இன்னும் நாலு நாள் தான் இருக்கு என்னோட கல்யாணத்துக்கு. வீட்டுல இருக்க எல்லாரும் ஆளாளுக்கு ஒரு வேலையைச் சுமந்து கொண்டு அதன் வெளியீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். அப்பா தனியாளாக எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்தார். முதலில் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் திருமணத்தையும், மண்டபத்தில் சாப்பாடு மற்றும் வரவேற்பையும் வைத்துவிடலாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், அப்பாவால் இரண்டு பக்கமும் அலைய முடிவில்லை.
கல்யாணம் நெருங்க நெருங்க என்னையும் வெளியேப் போகக்கூடாது எனக் கண்டித்தனர். சிலருக்குப் பத்திரிகை கொடுக்க மட்டும் நண்பர்களோடு சென்றேன். சென்னையிலிருந்து தங்கச்சி வார இறுதி நாட்களில் வந்து விடுவாள். அவளும் அப்பாவும் பத்திரிகை, மண்டபம், சமையல், துணிமணி, மேடை அலங்காரம் என ஓயாது அலைந்தனர். நான் அவருக்கு மட்டும் பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றதும் வீட்டில் யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
“அவரு ரொம்ப பிசியான ஆளு... தொந்தரவு பண்ணனுமானு யோசிச்சிக்க... ஜாக்கிரதையாப் போயிட்டு வா...” இது தான் ஒவ்வொருத்தரின் பதிலாகவும் இருந்தது.
‘நீ யாரக் கூப்பிடுறியோ இல்லையோ, அவரக் கண்டிப்பாக் கூப்பிடனும்... வர்றாரோ இல்லையோ போயி பத்திரிக்கைய வச்சிட்டு வா... போ போ...” என்றாள் தங்கை.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வர்றாரோ இல்லையோ அவர கூப்பிட வேண்டும் எனத் தோன்றியது.
பழைய அபிராமி தியேட்டர் பக்கத்தில் பழனி ரோட்டின் மேற்கிலிருந்த சிறிய இடம் அது. நான் அங்கு போன போது வழக்கம் போல் வாசலில் செருப்புகள் குவிந்து கிடந்தன. பாதையின் இரண்டு பக்கமும் செருப்பைப் போடத் தனியாக கார்பன் எஃகால் ஆன அடுக்குகள் இருந்தன. ஆனால், அது முழுவதுமாக நிறைந்து தரையெங்கும் வழிந்து ஓடியதைப் போல செருப்புக் குவியல்கள் கால் வைக்கக் கூட இடமில்லாமல் தரையெங்கும் வழிந்து கிடந்தன. அந்தக் குவியலுக்கு மத்தியில் என்னுடையதையும் ஓடவிட்டு விட்டு உள்ளே நுழைந்தேன்.
உட்கார இடம் இல்லை... இருந்த அனைத்தும் நிறைந்து கிடந்தது. தரையிலும் வாசலிலும் ஆங்காங்கே கைக் குழந்தைகளோடு மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். அங்கிருந்த முகங்கள் சமூக கட்டமைப்பின் படிநிலைகளில் கடைசி படிக்கட்டின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. அவ்வளவு கூட்டத்திலும் ஓர் அமைதி நிலவியது. முழுவதும் எரிந்து ஒடுங்கிய பின் புகை வற்றிய பின்பான வெறுமையின் வெளிப்பாடு அந்த அமைதி. அங்கிருந்த ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் நான் என்னையேப் பார்த்தேன்.
கதவில் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர்ப் பலகையைப் பார்த்ததும் என்னை அறியாமல் என்னுள் பரவிய மின்சாரத்தை உணர முடிந்தது. டாக்டர் ராமச்சந்திரன் எம்.பி.பி.எஸ்., எம்.டி (பிடியாட்ரிக்) அந்த பெயருக்கு உரிய உருவத்தை எண்ண வெளியில் எழுப்பிப் பார்த்தது மனம்.
உள்ளே இருந்து கதவைத் திறந்து கொண்டு இருவர் வெளியேறும் போது அவரது முகம் சில நொடிகள் மின்னி மறைந்தன. எண்ணத்தில் எழும்பி இருந்த உருவத்துக்கும் அவருடைய இப்போதைய உருவத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். ஆள் முழுவதுமாக மாறிப் போயிருந்தார்... முன் தலையில் முடி சற்று ஏறி இருந்தது. இருந்த முடியும் நரைத்துக் கிடந்தது. ஒல்லியான நபர் தான் மேலும் மெலித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் அந்த முகத்தின் அமைதி இப்போதும் அப்படியே... மூக்குக் கண்ணாடிக்குப் பின் நம்மைக் கூர்ந்து கவனிக்கும் அந்த கண்கள் அதே கூர்மையோடு கவனித்தது.
அவரை நான் பார்த்து ஒரு பத்து வருடம் இருக்கும். கடைசியாக, பதினேழு வயது இருக்கும் போது ஒரு நாள் மாலை எந்த அலட்டலும் இல்லாமல் ஒரு வங்கியின் வாசலில் டி.வி.எஸ். 50யை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் அருகே சென்று பேசத் தோனாது இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு பின் அவரை இப்போது தான் பார்க்கிறேன். அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா? எத்தனை முறை... நாட்களோ மாதங்களோ அல்ல, வருடக்கணக்காகத் தொடர்ந்து வந்து சந்தித்திருக்கிறேன். அவரை முதல் முறை பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்... சாதாரண சளி மற்றும் இருமல் என்றுதான் தொடங்கியது.
தொடர் மருந்துக்கு பிறகும் இருமலும் சளியும் குறைந்தபாடில்லை மாறாக அதிகரித்தது. இருமலின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறி அதன் உண்மை வடிவத்தைக் காட்டியது. ஒவ்வொரு இருமலும் தொண்டைக்கு பதிலாக அடிவயிற்றில் தொடங்கி, நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளியே வந்தது. இரவு நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சில நேரங்களில் இருமல் தொடங்கினால் முடிவதற்குச் சில நிமிடங்கள் ஆகும்... இருமி முடிக்கும் போது நெஞ்சில் நெருப்பும் கண்ணில் நீரும் கொட்டியிருக்கும்.
அப்பாவும் அம்மாவும் தூங்காது இரவெல்லாம் என் நெஞ்சைத் தடவியபடி அமர்ந்திருப்பார்கள். காலையில் எழும் போது தொண்டைக் கட்டிப் போயிருக்கும். போர்க்களத்தில் இருந்து தப்பி வெளியேறிப் பட்டிணியோடு பல நாள் நடந்த பின் அந்தப் பாதை வேறு ஒரு போருக்குள் கொண்டு விடுவதைப் போல் காலையில் மீண்டும் இருமல் தொடங்கும்... வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத ரணம் அது. அந்த இருமலின் கர்ர்ர்ர்... கர்ர்ர்ர்... என்ற வறட்டு சத்தம் அக்கம் பக்கத்திலிருந்த எல்லோரையும் பயமுறுத்தியது. அடுத்தச் சில நாட்களில் தொடங்கிய வாந்தியில் கெட்டி கெட்டியாகச் சளி தென்பட்டது.
ஊரெல்லாம் அலைந்து அலைந்து உடல் மருந்துகளால் நிறைந்த போதும் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே இருந்தேன். இறுதியாக யாரோ ஒருவர் இவரிடம் ஆற்றுப்படுத்த எந்தவித நம்பிக்கையும் இல்லாமல்தான் இவரிடம் வந்து சேர்ந்தேன்... தலை முடியை மெதுவாகக் கையால் இழுத்துப் பார்த்தும் சொன்னார்.
“இது பிரைமரி காம்ப்ளக்ஸ்... மாதிரி தெரியுது” உடனே மார்பு எக்ஸ்ரே மற்றும் மாண்டூக்ஸ் பரிசோதனை செய்யச் சொன்னார். எக்ரேயில் மார்பின் ஒரு பக்கம் மங்கலாகவும் மறுபக்கம் தெளிவாகவும் இருந்தது. எக்ஸ்ரேவை ஓரமாக வைத்துவிட்டு இருமிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து புன்னகைத்தபடி “முதன்மை வளாகம்” என்றார். முதன்மை வளாகம் என்பது காசநோய் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று ஆகும். தொடர்ந்து ஐம்பது நாட்கள் ஊசியோடு சிகிச்சை தொடங்கியது. பல நாள் ஊசிக்கு மட்டும் காசு வாங்கினார். இத்தனைக்கும் அவருக்கான ஃபீஸ் ஐந்து ரூபாய் மட்டும் தான். அதையும் பல நாள் வாங்க மறுத்திருக்கிறார். சில நாட்கள் இரண்டு மூன்று தடவை சென்று பார்க்க நேர்ந்திருக்கிறது அப்போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய்க்கு மேல் வாங்கியது கிடையாது.
மெதுவாக எனது இருமலும் குறையத் தொடங்கியது. அடுத்த ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டேன். மெலிந்து கிடந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. அப்போதிலிருந்து அவர்தான் எனது ஆஸ்தான மருத்துவர். இப்படி அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். உள்ளே இருந்து மீண்டும் இருவர் வெளியேற, அவரது முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன் அவரும்...
கேப்டன் சைக்கிளில் ஹேண்டில் பார் மீது நான் அமர்வதற்கு ஏற்ப இரும்புக் கம்பிகளுக்கு நடுவே வயர் கொண்டு பின்னப்பட்ட குழந்தை இருக்கை ஒன்றை அப்பா நான் சைக்கிளில் அமர்வதற்காகப் பயன்படுத்துவார். தேவைப்படும் போது வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் எடுத்துவிடலாம். ஒரு காய்ச்சலுக்குப் பின் அப்போதுதான் உடல் தேறி பள்ளிக்கு அந்தக் குழந்தை இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தேன். வழியிலேயே மீண்டும் வாந்தி... கைலியோடு வந்த அப்பா அங்கிருந்து நேராக இவரிடம் தான் கூட்டிப் போனார். இவரைப் பார்த்து மருந்து எழுதி வாங்கிய பின் இவருக்குக் கொடுக்க வேண்டிய ஐந்து ரூபாய் பணமில்லாமல் கையைப் பிசைந்த அப்பாவைப் புன்னகையோடு பொயிட்டு வாங்க என்ற அந்த முகம், இப்போதும் அதே புன்னகையோடு...”
ஆனால் அது நடைப்பயிற்சியின் போது, எதிர்ப்படுபவருக்குத் தெரிவிக்கும் வணக்கத்தைப் போன்ற புன்னகை... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அனைவரையும் சமமாகப் பாவிக்கும் புன்னகை. அவருக்கு என்னைத் தெரியும். அங்கிருந்த இருநூறு குழந்தைகளை எப்படித் தெரியுமோ அப்படி என்னையும் தெரியும்... அவ்வளவே தெரியும்... அவ்வளவு தெரியும்... இது போதும் என்று தோன்றியது...
“டோக்கன் எமபத்தி நாலு போங்க...” என்றார் வெளியே நின்றிருந்த பெண்... எண்ண முடியாத அளவு இன்னும் பலர் வெளியேக் காத்திருந்தனர். நான் மணியைப் பார்த்தேன். மதியம் இரண்டு... பத்திரிக்கையைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்தவன் அங்கிருந்து வெளியேறினேன். நான் வெளியேறும் போது அந்த டோக்கனை கைகளில் வைத்திருந்த பெண், யாரிடமோ பேசியது காதில் தெளிவாக விழுந்தது.
“டாக்டர் பீஸ் அஞ்சு ரூபா அடுத்த தடவ வரும்போது சில்லறையா அஞ்சு ரூபா கொண்டு வாங்க...”
நான் வெளியே வந்து ஒரு ஐந்து நிமிட தேடலுக்குப் பின் என் செருப்பைக் கண்டுபிடித்து எடுக்கவும் புதிதாக வந்த ஒருவர் அந்த இடத்தை தன் செருப்பால் நிரப்பினார்...