என் அருகே வாசனையாக வந்து நின்றாள் அவள். அநேகமாக எனக்கு அடுத்த சீட்டில் அமரப் போகிறாள் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் விமானப் பயணம் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டு ரிச்சர்ட் வேக்னரை அழைத்துக் கொண்டு விடுவேன். இந்த முறை என் அருகில் அமர்ந்தவள் வேறு தினுசாக இருந்தாள். வாசனையாக இருந்தாள் என்று சொன்னேன் அல்லவா அந்த வாசனை கூட அழகுக் கிரீம்களின் வாசனையாக இல்லாமல் கொஞ்சம் தொல்காப்பியத்தனமாக இருந்தது. சன்னமாக புன்னகைத்தாள். விமான சன்னலில் நிலா எட்டிப் பார்த்த மாதிரி இருந்தது.
"வணக்கம்.நான் யால்நதி" என்று கை கொடுத்தாள்.
"யாழ்? சிலோனா நீங்க. ஐ யாம் அரவிந்த்" என்றேன்.
"இல்லை, யாழ் இல்லை. 'யால்' என்றாள் சின்னதாய் இன்னொரு புன்னகையுடன்.
“யால்?”
“ஆம். யால் என்றால் ஆல் அதாவது ஆலமரம் என்று பொருள். அத்துடன் நதி சேர்த்தால் என் பெயர். அப்படிப் பார்க்க வேண்டாம். என் அப்பா தமிழ் பண்டிதர் எல்லாம் இல்லை. எனக்கேத் தமிழார்வம் அதிகம். நான் ஒரு கிராஃபிக் ஆர்டிஸ்ட். ஆங்கிலப் படங்களுக்கு மோஷன் கேப்சரில் தயாராகும் படங்களுக்கு படம் வரைவது என் புரொபஷன். இப்ப ஒரு டிஸ்கஷனுக்காக வார்னர் பிரதர்ஸ்ல கூப்பிட்டிருக்காங்க. நைஸ் கோயிங். நீங்க” என்று ஆச்சர்யப்படுத்தினாள்.
யால் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டேன். நீங்களும் சொல்லிப் பாருங்கள். யால்! உதடுகள் அப்படியேக் குவிந்த மாதிரி விரியூம். அப்படி விரியும் அவள் உதடுகளை அப்படியே..
“நான் பிசினஸ்மேன்னு பெருமையாச் சொல்லிக்கலாம். ஆனா எனக்கு விருப்பமெல்லாம் மியூசிக்லதான். ஆனா தமிழ்ப்படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன். குத்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. சும்மா என்னிக்காவது ஒரு ஆல்பம் பண்ணி யூடியூப்ல போட்டா போதும்.”
அப்புறம் அவள் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டாள். ஏதோ பின்நவீனத்துவ புத்தகமாக இருக்கும் என்று நினைத்தேன். தவறு. ஹவ் த ஸ்டீல் வாஸ் டெம்ப்பர்டு வைத்திருந்தாள். இவள் வித்தியாசமானவள் என்று எழுதி வார்த்தைகளை விரயமாக்க விரும்பவில்லை. இன்னும் சில மைக்ரோ வினாடிகளில் எங்களுக்குள் வேதியல் பொருந்தி விடும் என்று தோன்றியது.
“இப்ப என்ன நினைச்சிங்க” என்றாள் சட்டென்று திரும்பி.
“இல்லிங்க.. அது வந்து நான் ஸ்கூல்ல படிச்சப்ப கெமிஸ்ட்ரில வீக்”
“சான்ஸே இல்லை. ஜேம்ஸ்பான்ட் காலத்து முயற்சிகள் எல்லாம் காலாவதியாகிடுச்சு. ஸ்பெக்டர்ல கூட பொண்ணைப் பொம்மையாக் காண்பிக்கலை. காண்பிச்சா படம் ஓடாது. துப்பாக்கியைக் கடாசிட்டு ஜே.பா பொண்ணை லவ் பண்ணப் போறதுதான் இப்பத்திய பேஷன்”
அப்புறம் பேச ஆரம்பித்தோம்.
விமானம் அதன்பாட்டுக்கு பறந்து கொண்டிருந்த போதுதான் ஒரு விபரீதம் அதன்போக்கில் வந்து நின்றது. ஏதோ சப்தம்...ம்ம்ம்ம்ம்.
அப்படியே எங்களை உருட்டி விட்ட மாதிரி இருந்தது. அப்புறம் ரோலர் ஸ்கேட்டரில் விர்ரென்று இழுத்துக் கொண்டு போன மாதிரி இருந்தது. யால் என்று சொல்லும் போது, அவளின் உதடுகள் விரியும். அதனை அப்படியே முத்தமிடலாம் என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா. அவள் அப்படியே என் மார்பில் அமர்ந்து என் உதடுகளில் அவளது உதடுகளை முரட்டு ஒத்தடம் கொடுத்த மாதிரி வைத்து எடுத்த சமயத்தில் இன்னும் உருண்டோடோடோடோம்.
எங்களது விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று லேசாக மயக்கம் கலைந்து எழுந்தபோது உணர்ந்து கொண்டோம். நல்லவேளை எனக்குக் கைகளில் மட்டும்தான் அடி.
யால் எழுந்தாள். அவள் ஏதும் அடிபட்டிருந்த மாதிரி தெரியவில்லை. முதுகில் மட்டும் என்னவோ கிழித்திருந்தது. இரத்தம்.துடைத்து விட்டேன். மற்ற பயணிகள் மலங்க மலங்க விழித்தார்கள். தமிழ்ப்படத்தில் விமானப்பயணம் என்றால் டெம்ப்ளேட்டாக ஒரு நடிகர் ஒரு கிரிக்கெட்டர், ஒரு ஜோசியர், ஒரு பாதிரியார் என்று வைப்பார்களே அப்படி ஏதும் வினோதக் கலவை எங்களது விமானத்தில் இல்லை. எல்லோரும் பிசினஸ் ஆட்கள். ஒன்றிரண்டு சாதா ஆசாமிகள் இருந்தார்கள். அநேகமாக அரசியல் சம்பந்தமானவர்களாக இருக்கலாம்.
அத்தனை பேருக்கும் ஒரு விஷயம் புரியவேயில்லை.
விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் உடைந்து நொறுங்கிப் போயிருக்குமல்லவா. உருக்குலைந்து போய் அத்தனை பேரும் செத்துப் போயிருந்திருப்போமல்லவா. அப்படி ஏதும் நடந்திருக்கவில்லை.
விமானம் துடைத்து வைத்த வெண்ணை பாட்டில் போல பளிச்சென்றிருந்தது. வயர்லெஸ் மட்டும் வேலை செய்யவில்லை. எங்களது செல்ஃபோனும் வேலை செய்யவில்லை. நாங்கள் விழுந்திருந்த இடம் ஏதோ தீவு போலிருந்தது.
இல்லை, இல்லை. ஜெய்சங்கர் படங்களில் எல்லாம் வருவது போல ஆதிவாசிகள் யாரும் வரவில்லை. அந்த இடமே அனாமத்தாக இருந்தது.
இங்கே ஒரு விஷயம் என்னவோ சரியில்லை என்று எனக்குத் தோன்றியபோதே யால் என் தோளில் சாய்ந்தவாறு என் காதருகில் சொன்னாள்.
“அர்விந்த்.ஒரு ஆச்சர்யம் பாத்தியா”
“என்ன யால்?”
“விழுந்த விமானம் ஒரு துரசு கூட படலை. அப்படியே இருக்கு. சின்னக் கீறல் கூட இல்லை. ஆனா விழுந்த இடத்துல ஏதோ தீவு போல இருக்கு. இங்க உள்ள செடி கொடி மரங்கள் அத்தனையும் நசுங்கிப் போய் பிச்சிப் போட்ட இடியாப்பம் மாதிரி இருக்கு. ஸாரி பிச்சிப்போட்ட நூடுல்ஸ் மாதிரின்னு சொல்லமாட்டேன். நூடுல்ஸ் தமிழர் உணவு அல்லவே” என்றாள்.
அட.ஆமாம்.சமீபத்தில் நடந்த எந்த விமான விபத்திலும் விமானம் பத்திரமாகக் கிழே விழுந்திருக்கவில்லை .யாரும் உயிர் பிழைத்திருக்கவும் இல்லை.
ஆனால் இந்த இடமே யாரோ வந்து கபளீகரம் செய்த மாதிரி இருந்தது. ஏதாவது சைக்ளோன் வந்திருக்குமா? இது என்ன ஏரியா? என்ன இடம்.ரஷ்யா கிஷ்யாவாக இருக்குமா? சுட்டு வீழ்த்தி விடுவார்களே..
“அர்விந்த் உன் செல் வேலை செய்யலையா. வாட்ச்ல பாரு.மேக்னட் இருக்கும்தானே. அது என்ன காட்டுது. ஏதாவது தகவல் கிடைக்குமா பாரு”
எதுவூம் வேலை செய்யவில்லை. வாட்ச் செல் டாப்லெட் எதுவூம் வேலை செய்யவில்லை.எழுந்து நடந்தோம். விமானத்தின் பைலட்டும் மற்ற அதிகாரிகளும் ஏதோப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோஸ்டஸ்கள் வயதான பயணிகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
வெளியே எங்கே போக வேண்டுமென்று யாருக்கும் தெரியவில்லை. எவ்விதத் தகவல் தொடர்பு சாதனமும் வேலை செய்யவில்லை. அப்போது யால் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டேன். யாலின் உதடுகளை மெல்ல முத்தமிட வேண்டுமென்று அத்தனை இக்கட்டிலும் ஆசை வந்தது. அவளை மெல்ல இழுத்தேன். அப்போதுதான் அவளை அவளது இடது தோள்களைக் கவனித்தேன்.
அதில் பழுப்பு நிறத்தில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. புழு.
ஆம். புழுதான்.ஏதாவது மரத்திலிருந்து விழுந்திருக்கும் என்று மேலேப் பார்த்தேன். அந்த இடத்தில் எந்த மரமும் நேராக இல்லை.எல்லா மரமும் பிய்த்துப் போட்ட மாதிரி கீழேக் கிடந்தன.
“அர்விந்த், உங்க கைல பாருங்க”
என் கைகளிலும் இரண்டொரு புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. என் கைகளில் மட்டுமல்ல. அத்தனை பயணிகளின் கைகளிலும் சின்னச்சின்னதாகப் பழுப்பு நிறத்தில் புழுக்கள்.
அனைவரும் பயந்து அலறியபடி கைகளை உதறிக் கொண்டார்கள். ஹோஸ்டஸ்கள் அனைவரையும் பொறுமையாக இருக்கும்படி சொன்னார்கள். மெல்ல உதறினோம். எல்லா வார்ம்ஸ்களையூம் தீயிட்டுக் கொளுத்தி விடலாம் என்று முடிவு செய்தோம்.
“யப்பா.என்ன ஒரு அனுபவம். மட்டமான ஆங்கிலப்படம் மாதிரி இருக்கு. அடுத்து கிங்காங் காட்ஸில்லான்னு ஏதும் வருமா” என்று சிரித்தாள்.
நானும் சிரித்து வைத்தேன். அப்போதுதான் எங்களது கெமிஸ்ட்ரி டிஸ்ட்டிங்ஷனில் இருப்பதைக் கவனித்தேன். என் கன்னத்தோடு கன்னம் வைத்துத் தேய்த்த மாதிரி உரசிக்கொண்டே கிசுகிசுப்பாகப் பேசினாள். எத்தனை சாதாரணமானப் பெண்ணாக இருந்தாலும் இது போல கன்னத்தில் கன்னம் வைத்து கிசுகிசுப்பாகப் பேசினால் மஹா செக்ஸியாகத்தான் தெரிவார்கள். ஆனால் இவள் இயல்பிலேயே செக்சியான அழகு. இப்போது என்னைத் தின்று விடுவாள் போலிருந்தது. தனியாக இருந்திருந்தால் அடுத்தக் கட்டத்திற்குப் போயிருப்பேன்.
பைலட் சந்தோஷமாகச் சொன்னார்.
“நாம இது போல ஒரு விமான விபத்துல உயிரோட தப்பிக்கிறது உலக அதிசயம். விமானமும் ஒரு சின்ன அடி கூட படாம நிக்குது. இதைக் கிளப்பிட்டு போக முடியூமான்னு ட்ரை பண்றோம். நடுவில இந்தப் புழுக்கள் கொஞ்சம் பயமுறுத்திடுச்சி. அத்தனைப் புழுக்களையும் கொளுத்திட்டம். இனி பயமில்லை. ஹேவ் யூவர் நைஸ் டைம்” என்றார்.
யால் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டினாள்.
“உண்மையைச் சொல்லு அரவிந்த். ரொம்ப நேரமா என்னை முத்தமிட முயற்சி பண்ணிட்டுதானே இருக்கே, கற்பனையில” என்றாள் நேரடியாக.
“அது வந்து..”
“தளிர் சேர் தண் தழை தை நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறும் சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ”
என்றாள்.
“பார்டன்”
“இது நற்றினை. முத்தம் பத்தின வரி இதுல வருது. கிஸ் பண்ணிக்கலாம். நோ அப்ஜக்ஷன். வெயிட் எ மினிட். உனக்கு ஏதாவது மெத்து மெத்துனு உணர முடியுதா” என்றாள்.
“ச்சே.நற்றினை பத்தி பேசிட்டு இப்ப என்ன ஆச்சு”
“இல்லை.புழு வந்ததும் பயந்துட்டு நான் என் ஷூக்களை கழற்றிட்டேன். வெறுங்கால்லதான் நடந்து வர்றேன். ஆனா, காலுக்குக் கீழே மெத்து மெத்துனு ரப்பர் மாதிரி இருக்கு. காட்டுல இப்படியாத் தரை இருக்கும்”
அப்போதுதான் கவனித்தோம்.
தரை மெத்து மெத்தென்று இருந்தது.நிறைய மரங்கள் செடி கொடிகள் பிய்த்துப் போடப்பட்டிருந்த மாதிரி இருந்தது. ஆனால் தரையில் எங்கும் மண் இல்லை. அதாவது, நிலம் போன்ற அமைப்பு எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக ஏதோ பழுப்பு நிறத்தில் தரை இருந்தது.
புழுக்களை அழித்து விட்ட நிம்மதியில் இருக்கும் போது இப்போது வேறு என்னவோ பயம் காட்டுகிறது. ச்சே.ஒரு வேளை இது வண்டல் மண் படுகையாகக் கூட இருக்கலாம். மண்ணை அள்ளிப் பார்த்தால் அள்ள முடியவில்லை. வழுக்கியது. வழுவழுவென்றிருந்தது.
“என்னாச்சு அர்விந்த்”
“ஓடு.. யால் ஒடு..”
“வாட்”
“ஓடுங்க எல்லாரும். ஓடுங்க” என்றேன்
ஆங்கில டப்பிங் படங்களில் வருவது போல. நாங்கள் ஓட ஆரம்பித்தாலும் அந்தத் தரை முடிவில்லாமல் வழுவழுவென்றே இருந்தது. எந்தப் பக்கம் ஓடுவது என்ற சிதறி ஓட ஆரம்பித்தோம். அவள் என் கைகளைப் பிடித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். ச்சே.முத்தமிட்டு விட்டு ஓட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம்.
ஓடிக்கொண்டிருந்தவள் சட்டென்று நின்று விட்டாள்.
“என்ன”
“பின்னால திரும்பிப் பாருங்க”
ஒரு மிகப் பெரிய தலை தெரிந்தது. அது வாயைப் பிளந்து கொண்டு வந்தது. அது ஒரு மிகப் பெரிய புழுவின் தலை. விமானம் விழுந்த வேகத்தில் அலுங்காமல் குலுங்காமல் வந்து நின்றதற்கும் நாங்கள் வழுவழுவென்ற தரையில் நின்றதற்கும் காரணம் ஒரு ராட்சஸ புழுவின் உடலில் பத்திரமாக விழுந்திருக்கிறோம்.
அதற்கு உணவாகப் போவதற்காக என்று அப்போதுதான் புரிய.
அது அருகில் வந்து எங்களை விழுங்க ஆரம்பித்தது.