திருமணக் கொட்டகை அந்த மூன்று வீட்டையும் அடக்கி விலாசமாகப் போடப்பட்டிருந்தது. இந்தத் திருமணத்தை ஊரே எதிர்பார்த்துக் காத்திருந்தது. இன்று இணையப் போகும் ஜோடிக்கு இரு வேறு மாதிரியான துன்பநிலை இருந்தது. இரண்டு குடும்பங்களும் அந்த ஊரில் செல்வாக்கான குடும்பந்தான்.மணப்பெண் தீபா. நல்ல அமைதியான, அடக்கமான பெண்ணுக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அத்தனையும் அவளிடம் இருந்தது. அழகையும் சேர்த்துத்தான். ஆனால் அவளுக்காக இருக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்க வேண்டியவர்கள் மறந்து போனதும் உண்டு. அது அவளது தாய், தந்தை, இவள் பிறந்த அன்று என்ன காரணத்தாலோ அவளின் அப்பா இறந்துவிட முப்பத்தி ஓராம் நாள் தாயாலும் நிராகரிக்கப்பட்டு, உமிநெல்லோடு ஒரு பொருளாய் சுலகில் வைத்து தத்துக் கொடுத்து விட்டார்கள்.
தத்து வாங்கியவர், தீபாவின் அப்பாகூடப் பிறந்த அண்ணன்தான். தம்பி மகளை தன் மகளாய், தன் இரண்டு மகன்களோடு சேர்த்து வளர்த்தெடுத்தார் மாயாண்டி. அண்ணன், தம்பி கணக்கில் இருந்த ஒரு ஏக்கரையும் சேர்த்து அன்று முதல் உழுது பராமரித்தும் வந்தார். தத்தெடுக்கப்பட்ட அன்றே அவளின் திருமணத்திற்கான கணவனையும் முடிவு செய்தார் மாயாண்டி.
தீபா நல்லா வளர்ந்ததும், தன் தங்கை மகனான பேச்சி மகன் பாண்டிக்கு என்றே நிச்சயம் செய்தார். அந்தத் திருமணம்தான் இன்று நடக்கவிருக்கும் திருமணம். தீபா பேரழகி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவள் மகிழ்ச்சியாய் இருந்து ஊரில் யாரும் பார்த்ததேயில்லை. முதன்முறையாகப் புன்னகைத்தது தன் மாமன் பாண்டி தன் கழுத்தில் தாலி கட்டும் போதுதான் என்று ஊரே மெச்சும் கல்யாணமாய் அது இருந்தது.
கல்யாண மேடையில தாலி கட்டும்போதும், தாய் மாமன்கள் வந்து மாலையிடும் போதும்தான் பாண்டி மேடையிலிருந்தான். அதற்கு முன் கல்யாண வேலைகளைச் செய்ததும் அவன்தான். வந்திருக்கும் அத்தனை சனத்தையும் சாப்பிட வைக்க சாப்பாடு பரிமாறியதும் அவன்தான்.
பொறுப்பான மாமனைக் கட்டி வந்த சந்தோசத்தில் தீபா இப்பொழுதுதான் தீபமாய் ஒளிர்ந்தாள். அத்தையை தன் தொப்புள் கொடி அறுந்த நாளிலிருந்தே பார்த்தவள்தானே, மாமியார் வீடென்ற தனிப்பயம் அவளுக்குத் தலை தூக்கவில்லை.
அங்கிருக்கும் அத்தனையும் அவளுக்குப் பழக்கப்பட்டவைதான். ஆனாலும் மாமனோடு இரண்டு வார்த்தை ஒன்று சேர்த்துப் பேசியதில்லை. ஆனாலும் அவனின் நினைவின்றி எந்த நாளும் முடிந்ததில்லை. என்றோ திருவிழாவில், விசேசத்தில், இலவில்(இறப்பில்) மட்டும்தான் பார்த்திருக்கிறாள். அவனைப் பார்த்தவுடன் வெட்கம் கண்ணைப் பறிக்க குனிந்து நிமிர்ந்தால் அந்த இடத்தை விட்டுப் போயிருப்பான் பாண்டி. அப்படித்தான் அவளது இத்தனை ஆண்டு நிச்சயவாழ்வும் இருந்தது.
தீபா அவள் மாமனை வீரனாகத்தான் எப்போதும் பாஎத்திருக்கிறாள். ஆனால், கல்யாணம் முடிந்த முதல்நாள் இரவு ஒரு பிஞ்சுக் குழந்தையைப் போல கண்ணீர் வடிப்பதை அவள் கண்டாள். மனதின் வலி அத்தனையையும் இன்றுதான் கொட்டித் தீர்க்கிறான் என்று தோன்றியது தீபாவுக்கு.
தாய் வெறுத்த ஒரு பெண் குழந்தை தன் கணவனுக்கு அன்றே தாயாகிப் போனாள். அதிர்ந்து பேசாத தீபாவும், ஒரு இடத்தில் நிற்காத பாண்டியும் உழவு மாடுகளைப் போல் வாழ்க்கை வண்டியில் சரி நிகராகத் தெரிந்தார்கள் பேச்சிக்கு. நல்லா இருக்கணும் எப்போதும் அழுத கண்ணோடு எப்போதும் வாழ்த்திக் கொண்டிருப்பாள் அவள்.
பேச்சி மட்டுமென்ன சின்ன துன்பக்கடலை சிடுக்கென்று தாண்டி வந்தவளா? பேச்சிய கட்டுன ஆங்கன் பார்க்கும் இடமெல்லாம் பெண் வைத்திருக்க, இவளை விசாரிக்காமல் கட்டிக் கொடுத்து வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள் பேச்சியின் பெற்றோர். ஆனால், வந்துவிட்டோம் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. பாண்டி பிறந்த ஒரு வருசத்துல அவங்கப்பனோட தராதரம் தெரிந்ததும், கட்டிய தாலியை தங்கள் கல்யாணப் போட்டாவிலேயே கழட்டி மாட்டிட்டு, தன் சொத்தாக பாண்டியை மட்டும் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
சிந்துபட்டி சனம் முச்சூடும் வந்து பேசிப் பார்த்தது. “அம்மா இவன் ஒழுக்கமா பொழச்சிக்கிறேன்னு சொல்லுறான் வந்து சேர்ந்து வாழு மா” என்று ஊர்பெருசுகள் எவ்வளவோ சொல்லியும் “அவனும் வேணாம், அவன் சொத்தும் வேணாம். நான் பெத்த பிள்ளைய நானே வளத்துக்கிறேன். நான் தான் ஒன் அப்பன்னு எந்த நாளும் அந்தாளு உரிமை கொண்டாடி வரக்கூடாது. இன்னைக்கே அத்து விட்டிருங்க” என்ற உறுதியாய் நின்ற பேச்சியின் முன் எந்தப் பேச்சும் எடுபடவில்லை.
சிந்துபட்டி சனம் மூக்கறுந்து வீடு போய் சேர்ந்தாக, ஒருத்தனால ஊருக்கே கெட்ட பேரு என்று ஊரே பேச்சி புருசன திட்டித் தீர்த்திச்சு. அதுக்கு பின்னால வேற வாழ்க்கை தேடல பேச்சி, பாண்டிதான் தன் வாழ்க்கைன்னு வாழ்ந்து காட்டிட்டா, இது ஓரளவுக்குத் தெரியும்தான், இன்று அவன் மாமன் அவள் கதை சொன்னதும் சிடுசிடுவென்று பேசும் அத்தையின் வீரத்தை, வைராக்கியத்தை அறிந்து பூரித்துப் போனாள். அத்தை மேலே பெரு மதிப்பு உருவாகிப் போனது அவளுக்கு.
தன் வாழ்க்கை முழுவதும் ஏங்கிய அத்தனையும் கிடைத்துவிட்டதாய் அவள் மனம் இன்பத்தில் திளைத்தது. எதற்கெடுத்தாலும் தாங்கும் தன் ஆசை மாமன். எப்பொழுதும் தாங்கள் இருப்பதை நினைவூட்டும் பெரியப்பா பெரியம்மா அண்ணன்கள், இத்தனைக்கும் இந்த வீட்டைத் தாங்கும் ஆணுக்கு இணையான தூணாய் அந்த பாண்டிச்சாமியே தாங்கி நிற்பதைப் போல் தாங்குவது அத்தை பேச்சிதான். அத்தனையையும் நினைத்து இன்பம் கொள்வாள் தீபா.
ஊராரு கண்ணுபடுமளவு நல்ல வாழ்க்கையை பாண்டியும் தீபாவினால் அனுபவித்துக் கொண்டிருந்தான். இனிமையான திருமண வாழ்வு அவனுக்கு அமைதியைத் தந்தது. படித்தது பத்தாம் வகுப்புதான் படிப்பில் சோடையில்லை. பணத்துப் பிசகால் அம்மாவுக்கு தொந்தரவாக இல்லாமல் பக்கத்துக் கம்பெனியில் சின்ன வேலையில் சேர்ந்தான். இன்று முதலாளி மறந்த விசயத்தைக் கூட கற்றுக் கொடுக்கும் நம்பிக்கைக்கு உரியவனாய் ஆகிப் போனான். கம்பெனியின் அத்தனை கணக்கு வழக்குகளும் பாண்டிக்குத்தான் தெரியும். அப்படித்தான் அன்றும் முதலாளி எங்கோ வசூலுக்கு அனுப்ப காலையிலேயே சாப்பிடாமல் கூட கிளம்பியவன்தான். பேச்சிக்கு ஏதோ கெட்ட கனவொன்று வேறு மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்க, காலையில் போன மகன், அந்தி சாஞ்சும் வரலியேனு கவலையோடு உட்கார்ந்திருந்தாள்.
தீபாவுக்கு அது ஆறாவது மாசம், பூத்து நிற்கும் பூக்குடம் போல் வயிரைத் தள்ளிக் கொண்டு திரிந்தாள். அதனால் எந்தக் கவலையையும் அவளிடம் சொல்ல பேச்சிக்கு மனம் ஒப்பவில்லை.
“மோட்டார் ரூம் பக்கம் கொஞ்ச நேரம் போறேன். அந்தக் கடைசிக் குண்டுக்கு தண்ணி பாயல. இப்பத்தான் தண்ணி ஏறுது வாய்க்கால திருப்பிவிட்டுட்டு வந்துர்றேன்னு” தீபாகிட்ட சொல்லிட்டு கௌம்புன பேச்சி, சொட்டையன் மகன் ராமு, வேகவேகமாய் வீட்டை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும் நின்று விட்டாள்.
“என்ன ராமு இம்புட்டு அவசரமா ஓடி வர? யாருக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் மெதுவா வா”
“ அது … வந்து..” அவன் நாக்கு, ஈரப்பதமில்லாமல் ஒட்டிக்கொண்டு வார்த்தைகள் வராமல் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டான்.
“பொறுப்பா ராமு. அவசரப்படாத நிதானமா மூச்சு விடு. யம்மா தீபா ஒரு சொம்பு தண்ணி கொண்டாம்மா...” என்று சொல்லவும் பார்த்துக் கொண்டிருந்த தீபா தண்ணீர் கொண்டு வர உள்ளே போனதுதான் தாமதம்.
“ராமு பேச்சி காலுலயே விழுந்து கதறிவிட்டான். ஆத்தா பாண்டி நம்மள அனாதையாக்கிப்பிட்டான் தா. ஆலமரமே சாஞ்சிருச்சுத் தா” என்று சொன்னதும் பேச்சி நெஞ்சில் அடித்து கதற ஆரம்பித்து விட்டாள்.
அத்தை எதுக்கோ அழுகறாங்கன்னு ஓடிவந்த தீபா, “ஐயா பாண்டி போயிட்டியா? நீயும் என்ன விட்டு போயிட்டியா?” என்ற வார்த்தையைக் கேட்டதும் அப்படியே மயங்கிச் சரிந்து விட்டாள்.
திருமணத்திற்கு வந்த சனம் முழுமையும் ஒரு வருசத்துக்குள்ள பேச்சி வீட்டுக்கு திரும்பவும் வந்து சேர்ந்து விட்டது. வந்தவர்களெல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டுப் போனார்கள்.
தீபா கண் திறந்து பார்க்கையில் ஆசைஆசையாய் ஒவ்வொரு நாளும் நூறு வருடங்கள் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மாமன்தான் கண்மூடி படுத்திருந்தான். ஒரு நாளும் பகல்பொழுதில் படுத்திராத பாண்டியை, கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். இப்பொழுது அவனும் தீபாவை அநாதையாக்கிவிட்டு செல்வானென்று யாரும் நினைக்கவில்லையே? எதை நினைத்து அழுவது என்னவெல்லாம் நினைப்பது. கண்முன்னே தன் வாழ்க்கை நிர்மூலமாய்க் கிடப்பதை என்ன சொல்வது?
யாரிடம் சொல்வது? சொல்லவும் திராணியில்லாமல் கிடத்தி வைக்கப்பட்ட பாண்டியின் தேகத்தில் உருண்டு கதறிக் கொண்டிருந்தாள். வார்த்தைகள் வரவில்லை, நெஞ்சில் அடித்து அடித்து அழுததில் நெஞ்சுக்கூடு வத்திப் போனாள்.
தீபாவை ஒரு கூட்டம் உள்ளே அழைத்துச் சென்றது. அவளைக் கதற விடாமல் பிடித்துக் கொண்டார்கள் “பிள்ளை நெஞ்சுக்கு ஏறிரும்டி. கத்தாத கதறாத ஒன் வயித்துக்குள்ள இருக்கற பிள்ளைக்கு என்ன தெரியும். சும்மா இருடி” என்று பெரியவர்கள் அதட்டினார்கள்.
தீபாவின் கழுத்தில் கிடந்த மஞ்சள் வாசம் குறையாத தாலியை அறுத்து, பாண்டிக்கு கடைசி வழித் துணையாய் அவன் கால்களில் கட்டிவிட்டார்கள். அவள் கைகளில் கிடந்த கல்யாணப் பொன் வளையல்களை அவள் கல்யாணத்தின் பொக்கிசமாய் அன்று வரை பாதுகாத்து வந்தாள். அதையும் உடைத்து எரிந்தார்கள்.
அவன் தினமும் சூட்டும் பூக்களுக்குப் பதிலாக, இன்று யாரோ, அப்பவே தலையில் வைத்து ஐந்து நிமிடத்தில் பிய்த்தெரிந்தார்கள். தீபாவின் வாழ்க்கை மீண்டும் சூன்யத்திற்குள் புகுந்து கொண்டது.
ஒரு வழியாய் ஒப்பாரி ஓய்ந்து, நெருங்கிய சொந்தங்களால் வீடு நிறைந்தது.
அவளிடம் கனிந்து கரைந்து பேசும் சொந்தங்கள் பின்னே, அவளையும் அவள் வயிற்றில் இருக்குத் முகம் பார்க்காத அந்தப் பிஞ்சுக் குழந்தையையும் கூடத் திட்டித் தீர்த்தார்கள்.
“நல்லா வேல செஞ்சிக்கிட்டிருந்த புள்ள அல்பாயிஸ்ல போவானேன். எல்லாம் இவ இந்த வீட்டுக்கு வந்த நேரந்தான் பெறந்ததும் அப்பன முழுங்கினவ, இங்க வந்ததும் புருசனையும் முழுங்கிப்பிட்டா, இவதான் இப்படின்னா அவ வயித்துல வளர்றது இன்னமும் மோசமால்ல இருக்கு. வயித்துல இருக்கும்போதே அப்பன முழுங்கிடுச்சு” என்று பேச்சியின் காதுபடவே பேசினார்கள்.
ஊராரின் கேள்விகளுக்கு முன் வெற்றாளாய் நின்று, நின்று மனதும் கூட மறத்துப் போய்விட்டது. தைரியத்தைக் கைவிடும்போதுதான், பேச்சி நின்றாள் துணையாக, “கவலப்படாதம்மா. ஊரு ஆயிரமும் பேசும். நான் இருக்கேன் ஒனக்கு, மனச தைரியபபடுத்திக்க புருசன் இருந்தும் கைம்பொண்டாட்டியா நான் வாழ்ந்து காட்டலயா? இவங்களெல்லாம் ஆயிரமும் சொல்வாங்க. அடுத்த வேள அரிசிக்கு வழி சொல்ல இந்தக் கூட்டத்துக்குத் தெரியாது. என் மகன் நம்ம கூடத்தான் இருக்கான். எங்கயும் போகல்ல. உன் பிள்ளையப் பாரு, அந்த பிஞ்சு என்ன தப்புப் பண்ணுச்சு. அத வளக்கத் தைரியமா இரு” என்று மீண்டுமொரு தூணாய் எழுந்து நின்றாள் பேச்சி.
இதோ பாண்டி வீட்லதான் பா இன்னைக்கு விசேசம்னு எல்லோரும் வந்தார்கள். அழகுத் தேவதையாய் ஜெயா அந்தக் காதணி விழாவை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். ஆம், பட்டுப்புடவையில் எல்லோரையும் வரவேற்கிறாளே அவள் தீபாதான். தீர்க்கமாய், தீட்சண்யமாய் பாண்டிக்கு பதிலாகச் சுழன்று கொண்டிருப்பது அவளேதான். வாழ்க்கையின் கடினப்பாதைகள் சரியான துணையையும் தந்துவிட்டுத்தான் போகிறது.
தீபாவின் பலம், துணை, தூண் அத்தனையும் இன்றும் தீபாவையும், ஜெயாவையும் ஓர் ஓரத்தில் இருந்தபடி வாழ்த்திக் கொண்டும், அதே நேரத்தில் யாரும் பார்க்காமல் தன் கண்களின் ஓரத்தில் பாண்டிக்காக சிந்தும் கண்ணீரையும் ஒழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாளே அவள்தான் அந்த பேச்சிதான்.