இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

காதல் ஆசை!

முனைவர் பி. வித்யா


அவசரமாக வீட்டில் நுழைந்த சத்யா, தொம்மென்று கட்டிலில் விழுந்தாள். மனம் ரணம் கண்டிருந்தது. நினைவுகளால், மனத்தின் அசைவுகளால் மனம் கலக்கமுற்றிருந்தது. மனதைப் பிசையும் ஒரு வலி கண்களின் வழி எப்போது வேண்டுமானாலும் கொட்டி விடுவேன் என்பது போலிருந்தது அவளின் நிலை.

திவாகர். அவனைப் பார்த்ததிலிருந்துதான் இந்த வலி. இதயத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. திவாகர் முந்திரிப் பழத்தின் மஞ்சள் நிறம் கொண்டவன். அது இயல்பாகவே அவனுக்குக் கவர்ச்சியைத் தந்தது. எப்போதும் பேசுகிற அவனது துறுதுறு கண்கள். ஓரிடத்தில் நிற்காத சுறுசுறுப்பான வாலிபன் என்று அவனைப் பற்றிச் சொல்லலாம்.

சத்யாவின் சிறுவயதுப் பள்ளித் தோழன். பள்ளிகள் மாறி பாதை மாறவும் அவன் முகம் கூட அவளுக்கு மறந்தே போய்விட்டது. ஒரு நாள் கல்லூரிக்குச் செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த போது, அவசரஅவசரமாய் மெல்லிய மீசை, தாடியோடி எதிரிலிருந்து சாலை கடந்து ஒரு வாலிபன் வரவும் எங்கே தன் மேல் இடித்துவிடப் போறானோ? என்று சத்யா ஒதுங்கி நிற்க,

அந்தக் குரல் சட்டென்று சத்யாவின் பெயரைத்தான் உச்சரித்தது.

“சத்யா… நான் உன்னை... என்னை விட நேசிக்கிறேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என் வாழ்க்கையின் மீதி நாட்களில் நீயே என்னோடு இருக்கணும். நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு என்று சுருட்டிய காகிதக் கட்டொன்றை அவள் கைகளில் திணித்துவிட்டு, அவள் பார்வைக்கோ, பதிலுக்கோக் காத்திருக்காமல் பறந்து விட்டான். அவன் யார்? என்று பிடிபடும் முன்னே அவள் ஏற வேண்டிய பேருந்து வந்து விட்டது. டிக்கெட் எடுக்க மறந்தவளை கண்டக்டரின் அழைப்புதான் உலுக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

அவள் கல்லூரிக்கு அங்கிருந்து ஒரு மணிநேரப் பயணம் விடுதியில் இடம் கிட்டவில்லை. ஆகவே தினமும் ஒன்பது மணி கல்லூரிக்கு ஏழு மணிக்குப் பேருந்தைப் பிடித்துச் செல்ல வேண்டும். மனதில் என்னென்னவோ அந்த ஒரு மணி நேரத்தில் ஓடிக் கலைத்து விடும். அந்தத் துண்டுச் சீட்டைப் பிரித்துப் பார்க்கவும் பயம், தோழிகளிடம் கூறினால் கிண்டல் அடிப்பார்கள், என்னவென்று அப்புறம் பார்ப்போம் என்று பையின் மூலையொன்றில் போட்டு வைத்தாள்.

அதனை என்னவென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இருந்த போதும் அதை வகுப்பு இடைவேளையில் பார்ப்போம் என்று ஆறப்போட்டாள். இடைவேளையும் வந்தது. பிள்ளைகள் களையவும் சட்டென்று அதனை எடுத்துப் பார்ப்போம் என்கையில் “கண்மணி” என்ற வார்த்தை நுண்ணோக்கியில் பார்க்குமளவு சிறியதாய் எழுதி இருந்தது. பொதுத்தேர்வு மாணவர்கள் பிட்டடிக்கும் பேப்பரைப்போல திடீரென்று கீழே விழுந்து இலங்கைக்கு தீ வைத்த அனுமனின் வாலைப் போல அவளது கைவிட்டு கீழிறங்கி ஓடத் தொடங்கியது.

“அச்சச்சோ” என்று யாரும் பார்க்கும் முன்னே அள்ளி வாரி உள்ளேப் போட்டு வைத்தாள். மனதில் தடுமாற்றமும் திகைப்பும் கூடக்கூட இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கிவிட்டது.


உணவு இடைவேளை வந்ததும் பெரும்பாலும் பையன்கள் வெளியில் செல்வதும், பெண்கள் அனைவரும் விடுதி சென்று உணவு உண்பதும் வழக்கம் என்பதால் தனித்து விடப்பட்டதும், அதை என்னவென்று பார்த்துவிடும் ஆர்வம், அவள் இதயத்தைப் பிடுங்கி வெளியில் எறிந்து விடும் போல இருந்தது.

மெல்ல எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். “கண்மனி! நான் திவாகர், நானும் நீயும் ஒரே வகுப்பில் தான் படித்தோம், நினைவிருக்கிறதா? நீ நன்றாகப் படிப்பாய் நான் அப்படியில்லை. அதனால்தான் சத்யமூர்த்தி சார் உன் குரூப்ல படிக்கப் போட்டார். நீயும் என்னைப் படிக்க வைக்க என்னென்னவோ முயற்சித்தாய். எனக்கென்னவோ படிப்பை விடவும் உன்னைத்தான் பிடித்திருந்தது. என்ன செய்ய சொல்லத்தான் முடியவில்லை. இன்று அவை நடந்து பல வருடங்கள் கழித்தும் உன் முகமே என் கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது…” என்று வாசிக்க ஆரம்பித்தவள், உணவு இடைவேளை முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலித்ததும்தான் தெரிந்தது, தான் இன்னும் உண்ணவே இல்லை என்பது.

கல்லூரியின் பாடங்களுக்குள் அவள் மனம் போகவில்லை வேறு என்ன எழுதி இருப்பான் என்பதிலேதான் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அதை முழுவதும் படித்து முடிக்க, மனம் துடித்துக் கொண்டிருந்தது.

வீட்டில் அம்மா அப்பா இல்லாத நேரமெல்லாம் அவள் உணவாய் இருந்தது. அந்த கடிதம் இல்லை பாடல், எழுத்து, இதில் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். கடிதம் மதுரை புரோட்டாவைப் போலத்தான் சுத்தி சுத்தி அவளை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனைத்தான் அன்றிலிருந்து பார்க்கவே இல்லை.

யாரிடம் அவனைப் பற்றிக் கேட்பது, பழைய தோழிகளிடம் என்றால்… என்ன விசேசம் என்று முகத்தைப் பார்த்தேக் கேட்டு விடுவார்கள். என்ன செய்வது, இன்று செமஸ்டரின் கடைசி நாள் வகுப்பு, வகுப்பு முடிந்ததிலிருந்து கல்லூரியில் தேவுகள் மட்டுமே நடக்கும், பேருந்தில் ஏறி அமர்ந்து ஜன்னலோரக் காற்றில் முழு முகத்தையும் காட்டி மூச்சுக்காற்றில் ஏற்றிக் கொண்டு பாதி முகத்தைக் காற்றுக்குக் காட்டி அனுபவிக்கத் தொடங்கிய வினாடி, பின்னிருந்து அவன் குரல், “டேய் மச்சான்… என்னடா இந்தப் பக்கம்” என்பதைக் கேட்ட மறுவினாடி அவளுக்குள் எல்லாம் ஸ்தம்பித்துப் போனது, அவளை அவன் பார்ப்பதாகவேத் தோன்றியது. மனதுக்குள் ஏதோ ஒன்று காற்று படும்போதெல்லாம் புல்லரிக்கச் செய்து கொண்டிருந்தது.

பேருந்து நிறுத்தத்தில் அவன் இறங்கி இவளருகே ரயில் தண்டவாளம் போல் பத்தடி எடுத்து வைக்கவும், பதற்றத்தில் நின்றுவிட்டாள் சத்யா.

“சத்யா… சத்யா… நில்லு… ஒரு நிமிசம் நில்லு…” அவன் கூப்பிடக் கூப்பிட எவ்வளவு வேகமாய் கல்லூரியின் முகப்புக்கு எப்போது வந்தாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை.

“சரி… சத்யா நீ வகுப்ப முடிச்சுட்டு வா காத்திக்கிட்டிருக்கேன்”னு அவன் சொன்னது தெளிவாகத்தான் காதில் விழுந்தது. என்ன நினைத்தாளோ தெரியாது எவ்வளவு வேகமாக வகுப்பை அடைந்தாள் என்பது இன்று நினைத்தாலும் விசித்திரம்தான்.

அவள் வரும்வரை அவன் எங்கிருந்தானோ தெரியாது, அவள் கல்லூரி விட்டு வெளியில் வந்ததும் பின்னேயே வந்து சேர்ந்தான், இவளுக்கு மட்டும் கேட்கும்படி,

“சத்யா… சத்யா...” என்று மெல்ல அழைத்தான். ஆனால், இவளுக்கென்னவோ அவன் இவளை அழைப்பதைப் பார்த்து எல்லோரும் நின்று இவளைப் பார்ப்பதைப்போல் பிரமை உருவாகிவிட்டது.

ஒரு மரத்தடியில் நின்றுவிட்டாள். அவளையும் மறந்து விரல் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தாள். சுரண்டி சுரண்டி அந்தச் சவளை வேப்பமரத்தின் பட்டைகளையேப் பிரித்து எடுத்து விட்டாள். அவன் மெதுவாய் அருகில் வந்து நின்றான். அப்பொழுதுதான் அத்தனை வருடங்கள் கழித்து பார்க்கிறாள் சந்தனத்தையும் மஞ்சளையும் பிசைந்தெடுத்த நிறம், அங்கங்கே நானும் வாலிபன்தான் என்பதைக் காட்டும் இளமீசை, தாடியுடன் பார்த்ததும் வேறு பார்வையின்றி அவனை மட்டுமேப் பார்த்ததை நினைத்தால் இன்னும் அத்தனைக் கசப்புகளையும் மீறி அவளுக்குள் வெட்கம் தலைக்கேறிவிடும்.

“சத்யா… என் இப்படி சிலை மாதிரி நிக்கிற…? ஏய்…. ஏய்… சரி நான் சொல்ல வந்தது என்னன்னு உனக்கே தெரிஞ்சிருக்கும், நான் ஐ. டி. ஐ படிச்சேன். இப்போ கோயம்பத்தூரில ஒரு கம்பெனில வேலைக்குப் போய்கிட்டு இருக்கேன். நாளைக்கு நான் ஊருக்குப் போறேன், அதுக்குள்ள உன் பதிலென்னன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் இன்னைக்கு வந்தேன்.” என்று ஒரு வழியாகச் சொல்லி முடித்தான்.

அவன் சொல்லும் வார்த்தைக்குள் இவள் மனம் போனதோ என்னவோ அவ்வப்போது அவன் பேசும் போது தெரியும் சிங்கப் பல்லழகையும், காற்றில் சிறிதாய் அசைந்தாடும் தன் முடிகளை அவன் கோதி விடும் அழகையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பாடமேக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவனை எழுப்பி பதிலென்ன? என்று கேட்டால், கேள்வியேத் தெரியாமல் விழிப்பானே, அது போலத்தான் இருந்தது, அவள் நிலையும்.

அவன் பதில், பதில் என்று கேட்டதும் தூக்கம் கலைந்த மாணவனைப்போல, “எனக்கு உன்ன பத்தி தெரியும்தான். ஆனாலும் திடீர்னு நீ கேக்கற எனக்கு என்ன சொல்லன்னு தெரியல. உனக்கு என்ன அவ்ளோ பிடிக்கும்னா வீட்ல வந்து பேசுன்னு” ஏதோ உசிலம்பட்டி ரத்தம் அவளுக்குள்ளே ஓடியதில் தைரியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று கன்னத்தில் மார்கழி மாதப் பனித்துளிகளை அள்ளி எடுத்து கொட்டியதைப்போல ஒரு உணர்வு.

“சரி… நான் இன்னைக்கு நைட் ஊருக்குப் போறேன் வர ஒரு மாசம் ஆவும். வந்ததும் அம்மா அப்பாவோடு உன் வீட்டுக்கு வறேன்னு” சொல்லிக்கொண்டு ஓடியே விட்டான்.

காற்றோடு காற்றாக அவன் காதலை முதல் முத்திரையாய் அவள் கன்னத்தில் வைத்துவிட்டு ஒடிவிட்டான். பார்ப்பதெல்லாம் அழகாக மாறிப் போனது சத்யாவுக்கு. ஆனால் முதல் முத்தத்தில் அன்றிரவேக் காய்ச்சலும் வந்துவிட்டது. என்ன என்னவென்று அம்மா கேட்டதற்கு என்ன சொல்வாள், முத்தக் காய்ச்சலென்றா? தோழிகளிடம் சொன்னால் அவ்வளவுதான் தொலைந்தோம் என்று இதயத்தில் பூட்டி வைத்தாள் முதல் முத்தத்தை.

அன்று காய்ச்சலில் கிடந்ததைப் போலத்தான் இன்றும் நெருப்பாய் உடம்பு தகித்துக் கொண்டிருந்தது. பின் இரண்டு மூன்று முறை அவனைச் சந்தித்திருப்பாள் சத்யா. மனசு மகிழ்ச்சியில் திளைத்து, அவன் மேல் நிறைய நம்பிக்கையைத் தானேச் சேர்த்து வைத்துக் கொண்டது. மனதில் அவன்தான் வாழ்க்கை என்று முடிவெடுத்து விட்டாள்.

“சத்யா…சத்யா எழுந்திரிம்மா… ஒருவாய் சாப்பிட்டு படும்மா… உடம்பு சரியில்லையா? தைலம் கொண்டு வரட்டுமா” என்று சத்யாவின் அம்மா மீனாட்சி உசிப்பியதும் தான் நிஜ உலகத்திற்கு வந்தாள் சத்யா.

“ஒன்னுமில்லம்மா தலை வலிக்குது. சூடா ஒரு டீ மட்டும் குடும்மா போதும்” என்றாள்.

“வெறும் வயித்தோட படுக்காதம்மா, நாளைக்கு ஸ்கூல் போணும்ல” என்றாள் மீனாட்சி.

“ஆமாம்மா, அதலாம் ஒன்னுமில்லம்மா சரியாகிடும் நீ போய் தூங்கும்மா...” என்று அம்மா கொண்டு வந்த டீயைக் கொடுத்ததும், இவள் வாழ்க்கையைக் காப்பாற்றிய அந்த போலீஸ்காரரைத்தான் மனம் கையெடுத்துக் கும்பிட்டது.

காதலன் மீது நம்பிக்கை மேம்பட்டு இருந்த சமயம், நான் அம்மாகிட்ட பேசிட்டேன். அம்மா உன்ன பாக்கணும்னு சொன்னாங்க, என்று ஒருநாள் வீட்டிற்கே கூட்டிப் போனான். இவள் பயத்தில் தத்தளித்தாலும், திவாகரின் அம்மா இயல்பாகத்தான் பேசினார்கள். “எனக்கு இவன் விருப்பந்தான் மா முக்கியம். எனக்கு வஸந்தி மாதிரி நீயும் ஒரு மகதான். வஸந்திக்கும் தெரியும். அவங்க அப்பாகிட்ட மட்டும்தான் பேசணும்” என்று இக்கன்னா வைத்ததோடு ராசாத்தி என்று மாடியில் மலர்ந்திருந்த பிச்சிப் பூக்களைக் கட்டி தலையில் வைத்ததும் சத்யாவிற்கு மனது நிரம்பிவிட்டது. அந்த வீட்டிற்கு அப்பொழுதே மருமகளாகி விட்டதாக மனது மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டது.

அடுத்தொருநாள் முதுநிலை பட்டப்படிப்பை தொடங்கியிருந்த வேளையில், திடீரென கல்லூரியின் வெளியில் காத்திருந்து பேசவந்தான் திவாகர். காரணம் தெரியாமல் இவள் நின்றிருக்க அவளுக்கு அப்பொழுது விடுதி கிடைத்திருந்தது. “வா சத்யா… வீட்டுக்குப் போவோம். அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. உன்னப் பாக்கணும்னு சொல்றாங்க, அதான் அவசரமா உன்னப் பாக்க வந்தேன்”

“இல்ல திவாகர் நான் ஹாஸ்டல் போகணும். வீட்டுக்குத் தெரிஞ்சாப் பிரச்சனை ஆயிடும்.” அவள் மறுத்தாள்.

“என் மேல அப்ப உனக்கு நம்பிக்கை இல்லையா? என்ன நீ சந்தேகப்படுறியா?”

“இல்ல திவாகர் மணி அஞ்சாகப் போகுது. ஹாஸ்டல் குளோஸ் பண்ணிட்டா திட்டுவாங்க உள்ள விட மாட்டாங்க” ஏதேதோ காரணம் சொல்லிப் பார்த்தாள்.

“அப்போ நான் உனக்கு வேணாமா? எங்க அம்மாவுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா? அவங்க உன்ன கூப்பிட்டதாலதான உன்ன பார்க்க வந்தேன் நீ இப்படி பண்றியே என்றதும், சரி விடு என்ன மறந்திடு, நானும் உன்ன மறந்துடுறேன், உன்ன மறந்துட்டு மட்டும் உசுரோடவா இருக்கப் போறேன், அம்மாவும் முடியாம இருக்காங்க. நானும் போறேன். நீ மட்டும் நல்லாயிரு” என்று கோபப்பட ஆரம்பித்தான்.

“இல்ல திவாகர் நான் இஷ்டத்துக்கு லீவ் போட முடியாது. லெட்டர் குடுக்கணும்…” என்று இழுத்தாள். “சரி எழுதிக் குடுத்திட்டு வா நான் வெயிட் பண்றேன்”

“லேட் ஆகும்டா”

“லேட் ஆனாலும் பரவாயில்லை. நாளைக்குக் கொண்டு வந்து விட்டுடுவேன் வா” என்றான்.

இப்போது நினைத்தாலும் ஒரு பேய்குகைக்குள் மாட்டிக் கொண்டதைப் போல மனம் மருளுகிறது.

ஊருக்குப் போகும் பேருந்துகள் குறையத் தொடங்கி விட்டது. பக்கத்து ஊருக்கான பேருந்து மட்டுமே நின்று கொண்டிருந்தது.

“ஒரு நிமிசம் இங்கயே நில்லு. நான் மெடிக்கல் போய் அம்மாவுக்கு மாத்திர வாங்கிட்டு வந்துர்றேன். இவன் என் பிரெண்ட் அரவிந்த்” என்று ஒருத்தனை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“மச்சான் ஒரு நிமிசம் மெடிக்கல் போய்ட்டு வந்துர்றேன்டா” என்று அவனிடம் ஒப்படைத்துச் சென்று விட்டான் திவாகர்.

மணி ஒன்பதைத் தொட்டிருக்கும் அங்கு எங்கும் வெளிச்சமே காணோம்? ஊர்ப் பேருந்துகள் எல்லாம் போய்த் திரும்பிவிட்டது. எதிர்ப்பக்கத்தில்தான் பேருந்துகள் போய்க் கொண்டிருந்தது.

அரவிந்த் மெல்ல சத்யாவின் அருகே வந்து நீயும் திவாகரும் இந்த மாதிரி எத்தன நாள் தனியா இருந்தீங்க? என்று ஒருவித குரூரப் புன்னகை மிளிரக் கேட்டதும் சத்யாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

பயத்தை முகத்தில் காட்டாமல், “நான் உங்க பிரெண்டோட காதலி நினைவிருக்கா?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.

“அதனாலதான் உரிமையாக் கேக்கறேன். எது கிடச்சாலும் அவனுக்கும் எனக்கும்தான். அவ்வளவு நல்ல நண்பர்கள்” என்று அவன் பேசும்போதே, இவளுக்குள் உலகமே அந்த மரங்களைப் போல இருண்டு விட்டது.

திடீரென்று அந்த நிமிசம் இவள் பக்கம் வெளிச்சம் வரவும், தைரியத்தோடு துணிந்து நடுரோட்டில் நின்று கை விரித்து நிறுத்தினாள். நிறுத்தியதும்தான் தெரிந்தது. போலீஸின் ரோந்து வண்டி அது என்று.

அவளது அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ போலீஸ் கீழே இறங்கி வந்து “நீ என்னமா பண்ற இங்க” என்று கேட்கும் போது திவாகரின் நண்பன் அரவிந்த் நடந்து வேறு பாதையில் ஓடிக் கொண்டிருந்தான்.

“யாரு நீ இங்க என்ன பண்ற” என்று அதட்டிக் கேட்கவும் என்ன சொல்வதென்றே தெரியாமல் வெடவெடத்துத் தடுமாறிக் கொண்டிருந்தவள் உண்மையைத்தான் சொன்னாள், நான் கல்லூரியில் படிக்கிறேன். என் அத்தைக்கு உடம்புக்கு முடியலன்னு திடீருனு கௌம்பினேன். பஸ் எல்லாம் போயிடுச்சு அதான் சார் இங்க நின்னுகிட்டு இருக்கேன்னு” இவ சொன்னதும்,

“வா வண்டியில ஏறுன்னு போலீஸ் சொன்னதும், பயத்தோடு நடுக்கமும் சேர்ந்து கொண்டது. பார்த்தா படிச்ச புள்ளயாத் தெரியற இந்த நேரத்துல இங்க நின்னா எவ்வளவு ஆபத்து, உன்ன நம்பி படிக்க வைக்கிற அம்மா, அப்பாவ நெனச்சு ஒழுங்கா படிங்கம்மா...”ன்னு சொன்னதும் இவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பொல பொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

“அழுகாதம்மா தப்பா ஒன்னும் சொல்லல, உன் வீட்டக் காட்டு அங்கயே இறக்கி விட்டுடறோம்.” ன்னு அவர் சொன்னதும் எந்த சாமி புண்ணியமோ அன்று அவள் தப்பித்தது உண்மையில் அத்தனைத் தெய்வத்தையும் வணங்கினாள்.

அப்பாவைப் போல இருந்த போலீஸ் இப்போது அவள் கண்ணுக்கு கடவுளாய்த் தெரிந்தார்.

திவாகரும், அவன் நண்பனும் இன்று நினைத்தாலும் வாழ்க்கையைச் சற்று நேரத்தில் புரட்டிப் போட வந்தவர்கள் என்று ஆங்காரம் பொங்கிக் கொண்டு வந்தது சத்யாவுக்கு.

இன்று அவள் கையில் பிள்ளைகள் எதிர்காலம் நிற்கிறது. ஒரு ஆசிரியையாய் அவள் உயர்ந்து நிற்க, அன்று நற்பண்பு நிறைந்த போலீஸ் விதைத்த விதைதான் காரணம் என்று தோன்றிற்று. அதன் பின்னே திவாகரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவனை விடவும் அவன் அம்மாவின் மீதுதான் அதிகக் கோபம் அவளுக்கு வந்தது. எத்தனை தத்ரூபமான நடிப்பு. யார் குடியை நம்ப வைத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ... என்று இப்பொழுதும் தோன்றுகிறது.

அன்று இதயத்தைப் பூட்டியவள்தான் மூளைச் சிறைக்குள் வைத்து. அதுவேதான் இன்று அவளை உயர்த்தியிருக்கிறது … காதல்... காதலன் மீது நம்பிக்கை… அதிலெல்லாம் தவறில்லை… ஆனால், என்ன அளவு என்பதில்தான் கண்ணியம். இதைச் சொன்னால் காதலிப்பவர்களுக்குப் பிடிக்குமா? எனத் தெரியாது இருந்தாலும் சொல்லி வைப்போம். நல்லவற்றைச் சொல்வது ஆசிரியர் கடனன்றோ…!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p345.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License