்ளும் அல்லாடி மல்லாடிக் கொண்டிருந்தாள் கனி.
“சரி வெள்ளத்தாயி நாங்க வாரோம்” ன்னு சொல்லி கூட்டுக்காரவங்க கிளம்பற வர உன் மருமக என்ன செய்யறா? என்ற கேள்வியில் தொடங்கி தொடங்கி, அடுத்த தெருவுல சமஞ்ச கொமரி ஒருத்தி ஓடிப் போனாளே அது தெரியுமா ஒனக்கு, என்று ஊரின் அத்தனை வீட்டு அடுக்களைகள் அந்தப்புரம் என்று அத்தனை ரகசியங்களையும் பேசி முடித்து, அந்த மேத்தெரு சீனிவாசன் தூக்குப் போட்டுக்கிட்டானான்டி”யில் இன்று அவர்கள் சபை களைந்தது. நாளை யார் வீட்டில் தொடங்கி எவன் வீட்டுச் சாவில் முடியும் என்று யாருக்கும் தெரியாது.
“கனி, காப்பித்தண்ணி போடு தாயீ ….” என்று ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி. “பேசிப்பேசித் தொண்ட வரண்டு போச்சு” என்று சலித்துக் கொண்டாள். சொன்னதும் கொண்டு வந்து வைக்கவில்லையெனில் மாமியார் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத ஒருத்தி பற்றிய கதை காலாட்சேபம் போல் வெள்ளத்தாயி சொல்ல ஆரம்பிப்பாள் என்று கனிக்கும் தெரியும்.
கனியின் மாமனார் அந்த அளவில் பெரும் தொந்தரவாக இருக்கவில்லை. கட்டிலில் படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. படுக்கையைச் சுத்தம் செய்வது, மருந்து மாத்திரைகளை கணக்காக எடுத்துக் கொடுப்பது மட்டும்தான் அவள் வேலை. மற்ற எல்லாத் தேவைக்கும் வெள்ளத்தாயிதான் வேண்டும் அவருக்கு. காலையில் கோழி கூவுவது முதல் கூடடையும் வரை வெள்ளத்தாயி என்று அழைத்துக் கொண்டுதான் இருப்பார்.
காலையில எழுந்திருச்சு, வாசல் தெளிச்சு வேலய ஆரம்பிச்சா, இரவு பத்து மணிக்கு மாமனாருக்கு மாத்திர போட்டுக் குடிக்க ஒரு டம்ளர் பால், வெள்ளத்தாயி தொண்ட கணகணப்புக்கு சுக்கு மல்லிக் காப்பி, புருசனுக்கு பாலோ, சுக்கு மல்லியோ புடிக்காது, அதனால பால் காப்பி போட்டு தூங்க இடம் பார்த்து செத்த விழுந்திக்கிறனேன்னு உடல் கெஞ்சும் போதும், அப்படிச் சட்டென்று அவளால் படுத்து விட முடியுமா?
அப்பொழுதும் உடல் அலுப்பை மறந்து கட்டிய கணவனுக்காய் முந்தி விரித்து, அவன் இச்சைக்கு ஈடு கொடுத்து, எப்பொழுது தூங்கினோம் என்பதே மறந்து, தூங்கினோமா? என்பதும் மறந்து, அடுத்த நாளின் விடியலில் கொட்டம் பெருக்கிக் கொண்டிருப்பாள் கனி.
அத்தனைக்கும் மாடுக்கும் மனுசனுக்கும் ஆடுக்கும் கோழிக்கும் பறந்து பறந்துதான் வேலை செய்து பார்க்கிறாள் குறைந்தபாடில்லை. சிட்டுக்குருவியாய் இலந்தைப் பழம் பொருக்கித் திரிந்த அவளின் சிறு வயதுச் சேட்டைகள் அவ்வவ்போது அவள் மனதில் நிழலாடும்.
“கண்கள் கண்ணீருக்கு வாக்கப்பட்டதன் பின்னே, என்ன செய்ய, பட்டுத்தான் தீர வேண்டியிருக்கு” என மனதும் சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டது.
கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசந்தான் நூலா இருந்தவ காத்தாட்டம் ஆயிப்போனா, ஒருநாள் கனிக்கு உடம்பு நோவு எடுத்தது. எத்தனை எந்திரமாய் பறந்து திரிந்த ஒடம்போ படுத்துக் கொண்டு எழுந்திரிக்க மறுத்தது. திண்ணையில விழுந்தவளால கண்ணக்கூட தொறக்க முடியல.
கொட்டம் பெருக்காம கனி திண்ணயில கெடக்கிற பாத்ததும், வெள்ளத்தாயியிக்கு ஆத்திரம் தாங்க முடியல.
“ஏன்டி ஜமீன்தாரு மகளே, ஒன் வீட்டுல இப்படித்தான் பன்னண்டு மணி வரக்கும் பொளந்துகிட்டு படுப்பியா? எங்கயோ மேய்ஞ்சுகிட்டு திரிஞ்சவள எம் புள்ள தலயில கட்டி வச்சு. என் உசுர எடுக்கறானுக...” என்று கொஞ்சம் நெருங்கி கனியின் தலை முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.
அவள் லேசாக கண்ணத் தொறந்து பாத்து, “அத்தை …” என்றதுதான் தாமதம் அவள் குலம் கோத்திரம் சொந்தக்காரன், பந்தக்காரன் பெண்ணை பெற்றவன் அவன் சொந்தக்காரன், மாண்டவன் என்று அத்தனை பேரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் கிழித்து தொங்க விட்டாள் வெள்ளத்தாயி.
கனி தட்டுத்தடுமாறி “எங் குடும்பத்த பத்தி எதுவும் சொல்லாதீங்க அத்தை” என்று சொல்ல வந்த வார்த்தையை முடிப்பதற்குள் ஏக வசனத்தில் எகிறிக் குதித்தாள் வெள்ளத்தாயி.
சந்தைக்குப்போன மூக்கன் வீடு திரும்புனதும் முதல் வார்த்தையை வெள்ளத்தாயி ஆரம்பித்தாள். “ஒம் பொண்டாட்டி என்ன எதுத்துப் பேசுறா, குடும்பப் பொண்ணுகளுக்கு இது சரிப்பட்டு வராது. வந்த ஆறு மாசத்துல ஒரு புழு பூச்சிக்கூட தங்கல, நானே சிவனேன்னு எங்காலத்தப் போக்கிக்கிட்டிருக்கேன். ஆனா இருந்தாலும் பொட்டச்சிக்கு இம்புட்டு வாய் நீளக் கூடாது. அம்புட்டுத்தான் சொல்லிபிட்டேன்” என்று இக்கன்னா வைத்து முடித்தாள் வெள்ளத்தாயி.
தாயைத் திட்டி விட்டாளே என்று கோபத்தில் கனியைத் தேடிச் சென்ற மூக்கன், அவள் தலை முடியைக் கூட்டிப் பிடித்து அடித்த அடியில், மரக் கதவில் மோதி கீழே விழுந்தாள். “நீ என் அம்மாவ எப்பிடி கொடுமக்காரின்னு சொல்லலாம்” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான் மூக்கன்.
இப்படியெல்லாம் அவன் மட்டும்தான் கத்திக் கொண்டிருந்திருப்பான் போலும். கீழே விழுந்த கனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
“பொம்பளன்னா அடக்க ஒடுக்கமா பெரிசுக பேசுனா... வாயத் தொறக்காம இருக்கணும்... அவதான் குடும்பப் பொண்ணு...” என்று பெண்ணின் லட்சணங்களையெல்லாம் பேசி முடித்துத் திரும்பிப் பார்க்கையில் அதிர்ந்து போனான் மூக்கன்.
அவன் முன்னே போன நிமிடம் போராடிய கனியின் மெல்லிய தேகம் உயிரற்றுக் கிடந்தது. இந்த நிமிடம் வரை தன்னைப் பற்றியோ தன் ஆசைகளைப் பற்றியோ சிந்திக்காத கணவனிடத்திலிருந்து, அவளும் ஒரு பெண்தானே என்று நினைக்காத மாமியாரிடமிருந்து, கட்டிக் கொடுத்து விட்டால் போதும் நம் சுமை குறைந்தது என்று ஒதுக்கியிருக்கும் பெற்றவர்களிடமிருந்து, என்ன காரணம் என்று அறிந்து கொள்ளாமலே பிதைக்கப்படப் போகும் தன் சவத்திடமிருந்தும் கூட விட்டு விடுதலையாகிப் போனாள் கனி.
கணவன் செத்தால் பொண்டாட்டி கைம்பெண் ஆவதும், பொண்டாட்டி செத்தா கணவன் புது மாப்பிள்ளை ஆவதும் சமூக நீதி. அது உங்களுக்கும் தெரியும்தானே?
இதோ இந்த மார்கழி மாதப் பனியில் ஆடுகளோடு ஆடாக குனிந்து கொட்டம் பெருக்கிக் கொண்டிருக்கிறாளே அவள்தான் மூக்கனின் ரெண்டாவது மனைவி...