இதோ கிடத்தப்பட்டிருக்கிறது சித்ராவின் சடலம். அவளுக்குப் பிடித்த வண்ணத்தில்தான் உடை அணிவித்திருந்தார்கள். இளஞ்சிவப்பு நிற உடையில் அவள் இப்போதும் உயிருடன் இருப்பவள் போல்தான் இருந்தாள். அவளைச் சுற்றி அவளின் அப்பா, அம்மா, உறவினர்கள் என்று அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போதும் கூட, சித்ரா நடந்தும் வரும் போது ஒரு நறுமணமும், சுகந்தமும், மனதுக்கு ஒரு குளுமையும் வருமே, அதுபோல வாசனைத் திரவியங்களால் சூழப்பட்டதைப் போல் இப்பொழுதும் எனக்குத் தோன்றியது.
திடீரென வந்த பன்னீர் வாசமும், குவிந்து கிடந்த அவள் மீது குவிக்கப்பட்டிருந்த ரோஜா மாலைகளிலிருந்து வாசம் வந்ததும்தான், அது கேதவீடு (இறப்பு நிகழ்ந்த வீடு) என்ற உண்மையை உணர வைத்தது.
எங்களால் சித்ரா அக்காவின் இறப்பை ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் அக்காவோடுதான் விடுதியில் தங்கிப் பயின்று வந்தோம், இன்று ஊருக்குப் போன பிரியா, விடுதிக்குத் தகவல் சொல்லியதும் எல்லோரும் வெடவெடத்துப் போனோம், அக்காவிற்கு உடம்பு சரியில்லாததால் விடுதியிலிருந்து வீட்டிற்குத் தகவல் சொல்லவும் போன மாதம் அழைத்துச் சென்றார்கள். பிறகு எந்தத் தகவலும் இல்லை. ஆனால், இன்று இப்படி ஒரு தகவல் வந்துள்ளது.
எனக்குக் கரையை உடைத்துச் சீறும் பேரலை போல கோபமும், அழுகையும் மாறிமாறிப் பொங்கிக் கொண்டு வந்தது. சித்ரா அக்கா மனநிலை பிறழ்ந்து ஊண் உறக்கமின்றி இருந்துதான் இறந்திருக்கிறாள்.
ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். “பேய் பிடித்துவிட்டது, நெடுங்குளம் சாமியாருகிட்டப் போனாங்க, அப்பறம் பல கோயில்கள் அலஞ்சாங்க, அப்பறந்தான் வேற வழியில்லாம போன ஒரு மாசமும் பள்ளிவாசல்ல சங்கிலியிலக் கட்டிப் போட்டு வச்சுருந்தாங்க” என்று சொல்லவும் என் கண்களில் கண்ணீர் கண்களைக் கடந்து கன்னங்களைத் தொட்டுவிட்டது.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்கக்கேட்க இயலாமை மனதைப் போட்டுப் பிசைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் மலர்ந்த ரோஜா மலரைப்போல வாசமும், மலர்ச்சியும் உடைய அவளது முகம் கண் முன்னே ஊசலாடியது. அவள் நேர்த்தியாக உடை உடுத்தும் அழகே எங்களைப் பொறாமை கொள்ளச் செய்யும்.
அப்படிப்பட்டவளைத்தான், பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி சாமியாரிடம் கூட்டிப் போய் சாட்டையால் அடித்திருக்கிறார்கள். கோவில்களுக்குப் போய் என்னென்னவோ பரிகாரங்கள் என்று பலவற்றையும் செய்ய வைத்திருக்கிறார்கள். அவள் உடல் முழுவதும் பல காயங்கள் இருந்ததாய் பலரும் பேசிக் கொண்டார்கள். எங்களுக்குத் தெரியும், அக்கா அவள் நகத்தைக் கூட அழகாக அலங்காரம் செய்வாள். இன்று…
எங்கள் கல்லூரியில் இருந்து மூன்றாம் ஆண்டு மாணவிகளையும், முதுகலை மாணவிகளையும் மட்டும் சமூகப் பணிக்காகக் கிராமம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது அவ்வளவாகப் பழக்கமில்லை. பின் இருவரும் நல்ல தோழிகளைப் போல பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். அந்தப் பழக்கத்திலேயே அக்கா காதலில் தோற்றவள் என்பதும், சில நாட்களுக்கு முன்னால்தான் அது நடந்திருக்கிறது என்றும் தெரிந்தது.
அக்கா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் குணம் கொண்டவள். நான்காம் நாள் நாங்கள் துப்புரவு பணிகளை முடித்துவிட்டு இரவில் கூடு சேரும் குருவிகளைப் போல் தங்குமிடம் சேர்ந்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும் அந்த ஊரின் பழக்க வழங்கங்கள் சில விசித்திரமாய் இருந்ததை நினைத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.
பத்து மணிக்கு மேலாகியும் இருவர் மட்டும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது, சித்ரா அக்காவும், அவள் தோழி திவ்யாவும்தான் அது.
“யேய், உன் லவ்வர நம்பாதடி, கடைசியில உன்ன கழட்டி விட்டிருவான்”
“ஏன்டி இப்படிச் சொல்ற? அவன் நல்லவன் டி”
“அப்படித்தான்டி இருப்பானுங்க. உலகமே நீதான்னு சொல்லுவானுங்க... ஆனா நம்பாதடி”
“நீ வேற என்ன பயமுறுத்தாதடி...”
“நான் என் அனுபவத்துல இருந்து சொல்றேன்டி... கொஞ்சம் கவனமா இரு. எவ்வளவு உண்மையா இருந்தாலும், கவனமா இருக்கறது தப்பில்லல்ல. சரி சரி பரவாயில்ல, உன் கையக் காட்டு, உன் காதல் ஜெயிக்குமா? இல்லையான்னு? சொல்றேன்” என்று பேசிக்கொண்டே இருந்தாள்.
திவ்யா தூங்கியதன் பின்னும் சித்ரா பேசுவது கேட்டது, தூக்கத்தில் புலம்புகிறாள் என்று நினைத்து நானும் உறங்கிப் போனேன். ஐந்தாம் நாள் அந்த ஊருக்கு அருகில் இருந்த ஆசிரமம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள். நானும் இன்னும் மூன்று பேர்களும் மாதவிலக்கென்று புளியமர நிழலில் அமர்ந்திருந்தோம். சித்ரா அக்கா போன வேகத்தில் வெளியே வந்தாள். இந்தச் சாமியார் ஒரு போலிச்சாமியார் என்றும் பெண்களையும் மக்களையும் ஏமாற்றுவதுதான் இவர்களின் வேலை என்றும் எங்களிடம் ஒரு சொற்பொழிவே நடத்தி விட்டாள்.
திடீரென என் தோழியின் காலணிகளை நாய் ஒன்று கவ்விக் கொண்டு ஓடியதும், அக்காதான் மிக வேகமாக ஓடி அதனைப் பிடுங்கிக் கொண்டு வந்தாள். அவ்வளவு வேகம் அவளிடம் முன்பு நாங்கள் பார்த்ததேயில்லை. ஏதோ மாறுதல் அவளிடம் தொடங்கியிருந்ததை மட்டும் உணர முடிந்தது. நாங்கள் பணி முடிந்து விடுதி திரும்பிய இரண்டு நாட்களில் அவள் வேறு விதமாக மாறிப் போனாள். காய்ச்சலும் அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆகவே விடுதிக் காப்பாளர் தகவலின் பேரில் வீட்டிலிருந்து வந்து அழைத்துச் சென்றார்கள்.
பிறகு அவளை இங்கே பிணக் கோலத்தில்தான் எங்களால் பார்க்க முடிந்தது. இதையெல்லாம் யோசிக்கும் போது மனதில் ராஜேஸின் மீது வைத்திருந்த காதல்தான் இவளைப் பித்துப் பிடித்ததைப் போல மாற்றி இருக்கிறது என்று தெரிந்தது. சித்ராவின் அழகில் மயங்கிப் போய் ஆறு மாதங்களாய்ப் பின்னால் அலைந்து, பின் அக்கா சம்மதித்ததன் பின் எப்பொழுதும் பெண்கள் சொல்லும் காரணங்களைப் போல ராஜேஸ் சொல்லி இருக்கிறான்.
“நான் முதல் பையன் எனக்குப் பின்னே இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கெல்லாம் திருமணம் முடித்த பின்தான், நான் என்னைப் பற்றி யோசிக்க முடியும். நான் சம்பாதிப்பதற்கு வெளிநாடு செல்லப் போகிறேன். அதனால் என்னை மறந்துவிடு” என்று சொல்லி இருக்கிறான்.
முதலில் அது உன் பொறுப்பு. இதனால் எனக்கு உன் மேல் காதல் கூடத்தான் செய்கிறது. உன் கடமையை முடிக்கும் காலம் வரை காத்திருக்கிறேன். நீயின்றி இனி என்னால் வாழ இயலாது. என்று கூறியிருக்கிறார்கள். முதலில் சிறிது சிறிதாய் தவிர்க்கத் தொடங்கியவன். ஒருநாள் தன் தொடர்பு அனைத்தையும் துண்டித்துக் கொண்டான்.
அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் மனதிலேயேப் புழுங்கிக் கொண்டு இருந்திருக்கிறாள். தனிமையில் அழுவதும், விடுதியில் அறையைப் பூட்டிக் கொண்டு படிப்பதைப் போல, அழுது கொண்டே இருப்பதும், சாப்பாட்டைத் தவிர்ப்பதுமாய் இருந்திருக்கிறாள்.
ஒருநாள், மனதைத் தேற்றிக் கொள்வோமே என வீடு செல்லப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கையில் மிக நெருக்கமாக ஒரு ஜோடி, அவள் நின்றதன் எதிர்புறத்திலிருந்த தியேட்டரிலிருந்து வெளிவருவதை வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தவள். ஒரு கணம் தன் பார்வையை நிறுத்திக் கூர்ந்து பார்க்கவும் திடுக்கிட்டாள். வந்தது ராஜேஸ், மற்றொரு பெண்ணுடன் தியேட்டரிலிருந்து... அவளால் அவள் கண்ணை நம்பவில்லை. இல்லை என்பதைப் போல தன் தலையைத் தானே ஆட்டிக் கொண்டாள். பார்த்த உடனே, அப்பொழுதே மிகவும் மனம் உடைந்து விட்டாள். அவனை அப்பொழுதே சட்டையை இழுத்துப் பிடித்து அடித்துவிட மனம் பொங்கி குமுறிக் கொண்டிருந்தது. அவனை இவள் உண்மையாக உருகி உருகிக் காதலித்ததற்கு மிகக் கேவலமாக ஏமாற்றியதனை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை பதில் பேசும் அவள் குணம் வாய் திறந்தால் மூட மாட்டாள் என்று சொல்லும் அளவு மாறிப் போனது. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே சித்ரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறாள். மெழுகுவர்த்தியை பழுக்கக் காய்ச்சி தன் அடுத்தவர் பார்வை படாத இடத்தில் சுட்டுக் கொள்வது. அந்த வலி மறந்தால் திரும்பவும் திரும்பவும் இதனைச் செய்திருக்கிறாள்.
எப்போதாவது சின்னத் தழும்புகளை அணுக்கத் தோழிகள் கண்டு கேட்டால் ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பியிருக்கிறாள். உடலில் வரும் ரணத்தை விட உள்ளிருக்கும் அவளை முடங்கிப் போகச் செய்திருக்கிறது. ஆனால் இறுதிவரை மனதுக்குள் இருந்த வார்த்தைகளை யாரிடமும் சொல்லாமலேயே அதற்கான வடிகாலும் கிடைக்காமலேயே ஏமாற்றத்திலிருந்து விடுபட முடியாமல் இன்று இவ்வுலகத்தையே புறக்கணித்துவிட்டாள்.
ஆம், உண்மையில் தான் நேசித்த மிகவும் அதிகப்படியான நம்பிக்கை வைத்துவிட்ட ஒரு மனிதர் நம்மைப் புறக்கணித்து விட்டால், தானும் இங்கு யாருக்கும் வேண்டப்படாதவராகத் தோன்றுகிற எண்ணம், சிறிதுசிறிதாக, தோழர், தோழிகளைப் புறக்கணித்து, தன் பெற்றோரைப் புறக்கணித்து, தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனையும் புறக்கணித்து, இன்று அவள் தனது உடலையும் புறக்கணித்து விட்டாள். முதலில் மனம் விட்டு வெளியில் பேசத் தயங்கியவள். பின்னர் வெளிவருதலையே மறந்து இன்று இந்த நிலையில் மாறி இருப்பதை, இப்பொழுது கண்டுபிடித்து என்ன செய்ய?
இனி சித்ராவை உயிருடன் கொண்டு வர முடியுமா?. இதனையெல்லாம், விடுதியில் சித்ராவின் நெருக்கத் தோழி இன்றுதான் வாய் திறந்து வெளியில் சொல்லுகிறாள். அவளுடைய மாற்றங்களைச் சரிவரக் கவனிக்காமல் இருந்த எங்கள் மேல்தான் எனக்குக் கோபம் வருகிறது. அழுது புலம்புகிறாள்.
பல வார்த்தைகளைப் பெண்கள் பேசவேக் கூடாது, பெருந்தவறு என்று சொல்லி பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். பெண்ணாய் இருந்தால் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, என்று எத்தனைக் கட்டுப்பாடுகள். பெண்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும், ஏன், எப்படி அமர வேண்டும், எப்படி, எப்பொழுது உணவு சாப்பிட வேண்டும் என்பதைக் கூட சமூகமே முடிவு செய்யும் போது, ஒரு பையனைப் பார்க்கும் போதே, அதுவே பெருங்குற்றம் என்று அவளுக்கு மனது சொல்லிவிடுகிறது. அவளை அறியாமல் நேசிக்கத் தொடங்கி விட்டாலொ, அது தூக்குத் தண்டனைக்குரிய குற்றமாகி விடுகிறது. அதனை பெற்றவர்களிடம் மறைக்க வேண்டியக் கட்டாயத்தில் இப்படிச் சிக்கலிலும் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். அதனையும் கவனிக்கத் தவறி இப்படி சித்ராவைப் போல், இழந்த பின் அழுது புலம்பினாலும் என்ன மாறி விடப் போகிறது.
தொடக்கத்திலேயே தவறு அதைப் பெரியவர்களிடம் பேசக் கூடாது என்று சொல்லி விட்ட பின், எப்படிப் பெண் பிள்ளைகள் அதில் இருக்கும் பிரச்சனைகளை பெரியவர்களிடம் பேசுவார்கள்? எந்தப் பிள்ளைகள் இறந்தாலும் தவறாய்ப் பேசவும் பல கதைகளை அவள் செத்துப் போன பின்னும் அவள் பிணத்தோடு சேர்த்துக் கட்டி அவளை மட்டும் குழிக்குள் புதைத்துவிட்டு கதைகளைப் பரப்பத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் புதைக்கப்பட்ட பின்னும், அவர்களின் வேதனை முடிச்சுகள் அவிழாமல், பெற்றவர்களிடம் அவர்கள் பேச வேண்டிய இறுதி வார்த்தைகள் கேட்கப்படாமலே, அவர்களைப் பற்றிய கட்டுக் கதைகளே பரவி விடுகிறது.
சித்ராவைப் போலத்தான் பலரின் உண்மையான காரணங்கள் அறியப்படாமலே புதைக்கப்படுகிறது எனத் தோன்றியது. ஆனாலும் பொய் மட்டும் உண்மை போல அவர்கள் முன்னே உலவிக் கொண்டுதான் இருக்கிறது.