எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சட்டென்று ஒருநாள் அந்தத் திடுக்கிடல் வந்தது. இப்போது வந்திருப்பது இரண்டாம் திடுக்கிடல். முதல் சம்பவத்தை முதலில் சொல்லி விட்டு அப்புறம் இங்கே என்ன ஆனது என்பதிலிருந்து தொடர்கிறேன்.
செண்பகராணியை முதன்முதலில் ஒரு சர்ரியலிச ஓவியக்கண்காட்சியில்தான் சந்தித்தேன். லியோநோரா கேரிங்டன் பற்றி நிறைய பேசினாள். அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே ஃப்ரிடா காக்லோதான் என்னுடைய ஃபேவரைட் என்றேன். சிரித்தாள்.அப்புறம் நிறைய பேசி விடைபெற்றோம். அடுத்த நாளே அவளை ஒரு புக்க்ஷாப்பில் சந்தித்தேன்.அவள் கைகளில் உள்ள புத்தகத்தை அப்போதே நான் கவனித்திருந்தால், இந்தக் கதை வேறு திசையில்
பயணித்திருந்திருக்கும்.
“ஈவில் இன் மாடர்ன் தாட்” புத்தகம் அவளது மார்பைக் கவ்வியிருந்தது. அந்த புத்தகம் உயிருள்ளதைப் போல மெல்ல அசைந்தது அவஸ்தையாக இருந்தது. “அப்படிப் பார்க்க வேண்டாம். நானொன்னும் கான்ட்ராக்ட் கில்லரோ இல்லை ஹைடெக் செக்யூரிட்டி கார்டோ இல்லை. நானொரு சுமார் சாதா ஆசாமி” என்றேன். அப்போதும் நிறைய பேசினாள்.
நிறைய பேசுகிறாள்.அறிவார்ந்த பெண்ணாக இருக்கிறாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் தினம் தினம் வாழ்க்கை சொர்க்க மயமாக இருக்கும் என்று பண்ணிக் கொண்டேன். மூன்றே மாதத்தில் மடியில் படுத்து கல்யாணத்திற்கு அவள் சம்மதித்தது அப்புறம் மற்றவைகளுக்கும் சம்மதித்தது எல்லாமே கனவு போலத்தான் இருந்தது.
ஆனால் கனவு இல்லை.
நான்காம் மாதத்தில் ஒரு நாள் அவள் என்னை விட்டு ஒரு தலை கலைந்த ரோட்டில் ஓவியம் வரையும் ஒருத்தனுடன் ஓடிப்போக இருந்தாள். ‘மேன்ரே’யின் இளமைக்கால உருவ அமைப்புடன் இருந்தான் அவன். கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்து கேட்டேன்.
“என்ன இது என்ன உன் பேர்.ஆங்.செண்பகராணி.ஓடிப்போகப் பார்க்கற.இந்த சொகுசு வாழ்க்கை அலுத்திருச்சா. இல்லே அவன் எக்ஸ்பர்ட்டா க்ரைன்ட் பண்றானா”
அமைதியாகப் பார்த்தாள். நிறைய பேசுபவள் இப்போது கத்தரித்த மாதிரி பேசுகிறாள்.
“எனக்கு நிவி கூட வாழனும்னு தோணுது”
“யாரு நிவி. என்ன பண்றான்”
“ஓவியர்”
“புவ்வாவூக்கு என்ன பண்றான். கையேந்தறானா”
“ஷிட். என் வாழ்க்கை என்னோட முடிவு. வேணும்னா அப்ளை பண்ணுங்கோ. நான் டிவோர்ஸ் குடுத்துர்றேன். முடிச்சிக்கலாம்”
“அப்ப நான் லவ் பண்ணது. உன் பேர்ல லக்ஸரி ஃப்ளாட் வாங்கினது.உனக்கு ஆடி ஏ6 வாங்கிக் கொடுத்தது”
“அதான் நீங்க கேட்டப்ப எல்லாம் என் உடம்பைக் கொடுத்தேனே. உங்களையும் உண்மையா லவ் பண்ணினேனே”
“லவ் பண்ணினேங்கற. இப்ப போறேங்கற”
”அது வந்து எனக்கு இப்ப வேற வாழ்க்கை வாழத் தோணுது”
“உனக்கு அவனோட... வேணும். அப்படித்தானே”
“அசிங்கப்படுத்தாதிங்க. நிவி ரொம்ப நல்ல மனுஷன்”
“அப்ப நானு”
“நீங்களும் நல்லவர்தான். ஆனா எனக்கு இப்ப உங்களை விட நிவிதான் பிடிச்சிருக்கு”
“சரி.டிவோர்ஸூக்கு ஏற்பாடு பண்றேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோ. பேப்பர்ஸ் ரெடி பண்ணிர்றேன்”
தலையசைத்த செ. ராணி அன்றிரவே அவனுடன் ஓட முயற்சித்தாள்.
கொத்தாக அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து (நிவி ஒரே பாய்ச்சலாக ஓடிப் போனான்) இந்த பிரத்யேக ஃப்ளாட்டில் வைத்து விட்டேன். இது முழுக்க எலக்ட்ரானிக் ஆர்ட்டிபிஷல் சமாச்சாரங்களைப் பொருத்தியிருக்கிறேன். அவள் இந்த வீட்டின் அறையை விட்டு வெளியே வர முடியாது.அவளது மனநிலை அறிந்து (ஆர்ட்டிபிஷல் இன்டலிஜன்ஸ்) அவளுக்கான உணவை தானியங்கி கிச்சன் தயார் செய்து விடும்.அவள் காலம் முழுக்க இந்த தனிமைச் சிறையில் இருந்தாக வேண்டும்.முறையாக லவ் பண்ணினவனை தனியாக விட்டு விட்டு ஓடிப்போக முயன்றாள் அல்லவா. அதற்காகத்தான் இந்த தனிமைத் தீவாந்திர தண்டனை அவளுக்கு.
இப்போது இரண்டாம் திடுக்கிடலுக்கு வருகிறேன்.
ப்ளாஷ்பேக் முடிந்து விட்டது.பாதிக்கதையில் ஓடிப்போக விரும்புபவர்கள் இப்போதே நடையைக் கட்டலாம்.
திகில் பிரியர்கள் மட்டும் எதற்கும் ப்ளோ அவூட், செட் இட் ஆஃப் போன்ற படங்களைப் பார்த்து விட்டுக் கதையை மேற்கொண்டு தொடரவும்.
மொபைலில் ராணியை... ஓடிப்போகவிருந்த என் முன்னாள் ஆசை மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடுக்கென்றது. நாற்காலியில் அமர்ந்திருந்த அவளது தலை ஒரு பக்கமாக தொங்கிப் போயிருந்தது.
செத்துப் போய்விட்டாளா? அதற்குள்ளாகவா. அவள் தனிமைச்சிறையில் இன்னும் பல ஆண்டுகள் இருந்து மெல்ல மெல்ல செத்துப் போனால்தானே சந்தோஷமாக இருக்கும்.
கதவைத் திறந்து உள்ளே போனேன்.
அரைக் கண்களைத் திறந்து பார்த்தாள். தண்ணீர் என்றாள். அருகிலிருந்த ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து குளிர்ந்த தண்ணீர் ஒரு கப் அவளருகே நீண்டது.
“என்னை கொன்னுருங்களேன்”
“அது அப்பறம் தானே நடக்கும். இப்ப என்ன ஆச்சு.உடம்பு சரியில்லையா”
“இல்ல.உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும். முதல்ல நான் இங்க தனிமையில இல்ல.அதை நீங்க முதல்ல தெரிஞ்சுண்டாகனும்”
“வ்வாட்”
“இங்க நிறைய பேர் இருக்காங்க.குந்தவைக்கு உங்களைப் பிடிச்சுப்போச்சு”
“குந்தவை. இங்கேயூம் பொ.செ.ஆ”
“அவ என்ன அழகு தெரியூமா.அவளுக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சாம்”
“என்ன கதை விடற.உனக்கு தனியா இருந்து இருந்து மூளை பிசகிடுச்சு போல”
“இல்லை. இந்த ரூம்ல ஆத்மாக்கள் இருக்கு.அவற்றை உங்க ஆளுங்க பேய்னு சொல்வாங்க. அவங்க சன்னல் வழியா அப்பப்ப வந்து போவாங்க.அதுல ஒரு ஆத்மாதான் குந்தவை. அவ ஆன்ட்ரமீடால எங்கயோ இருந்தவளாம். ஒரு ப்ளைட் க்ராஷ்ல செத்துப் போயிட்டா.உ ங்களை இழுத்துட்டு பால்வெளிக்கு அவ ஓட விரும்பறா. நான் ஓடிப்போகப் போனேன்னுதானே என்னை நீங்க இங்க அடைச்சி வைச்சிருக்கிங்க. இப்ப ஒரு பேய் ஆத்மா உங்களை இழுத்துட்டு ஓடப்போவுதாம். இதோ குந்தவை வந்துட்டா. வா குந்து. இவர்தான் என் எக்ஸ். இவரை நீ இழுத்துட்டுப் போறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. இந்தா இழுத்துட்டுப் போ” என்று காற்றில் யாரிடமோ சீரியசாகப் பேசினாள்.
செல்வராகவன் படம் ஏதும் பார்த்திருப்பாளா?
அப்புறம் நான் அந்த காட்சியைப் பார்த்தேன். ஏதோ ஒரு ஹோலேராகிராஃபிக் உன்னதம் போல தென்பட்டது. குந்தவை என்ற அந்த பெண் சரித்திர கால உடைகள் ஏதும் அணிந்திருக்கவில்லை. உண்மையைச் சொன்னால் அவள் உடையணிந்திருந்த மாதிரியே தோன்றவில்லை. புகை மூட்டமாக பனியின் குளிரில் இருந்து வந்த மாதிரி தெரிந்தாள். முகத்தில் மட்டும் அத்தனை தேஜஸ்.
“குந்தவையா. இவளா. இது ஏதாவது நான் பண்ற மாதிரி எலக்ட்ரானிக் சமாச்சாரமா”
“இல்லே அவ கண்களையே பாருங்க.உத்துப் பாருங்க.அவ உங்களை விரும்பறா...”
ஏதோ மந்திரித்து விட்ட மாதிரி நான் அவளை அந்த ஆவியை.அது ஆவிதானா...பார்க்க ஆரம்பிக்க சட்டென்று சீன் மாறிப் போய் விட்டது.
நான் அந்த ரூமில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். அறைக் கதவு சுத்தமாக அடைக்கப்பட்டிருக்க அறைக்கு வெளியே, கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே செண்பகராணி நின்றிருந்தாள்.
எ... எப்படி தப்பினாள். நான் மாட்டிக் கொண்டேனா...
“உட்கார்ந்திரு மாஜி கணவா. உனக்கான சாப்பாடு எல்லாம் கரெக்ட்ரா உள்ள வந்திரும். நீ தப்பிக்க முடியாது. நான் வெளியே போறேன். சுதந்தரமான காற்றை முதல்ல சுவாசிக்கனும். அப்புறம் இன்னொரு விஷயம். நான் சொன்ன குந்தவை ஆத்மா எல்லாம் கதை கிடையாது. இன்னிக்கு நைட் சன்னல் வழியே குந்தவையோட ஆத்மா வந்திரும்.”
நான் பொம்மை போல விழித்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்திருந்தேன் குந்தவைக்காக.